தாய்ப்பால் கொடுப்பதை ஆதரிக்கவும் ஊக்குவிக்கவும் உலக சுகாதார அமைப்பும் (WHO) ஐக்கிய நாடுகளின் சர்வதேச குழந்தைகள் நல அமைப்பும் (UNICEF) இணைந்து 1990இல் ஓர் ஆணையை உருவாக்கியது. அதன்படி 1992ஆம் ஆண்டு முதல் உலக தாய்ப்பால் வாரம் வேர்ல்டு அலையன்ஸ் பிரெஸ்ட் ஃபீடிங் ஆக்ஸன் (WABA) அமைப்பால் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதத்தின் முதல் வாரம் உலகத் தாய்ப்பால் வாரமாகக் கொண்டப்படுகிறது. தாய்ப்பால் கொடுப்பதிலுள்ள உலகளாவிய சிக்கல்களையும் தடைகளையும் கருத்தில் வைத்து ஒவ்வொரு வருடமும் குறிப்பிட்ட கருப்பொருளைக் கொண்டு உலகத் தாய்ப்பால் வாரம் கொண்டாடப்படுகிறது. WABA உலகத் தாய்ப்பால் வாரத் தீம்களில் சிலவற்றை இங்கு காணலாம்.

‘தாய்ப்பால் ஊட்டுவித்தல் ஒரு சமூகப் பொறுப்பு’ (Breasfeeding A Community Responsibility) என்பது 1996ஆம் ஆண்டின் கருப்பொருளாகவும் ‘தாய்ப்பால் கொடுப்பதற்கு ஆதரவளித்தல் மற்றும் தாய்மார்களைப் பேணுதல்’ (Breastfeeding Support – Close to Mothers) என்பது 2013ஆம் ஆண்டின் கருப்பொருளாகவும் ‘தாய்ப்பாலும் வேலையும்: செயல்முறைப்படுத்துவோம்’ (Breastfeeding and Work – Let’s Make it Work) என்பது 2015ஆம் ஆண்டின் கருப்பொருளாகவும் ‘தாய்ப்பால் கொடுக்கும் பழக்கத்தை ஒருங்கிணைந்து நிலைப்படுத்துவோம்’ (Sustaining Breastfeeding Together) என்பது 2017ஆம் ஆண்டு கருப்பொருளாகவும் ‘தாய்ப்பால் பாதுகாப்பு: ஒரு பகிரப்பட்ட பொறுப்பு’ (Protect Breastfeeding: A Shared Responsibility) என்பது 2021ஆம் ஆண்டு கருப்பொருளாகவும் ‘தாய்ப்பால் கொடுப்பதில் முன்னேற்றம் – அறிவூட்டல் மற்றும் ஆதரவளித்தல்’ (Step Up For Breastfeeding – Educate and Support) என்பது 2022ஆம் ஆண்டின் கருப்பொருளாகவும் இருந்தன.

ஒன்றிய, மாநில அரசுகளால் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குப் போட்டிகள் நடத்துவது, கருத்தரங்குகள், ஊடகங்களில் பரப்புரை செய்வது, மருத்துவமனைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற பல்வேறு விதங்களில் உலகத் தாய்ப்பால் வாரம் தமிழகத்தில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

உலகத் தாய்ப்பால் வாரக் கருப்பொருள்களின் உள்ளடக்கங்களை எல்லாம் உணர்ந்து தமிழ்ச் சூழலில் அவற்றைப் பொறுத்திப் பார்த்து, தாய்ப்பால் கொடுப்பதில் தாய்மார்கள் சந்திக்கும் சிக்கல்களையெல்லாம் பொது விவாதத்திற்குள்ளாக்கி தீர்வு நோக்கி நகர வேண்டிய சமூகம் உலகத் தாய்ப்பால் வாரத்தை பட்டிமன்ற தொனியில் அந்தக் காலத்து தாய்மார்களே தாய்ப்பால் கொடுப்பதில் அக்கறை காட்டினர்! இந்தக் காலத்துத் தாய்மார்களுக்கு அக்கறை துளியும் இல்லை என்று ஒப்பிட்டு நகையாடியே ஒவ்வொரு வருடமும் ஒப்பேற்றிவருகிறது.

பல்வேறு மூடநம்பிக்கைகளைப் பின்பற்றக்கூடிய நமது சமூகத்தில் தாய்ப்பால் கொடுப்பதில் எண்ணற்ற சிக்கல்களைத் தாய்மார்கள் சந்தித்து வருகின்றனர். தாய்ப்பால் கொடுப்பதில் பெண்கள் சந்திக்கும் சவால்களில் பெரும்பாலனவை தொன்றுதொட்டு இருந்து வருகின்ற பெண்ணொடுக்க மரபின் வெளிப்பாடாகவே இருக்கின்றன.

சிறந்த முறையில் தாய்ப்பால் கொடுக்க தாய்மார்களுக்கு சீரான உடல் நலமும் உளவியல் நலமும் அவசியமாகிறது. கர்ப்ப காலத்திலிருந்தே அவ்வுடல் நலமும் உளவியல் நலமும் சீராகப் பேணப்பட வேண்டும்.

‘சித்திரையில் குழந்தை பிறந்தால் குடும்பத்திற்கு ஆகாது; திருமணத்திற்குப் போடுறேன்னு சொன்னதை வளைகாப்புக்காவது போட்டு கணக்க முடிப்பாங்களா? வளைகாப்புக்கு எல்லோரையும் அழைச்சு நடத்தணும்னு உங்க வீட்ல சொல்லிடு. பிரசவத்துக்கு ஆகுற மொத்த செலவையும் உங்க வீட்டுலதான் பார்க்கணும். பொட்டப் புள்ளையப் பெத்துப் போட்டிருக்கா, குழந்தை கருப்பா இருக்கு; மூக்கு அவங்க அம்மா மாதிரி கோணலா, அந்தக் காலத்துயெல்லாம் பத்துப் புள்ளையப் பெத்துட்டு நல்லா இருந்தோம், இவ ஒன்னைப் பெத்துட்டு ஏதோ மலையைப் பெயர்த்தவ கணக்கா கண்ணு முழிக்காம இருக்கா; குழந்தை ஆய் போனதுகூடத் தெரியாம தொட்டில்ல விட்டுறுக்கா’ என்பது போன்ற பேச்சுகளால் கர்ப்பிணி பெண்களின் / தாய்மார்களின் உளவியல் நலத்தைத் தொடர்ந்து கெடுத்துக்கொண்டே இருக்கும் ஆணாதிக்கக் குடும்பச் சூழலையே நாம் கொண்டிருக்கிறோம்.

பாலின பாகுபாட்டைக் கடைபிடித்து வருகின்ற நமது உணவுப் பாரம்பரியத்தில் கர்ப்பிணிப் பெண்களின் / தாய்மார்களின் உடல் நலம் கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது.

மருத்துவர்களின் அறிவுரைகளைக் கேட்டு உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாட்டைப் பின்பற்றிவரும் கர்ப்பிணி பெண்களுக்கு, ‘பலகாரம் கொடுத்தல்’ என்ற வழக்கத்தின் மூலம் இனிப்பு, காரப் பண்டங்களை அதிகமாகக் கொடுத்து அவர்களின் உடல் நலத்தோடு விளையாடி வருகிறோம்.

‘குனிந்து நிமிர்ந்து வேலை செய்தே அசால்ட்டாக ஆறேழு புள்ளைகளைப் பெத்துப் போட்டோம்’ என்று பெருமை பாடியே குடும்ப நிறுவனம் கர்ப்பிணி பெண்களையும் தாய்மார்களையும் உடல் நலத்தில் தனிக் கவனம் செலுத்தவிடாமலும் உடற்பயிற்சி போன்றவற்றைச் செய்ய வாய்ப்பளிக்காமலும் ஓய்வின்றி சமைக்கவும் துவைக்கவும் வற்புறுத்திவருகின்றன. இதுபோன்ற மோசமான சூழ்நிலையில் தாய்மார்களை உருவாக்கிக்கொண்டிருக்கும் நமது சமூகம் உலகத் தாய்ப்பால் வாரத்தை பாலின சமத்துவப் புரிதல்களோடு கொண்டாடக் கற்றுக்கொள்ள வேண்டும்.

பாலின சமத்துவத்தையும் வலியுறுத்துவதாகவே WABA சின்னமும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. தாயும் தந்தையும் இணைந்து குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பதாக அமைகின்ற WABA இன் சின்னமும் அச்சின்னம் வலியுறுத்துகிற செய்தியும் சமூகத்தில் பேசுபொருளாக வேண்டும்.

தாய்ப்பால் கொடுப்பதில் தொடங்கி ஒட்டுமொத்தக் குழந்தைப் பராமரிப்பையும் தாயின் கடமையாகத் திணிக்காமல் குழந்தை வளர்ப்பில் தந்தையின் பங்களிப்புகளையும் நடைமுறைப்படுத்த வேண்டும்.

நிறை மாதக் கர்ப்பிணி பெண்களைத் தாய் வீட்டுக்கு அனுப்பி பெண்களைப் பெற்றெடுத்த தாய்மார்களின் ஓய்வுக்காலத்தைச் சுரண்டாமல், கர்ப்பிணிப் பெண்களின் வாழ்விணையர்களே அவர்களைக் கவனித்துக்கொள்ளும் நிலைக்கு நமது சமூகம் முன்னேற வேண்டும்.

பெரும்பாலும் ஐம்பதைக் கடந்தவராகவோ அல்லது பாலினப் பாகுபாட்டு உணவுப் பழக்கங்களால் நோய்வாய்ப்பட்டவராகவோ அல்லது மெனோபாஸ் காலத்தில் இருப்பவராகவோதான் கர்ப்பிணி பெண்களின் அம்மாக்கள் இருக்கின்றனர். இப்படி இருக்கையில் கர்ப்பிணி மகளைக் கவனிக்க வேண்டியப் பொறுப்பையும் அவர்களிடம் மரபு என்ற பெயரில் ஒப்படைப்பது தவறென்று புரிந்துகொள்ள வேண்டும்.

கர்ப்பிணி பெண்கள் அம்மாவுடன் இருப்பதையே விரும்புவர் என்ற சிந்தனை ஆண்கள் பராமரிப்புப் பணிகளிலிருந்து விடுபடுவதற்காக மிகைப்படுத்தப்பட்ட ஒன்று. உடலும் உளவியலுமென நிர்வாணமாகப் பகிர்ந்துகொண்ட துணையிடமே கர்ப்பிணி பெண்கள் வசதியாக உணருவர்.

தந்தைமார்கள் தாய்ப்பால் கொடுப்பதில் தாய்மார்களுக்கு உறுதுணையாக இருக்க, தாய்மை என்ற புனிதக் கற்பிதங்களிலிருந்து விலகி தொடக்கம் முதலே பெற்றோர்மைய வாழ்வியலுக்கு மாற வேண்டும்.

கர்ப்பிணி மனைவியுடன் உடலுறவு கொள்வது எப்படிப் போன்ற தேவையில்லாதவற்றை எல்லாம் தெரிந்துகொண்டு முயற்சிப்பதற்குப் பதிலாக, ஆண்கள் கர்ப்பிணி மனைவியின் வஜைனாவைப் பராமரிப்பது; உடற்பயிற்சி செய்ய உதவியாக இருப்பது; மஸாஜ் செய்ய உதவுவது; பிரசவத்திற்குத் தயார்படுத்தி உறுதுணையாக இருப்பது போன்ற பெற்றோர்மைய நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். கர்ப்பிணி பெண்கள் / தாய்மார்களைக் கவனித்துக்கொள்ள ஆண்கள் பழகுகின்ற பொழுது பெண்களின் உடலைக் கிளர்ச்சிக்குறியப் பண்டமாக மட்டுமே பார்த்துவரும் ஆணாதிக்கச் சமூகத்தின் பார்வைகளும் சிந்தனைப்போக்குகளும் மாற்றம் பெறும்.

விந்தணு கொடுப்பதோடு தந்தையின் குழந்தை வளர்ப்பு பங்களிப்பை முடித்துவிட்டு குழந்தைக்கான பொருளாதாரத்தை அமைத்துத்தர ஆண்களை விரட்டும் ஆணாதிக்கச் சமூகத்தில் எதிர்பாராத சூழ்நிலைகளில் தாய்மார்கள் குழந்தைகளைத் தந்தையர்களிடம் ஒப்படைத்துச் செல்ல நேர்கையில் தந்தையரின் பராமரிப்பை அனுபவித்திடாத குழந்தைகள் அழத் தொடங்கிவிடுகின்றன. இதுவே உலக வழக்கமாகவும் இருந்துவருகிறது.

இப்படியான சூழல்களைச் சமாளிக்க தாய்மார்களைப் பிரதிபலிக்கும் முகமூடிகளையும் உடைகளையும் அணிந்து குழந்தைகளைத் தன்வசப்படுத்தும் தந்தையர்களின் காணொளிகளை இணையத்தில் நாம் நிறைய பார்த்திருப்போம். குழந்தைகள் தாயின் அரவணைப்பில் இருப்பதையே விரும்புவது என்பது இயற்கையான உணர்வல்ல; குழந்தைப் பராமரிப்பு என்பது தாயின் கடமை என்று நாம் பின்பற்றி வருகிற பழக்கத்தால் ஏற்பட்ட உணர்வு.

குழந்தை பராமரிப்பில் தந்தை பங்கெடுக்கிறபோது குழந்தைக்கும் தந்தைக்குமான பிணைப்பு வலுப்பெறும். தேவைகள்தாம் இங்கு உறவுகளை உருவாக்குகின்றன; குழந்தையின் பசித் தேவையைப் போக்கும் தாயை, குழந்தை தன்னுடைய உறவாக நம்புகிறது. அழுதல், சிணுங்கல், சிறுநீர் கழித்தல் போன்ற எதைச் செய்தாலும் உடனே வந்து நிற்கும் தாயை மட்டுமே அதிகமா உள்வாங்கும் குழந்தை எதற்கெடுத்தாலும் தாய்தான் தனக்கு வேண்டுமென்று எதிர்பார்க்கப் பழகிவிடுகிறது.

தாயுடன் சேர்ந்து தந்தையும் குழந்தையைப் பராமரிக்கையில் குழந்தைக்குத் தந்தை மீதும் நம்பிக்கை உண்டாகும்; தாய்ப்பால் கொடுப்பது தாய்க்கும் குழந்தைக்கும் பிணைப்பு உண்டாக்குவது போல தாய்ப்பால் கொடுக்கும்போது தந்தையும் அருகிலிருந்து கவனித்துக்கொள்வதன் ஊடாகத் தந்தைக்கும் குழந்தைக்குமான பிணைப்பை உருவாக்க முடியும்.

அரவணைப்பு ஹார்மோன் என்றழைக்கப்படுகிற ஆக்ஸிடோசின் ஹார்மோன் தாய்ப்பால் சுரப்பிற்கு உதவுகின்ற ஹார்மோன். தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களின் ஆக்ஸிடோசின் சுரப்பை ஊக்கிவிக்க வாழ்விணையர்களின் அரவணைப்பு தாய்மார்களுக்கு தேவைப்படுகிறது. தாய்ப்பால் கொடுப்பதில் தந்தையரின் பங்களிப்பும் இங்கேயே தொடங்கிவிடுகிறது.

தாய்ப்பால் கொடுப்பதில் தொடங்கி குழந்தை பராமரிப்பில் பெற்றோர்மைய வாழ்வியல் நிலை உருவாகும் வகையில் உலகத் தாய்ப்பால் வாரத்தைக் கொண்டாடவும் கொண்டு சேர்க்கவும் வேண்டும்.

தாய்ப்பால் கொடுப்பதை வெறுமனே கட்டாயப்படுத்திக் கொண்டிருக்காமல் தாய்ப்பால் கொடுப்பது தாய்மார்களின் விருப்பத்தையும் உடல் நலத்தையும் சார்ந்தது என்பதைப் புரிந்துகொண்டு தாய்ப்பால் வங்கிகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வாரமாகவும் பொது இடங்களிலுள்ள தாய்ப்பால் கொடுக்கும் அறைகளின் நிலையையும் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களையும் பேசும் வாரமாகவும் உலகத் தாய்ப்பால் வாரத்தை முன்னெடுக்க வேண்டும்.

தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கேற்ற உணவு, உடை, உறக்க மேலாண்மை குறித்தெல்லாம் ஆய்வுப்பூர்வமாக விவாதிக்கும் தளங்களை நாம் உருவாக்க வேண்டும்.

இனி வரும் காலத்தில் தாய்ப்பால் கொடுப்பதை ஆதரிக்கும் அளவில் மட்டுமே சுருக்கிப் பார்க்காமல் குழந்தை பராமரிப்பில் பாலின சமத்துவத்தை வளர்த்தெடுக்கும் பரந்துபட்ட பார்வையோடு உலகத் தாய்ப்பால் வாரத்தைக் கொண்டாட வேண்டும்.

படைப்பாளர்:

கல்பனா

அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் கோவை மாவட்ட துணைத்தலைவராக உள்ளார். மலசர் பழங்குடிகளின் சமூகப் பண்பாட்டு இயங்கியல் என்னும் பொருண்மையில் தன்னுடைய முனைவர் பட்ட ஆய்வுப்பணியினை மேற்கொண்டுவருகிறார். சர்வதேச ஆய்விதழ்களில் ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.