‘என்னுடைய மனைவி பேசுவதை மட்டும் கொஞ்சம் குறைத்துக்கொண்டால், எவ்வளவு நன்றாக இருக்கும் தெரியுமா? பேசுவதை மட்டும் குறைத்தால் போதும், உலகிலேயே நல்ல மனைவி என் மனைவிதான்.’
‘என்னுடைய கணவர் கொஞ்சம் சிரித்துப் பேசினால் எவ்வளவு நன்றாக இருக்கும்? எப்பப் பாரு மூஞ்ச ’உர்’ன்னு வச்சிக்கிட்டு…கொஞ்சம் சிரிச்சா என்ன?’
‘எல்லா வசதியும் செஞ்சிதானே கொடுத்திருக்கேன், ஆனாலும் படிக்க மாட்டேங்குறான். படிக்க ஆரம்பிச்சிட்டா நல்லா இருக்கும்.
அவன் நல்லதுக்குத்தானே வகுப்பில் இவ்வளவு கண்டிப்பாக இருக்கேன். க்ளாஸ் டெஸ்ட் வைக்கிறேன். மதிக்கிறானா பாரு? புரிஞ்சிகிட்டுக் கொஞ்சம் பொறுப்பா இருந்தா எவ்வளவு நல்லது?
பாஸ் கொஞ்சம் கோபப்படாமல், அமைதியாகப் பேசினால், ஆபீஸ் பதட்டமே இல்லாமல் எவ்வளவு அழகா மாறிவிடும்?
இப்படி நம் ஒவ்வொருவருக்கும் அடுத்தவர்கள் மாறினால் நன்றாக இருக்குமே என நிறைய எதிர்பார்ப்புகள் இருந்துகொண்டேதான் இருக்கின்றன. குடும்பத்தில் தொடங்கி நட்பு வட்டாரம் வரையிலும் சமூகத்திடமும் நமக்கு எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. குறிப்பாக இளைய தலைமுறையினரிடம் நம் எதிர்பார்ப்புகள் அதிகம்.
நாம் மாற வேண்டும் எனத் தோன்றுவது இல்லை. அடுத்தவரை மாற்ற வேண்டும், அடுத்தவர் மாற வேண்டும் என்றே தோன்றுகிறது.
மாற்றம் ஒன்றே மாறாதது எனச் சொல்லிக்கொள்வது எளிதாக இருக்கிறது. ஆனால், அதை நமக்குள் செயல்படுத்துவதுதான் கஷ்டமாக இருக்கிறது.
இளைய தலைமுறையைப் பாருங்கள். எவ்வளவு பெரிய மாற்றம் அவர்களிடத்தில்! ஆனால், அவர்களிடமுள்ள மாற்றத்தை நம்மால் ஏற்றுக்கொள்ள முடிகிறதா என்றால் இல்லை.
நாம் மாறவும் பிடிக்கவில்லை; பிறர் மாறினாலும் பிடிக்கவில்லை. அதனால்தான், இந்த இளைய தலைமுறையைப் பார்த்து அவ்வளவு குறைகள். அவர்களின் ரசனை தொடங்கி, பழக்கவழக்கங்கள் வரை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இரண்டு மாதங்களுக்கு முன்னால் 14 வயது ரேஷ்மாவும் அவளது பெற்றோரும் என்னைப் பார்க்க வந்திருந்தார்கள். தந்தை சொன்னார், “பொண்ணு அடிக்கடி கோபப்படுகிறாள். உற்சாகமே இல்லை. எங்கள் மேல் கோபமாக இருக்கிறாள். எது கேட்டாலும் எரிந்து விழுகிறாள். அவள் மாற வேண்டும். கொஞ்சம் அட்வஸ் பண்ணுங்க.”
ரேஷ்மா சொன்னது இதுதான், “என்னுடைய டைரியை, நான் ஸ்கூலுக்குப் போயிருந்த நேரம், என்னுடைய அப்பா எடுத்து வாசித்துவிட்டு எனக்கு அது குறித்து அட்வைஸ் செய்தார். எனக்கு மிகவும் சங்கோஜமாகவும் வருத்தமாகவும் இருக்கிறது. அடுத்தவர் டயரியை வாசிப்பது தவறுதானே?”என்றாள்.
இதில் மாற வேண்டியது யார்?
நிறைய நேரம் பெரியவர்கள் தாங்கள் செய்வது எல்லாம் இளையவர்களின் நல்லதுக்குத்தான் எனச் சொல்லிக்கொண்டு, எல்லாவற்றிலும் மூக்கை நுழைக்க முயன்றுகொண்டு இருக்கிறார்கள்.
அதர பழைய கரியைப் பூசிக்கொண்டு, நாங்கள் அந்தக் காலத்திலேயே அப்படி என்றும் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல என்றும் சொல்லிக்கொண்டிருப்பவர்களிடம், புதுமைக்கான வழி எப்படி இருக்க முடியும்?.
ஆமாங்க, அந்தக் காலம் நன்றாகத்தான் இருந்தது. நாம் கல்லூரியில் படிக்கும் காலத்தில் நமக்கு மொபைல் போன், வீடியோ கேம்ஸ், சோசியல் மீடியா, peer pressure பிரச்னைகள் எல்லாம் இல்லை.
சரி, இவையெல்லாம் இல்லைதானே? நம்மில் எத்தனை பேரால், யூனிவர்சிட்டி ரேங்க் வாங்கி சாதனைகளைப் படைக்க முடிந்தது? சரி வேண்டாம், எத்தனை பேரால், 75 க்கும் அதிகமான மதிப்பெண்கள் வாங்க முடிந்தது?
இந்தத் தலைமுறையில் இந்த நூற்றாண்டின் இந்தப் பகுதியில், நாம் வாழ்ந்திருந்தால், நம் கையில் செல்போனும் வீட்டில் எல்லாத் தொலைத் தொடர்புக் கருவிகளும் இருந்திருந்தால், நாமும் இப்படித்தான் இருந்திருப்போம்.
தப்பு செய்ய வாய்ப்புகளே இல்லாத காலத்தில், நல்லவர்களாக இருப்பது ஒன்றும் கஷ்டமில்லை. இவ்வளவு வாய்ப்புகளை வைத்துக்கொண்டும் இளைஞர்கள், பதின் பருவத்தினர் தங்களை மேம்படித்திக்கொண்டிருப்பதுதான் உண்மையில் சவாலான விஷயம்.
என்னுடைய குழந்தை பருவத்தில் நான் கவனித்த ஒரு விஷயம், தன்னோடு உள்ள சக மனிதர்களை ஒரு பட்டப் பெயரோடு அழைப்பது. அதிலும் அந்தப் பட்டப்பெயர் அவர்களுடைய அங்கங்களை, அங்கங்களில் உள்ள குறைபாடுகளைக் குறிப்பதாக இருக்கும்.
எடுத்துக்காட்டாக அவர்கள் கண்களைக் கூறுவது. பற்களின் வரிசை சரியில்லாததைக் குறிப்பிடுவது போன்று அடை சொற்களோடு இருக்கும். ஆனால், அந்த வகையில் இந்த இளைய தலைமுறை, அடை சொற்களின் உபயோகத்தைக் குறைத்திருப்பது மகிழ்ச்சியே!
சொல்லப் போனால், நாமும் இந்த இளைய தலைமுறை போல, ஒரு காலத்தில், மாற்றங்களை எளிதாக வரவேற்றவர்கள்தாம்.
கொஞ்சம் திரும்பிப் பாருங்கள். இளம் பருவத்திலும் சரி, குழந்தைப் பருவத்திலும் சரி, ஒவ்வொரு முறையும் புது நண்பர்கள், புதிய சூழல்கள் வரும்போது நம்மால் எளிதாக, நம்மை மாற்றிக்கொள்ள முடிந்ததுதானே?
ஆனால், இப்போது பெரியவர்கள் ஆகிவிட்டோம் என்பதால், இந்த இறுக்கமும் நான் செய்வதுதான் சரி என்ற இறுமாப்பும் ஏன்?
எனவே கணவன் மாறினால் நன்றாக இருக்குமே, மனைவி மாறினால் நன்றாக இருக்குமே எனத் தோன்றும் போது, கண்ணாடி முன்னால் நின்று, நான் எந்தெந்த விஷயங்களில் மாறினால் நன்றாக இருக்கும் எனக் கேளுங்கள்.
ஏனென்றால், இந்த வாழ்க்கையில் நீங்கள் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டியது உங்களிடம்தான். நீங்கள் விரும்புகின்ற மாற்றத்தை உங்களிடம்தான், கொண்டுவரவும் முடியும். அடுத்தவரை மாற்ற முயற்சி செய்வதில் நேரமும் எனர்ஜியும்தான் வீணாகும்.
அடுத்தவர் மாற வேண்டும் என்று எதிர்பார்ப்பதை விடுத்து, நம்மால் முடிந்த வரை, நல்லவற்றைச் செய்வோம். எவ்வளவு தூரம் நல்லவற்றால் இந்தப் பூமியை நிரப்ப முடியுமோ அவ்வளவு நிரப்புவோம்.
ஏனென்றால், அடுத்த தலைமுறை நன்றாக வாழ்வதற்கு ஏற்ற ஓர் இடமாக, இந்தப் பூமியை மாற்றி, இளைய தலைமுறையின் கையில் கொடுப்பதுதான் நம் கடமையாக இருக்கிறது.
நாம் மாறும் போது, நம்முடைய மாற்றம் வளர்ச்சியைத் தரும். ஏனென்றால், மாற்றமும் வளர்ச்சியும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள். ஒன்றைவிட்டு ஒன்றைப் பிரிக்க முடியாத இரு விஷயங்கள். அதுதான் மற்றவர்களும் மாறுவதற்கு, தூண்டுகோலாக அமையும்.
அப்படியென்றால், இளைய தலைமுறையை எப்படிக் கையாள்வது? அவர்களை எப்படித் திருத்துவது?
அவர்கள் உங்களைப் பார்த்து வியக்கும் வண்ணம், உங்களைப் பின்பற்றும் வண்ணம், உங்கள் ஆளுமையை வளர்த்துக்கொள்ளுங்கள். உங்களை மாற்றிக்கொள்ளுங்கள். அவ்வளவுதான். நாம் அவர்களைத் திருத்த வேண்டிய அவசியம் இல்லை.
ஒருவேளை என்னிடம் எல்லாம் சரியாகவே இருப்பது போல் தோன்றுகிறது. நான் எதை மாற்ற வேண்டும் என்ற கேள்வி எழுந்தால், வாழ்க்கையின் பல அம்சங்களில் ஏதாவது ஒன்றை எடுத்துக்கொள்ளலாம். கல்வி, உடல் நலம், பயண அனுபவங்கள் அல்லது வேலை என ஏதோ நம் மனதிற்குப் பிடித்தது.
புதிய விஷயங்களை கற்றுக்கொள்ளலாம். உடற்பயிற்சி செய்து உடலை நல்ல முறையில் வைப்பதாகட்டும் அல்லது புதிய மொழி ஒன்றைக் கற்றுக்கொள்வதாகட்டும். எதுவாக இருந்தாலும் பிடித்ததைச் செய்யலாம். சிறியதாக ஆரம்பிக்கும் மாற்றங்கள், வாழ்வில் பெரிய வளர்ச்சியைக் கொண்டுவரும்.
மாற்றத்தை நாம் ஏற்காமல், வாழ்க்கையைக் கொண்டாட்டமாக வாழ்வதும், வாழ்தலை வரமாக பார்ப்பதும் சிரமமே. எனவே, அடுத்தவர் மாற வேண்டும் என்ற எதிர்பார்ப்பை விடுத்து, மாற்றத்தை நம்மிடம், நம் வாழ்வில் வரவேற்று, வாழ்வைக் கொண்டாடலாம், வாங்க!
(தொடரும்)
படைப்பாளர்:
ஜான்சி ஷஹி
மனநல ஆலோசகர். மன நலத்திற்கான தெரப்பிகளையும் ஆற்றுப்படுத்துதலையும் வழங்கி வருகிறார். வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழவும், பிடித்த எதிர்காலத்தை அமைத்துக்கொள்ளவும், பொது மக்களுக்கு பயிற்சிப் பட்டறைகளை நடத்திவருகிறார். இவர் பெங்களூர் கிரைஸ்ட் பல்கலைக்கழகத்தில் மாணவர் மன நல ஆலோசகராக (student counsellor) பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.