கூகுள் தேடுபொறியை ஆங்கில அகராதி போல சொல்லுக்குப் பொருள் தேட அடிக்கடி பயன்படுத்துவீர்களா? எனில் கூகுளின் வேர்ட் கோச் ஈஸ்டர் எக்கை (Google Easter Eggs) நீங்கள் பார்த்திருக்கலாம். ஒரு சொல்லைக் காட்டி அதன் பொருளையோ எதிர்ப் பொருளையோ கூகுள் கேட்கும். கீழே இருக்கும் விடைகளில் சரியானதை தேர்ந்தெடுத்தால் சில புள்ளிகள் கிடைக்கும். ஐந்து கேள்விகள் முடிந்தவுடன் தவறான விடைகள் ஏன் தவறு என விளக்கம் கொடுக்கும். விருப்பமிருந்தால் தொடர்ந்து விளையாடி அடுத்தடுத்த நிலைகளுக்குச் சென்று ஆங்கில அறிவை வளர்க்கலாம். ஏதோ வேலைக்கு நடுவில் இன்ப அதிர்ச்சியாக கூகுள் செய்யும் இந்தக் குட்டி குட்டி விளையாட்டுகள்தாம் கூகுள் ஈஸ்டர் எக்.

கூகுள் நிறுவனத்தில் வேலை செய்பவர்கள் தங்கள் வேலை நேரத்தில் இருபது சதவிகிதத்தைத் தங்கள் விருப்பப்படி என்ன கணினிநிரல் வேண்டுமானாலும் எழுதப் பயன்படுத்தலாம். ஆரோக்கியமான பணிச் சூழலுக்கும் புதுமையான யோசனைகளுக்கும் இது உதவும் என நம்புகிறது கூகுள். கூகுள் ஈஸ்டர் எக் என்பது இப்படியான தனிப்பட்ட ப்ராஜக்ட்களில் சில. இவை எல்லாருக்கும் தெரியும்படி வெளிப்படையாக இல்லாமல் மறைமுக நகைச்சுவைகளாக இருக்கும்.

askew என்றால் சாய்ந்து இருப்பது. இந்த வார்த்தையை கூகுளில் தேடினால் வரும் விடைப்பக்கம் சாய்ந்து இருக்கும். do a barrel roll எனத் தேடுபொறியில் டைப் செய்தால் விடைப்பக்கம் ஒரு குட்டிக்கரணம் அடிக்கும். இப்படி வேடிக்கையாக மட்டுமில்லாமல் timer, flip a coin என உபயோகமான பலவும் உண்டு.

ஃபாரன்ஹீட்டிலிருந்து செல்சியஸ், ரூபாயிருந்து டாலர், மில்லி மீட்டரில் இருந்து இன்ச்க்கு என எதற்கு மாற்றிக்கொள்ள வேண்டுமானாலும் அப்படியே தேடுபொறியில் டைப் செய்தால் போதும். விடை உடனே கிடைக்கும். இந்த மாற்றிகூட ஒரு கூகுள் ஈஸ்டர் முட்டைதான்! எழுபதாயிரத்து அறுநூற்று முப்பத்தைந்து மாதிரி பெரிய எண்ணை எப்படிப் படிக்க வேண்டும் எனத் தெரியவில்லையா? எண்ணுக்கு அடுத்து =english என சேர்த்தால் எண்ணை எழுத்தாகப் படிக்கும்படி மாற்றித் தந்துவிடும்.

பேக்மேன், டிக் டாக் டோ மாதிரி விளையாட்டுகளையும் தேடுபொறியில் டைப் செய்து விளையாடலாம். அவெஞ்சர்ஸ் படம் வந்தபோது தானோஸ் சொடுக்குப் போடும் ஈஸ்டர் எக் வந்தது. அதைச் சொடுக்கினால் பக்கத்தில் பாதி காணாமல் போய்விடும். இப்போது அது வேலை செய்யாது. ஆனால், இப்படிச் சில காலம் மட்டுமே பரவலாகக் கிடைத்த ஈஸ்டர் எக்கை திரும்பச் செய்து பார்க்க விரும்பினால் https://elgoog.im/ என்ற தளத்தில் சேமித்து வைத்திருக்கிறார்கள். கூகுள் கிராவிட்டி, அன்டர் வாட்டர் போன்ற பல இங்கே இருக்கின்றன.

Online search

இப்படி இன்ப அதிர்ச்சி ஈஸ்டர் எக்குகள் மட்டுமின்றி சாதாரண தேடும் வார்த்தைகளையே சிறு சிறு மாற்றங்கள் செய்தால் நாம் தேடும் பக்கங்கள் எளிதாகக் கிடைக்கும். முதல் விதி எளிமை. இலக்கண சுத்தமாகத் தட்டச்சு செய்ய வேண்டாம். அவசியமான வார்த்தைகள் மட்டும் போதும். பிறப்புச் சான்றிதழை எந்த அரசு வலைத்தளத்தில் விண்ணப்பிப்பது என நீட்டி முழக்காமல் ‘பிறப்புச் சான்றிதழ்’ எனத் தேடுவது சிறந்த பலன் கொடுக்கும்.

அடுத்தது, எதைக் குறிப்பாகத் தேடுவது என்பதை முடிவு செய்ய வேண்டும். படம், செய்தி, காணொளி, பயணம் எனக் குறிப்பாக எதையாவது தேட வேண்டுமெனில் தேடுபொறிக்குக் கீழே உள்ள டேப்க்குத் தாவலாம். தேவையானதைத் தட்டினால், அது குறித்த தகவல்கள் மட்டும் கிடைக்கும்.

குறிப்பிட்ட காலத்தில் நிகழ்ந்த செய்தியைத் தேடுவதென்றால் தேடுபொறிக்குக் கீழே டூல்ஸ் என்பதைத் தேர்வு செய்ய வேண்டும். புதிதாக வந்த செய்திகள், பழைய செய்திகள் என நமக்கு வேண்டியதைத் தேர்ந்தெடுத்து, கால வரிசைப்படி எதை வேண்டுமானாலும் தேட முடியும்.

ஏதேனும் ஒரு குறிப்பிட்ட வலைத்தளத்திற்குள் தேடுகிறீர்களா? எனில், தேடப்படும் வார்த்தை இடைவெளி விட்டு site: வலைத்தளபெயர் இட்டுத் தேடவும். எடுத்துக்காட்டாக துப்பட்டா தொடர்பான செய்திகளை ஹர்ஸ்டோரிஸில் தேட நினைத்தால் துப்பட்டா site:https://herstories.xyz/ என்று தேடலாம். ஹர்ஸ்டோரிஸ் தளத்தில் துப்பட்டா என்ற வார்த்தை இருக்கும் எல்லாப் பக்கத்தையும் கூகுள் காட்டிவிடும். சில வலைத்தளங்களில் தேடுபொறி இருந்தாலும்கூட கூகுள் தேடுபொறி சிறந்தது.

ஆப்பிள் பழத்தைப் பற்றி ஏதேனும் தேட நினைத்து ஆப்பிள் என்று தட்டச்சு செய்தால் கூகுள் உங்களுக்கு ஆப்பிள் ஐபோனைப் பற்றித்தான் விடைகளாகக் காட்டும். ஆப்பிள் கழித்தல் குறி ஐபோன்(apple -iphone) என்று தேடினால் ஐபோனைத் தவிர்த்து மற்ற தகவல்களைக் காட்டும். ஒருவேளை இந்த வார்த்தை மிக முக்கியமாக இருக்க வேண்டும் என்றால் அந்த வார்த்தையை மேற்கோளுக்குள் இட்டுத் (apple “fruit”) தேட வேண்டும்.

குறிப்பிட்ட வகைக் கோப்பினைத் தேட filetype: என்பதைப் பயன்படுத்தலாம். தமிழர்கள் புத்தக பிடிஎப் தேடுவதில் புகழ்பெற்றவர்கள். ஏதேனும் புத்தகத்தின் பெயரைத் தேடினால் அந்தப் புத்தகம் விற்கும் தளம், புத்தக விமர்சனம் எல்லாம் காட்டும். புத்தகத்தின் பெயர் filetype:pdf என்று தேடினால் பிடிஎப் கோப்புகளை மட்டுமே தேடித்தரும். doc jpg png எந்த வகை கோப்புகளை வேண்டுமானாலும் இப்படித் தேடலாம்.

கூகுள் தேடுபொறி மட்டுமே. நீங்கள் எதைத் தேடினாலும் அந்த விஷயம் ஏற்கெனவே வலைத்தளங்களில் இருந்தால் மட்டுமே கிடைக்கும். அது நினைவில் இருக்கட்டும்.

(தொழில்நுட்பம் அறிவோம்)

படைப்பாளர்:

இரா. கோகிலா. இளநிலை கணிப்பொறி அறிவியல் படித்தவர். சிறுவயதில் இருந்தே வாசிப்பில் ஆர்வம் உண்டு. புனைவுகளில் ஆரம்பித்த ஆர்வம் தற்போது பெரும்பாலும் பெண்ணியம், சமூகம், வரலாறு சார்ந்த அபுனைவு வகை புத்தகங்களின் பக்கம் திரும்பியிருக்கிறது. பயணம் செய்வது பிடிக்கும்.  கல்விசார்ந்த அரசுசாரா இயக்கங்களில் தன்னார்வலராகச் செயல்படுகிறார்.