பொன்னியின் செல்வன் கதையின்படி இலங்கையில் வந்தியத்தேவன், அருள்மொழி வர்மனைச் சந்திக்க பயணிக்கும் இடம்தான் நாகத்தீவு. இதன்மூலம் தனது பயண நோக்கத்தின் முக்கியக் கட்டத்தை அடைவான் வந்தியத்தேவன். நாகத்தீவின் முனையில் இறங்கிய வந்தியத்தேவன் மாதோட்டத்தை நோக்கிப் போய்க்கொண்டிருப்பதாக கல்கி முடித்துவிட்டாலும் அந்த நாகத்தீவைக் குறித்தும் அறியும் ஆவல் எழுந்தது.

இலங்கையின் புகழ்பெற்ற சப்த தீவுகளிலும் தனிப்பெரும் சரித்திரப் புகழ்பெற்ற நாகத்தீவு யாழ்ப்பாணத்திலிருந்து தென்மேற்கே ஏறக்குறைய 23 மைல் தூரத்தில் அமைந்துள்ளது. நாகர் இன மக்கள் அந்தத் தீவில் அதிக அளவில் வாழ்ந்ததாலும் நாக வழிபாட்டாலும் நாகங்கள் அதிகமாக வாழ்ந்ததாலும் நாகத்தீவு என அழைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. நாகர் எனப்படுபவர் சரித்திர காலத்திற்கு முற்பட்ட பெரும்பாலும் திராவிடர்கள் என்போராக, தென்னிந்தியாவிலும், இலங்கையிலும் பரந்து வாழ்ந்த இனத்தவரில் ஒரு கிளையினர் என வரலாற்றாளர் பொன். அருணாச்சலம் கூறியுள்ளார்.

இத்தீவிற்கு நாகத் தீவு, நயினார் தீவு, நாக நயினார் தீவு, மணி நாகத்தீவு, மணிபல்லவத்தீவு, மணித்தீவு, பிராமணத்தீவு, ஹார்லெம், ஸம்புத்தீவு, நரித்தீவு, நாகேஸ்வரம், நாகேச்சரம் என்றெல்லாம்கூடப் பல்வேறு பெயர்கள். ஆனாலும் இந்தப் பெயர்கள் அனைத்தும் செவிவழிக் கதைகளின் அடிப்படையில்தான் தொடர்பு படுத்தப்பட்டுள்ளனவேயன்றி எந்தவித வரலாற்றுச் சான்றுகளும் கிடைத்ததாகத் தெரியவில்லை. அன்றைய நாகத்தீவுதான் காலவோட்டத்தில் இன்று நயினாதீவாகிவிட்டது. நயினாதீவு என்பதற்கான பெயர்க் காரணம் சுவாரசியமானது. மதுரையில் மாநாய்கன் என்றொரு வைசியர் இருந்ததாகவும் அவரே நயினாதீவின் வடகீழ் திசையில் நாகபூஷணிக்கு ஒரு சிறந்த கோயில் கட்டுவித்ததாகவும் மதுரை வைசியர்களிடமிருந்த ஏடுகள் கூறுகின்றன. அவரே நயினார் பட்டர் என்ற அந்தணரையும் கண்ணப்பன் என்ற வேளாளரையும் நயினாதீவுக்குக் கொண்டு வந்திருக்கிறார். அந்தச் சமயத்தில் நாகத்தீவு என்றே வழங்கப்பட்ட தீவை நயினார்பட்டர் வழிவந்தவர்கள்தாம், நாகநயினார்தீவு என மாற்றியதாகவும், காலப்போக்கில் ‘நாக’ கைவிடப்பட்டு நயினார்தீவாகி பின்னர் பேச்சு வழக்கில் நயினாதீவாக மாறிவிட்டது என்கின்றனர். இதுபோலவே ஒவ்வொரு பெயருக்கும் ஒவ்வொரு கதை இருக்கிறது.

இத்தீவிற்குத் தரைவழியாகப் பயணிக்க வழியில்லை. யாழ்ப்பாணத்திலிருந்து குறிகாட்டுவான் என்ற இடம் வரை பேருந்து செல்கிறது. அங்கிருந்து படகு வழியாகத்தான் செல்ல முடியும். 1976ல் 4750 பேராக இருந்த மக்கள்தொகை இன்று 2500 ஆக உள்ளது. இங்குள்ள நாகபூஷணி அம்மன் கோயில் நாகர் இன மக்களால் தோற்றுவிக்கப்பட்டதாகக் கருதப்பட்டுகிறது. சக்தி தேவியின் அவயங்கள் விழுந்த இடங்களில் எல்லாம் சக்தி பீடங்கள் உருவாகின என்கின்றன புராணங்கள். அத்தகைய 64 சக்தி பீடங்களில் ஒன்றாகப் புகழ்பெற்றிருக்கிறது இக்கோயில். ஆதியில் நாகர்களின் முக்கிய வழிபாட்டுத்தலமாக இருந்து பின்னர் நாகபூஷணி அம்மன் திருக்கோயிலாக மாற்றம் பெற்றிருக்கலாம். அங்குள்ள ஆலயத்தில் ஐந்துதலை நாகர் சிலை ஒன்று உள்ளது. அது 8 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்கின்றனர். கோயில் பழமையானதாக இருந்தாலும், சிறப்பாகப் புனரமைக்கப்பட்டுள்ளதால், தற்போது சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகமாகவே காணப்படுகிறது.

நயினாதீவில் சிறந்த துறைமுகங்களும் யாத்திரைத் தலங்களும் இருந்தமையால், வெளிநாட்டு வணிகர்களும் யாத்திரிகர்களும் காலந்தோறும் இத்தீவிற்கு வருகை தந்திருக்கின்றனர். மணிமேகலை, குண்டலகேசி போன்ற தமிழ் இலக்கியங்களில் இக்கோயில் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. இலங்கையின் வரலாறு கூறும் மகாவம்சம், நயினாதீவு பற்றி குறிப்பிடுகிறது. புத்தர் காலத்தில் இலங்கையில் ஆட்சிபுரிந்த இரண்டு நாக அரசர்களுக்கிடையில் ஒரு மணியாசனத்தின் உரிமை தொடர்பாக ஏற்பட்ட பிணக்கைத் தீர்த்து வைப்பதற்காக புத்தர் நாகத்தீவிற்கு வந்ததாக அந்நூல் கூறுகிறது. இதே பிணக்கு அல்லது யுத்தம் மணிபல்லவத்தீவில் இடம்பெற்றதாக மணிமேகலைக் காப்பியமும் கூறுகிறது. பூதத்தீவிற்கும் இதே கதைதான் சொல்லப்படுகிறது,

ஈழத்தில் நாகர்களின் முக்கிய பிரதேசமாக நயினாதீவு இருந்திருக்க வேண்டும். சாவக நாட்டு மன்னன் புத்தரது பாத பீடிகையைத் தரிசிக்க மரக்கலமேறி வந்தான் என மணிமேகலை கூறுகிறது. பர்மாவில் இருந்து தர்மசோக மகாராசா புத்திரசோகத்தால் வருந்தி நாகவழிபாடு செய்ய நாகதீவு வந்தான் என்ற செய்தியும் வரலாற்றில் அறியக்கிடக்கிறது. ஆபுத்திரன் இங்கு வந்து அட்சய பாத்திரமான அமுத சுரபியைக் கோமுகிப் பொய்கையில் இட்டுச் சென்றான் எனவும், பாண்டவர்களில் ஒருவரான அர்ச்சுனன் நாக வழிபாட்டிற்காக வந்த நாகக்கன்னிகையை மணம் செய்து பப்பிரவாகன் என்னும் புத்திரனைப் பெற்றான் எனவும் கூறப்படுகிறது. நெடுமுடிக்கிள்ளி என்னும் சோழ அரசன் யாத்திரை காரணமாக மணிபல்லவத்துக்கு வந்து பீலிவளை என்பாளை மணந்து, தொண்டைமான் இளந்திரயனைப் பெற்றான் என யாழ்ப்பாணச் சரித்திர நூல் கூறுகிறது. இப்படி நாகத்தீவு குறித்த செய்திகள் காலந்தோறும் பல்வேறு இலக்கியங்களில் குறிப்பிடப்படுவதைப் பார்க்க முடிகிறது. நயினாதீவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கிரேக்க, ரோம, இந்திய, சீனப் பழைய நாணயங்களும், சீனாவில் 12ஆம் நூற்றாண்டில் செய்யப்பட்ட சாடிகளும் நாகத்தீவின் வணிகப் பெருமைக்கு வலு சேர்க்கின்றன.

மிகப் பழங்காலத்தில் கட்டமைக்கப்பட்டதாக நம்பப்படும் நாக பூஷணியம்மன் ஆலயம், போர்த்துகீசியர் காலத்தில் 1620இல் முற்றாக அழிக்கப்பட்டது. பொருள்கள் சூறையாடப்பட்டன. ஒல்லாந்தர் காலத்தில் நயினா தீவு கடலில் சங்கு குளிக்கும் தொழில் நடைபெற்றுள்ளது. போர்த்துகீசியர் அழித்த கோயிலை மீண்டும் சிறிதாகக் கட்டிமுடிக்க, அதையும் பின்வந்த ஒல்லாந்தர் அழிக்க முற்பட்டனர். இவர்கள் காலத்தில் தூத்துக்குடி முஸ்லிம்கள் செல்வாக்குப் பெற்றிருந்தனர். தென்னந்தோட்டங்கள் அமைத்தனர். பள்ளிவாசல் ஒன்றையும் அமைத்தனர். இலங்கைச் சுதந்திரமடைந்தபின் ஸ்ரீநாகபூஷணி அம்மன் தேவாலயமும், ஸ்ரீநாக விகாரையும் மிகவும் சிறப்பான முறையில் அமைக்கப்பட்டன. ஆனி மாதம் 16 நாட்கள் மஹோஸ்தவம் கொண்டாடப்படுகிறது. இன்று இக்கோயிலில் பத்தாயிரம் சிற்பங்கள் இருப்பதாக மதிப்பிடப்படுகிறது.

பல்வேறு யூகங்களும் கற்பனைகளும் கதைகளுமாக வெளியில் உலாவர, கடந்தகால சரித்திரத்தைத் தனக்குள் புதைத்துக்கொண்டு, இலங்கை வரலாற்று நிகழ்வுகளின் எழுச்சி, வீழ்ச்சிகளையெல்லாம் காலம்தோறும் தன்னுடலில் தாங்கிக்கொண்டு மௌனப் புன்னகையுடன் பாம்புகளை நகைகளாக அணிந்துகொண்டு பாக்ஜலசந்தியின் நடுவில் நிற்கிறாள் நாகபூஷணி அம்மன்.

(தொடரும்)

படைப்பாளர்:

ரமாதேவி ரத்தினசாமி

எழுத்தாளர், அரசுப்பள்ளி ஆசிரியர். பணிக்கென பல விருதுகள் வென்றவர். இவர் எழுதி வெளிவந்துள்ள ‘கனவுகள் மெய்ப்படட்டும்’ கட்டுரைத் தொகுப்பு பரவலாக கவனம் பெற்றுள்ளது. 2014, 2015ம் ஆண்டுகளில் ஐ நா சபையில் ஆசிரியர் பேச்சாளராகக் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார். அடுப்பங்கரை டூ ஐநா தொடரில் அவரது ஐ நா அனுபவங்களை நகைச்சுவையுடன் விவரித்திருக்கிறார். இந்தத் தொடர் ஹெர் ஸ்டோரீஸ் வெளியீடாகப் புத்தகமாக வெளிவந்து பாராட்டுகளைப் பெற்று வருகிறது. இலங்கை இவருக்கு இதில் இரண்டாவது தொடர்.