நண்பகல் அந்தியிலிருந்து விடுபட்டுக்கொண்டிருந்தது வானம். மாலைக்கான விடைபெறுதலுக்குப்

பட்டும் படாமலும் சூரியன் ஒத்துழைத்துக்கொண்டிருந்தது.

தேய்மானம் கண்ட வாழ்வொன்று குடிபெயர்ந்திருந்தது.

“சொந்த ஊட்டைப் பார்த்துப் பார்த்து கட்டிட்டு வாடகை ஊட்டைத் தொடச்சு மொழுகுற எழுத்தா தலையில வாங்கிருக்கேன் போல. இந்த ஊட்லயாச்சும் சாமானையெல்லாம் அடுக்கலாமா? இல்ல, எப்ப குடிசையை மாத்திப்புடுவியோன்னு சாக்கு மூட்டையோடயே வச்சிக்கவா?”

வாசலில் பரப்பியிருந்த தட்டுமுட்டுச் சாமான்களுக்கிடையே, ஒரு கொத்துப்புடவை இடுப்பிற்கு ஏறியிருந்தபடியால், மாலதியின் மஞ்சள் பூசிய கொலுசுக்கால் புது வீட்டின் காபி நிற டைல்ஸ் கட்டத்தில் இன்னும் எடுப்பாகத் தெரிந்தது.

“சத்தமா பேசாதடி. எல்லா ஏரியாவுலயும் என் மானத்தை வாங்கியாச்சு. இந்த ஏரியாதான் பாக்கி. ஊட்டுக்குள்ள சாமானையெல்லாம் அடுக்கு. நான் போய், புள்ளயல பள்ளியோடத்துலேருந்து கூட்டியாறேன்.”

வாசலில் நின்றுகொண்டிருந்த தட்டு ரிக்சாகாரரிடம் இருநூறு ரூபாயைக் கொடுத்து, “இவ்ளோதான். மேல கொடு கீழ கொடுன்னு ஆரம்பிக்காத” என்று கண்டித்தவனாகத் தன் டி.வி.எஸ் எக்சலை உதைக்க ஆரம்பித்தான் வெற்றி.

தன் சொந்த கிராமத்தைவிட்டு, பிள்ளைகள் படிப்பிற்காகவும் தன் வேலைக்காகவும் பக்கத்து டவுனுக்குள் வாழ்வை மாற்றியிருந்தான் வெற்றி.

ஊர்ப்பக்கம் வெற்றிக்கு ஏக செல்வாக்கு. எல்லாப் பஞ்சாயத்துகளும் வெற்றியை எதிர்பார்க்கும்.

“எங்கப்பா… வெற்றி இல்லையா? அப்ப சபை அடங்காது. இவனுக கூடக்கூடப் பேசுவானுக. அவன்தான் கோணலான நுணாக்காயுன்னாலும் சமமா பொளந்து உட்ருவான். அவன் வரானான்னா பாருங்க. அவனைக் கேக்காம பஞ்சாயத்து கூட்னிங்களாக்கும் பைசாக்குப் பிரயோசனமில்லை.”

இந்த வகையில்தான் அவன் அமராத பஞ்சாயத்துகள் தானாகக் கலைந்து செல்லும்.

வெற்றி வீட்டுக்கு மூத்த மகன். அம்மாவும் அப்பாவும் அடுத்தடுத்த வருடங்களில் பரலோகப் பணிக்கு அணி வகுத்தாயிற்று. தங்கைக்கும் தம்பிக்கும் சொத்துகள் பிரித்தாயிற்று. அவரவர் குடும்பத்தை அவரவர் கையாண்டு வந்தனர்.

மூத்த மருமகளாக மாலதி வந்துதான் வீட்டின் அடுத்தடுத்த திருமணங்களைத் தம்பதி சகிதமாக நடத்தி வைத்தாள். வெற்றிக்கு அவன் அப்பா இருந்த காலத்திலேயே அங்காடியில் வேலை வாங்கியாயிற்று. அரசாங்க வேலை. ஆனால், பக்கத்து டவுனில்தான் கிடைத்தது. ஊருக்குள்ள இருந்த பணி இடத்துக்குத்தான் பெரிய போட்டியாக இருந்தது. வெற்றிதான் அவன் அப்பாவிடம் பேசினான்.

“நானே டவுனுக்குப் போய்க்கிறேன், என் பங்காளிப்பா முருகன், அவனே இங்க வேலையை வாங்கிக்கட்டும்.”

“யாருக்கு யாருடா பங்காளி?” வெற்றியின் அப்பாவுக்கு வேத்தாள் நம்மாள் என்ற பாகுபாடு ரத்ததுடன் கலந்த ஒன்று.

“அட போயா யோவ், ஆளும் உன் மூளையும்.

நான் டவுனுக்குப் போறேன் அவ்ளோதான், உன் சோலியப்பாரு” என்று வெற்றி முடித்தான்.

ஊரில் இருந்த காட்டையும் வீட்டையும் குத்தகைக்கு விட்டாச்சு. தம்பி அவன் நிலத்தை விற்றேவிட்டான். தங்கச்சி அது குடும்பத்தோட போராடத்தான் பிறப்பே எடுத்திருக்கிறது.

அரிசி மூட்டையில் அடிக்கிறது, மண்ணெண்ணையைப் பதுக்குறது என்று எந்தச் சூதுக்கும் உதவாதவன் வெற்றி.

“ஊரை ஏய்க்க மாட்டேன்னு பேச்சு மட்டும் பெருசா பேசுவ. ஆனா, கட்னவளை மட்டும் காலம்பூரா ஏய்ப்ப அப்டித்தான?”

“உன் பேச்சு ஒரு பக்கமா போகட்டும்டி. ஏசிக்கிட்டே புள்ளையளுக்கு மூஞ்சைக் கழுவி உட்டு காபி தண்ணிக் கொடு. வயித்துல ஒன்னுமே இல்லாத மாதிரி ஓஞ்சி வந்துருக்குவோ.”

“ஆமா, அப்டியே புள்ளய மேல அக்கறைதான் உனக்கு. என்னைய கெட்டளா காட்டணும் அதுங்ககிட்ட. அதான அதுங்களுக்கு நேரா என்னைய துச்சமா பேசுற?”

“புடவைய அதுக்குள்ள மாத்திட்டியாடி?

இந்த நைட்டில எப்டி பார்த்தாலும் அழுக்காவே தெரிவ! போ போய் மூஞ்சைக் கழுவி எங்காத்தா மங்களம் மாதிரி பளிச்சுன்னு வந்து நில்லு மாமன் முன்ன.”

“அப்பா! மங்களம் ஆத்தா நைட்டியா போட்ருக்கும்?” என்று

மூத்த மகள் ஜெனி நிதானமாக அப்பனை உற்றுப்பார்த்துக் கேட்டாள்.

மாலதிக்கும் வெற்றிக்கும் அப்படியொரு சிரிப்பு அவர்கள் ஜாதகதப் பொருத்தம் போல பொருந்திக் கிளம்பியது. இரண்டும் மகள்களாகப் போய்விட்டதே என்று மாலதியும் சோர்ந்ததில்லை. வெற்றியும் மகனுக்கு முயற்சிக்கவில்லை.

அம்மியின் மீது இருந்த வெற்றியின் செல்போன் கீபேட் செல்லுக்கே உண்டான மெல்லிய குரலுடன் கூப்பிட்டது.

“அப்பா! உனக்கு யாரோ போன் பண்றாங்க” என்று யூனிஃபார்மைக் கழற்றி, ஜட்டியும் பனியனுமாக ஓடிவந்து முலான், வாசலில் நின்ற வெற்றியிடம் கொடுத்தாள்.

“அம்மாடி, மூனாப்பு வந்துட்ட ,இப்டி நிக்காதன்னு அப்பா எத்தனை தடவை சொல்லிருக்கேன். போய் கவுனைப் போடு.”

“புள்ள காத்தோட்டமா நிக்கட்டுமே. காலமெல்லாந்தான் இழுத்துப் போத்தணும்” என்று மாலதி மல்லுக்கு நின்றாள்.

போனைப் பார்த்ததும் யார் என்று தெரிந்தது. ஆனாலும் ஏற்காமல் அப்படியே வைத்திருந்தான் வெற்றி.

“அந்தப் போனா? எடுக்காம எத்தனை நாளு இருப்ப?

இந்த ஊட்டுப்பக்கமும் வந்து மானத்தை வாங்கத்தான் போறானுக.”

“விட்றி. பார்த்துக்கலாம்.”

“என்னத்த பார்த்துப்ப?”

“படிச்சு படிச்சு சொன்னேன், இதெல்லாம் வேணாம் யாருக்கும் ஜாமீனுக்கு நிக்காதன்னு கேட்டியா?

இப்பப் பாரு எல்லாத்தையும் வித்து வித்து அடைச்சிக்கிட்டு இருக்க.”

“எவன் ஊட்டு சொத்தை எவனுக்காக விக்குறது?”

“மாலதி, எல்லாம் சரி ஆகிடும்டி. வாழ்க்கையில சில சோதனைகள் வரத்தான் செய்யும். அதையும் கடந்துதான் வரணும்.”

“நான் ஏன் யா அடுத்தவன் தப்புக்கு வேதனையா நிக்கணும்?”

“சமத்துவம் என்னா வேணும்னேவா அப்படிப் பண்ணான்?”

“அதுக்கு? யாரு தண்டம் கட்டுறது?”

சமத்துவம் வெற்றியின் கல்லூரி நண்பன். வெற்றியின் இரண்டாவது மகள் முலான் மாலதியின் வயிற்றில் ஏழு மாதக் கரு. அப்போது மருத்தவரைப் பார்த்துவிட்டு வெளியில்வந்து, வெற்றி தன் புல்லட்டை எடுக்க காலைத் தூக்கியபோது திடீரென அவ்விடம் வந்த ஒரு நபர் மீது பட்டுவிட்டது.

“ஐயோ சாரிங்க. தெரியாம பட்டுட்டு” என்று வெற்றி பதறினான்.

“பரவால்லங்க. நான்தான் கவனிக்காம போனைப் பார்த்துக்கிட்டே வந்துட்டேன்” என்று சொல்லி முடித்த சமத்துவத்தை வெற்றி ஆழ நோக்கினான்.

“அட வெற்றி! நீயாடா?”

“மாப்ளே சமத்து! எவ்ளோ நாளாச்சு! எப்பிட்றா இருக்க? எங்க இருக்க? என்னா பண்ற? இதான் என் மனைவி மாலதி.

மாலதி, இதான் சமத்துவம். என் காலேஜ் ப்ரெண்டு.”

“வணக்கம்ணே” தலையைப் பாதி தூக்கி மீள கவிழ்த்தாள் மாலதி.

“வணக்கம்மா, டேய் புள்ளத்தாச்சி புள்ளய ரோட்ல நிக்க வச்சிக்கிட்டு ஆறு வருசத்து கதையைக் கேக்க பார்க்குறியா வெற்றி? நம்பரைக் கொடுத்துட்டுக் கிளம்புடா. போன்ல பேசுவோம்.”

“மாப்ளே, இதுதான் என் நம்பரு. எங்க மிஸ்டு கால் கொடுடா” என்றான் வெற்றி.

ஆப்பிளுக்கே ஆக்கப்பட்ட அந்த ஒய்யார ஓசை அரை நொடி வந்து அடங்கியது.

“சரிடா, மாப்ளே போன் பண்றேன் வா பார்க்கலாம்” என்று வெற்றி புல்லட்டை உதைத்தான்.

புட்ட்டூ… புட்ட்டூ… புல்லட் அந்த ரோட்டை அளந்து மறைந்தது.

சமத்துவம் வெளிநாடுகளுக்கு ஆள் ஏற்றி அனுப்பும் வேலையைப் பார்த்து வந்தான். ஓர் ஆளுக்குத் துண்டாக முப்பதாயிரம் நிற்கும்.

சமத்துவம் பழகுவதற்கு மட்டுமல்ல வரவு செலவுக்கும் இனிமையானவன். கேட்டால் இல்லை என்று வெற்றிக்கு மறுத்ததே இல்லை அந்தக் கல்லூரி நாட்களில்.

கைமாத்து வேற கடன் வேற என்பது சமத்துவத்தின் போக்கு. கடன் என்றால் வட்டி பிறக்கும். கைமாத்து என்றால் ரெண்டே நாள் கெடு.

சமத்துவம் வீட்டிற்கு ஒரே மகன். சிறு வயதிலேயே அப்பாவை இழந்தவன். வாடகைக்கு இரண்டு வீடுகளைக் கட்டிவிட்டிருந்தார் அப்பா. அதனால் அவனை வளர்க்கும் பாடு அவன் அம்மாவிற்குச் சற்று சுலுவாக இருந்தது.

“ஏஜென்சியை நானே தொடங்கலாம்னு இருக்கேன் மாப்ளே.”

“சூப்பர்டா, சமத்துடா நீயி. அது தெரிஞ்சிதான் உங்கப்பன் இந்தப் பேரை வச்சிருப்பாரு போல” என்று சொல்லி முடிக்கும் முன்னே வெற்றிக்குச் சிரிப்பை மறைக்க முடியவில்லை.

“அடேய்… அந்தாளு கம்யூனிஸ்டுடா” என்று சமத்துவமும் இதைச் சொல்லிச் சிரித்தான்.

“கம்யூனிஸ்டுன்னா யாருடா மாப்ள?” என்று மெல்ல வெற்றி நிமிண்டினான்.

“எலே வெற்றி! நீ யாருன்னு எனக்குத் தெரியும்டா. வாயை கிண்டி பொழுதை ஓட்ட பார்க்குற. உனக்காடா கம்யூனிஸ்டு தெரியாது? ஒரு கூட்டம் விடாம நிப்ப, என்ன நக்கலா?”

“ஹா… ஹா… அது இல்லடா மாப்ளே. நீ எப்டி கம்யூனிஸ்டைப் புரிஞ்சி வச்சிருக்குறன்னு தெரிஞ்சிக்கலாம்னு கேட்டேன்.”

“நீ நிறுத்துடா. அந்த கம்யூனிஸ்டுக்காரன் கட்டி உட்டுட்டு போய்ருந்த ஊடுக வேலை பார்த்தே ஆகணும். சரியான பராமரிப்பு இல்லை. பெருசா செலவு வைக்கும் போல. அதான் வித்துப்புடலாம்னு யோசிக்கிறேன்.”

“ஏன்டா? அதைப் போய் விக்குற?”

“அதுல சிக்கல் இருக்கு மாப்ளே. எங்க அத்தை கண்ணு இருக்கும் போதே அது கையெழுத்தோட வித்துப்புடணும். அது கட்டையைச் சாச்சிட்டுன்னா என் அத்தை மவனுக பிச்சி தின்னுடுவானுக.”

“அது சரி. சொத்துன்னாலே சங்கடந்தான்.”

“உன் பக்கம் எதுன்னா பயலுக வெளிநாடு போக நின்னா கூட்டி வாடே. நம்ம ஏஜென்சி மூலமா அனுப்பி வைப்போம். உனக்கு ஒரு தொகை கமிசனா கிடைக்கும்.”

“ஐயே… எனக்கு அதெல்லாம் வேணாம்டா. அதுக்கு வேணா அவனுங்ககிட்ட வாங்குற காசைக் குறைச்சிக்க.”

“என்னடா, இப்டி இருக்க? இதுவும் உழைக்கிற காசுதான்டா.”

“இதுல நான் என்னாத்த உழைக்குறேன்.

நீ உழைக்கிற, அவனுக காசு கொடுக்கிறானுக.”

கிராமத்தில் சுற்று வட்டாரப் பயலுகளில் படித்துவிட்டு வெட்டியாகச் சுற்றும் இளந்தாரிகளைப் பிடித்தாயிற்று. அதில் ஐந்துக்கு நான்கு பேர் பொறியாளர் படிப்பு. ஆனால், படிப்பை முடித்ததற்கான ஆவணங்கள் ஏதுமில்லை. பாதியில் நின்றவர்கள்.

“இவனுகளை ஆபிசர் வேலைக்கா அனுப்ப முடியும்? லேபருதான். தலைக்கு ஒரு லட்சம் ஆகும். அதுவும் அரபு நாடுகள்னாதான். சிங்கப்பூருன்னா இன்னும் செலவு ஆகும்.”

வெற்றி வீட்டில் உட்கார்ந்துதான் இதையும் சமத்துவம் சொன்னான்.

“என்னப்பா… எவனுக்குத் தெம்புருக்கோ காசோட வா” வெற்றி முடித்தான்.

சொந்த ஊரில், பக்கத்து ஊரில் என்று இருபது தலை வெற்றியால் தேறியது. அனைவரிடமும் மொத்தப் பணமும் வாங்கப்பட்டது. தவணைகள் கறாராக மறுக்கப்பட்டது. சமத்துவத்தின் கம்பீரக்குரலும் வெற்றியின் சுருக்கப்பேச்சும் யாரையும் சந்தேகத்திற்குள் தள்ளவில்லை.

பயணத் தேதி குறிக்கப்பட்டது. டிக்கெட்டுகள் கன்ஃபார்ம் ஆகின. வெற்றியின் இருபது பேரையும் சேர்த்து மொத்தமாக ஐம்பது ஆட்களை சென்னை மீனம்பாக்கத்தில் இருந்து எமிரேட்சில் ஏற்றியாகிவிட்டது.

“மாப்ள, போன் வந்துச்சுடா. பொம்பள புள்ள.”

“அட்றா சக்கை, வாழ்வுடா, தேவதைகள் சூழ் வரம்டா உனக்கு. வாடா ராத்திரி ட்ரெயினுக்கே திரும்பிடுவோம். மாலதி என் மேலதான் கோபமா இருக்கும். உன்னைய அதுகிட்டேருந்து பிரிச்சி பிரிச்சிக் கூட்டியாறேன்னு.”

“அதெல்லாம் இல்லடா சமத்து.”

“வாடா எனக்கு எல்லாம் தெரியும்.”

பெயர் சூட்டு விழா. கிராமத்தின் பாதி சனம் அந்தப் பந்தலை அடைத்திருந்தது. சமத்துவம் சந்தன நிற சிலுக்குச் சட்டையும் வெள்ளை பேண்டுமாக பந்தலுக்குள் நுழைந்தான்.

அந்தி சாயும் பொழுது அது. அந்த மங்கொளியில் சமத்துவமும் அவன் கை தங்கக்காப்பும் மின்னின.

“மாப்ளேய். என்னடா இவ்ளோ லேட்டா வர?” என்று வெற்றி கோபித்தான்.

“வழில சின்ன வேலைடா, அதான் கொஞ்சம் லேட் ஆகிட்டு.”

“அம்மா எங்கடா? அவங்க இல்லாம வந்துருக்க?”

“எனக்கு முன்னாடியே அம்மா உள்ள வந்துட்டு. நீதான் கவனிக்கல.”

“அட ஆமாடா! புள்ளய தூக்கி வச்சிருக்காங்க அம்மா. இப்பத்தான் கவனிக்கிறேன். உள்ள வந்து நீயும் புள்ளய பாரு வா.”

சமத்துவத்தின் அம்மாவின் கையில் தேங்காய்ப்பூ துண்டிற்குள் அசைவுடன் இருந்தது அந்த மெழுகு பொம்மை. நாக்கு கொண்டு ஓர் அங்குலத்தில் இருந்த தன் உதடுகளை ஈரப்படித்தியவாறே முனகியது.

சந்தன சட்டையின் பாக்கெட்டிலிருந்து செயின் ஒன்றினை எடுத்து, அந்த செயினுக்குள் முலானை மாட்டினான் சமத்துவம்.

“என்னடா மாப்ள இதெல்லாம்?”

“உன்னை யாரு இப்ப இதெல்லாம் வாங்கச் சொன்னா?” என்று வெற்றி முறுக்கினான்.

“டேய் விட்றா… புள்ளைக்குச் செய்றதை ஒன்னும் சொல்லாத.”

“என்னண்ணே இதெல்லாம்! இவ்ளோ செலவு என்னாத்துக்கு?. நீங்ககூட நின்னாலே போதும்ணே. இந்த நகை நட்டுத்தான் சொல்லப்போகுதா உங்க பாசத்தை?” மாலதியும் அழுத்தினாள்.

“அட அமைதியா இருங்க ரெண்டு பேரும். என் மருமவ மேலதான் தங்கமும் கூடுதலா மின்னுது” என்று சமத்துவம் முலானின் கன்னத்தை மெல்ல தடவினான்.

புது வாழ்விற்கான வளமான பாதையை அடைந்தாகிவிட்டது என்ற நிம்மதி இரண்டு நாட்களுக்குகூடச் சமத்துவத்திற்கு நிற்கவில்லை.

சொன்ன வேலை ஒன்று, தந்த வேலை ஒன்று. சோறும் ஒரு வேளைதான். உசுரோட நாடு திரும்ப முடியாது போல! வெளிநாடு சென்ற ஊர்க்காரன்கள் பாடு இது.

சமத்துவம் அனுப்பிய ஐம்பது பேரும் மொத்தமாகத் தாய்நாடு ஏற்றி, திருப்பி அனுப்பப்பட்டனர்.

“யோவ், சமத்துவம் என்னாயா ஆளுகளை அனுப்பிருக்க?

ஒருத்தனுக்கும் கம்பி கட்டத்தெரியல, ஏசி ரூம்ல வேலை கேட்பானுக போல. இங்க பெரிய பிரச்னையா பண்ணி உட்டானுக. அத்தனை பயலும் திரும்பி வந்துட்ருக்கான்.

நேரா உன்கிட்டத்தான் வருவானுக. சமாளிச்சிக்க. கம்பெனி உன் மேல செம கடுப்புல இருக்கு. காசு பணம்னு எதுவும்

திரும்பக் கிடைக்காது. அவ்ளோதாம் சொல்லிட்டேன்” என்று

அரபு நாட்டு ஏஜெண்டு இவ்வாறாக அழிவு காலத்தை அறிவித்துவிட்டான்.

சமத்துவம் மோசம் போயிருந்தான். அதன்வழி அந்த வலசைப் போன ஊர்க்காரன்களும்.

தானும் ஏமாந்து தன்னை நம்பியோரையும் ஏமாற வைத்துவிட்டோமே என்று உடைந்து உயிரோடு மட்டும் இருந்தான் சமத்துவம்.

அனுப்பிய ஐம்பது பேரில் முப்பது சமத்துவம் வழி, மீதி இருபது வெற்றி வழி.

வெற்றியின் வழியைத்தான் முதலில் சரிசெய்ய முடிவெடுத்தான் சமத்துவம். ஆனால், சமத்துவத்தின் வழி முந்திக்கொண்டார்கள்.

முதல் முப்பதுக்கும் சமத்துவத்தின் சொத்துகள் மொத்தமாக முடிந்தன. வெற்றியின் இருபதில் இரண்டை மட்டுமே சமத்துவத்தால் சமாளிக்க முடிந்தது. வெற்றியையும் தன்னுடன் சேர்த்துச் சிதைத்து விட்டோமே என்று சமத்துவம் உள்ளுக்குள் புழுங்கி மடிந்தான்.

அந்த நிலைக்காக வெற்றி ஒருநாள்கூடச் சமத்துவத்தைச் சபிக்கவே இல்லை. மாலதியும்தான்.

ஒருநாள் தன்னுடைய நகைகளைக் கொடுத்துப் பணம் புரட்டச் சொன்னாள் மாலதி. அதில் சமத்துவம் முலானுக்குப் போட்ட செயினும் இருந்தது. அதைப் பார்த்தவுடன் சமத்துவம் வாய்விட்டு அழுதேவிட்டான்.

“விட்றா மாப்ள, எல்லாத்தையும் சமாளிப்போம்” என்று சமத்துவத்தின் தோளில் வெற்றி தட்டினான்.

நகைகளை எடுத்துக்கொண்டு வெற்றியும் சமத்துவமும் டவுனுக்குக் கிளம்பினர். வெற்றிதான் புல்லட்டை இயக்கினான்.

கிராமத்து குறு ரோட்டைவிட்டு மெயின் ரோடு பிடிக்க வலது புறம் வளைக்கையில் புல்லட் வேகமெடுத்தது. ஆனால், அச்சாலையில் ஏற்கெனவே தன் நேர்க்கோட்டில் வேகமெடுத்திருந்த கனரகம் ஒன்று வெற்றியின் புல்லட்டை பேப்பர் பந்துபோல் தட்டியடித்தது.

புல்லட், சமத்துவம், சமத்துவத்தின் கையில் இருந்த நகைகள் என அனைத்தும் நாசம். வெற்றி மட்டுமே மிச்சம்.

மாலதிக்கு வெற்றி மிஞ்சியதில்தான் அவன் வீட்டு குலதெய்வத்தின் மீது உண்மையில் பக்தி பிறந்தது.

வெற்றியின் சொத்துகளும் தோற்றன. வேலையும் இல்லாமல் போனது.

ஆனாலும் இன்னும் மூன்று பேருக்கு பாக்கி. அவர்கள்தாம் அடிக்கடி போன் செய்து பணத்தைக் கேட்பார்கள். வாடகை வீடுகளுக்கு முன்பு வந்துநின்று மூன்று முறைக்கும் மேல் சத்தம் போட்டுவிட்டனர். இதனாலேயே அடிக்கடி வீடு மாறினான் வெற்றி.

மாலதிக்கும் வெற்றிக்குமான இடைவெளி வழக்கமான தம்பதிகளையும் தாண்டி பெரிதாகிக்கொண்டே சென்றது.

கடன்காரனாகத் தன் கணவன் தப்பித்து தலைமறைவதைச் சகிக்க முடியவில்லை அவளால்.

துணுக்குத் தங்கம் மிச்சமில்லை. போன வாரம்கூட அவளது மூக்குத்தியை வாங்கி விற்றான் வெற்றி.

வீட்டை நேர்த்தியாக வைத்திருந்தவள் குப்பைக்காடாகக் குவித்துவிட்டாள். நல்ல துணி கட்டுவதில்லை. நல்ல வார்த்தை உதிர்ப்பதில்லை.

“மாலதி, என் தங்கக்கிளியே!”

“இங்க பாருய்யா அப்டி மட்டும் கூப்பிட்டு என் வயித்தெறிச்சலைக் கெளப்பாத.”

“சின்னவளைத் தூக்கி அந்தப் பக்கம் போட்டுட்டு நீ இந்தப் பக்கம் வாயேன்.”

“நல்ல வாழ்க்கைக்குத் துப்பு இல்ல. இது மட்டும் கேக்கும் பொழுதுக்கும்.”

“நல்ல வாழ்க்கைன்னா என்னடி?”

“நீ என் பக்கதுல இருக்க, இந்தா என் பொண்ணுங்க என் கைக்குள்ள தூங்குது, இதைவிட என்னா வேணும்?”

“காசு பணம் வேணும். ஊடு வாசல் வேணும்.”

“வாங்கிக்கலாம். கழுதை எங்க போய்ட போகுது… என் வேலையே திரும்ப எனக்குக் கிடைக்கும் பாரேன். பெரிய ஆபீசர்கிட்ட பேசிட்டேன்.”

“கிடைச்சதும் கூப்டு வாரேன்.”

“அடியேய் நீ என் பொண்டாட்டிடி.”

“அதுக்கு? நீ கூப்டா வந்துடணுமா?”

“இல்லியா அப்றம்?”

“நான் முடிவு பண்ணணும்யா உன்னைய சேர்க்கணுமா வேண்டாமான்னு.”

“எனக்குத் தெரியும்டி தங்கமே. நான் தேடுனா கைக்குள்ள இருப்பா என் பச்சைக்கிளி.”

“நெனப்புத்தான்” என்றவளைத் தாவி இழுத்துக்கொண்டான்.

முலான் இடம் மாற்றப்பட்டாள்.

குடும்பத்திற்காக மாலதி வேலைக்குச் செல்லத் திட்டமிட்டாள். வெற்றியும் சரி சொல்லிவிட்டான்.

இன்னும் பத்து நாள்களில் புது வேலையில் சேர்வாள்.

வீட்டுச் செலவுக்குச் சுத்தமாகப் பணம் இல்லை. எந்த மாதமும் இல்லாத அளவில் இந்த மாதம் தட்டுப்பாடு சக்கைப் போட்டது.

நகை என்ற பெயரில் கடைசியாக மாலதியிடம் அவள் கொலுசு மட்டும் ஒட்டிக்கொண்டிருந்தது.

அதை எப்போது கணக்கு போட்டானோ தெரியவில்லை. பத்து நாளில் தந்து விடுவதாக அதைக் கேட்டான் வெற்றி.

“உனக்குக் கூறுபோய் ஆறு வருசமாச்சுய்யா, என்னை மொட்டை சிறுக்கியா பார்க்கத்தான நிக்குற, உனக்கு எதுக்கு குடும்பம்?”

“மாலதி, நிலைமை அப்டி ஆகுது. எனக்கு மட்டும் என்ன உன்னை இப்படியே வச்சிக்கணும்னா ஆசை? சீக்கிரம் சரி பண்ணிடறேன்.”

“இந்தா தூக்கிட்டுப் போ. இனி என்னத்தை உருவுறன்னு பார்க்குறேன்.”

மாலை வீடு வந்த வெற்றி கையில் ஒரு பையுடன் வந்தான். வீட்டுக்கான அவசிய மளிகைகள் மட்டும் கச்சிதமாக வாங்கப்பட்டிருந்தன.

மாலதி… மாலதி…

அமைதி.

“மாலதி… மாலதி… ஏய்…”

அமைதி.

வீட்டிற்குள் வந்து பார்த்தான். வெறும் தரையில் படுத்திருந்தாள் மாலதி.

“தலகாணிக்கூட இல்லாம என்னாடி இப்படிக் கெடக்குற?” என்று அவள் தலையைத் தூக்கி மடியில் வைக்க முயன்றான்.

“ச்ச.. என்னைத் தொடாத.”

“என்னடி?”

“என்னைத் தொடாதன்னு சொன்னேன்.”

கடந்த ஆறு ஆண்டுகால வறட்சியும் விரக்தியும் அவளை முழுதாக மாற்றி வைத்திருந்தது.

அவனைக் கண்டு அவள் வெட்கி வருடமாகி இருந்தது.

அவனுக்குப் பிடித்தது சமைத்து காலங்களாகி இருந்தன.

அவனுக்காகப் படுக்கையைச் சரிசெய்தது பழங்காலம் ஆகி இருந்தது.

பிடிமானமற்ற வாழ்வுதான் பெண்ணைப் பேயாகவும் பிசாசாகவும் பிசைந்திருக்கும்.

“அடுத்து யாரை விக்கப் போற? என்னையா?”

வெற்றி சிலையாகிவிட்டான்.

“உனக்கு ரெண்டு பொம்பள புள்ள வேற, எந்த ரோட்ல நின்னு பிச்சை கேட்கப் போவுதோ!”

மாலதி பேசிக்கொண்டே இருந்தாள்.

வாசலில் கிடந்த நாற்காலிக்குத் தன் முயற்சி இல்லாமலேயே சென்றிருந்தான் வெற்றி.

அப்பா… அப்பா…!

ஜெனி ஒரு தொடையிலும் முலான் ஒரு தொடையிலுமாக அமர்ந்துகொண்டு ஒரு புத்தகத்தின் படங்களைக் காட்டி பேசிக்கொண்டே இருந்தனர்.

வெற்றி சிலையாக மாறியிருந்தான் அல்லவா? அவனின் காதுகளும் சிலையின் காதுகளாகவே செயல்பட்டன. பின்பு அவர்களே ஏதோ ஓர் முடிவிற்குள் வந்து அப்பனின் தொடைகளை விட்டு நகர்ந்து வீட்டிற்குள் சென்றனர். மூன்று மணி நேரமாக ஒரே இடத்தில் இருந்தான் வெற்றி.

“அப்பா சாப்பிட வாங்க” என்று சின்னது அழைத்தது.

“அப்பா சாப்பிட வாங்க” என்று பெருசு அழைத்தது.

அவன் நகரவே இல்லை.

அந்த இரண்டிற்கும் பெருசாக அவன் மனதில் இருந்தவளின் குரல் அவனை அழைக்கவே இல்லை.

நான் செய்த பிழை என்ன!

மாலதியை நான் விற்பேனா? என்னைப் பார்த்து எப்படிக் கேட்டாள் அப்படி? அவளுக்கு நன்றாகத் தெரியுமே என் காதல்! என்னை மாமா என்று அவள் அழைப்பதை நிறுத்தி நாட்களாயிற்று.”

மாலதியைப் பெண் பார்க்கச் சென்றபோது அவள் வைத்திருந்த கனகாம்பரம் நிறம் கம்மியாகத் தெரிந்தது அவள் கன்னம் பக்கம். ஆசை ஆசையாக மணக்கப்பட்டவள் அவள். தினமும் அவளுடன் மணந்தே விடிந்தவன் அவன். அவளுடனான அத்தனை மகிழ்வையும் உள்ளுக்குள் மீட்டுக்கொண்டிருந்தான்.

அவளுக்கு வைக்கும் நெற்றி முத்தத்தை நேற்று இரவு வரை அவன் நிறுத்தவில்லை.

அவளும் சோடை அல்ல. வெற்றி மட்டுமே உலகம் என்றானவள். அவன் குரல் கேட்டே ஈரம் பூத்தவள். அவனை விட்டுத் தாய்வீடுகூடச் செல்லாதவள். வெறுத்த சண்டையானாலும் அவன் இருப்பில் மட்டுமே வாகை சூடிக்கொள்பவள்.

வெற்றிக்கு இப்போது அவன் மார்பை அவள் கைக்கொண்டு தடவினாள் போதும் என்று இருந்து. நெற்றியில் முத்து முத்தாகப் பெரிதாகிக்கொண்டே இருந்த வியர்வைத்துளிகளை அவள் துடைத்தால் சுகமாக இருக்கும் என்றிருந்தது.

மார்புக்குள் ஏதோ பிளவுறுவது போன்ற உணர்வு. கழுத்தை யாரோ வலுகொண்டு அமுக்குவது போல் இருந்தது. கைகளைத் தூக்கி கழுத்தைத் தொடக்கூட முடியவில்லை அவனால்.

உடம்பில் ஓடிக்கொண்டிருந்த மொத்த ரத்தமும் இதயம் நோக்கி வேகமெடுத்தது. இதயத்தின் எடை கூடியது. அதன் கனம் அவன் கழுத்தைக் கீழே இழுத்தது.

“பின்னங்கழுத்தை அமுக்குவது யாருன்னு பாருடி மாலதி” என்று கத்த முயன்றவனால் மாலதி என்று மட்டும்தான் சொல்ல முடிந்தது. பிள்ளைகளின் சாப்பாடு தட்டைக் குனிந்து எடுத்து நிமிர்ந்தவள் வாசலுக்கு நேராக நாற்காலியில் அவன் சரிவதைக் கண்டாள்.

“ஐயோ… என்னாச்சு?” என்று முடிப்பதற்குள்

கைகளில் இருந்த தட்டுகள் கீழே விழ ஓடி அவனைத் தாங்கிவிட்டாள்.

அவன் சரிந்து அவள் மடிக்கு மாறினான். விழித்த கண்கள் விழித்தபடியே அவளைப் பார்த்திருந்தன.

“ஐயோ… நான் என்னா பண்ணுவேன்? என் ராசாவை விட்டுட்டேனே… யாராச்சும் ஒடியாங்க, என் பேரழகனைக் காப்பாத்துங்க! என் பட்டுவிரிப்பைத் தூக்குங்களேன்.”

கண்ணாடிப் பெட்டிக்குள் வெற்றி.

“பாவியா போய்ட்டேனே, என்னையவே சுத்துவியே,

என்னைத் தவிக்கவிட்டுப் போய்ட்டியே, உன் பச்சைக்கிளிக்குப் பறக்கத் தெரியாதே! உன் தோளைத் தவிர உலகம் அறியாதே! உன் வாசம் பிடிக்காம தூங்கத் தெரியாதே!”

“உன் பொண்டுக ரெண்டும் அப்பனைக் கொடுன்னு கேட்குமே. என் பேச்சு பொறுக்காம போய்ட்டியா?

இனி உன்னை ஒரு வார்த்தை சொல்ல மாட்டேன், வா மாமா.”

“காசு பணம் வேணாம் எனக்கு நீதான் வேணும் வா மாமா. மூஞ்சைக்கழுவி உங்காத்தா மாதிரி நிக்குறேன் வா மாமா. என் நாக்கை வேணாலும் வெட்டிக்குறேன் வா மாமா.”

“திரும்பி வந்துடு மாமா. என்னை மன்னிச்சிடு மாமா.”

விடிய விடிய இதே பாட்டைத்தான் தொண்டைக் கட்ட கட்ட பாடினாள் மாலதி.

கூட்டம் அதிகரித்துவிட்டது. மறுநாள்தான் வெற்றியின் புறப்பாடு என ஏற்பாடு.

இரவெல்லாம் அம்மாவையும் பெட்டிக்குள் படுத்திருந்த அப்பாவையும் வெறித்துக்கொண்டிருந்தாள் முலான். அப்படியே தூங்கியும்விட்டாள்.

தூங்கி எழுந்த முலான் விடிந்தும் கண்ணாடிக்குள்ளேயே இருந்த அப்பாவை ஒரு பார்வை பார்த்தாள். வழக்கம்போல் பாத்ரூமிற்குள் நுழைந்தாள். பல்லை விளக்கி திரும்பி வந்தாள். டீவியின் முன்பு அவளுடைய பிரதான நாற்காலியைப் போட்டு அமர்ந்தாள்.

கண்களைப் பட்டென திறந்த விதமாக டிவி விரிந்தது.

பணக்கார அப்பனின் செல்ல மகன் ஓபோச்சா மாவின் குறும்புகள் எனும் கார்ட்டூன் ஓடியது.

படைப்பாளர்:

அருணா சிற்றரசு

ஆங்கிலமொழி ஆசிரியர் . அரசு உயர்நிலைப்பள்ளி எடகீழையூர், திருவாரூர் மாவட்டம். மன்னார்குடியைச் சேர்ந்தவர். 2012 ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்று அரசு பணி பெற்றவர். நாவல்கள் படிப்பதில் அதீத ஆர்வம் கொண்டவர். தமிழ் புதினங்கள் படித்து கருத்துக்களை தன் நடைக்கு வளைத்துக்கொள்பவர்.பாவ்லோ கோலோ , கொலம்பிய எழுத்தாளர் மார்க்கீஸ் மீது தீராக் காதல் கொண்டவர். தன்னுடைய யூட்யூப் சேனலில் மாணவர்களுகள் மற்றும் போட்டித் தேர்வாளர்களுக்கான காணொலிகளை வழங்கி வருகிறார்.