சட்டென்று உள்ளிருந்து ஏதோ ஒழுகுவது போலிருந்தது சக்திக்கு. ஒழுகுகிறது தானா என நிதானிப்பதற்குள், உள்ளாடை கொளகொளப்பதை உணர்ந்தாள். பாடசாலைக் கழிப்பறையின் நாற்றத்துக்கு அஞ்சி கட்டுப்படுத்திக்கொள்ளும் சிறுநீர், பாடசாலை விட்டு வீட்டுக்கு வருவதற்குள் என்னதான் காலைப் பின்னிப் பின்னி நடந்தாலும் சிலவேளைகளில் கட்டுப்பாட்டை மீறி கசிந்து விடுவதுண்டு. அதை நினைத்தால் வந்துவிடும், நினைக்காமல் நடந்தால் வீடுவரைக் கட்டுப்படுத்திக்கொள்ளலாம் என வகுப்புத் தோழி சொன்னதை நம்பி அவள் பலமுறை கஷ்டப்பட்டு அதை நினைக்காமல் நடக்க முயன்றிருக்கிறாள். ஆனாலும் வீடுவருவதற்குள் உள்ளாடை ஈரமாகிய நாட்கள் உண்டு. அந்த நனைவுக்கும் இன்றைய கொளகொளப்புக்கும் வித்தியாசமிருப்பதாக , கொஞ்சம் அருவருப்பாகத் தொடையோடு ஒட்டுவது போல உணர்ந்தாள் சக்தி.

இன்று பாடசாலையிலோ திரும்பி வீட்டுக்கு வருகையிலோ அவளுக்கு சிறுநீர் வரும் உணர்வு ஏதும் இருக்கவில்லை. காலையிலிருந்தே உடம்பு ஒருவித சோர்வாகவும் குளிரோடுவது போலவும் இடைக்கிடை சூடாகுவது போலும் இருந்ததால் தண்ணீர் குடிக்கவில்லை. பள்ளிக்கூடத்துக்கு நடக்கையில் இடுப்புப்பகுதி நோவதற்கும் வலிப்பதற்கும் இடைப்பட்டு உளைவது போல இருந்தது. பாட நேரம் தூக்கம் வந்தது. இடைவேளை நேரம் வழமை போல ஓடி விளையாட முடியாமல் கூரான கத்தியை வைத்து மெல்லிதாகக் கோடிழுப்பதைப் போல அடிவயிற்றில் இடைக்கிடை வலித்தது.

அவளுக்கு மிகவும் பிடித்தமான வகுப்பாசிரியை காலையில் வரவறிக்கைக்குப் பெயர் கூப்பிடும் போது ஒரு முறை, பின் தமிழ் பாடநேரம் ஒரு முறை, “உடம்பு சரியில்லையா சக்தி?” என வினவிவிட்டார். மூன்றாம் முறையாக சமயபாடநேரம் வகுப்புக்கு வந்தபோது அவளருகே வந்து நெற்றியில் கழுத்தில் பிரண்டைக் கைவைத்துப் பார்த்தார். யூனிபோர்முக்குள் கைநுழைத்துமுதுகைத் தொட்டுப் பார்த்தார். “காய்ச்சல் ஏதும் இருக்கிற மாதிரி தெரியல்லையே” என்றவர், அவளது வாடிக்கிடந்த முகத்தை யோசனையுடன் பார்த்துவிட்டு, “டாய்லெட் போய் வருகிறாயா சக்தி. முகத்தில் காற்றுப் பிடித்தால் நல்லது” என்றார். “கூடப்போ” என, வகுப்பில் கொஞ்சம் மூத்தவளான தோழி ஒருத்தியையும் அனுப்பி வைத்தார்.

வழமையாக சக்திக்குப் பாடசாலையில் டாய்லெட் போகப் பிடிக்காது, போகவேண்டிய உணர்வும் அப்போது அவளுக்கில்லை டாய்லெட் வரை போய்விட்டு உள்ளே நுழையாமல் திரும்பலாம். எனினும், இன்னொருத்திகூட வந்ததால் ஒண்டுக்குப் போகாமல் திரும்பிப் போவதை அவள் ரீச்சரிடம் சொல்லிவிடுவாளோ என்று பயமாக இருந்தது. உள்ளாடையை விலக்கி அமர்ந்த போது உள்ளாடை சற்று அழுக்காக இருப்பதைக் கண்டாள். இப்போதெல்லாம் அவளது உள்ளாடை அதிகமாக அழுக்காகி விடுகிறது. அது அழுக்காகி விடக்கூடாது என்பதற்காகவே பாடசாலைக் கதிரை உட்பட, தான் அமரும் இடங்களை எல்லாம் நன்றாகத் துடைத்துவிட்டு அணிந்திருக்கும் பாவாடையையோ சட்டையையோ ஒழுங்காக நீவிவிட்டுக்கொண்டே அமர்ந்தாள். ஆனாலும் அது அழுக்காகி விடுவது அவளுக்குச் சலிப்பாக இருக்கிறது. இன்றும் தேக்குமரக் குருத்தைக் கையில் கசக்கியது போன்ற பச்சையும் சிவப்பும் இணைந்து பிரவுன் ஆகிய நிறத்தில் இருந்தது அவளது உள்ளாடை.

தோய்த்து தூய்மையாக அணிந்தாலும் ஏன் இப்படியாகிறது என்பது தெரியவில்லை. யாரிடமாவது கேட்க வேண்டும். பாட்டியிடம் கேட்டால், ” சொந்த உடுப்பையே சரியாகக் கழுவி அணியத் தெரியவில்லை, வயது போன காலத்தில நான் வாங்கி வந்த சாபம்” என்று கத்தும். அம்மா இறந்ததுக்காய் நீளமாய் ஒரு ஒப்பாரி வைக்கும். சக்திக்கு அம்மாவை நினைவுபடுத்தும் எதையும் எவரையும் தூண்டிவிட விருப்பமில்லை. குழந்தையில் போலல்லாது இப்போது அடிக்கடி அம்மாவின் நினைவு வருகிறது. அவளின் வெற்றிடம் அழுகை தருகிறது. ஆனால், அம்மா இருந்தால் ஒரு வேளை கேட்கலாமாக இருக்கக் கூடும்.

இப்போதெல்லாம் அம்மாவின் ஞாபகங்களும் அவளிடம் கேட்கவென பல கேள்விகளும் சக்திக்கு அடிக்கடி எழுகின்றன. கேட்டால் அவளும் கத்துவாளா? சக்தியின் ஞாபகங்களில் அம்மா அவளுடன் அதிரக் கத்தியதாக நினைவில்லை. மூன்று வயதில் சக்தியைப் பிரிவதற்குள் அப்படி என்ன பெரிய தப்பைதான் செய்துவிடக் கூடும் கத்துவதற்கு என எண்ணிக்கொண்டாள் . ஆனாலும் அவளுக்கு அம்மாவிடம் நிறையக் கோபம் உண்டு. தன்னை விட்டுவிட்டுப்போன கோபம். இப்போதும் அந்தக் கோபம் வந்தது.

வீட்டுக்குப் போய், உள்ளாடையில் அழுக்கான இடத்தில் நிறைய சவர்க்காரம் போட்டு நன்றாகக் கசக்கித் தோய்க்க வேண்டும் என எண்ணிக்கொண்டு, உள்ளாடையை உயர்த்தி சரியாக அணிந்து யூனிபோர்மை ஒழுங்காக இழுத்துவிட்டுக் கொண்டு வெளியில் வந்தாள். வகுப்பில் வந்து அமர்ந்தவளை, “எல்லாம் ஓகேயா சக்தி?” என்றார் ஆசிரியை. “ஓம் மிஸ்” என்றாளே தவிர, அந்த இடத்திலேயே படுக்க வேண்டும் போலிருந்தது.

பாடசாலை முடிந்து வருகையில் இடுப்பிலிருந்து ஓர் உளைவு கால் முழுவதும் பரவி கால்கள் பலமற்றுத் துவள்வது போலிருந்த நேரத்தில்தான் முழுக் என ஏதோ ஒன்று தனக்குள்ளிருந்து வெளியேறுவதை உணர்ந்தாள். உள்ளாடை வளவளக்க காலை ஒடுக்கிப் பின்னிப் பின்னி வேகமாக வீட்டுக்கு வந்து முற்றத்தை மிதித்த கணத்தில் கால்களில் எதுவோ சூடாக வடிவதை உணர்ந்தாள். குனிந்து பார்த்தவள், “பாட்டீ” என அலறினாள்.

அரண்டு போய் முற்றத்துக்கு ஓடிவந்த பாட்டி, அவள் நின்ற கோலத்தைப் பார்த்து இரண்டு கைகளையும் தலையில் வைத்து, “அடி பாதகத்தி இந்த வயசுக்குள்ள அப்படி என்னடி அவசரம்” என்று சத்தமாகவே புலம்பிக்கொண்டு ஓடிவந்து, அவளைத் தோளணைத்துக்கொண்டு நேராகக் கிணத்தடிக்குப் போனாள். கிணத்துக்கட்டுக்குப் பக்கத்திலிருந்த கல்லில் இருக்க வைத்து விட்டு வேலி தாண்டி அடுத்த காணியிலிருந்த மகளுக்குக் குரல் கொடுத்தாள்.

பின், சற்று நேரத்தில் பாட்டியின் மக்களால் வீடு அமளியாகியது. கோடிக்குள் கூட்டிக் குவித்திருந்த சருகைச் சிறு கடகத்தில் அள்ளி வந்து கிணத்துக்கட்டுக்கு வெளியே தோய்க்கும் கல்லுக்கு அந்தப் பக்கமாகப் பரப்பி அதில் அவளை உட்காரவைத்து, ‘குப்பைத் தண்ணி’ ஊற்றினார்கள்.

சக்திக்குத் தலைக்கூற்றிய பின், துடைத்து ஆடை அணிவித்து தனி அறையில் விட்டு, அவசரமாக நாமுத்தப்பு தோட்டத்தில் வாங்கி வந்த கத்தரிக்காய் பிஞ்சு இடித்துப் பிழிந்த சாறு குடிக்கக் கொடுத்தாள் பாட்டி. குமட்டியது. ஆனாலும் பாட்டிக்குப் பயந்து குடித்தாள். வேப்பங்குருத்தும் மஞ்சளும் சேர்த்து மைய அரைத்து இலந்தைப்பழமளவு உருண்டைகள் செய்து சக்தியின் அடித் தொண்டையில் போட்டு கட்டாயப்படுத்தி விழுங்க வைத்தாள். அவசரமாக உளுத்தங்களி கிண்டிச் சாப்பிடக் கொடுத்தார்கள். அப்போது அவளுக்கு அதுவும் குமட்டியது. மனம் முழுவதும் காலால் வடிந்த சூடான ரத்தம் பற்றிய பயத்திலேயே கிடந்து தவித்தது. யாரிடமாவது கேட்கவேண்டும். கேட்பதற்கு அம்மா வேண்டும் போலிருந்தது. பயமும் அழுகையும் வந்தது.

இரவாகிய போது பாட்டியின் மக்கள் ஒவ்வொருவராக கலைந்து போகத் தொடங்கினார்கள். பாட்டி அவளை அறையைவிட்டு வெளியே வரவிடவில்லை. பாயை விரித்து அவளைக் கட்டாயப்படுத்திப் படுக்க வைத்து, கால்களை ஒன்றை ஒன்று பின்ன ஒடுக்கி வைத்துப் போர்த்துவிட்டாள். பின் அவளது அறை வாசலில் பாயை விரித்துப் படுத்துக்கொண்டாள்.

சக்திக்கு நித்திரை வரவில்லை. அவளுக்குள் இப்போதும் பல கேள்விகள் எழுந்தன. அந்த ரத்தம் பயமுறுத்தியது. அது எங்கிருந்து வந்தது, வயிற்றுக்குள்ளிருந்தா? வயிற்றுக்குள் எப்படிக் காயம் பட்டது? பயமாக இருந்தது. அது பற்றி நிறையக் கேட்கவேண்டும் போலிருந்தது. பாட்டியிடம் கேட்கலாம். பாட்டி பொல்லாதவளில்லை. ஆனால், சக்தி பாட்டியை நெருங்கும் பல நேரங்களில் அவள் ஏன் கத்துகிறாள் புலம்புகிறாள் எனச் சக்திக்குப் புரிவதில்லை.

ஆனாலும் அந்தப் புலம்பல் சக்தியின் தாயில் தந்தையிலேயே வந்து முடியும். சக்தி ஒரு வகையில் தன் பெற்றோர் மீது கோபம் கொண்டிருந்தாள். எல்லோருக்கும் போல தனக்கு ஒரு குடும்பம் அமையாமைக்கு, தான் நாய்க்குட்டி போல எல்லோருக்கும் பின்னால் அலைவதற்கு அவர்கள்தான் காரணம் என நம்பினாள். அதனால்தான் பாட்டி அவர்களை எந்நேரமும் ஏசுகிறாள் என நினைத்தாள். அதனாலேயே அவர்களை நினைவுறுத்தும் வகையில் முடிவுறும் உரையாடல்களை பாட்டியிடமிருந்து அவள் தவிர்த்தாள்.

பாட்டி மட்டுமில்லை பக்கத்தில் பெரியம்மா வீட்டில், சற்றுச் சற்றுத் தள்ளியிருந்த அம்மாவின் மற்றைய சகோதரங்கள் யாருடன் நெருங்கும் போதும் பேச்சின் எங்கோ ஓரிடத்தில் அது அவளின் அம்மாவை அப்பாவை இழுத்துக்கொண்டு வந்து செருகியது. அப்போதெல்லாம் அவள் அவர்களிலிருந்து ஒதுக்கப்படும் தனிமையை உணர்ந்தாள். தன் வயதான காலத்தில் யாரோ ஒரு பிள்ளையுடன் அப்பனே என்று ஒண்டிக் கிடக்க முடியாமல் சக்தியின் அம்மாவுக்கு சீதனம் கொடுத்த வீட்டையும் சக்தியையும் கட்டிக் காத்துக்கொண்டு கிடக்கும் நிலை பற்றி பாட்டியிடம் எப்போதும் ஒரு புலம்பல் இருக்கும் அது சக்திக்குள் இனம் புரியாவோர் குற்ற உணர்வினை வளர்த்தது, அதுவே பாட்டியிடம் கேள்விகளால் நெருங்க விடாமலும் தவிர்த்தது.

இப்போது இந்த அறையின் இருளுக்குள் தனிமையில் கிடப்பது போலவே சக்தி எப்போதும் தன் மனதுக்குள் இருள் கவியத்தனித்துத்தான் இருக்கிறாள். ஆனாலும் இப்போது அவளிடம் இருக்கும் பயத்துக்கும் கேள்விகளுக்கும் அம்மா தேவைப்பட்டாள். கிணற்றடிக்கு அருகே வைத்து அவளுக்கு தலைக்குத் தண்ணீர் ஊற்றும்போது பாட்டி கிணற்றை வெறித்து, “பாவி மகளே… பார்க்காமல் போனியேடி…” என்று அழுதது இந்த இரவில் சக்திக்கு நினைவுக்கு வந்தது. அவளுக்கு தலைக்கூற்றிய இடத்தில் அம்மாவை ஈரமாகக் கிடத்தி வைத்திருந்ததும் சத்தமாய் எல்லோரும் ஓலமிட்டதும் கனவு போல மங்கலாக சக்திக்கு எப்போதும் நினைவில் இருக்கிறது.

அதன் பிறகு அவள் அம்மாவைக் காணவில்லை. அப்போது அவளைத் தூக்கி வைத்திருந்த அப்பாவையும் அவள் பின் நாட்களில் காணவில்லை. அவர் வேறு யாரையோ கல்யாணம் செய்து வாழ்வதாக பாட்டியின் புலம்பலிலிருந்து சக்தி பாடசாலைக்குச் செல்லும் வயதில் புரிந்துகொண்டாள். ஆனால், இப்போது வளர வளர அவளுக்கு அம்மாவையும் அப்பாவையும் பார்க்கவேண்டும் போல் அவர்களுடன் தாம் தனியாக ஒரு குடும்பமாக வாழ வேண்டும் போல் ஏக்கம் இருக்கிறது. இன்றும் இந்த இரவும் அது அதிகமாகத் தோன்றியது.

இரண்டு வார இடைவெளிக்குப் பிறகு சக்தி பாடசாலைக்குச் சென்று வரத் தொடங்கினாள். பாடசாலைக்கு அனுப்பிய முதல் நாளில் பாட்டி நிறையப் புத்திமதிகள் சொன்னாள். அதில் முக்கியமாக, “ஒருவரையும் தொட விடக் கூடாது” என்று அழுத்திச் சொன்னாள்.

யார் எதைச் சொன்னாலும் தலையாட்டும் சக்திக்கு உடனே கேள்விகள் எழுவதில்லை. கேள்வி எழுப்புவதன் மூலம் அவர்களைக் கோபப்படுத்தி விடக்கூடும். அதனால் தன்னுடனான நெருக்கத்திலிருந்து அவர்கள் நீங்கிவிடக்கூடும் என அவள் அஞ்சுவாள். அதனாலேயே எதிர்க்கேள்வி கேட்காமை அவளது குண இயல்பின் ஒன்றாக அமைந்து போனது. பாடசாலைக்குச் செல்லும் போது தான் யோசனை வந்தது எங்கு தொடவிடக் கூடாது என்று பாட்டியிடம் கேட்காமல் விட்டது.

தொடக் கூடாது என்று சொன்னதனால் இனி அந்த பார்மசிக்கார அண்ணா தொட்டால் பாட்டியிடம் சொல்லலாம் என எண்ணிக் கொண்டாள். பார்மசிக்கார அண்ணாவை நினைத்ததும் உடம்பு ஒரு முறை உதறுவது போலவும் பயமாகவும் உடல் நடுங்கியது சக்திக்கு. மொட்டுப் போல மிருதுவாக முளைவிடத் தொடங்கிய அவளது பிஞ்சு மார்பகத்தின் மீது அவள் அறியாமலேயே அவளது கரங்கள் நடுக்கத்துடன் பதிந்து மீண்டன.

பாட்டியோ பெரியம்மாவோ பெரியம்மாவின் மகளோ ஏதாவது வாங்கிவரக் கடைக்கு அனுப்பும்போது, கடைக்கு அருகில் பார்மசியில் அந்த அண்ணாவைக் கண்டிருக்கிறாள். அவள் பொருட்கள் எழுதிய சீட்டை கடைக்காரரிடம் கொடுத்துவிட்டுக் காத்திருக்கையில் அருகில் பார்மசியில் அடுக்கியிருக்கும் யூடிகோலன் போன்றவற்றை வேடிக்கை பார்ப்பாள். அவள் பார்க்கும் போது அந்த அண்ணா புன்னகைப்பார்.

அந்த அண்ணாவை பெரியம்மாவின் மகள் கல்யாணம் செய்து இனி அவளுக்கு உறவாகப் போகிறார் என்ற பின் சக்தி அந்த அண்ணாவைப் பார்மசியில் காண்கையில் பதிலுக்குப் புன்னகைப்பாள். கல்யாணம் முற்றாகி அவர் பெரியம்மா வீட்டுக்கு வந்து போகத் தொடங்கிய பின்.

அக்கா அவரை நாள் தவறாது பார்க்க விரும்பினாள். சில நாட்களில் பார்மசி பூட்டியதும் பெரியம்மா வீட்டுக்கு வந்து அக்காவுடன் கதைத்துக்கொண்டிருந்துவிட்டு, பெரியம்மா அவருக்காகப் பிரத்தியேகமாகச் செய்யும் இரவு உணவைச் சாப்பிட்டுவிட்டுச் செல்லும் அவர் மற்றைய நாட்களில் வராமல் இருப்பதைப் பொறுக்க முடியாமல் அக்கா ஓர் உபாயம் செய்தாள்.

மாலைக் கருக்கலில் ஏதாவது காரணம் சொல்லி அவளைக் கடைக்கு அனுப்புவாள். இருட்டில் திரும்பி வருவது பயமாக இருக்கிறது என்று சொல்லி அந்த அண்ணாவிடம் கொண்டுவந்துவிடச் சொல்லு என்பாள். அடிக்கடி இப்படிப் போவது சக்திக்குப் பிடிக்கவில்லை என்றாலும் அவள் மறுத்துச் சொல்ல வாய்ப்பற்றவளாக இருந்தாள். சொன்னால் அக்கா கோபிப்பாள். வேறு எதையாவது காரணம் சொல்லி பெரியம்மாவிடம் ஏச்சு வாங்கித் தருவாள். பெரியம்மா ஏசும் சத்தத்தில் பாட்டி கத்தத் தொடங்கும். ”நாளைக்கு நான் சாய்ஞ்சு போனால் அவளோட தானே இருக்க வேணும். ஒத்து மேவிப் போகாமல் அப்பிடி என்ன தடிப்பு உனக்கு கொம்மாவைப்போல” என்று நாள் முழுதும் வசைபாடும். அதற்குப் பயத்திலேயே சக்தி இரவாகும் நேரங்களில் பார்மசிக்குப் பக்கத்துக் கடைக்குப் போக நேர்ந்தது.

அவளைக் கடையிலிருந்து கூட்டி வரும்போது, பைக்கில் பின்னால் அமர்த்துவதற்குப் பதில் குழந்தையைப் போல அவளை முன்னால் அமர்த்தி அவளது கழுத்துக்கும் தோள் மூட்டுக்கும் இடையில் நாடியைப் பதித்து , புசுபுசு என மூச்சுவிட்டுக்கொண்டு பைக் ஓடுவதும், அவளைத் தூக்கி பைக்கில் ஏற்றுவதற்காக கமக்கட்டின் முன்பக்கமாக மார்பில் நான்கு விரல்களும் பதிய அழுத்தம் கொடுத்து தூக்குவதும் அவளுக்கு ஒரு மாதிரியாக இருக்கும். அதனாலேயே இப்போதெல்லாம் பார்மசிக்கார அண்ணாவைக் காணப் பிடிப்பதில்லை சக்திக்கு. ஆனாலும் காண நேர்ந்தது, அக்காவின் தொந்தரவால் அவரது பைக்கில் வர நேர்ந்தது.

அவருக்கும் அக்காவுக்கும் கல்யாணம் நடந்தது. கல்யாணத்தின் பின் பெரியம்மா வீடு அவரதும் வீடாகியது. அவரைக் காண்பதும் அவருடன் கதைக்க நேர்வதும் தவிர்க்க முடியாதது ஆனது. இப்போது பார்மசியில் அதைக் குடுத்துவிட்டு வா, இதை வாங்கிக் கொண்டு வா என அக்கா எடுத்ததற்கு எல்லாம் அவளை ஏவினாள். அவருக்குக் கிட்டப் போகவே விருப்பமில்லை என யாரிடமும் சொல்ல முடியாமல் தவித்தாள் சக்தி. ஆனாலும் இரவு விற்பனை நேரம் முடிந்து அவர் கூட்டாளிகளுடன் சுற்றப் போய்விடாமல் கூடவே நின்று கூட்டிக்கொண்டு வீட்டுக்கு வா என அனுப்புவாள் அக்கா. அவர் நேரத்துக்கு வராத நாட்களில் அக்காவுக்கும் அவருக்கும் சண்டை வரும் என்பதற்காகவே தெண்டித்து அவளைப் பார்மசிக்கு அனுப்புவாள் பெரியம்மா.

தாய் தகப்பன் இல்லாத பிள்ளை என்று அவர் சக்தி மீது அதிக அக்கறையும் அன்பும் கொண்டிருப்பதாக பெரியம்மாவும் அக்காவும் அடிக்கடி சொல்வதைக் கேட்கையில் சக்திக்கு தான் யாருமே இல்லாமல் ஆகுவது போல அழுகைவரும். தனக்குள் இருப்பதை எல்லாம் சொல்ல, தான் சொல்வதைக் குறிக்கிடாமல் கேட்க தனக்காக, தன் விருப்பு வெறுப்புக்காக உரிமையாய் பேச, தனக்கே தனக்கென்று யாரவது வேண்டும் போலிருக்கும் போதெல்லாம் தனியாகப் போயிருந்து அம்மா, அப்பாவுக்கு நடுவில் தன்னை இருத்தி வைத்து எடுத்த முதலாவது பிறந்தநாள் படத்தைப் பார்த்துக்கொண்டிருப்பாள்.

சில வேளைகளில் பைக் தவிர்த்து அவர் அவளைச் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு வருவார். அப்படியான நாட்களில் தான் ஓர் இரவில் அவளது கழுத்துச் சட்டைக்குள் கைவிட்டு சிறு மொட்டாகக் கூம்பத் தொடங்கியிருந்த மார்பின் முனையை நசித்தார். அவளுக்கு வலித்தது. ஏதோ அவமானம் போல உணர்ந்தாள். அழுகை வந்தது. அடுத்தநாள் காலை குளிக்கும் போது அந்த இடம் எரிந்தது. டவலை இடுப்பில் சுற்றிக் கொண்டு எரிந்த இடத்தைப் பார்த்தாள். சிவப்புக் கோடாக நகக் கீறல் இருப்பது கண்டாள். நேராக பெரியம்மாவிடம் போய் அந்த அண்ணாவைத் தனக்குப் பிடிக்கவில்லை அவர் கூடாது என்றாள்.

தேங்காய் துருவிக்கொண்டிருந்த பெரியம்மா நிமிர்ந்தாள். கண்களில் எரிந்துகொண்டிருந்த அடுப்பின் கனல். ” கொம்மாவின் வருத்தம் உனக்கும் தொடங்கியிட்டுதா?” என்று ஆரம்பித்து ஏதேதோ எல்லாம் பேசினாள், அதில் சக்திக்குப் புரிந்ததெல்லாம் ” இப்படித்தான் கொப்பன் வெளிய போனால் வந்தால் , அந்தரம் அவசரத்துக்கு எவளோடாவது கதைச்சால் போதும் அவன் கெட்டவன் அங்க பாக்கிறான் இங்க பார்க்கிறான் என்று சந்தேகப்பட்டே வில்லங்கத்துக்குப் போய் கிணத்தில குதிச்சு நாசமாகப் போனாள். இப்ப நீயும் தொடங்கிறியா காணுற ஆம்பிள்ளைகள் எல்லாரிலும் குறை கண்டுபிடிக்க” என்று அகப்பைக் காம்பினால் பின்தொடையில் இரண்டு அடி வைத்தாள். அதன் பின் அக்கா நிரந்தரமாகவே சக்தியுடன் கதைக்காமல் விட்டுவிட்டாள். அவளுக்கு ஒரு வகையில் அது பிடித்திருந்தது. இனி பார்மசிக்குப் போ என வற்புறுத்த மாட்டாள், அவனது சைக்கிளில் வரத் தேவையில்லை என்பதால்.

அவள் அந்த அண்ணாவின் முகத்தைப் பார்க்கவே பயந்தாள் வெறுத்தாள். “நாளைக்கு எனக்கு ஒன்று ஆகிப் போனால் அவளின்ர நிழலிலதான் ஒதுங்க வேணும் நீ” எனப் பாட்டி தான் வற்புறுத்தி இடைக்கிடை பெரியம்மா வீட்டுக்கு அனுப்பி வைப்பாள். அங்கு போகும் போதெல்லாம் அந்த அண்ணாமீது பயம் வரும் சக்திக்கு. இப்ப பாட்டியே யாரையும் தொடவிடக் கூடாது என்று சொன்னதால் இனி அவர் தொட்டால் பாட்டியிடம் சொல்லலாம். யாரும் அம்மாவின் கதையை இழுத்து வைத்து அவளைப் பேசவோ அடிக்கவோ மாட்டார்கள் என நம்பினாள்.

தன் உடலில் நிகழ்ந்த மாற்றம் சக்திக்குப் பிடிக்காததாக அசௌகரியமாக இருந்தது. எனினும் அன்று வீட்டில் எல்லோரும் கூடி அவளுக்குத் தண்ணீர் வார்த்த நிகழ்வுக்குப் பின் பாடசாலைக்குச் செல்ல ஆரம்பித்த பின்பு. பெரியம்மா அடிக்கடி அவளை ஒவ்வொன்றுக்கும் தன் வீட்டுக்கு அழைப்பதைக் குறைத்திருந்தாள். அதனால் அவளின் உடலில் ஏற்பட்ட மாற்றம் சக்திக்குப் பிடித்திருந்தது.

அவள் கிணற்றடியில் தோய்த்துக்கொண்டிருந்த நேரத்தில் கிணற்றடிக்கு வந்த பார்மசி அண்ணா, என்ன எங்களுக்கெல்லாம் சொல்லாமல் சக்தி பெரிய பொம்பிளை ஆனாப்போல இருக்கே என கன்னத்தை நிமிண்டியபோது அந்த மாற்றம் பிடிக்கவில்லை. பாட்டியிடம் சொல்ல வேண்டும் என நினைத்துக்கொண்டாள்.

அவளுக்குத் தலைக்குத் தண்ணீர் ஊற்றி நாற்பத்தி எட்டு நாட்களின் பிறகு மீண்டும் ஒருமுறை அதே நிலையைச் சந்திக்க நேர்ந்தது. அதற்குள் இருபத்தெட்டு நாளாச்சே, முப்பது நாளாச்சே ஏன் வரவில்லை. பிள்ளைக்கு உடலில் ஏதும் குறைபாடோ எனப் புலம்பித் திரிந்தாள் பாட்டி. முதல்முறை போல இப்போது பயம் வரவில்லை. நித்திரையால் எழும் போதே நனைந்திருந்த உள்ளாடை அருவருப்பும் அயர்ச்சியும் தந்தது. பாட்டி மூன்று நாட்களுக்குப் பாடசாலைக்குப் போக வேண்டாம் என்றாள். சக்தி பாட்டி ஒதுக்கிய அறையில் சுருண்டு படுத்துக்கொண்டாள். எந்த நேரமும் தனக்குள் ஏதோ அருவருப்பு போல உணர்ந்தாள் நித்திரை கொண்டால் அதை மறந்திருக்க முடிந்தது. அதனால் அவள் பகலிலும் அந்த நாட்களில் நித்திரை கொண்டாள்.

அப்போது தான் பாட்டியிடம் முருங்கைக்காய் வாங்க வந்த சாவித்திரி மாமி காய்ச்சலோ எனக் கேட்டு அவளைத் தொட்டுப் பார்த்தாள். சாவித்திரி சக்திக்கு உறவுமுறை மாமி இல்லையாயினும் ஊரில் எல்லோரும் அவரை சாவித்திரி மாமி என்று தான் அழைத்தார்கள்.

சாவித்திரி மாமி ஆசுப்பத்திரியில பிள்ளைப்பேறு வாட்டில் வேலை செய்து பென்சன் எடுத்தவர். அவவுக்கு உடம்பு நிலைகள் பற்றி எல்லாம் தெரியும் என்று ஊரில் பலரும் வைத்தியம் கேட்பார்கள் . அப்படித்தான் பாட்டியும் அவளுக்குச் சரியான ஒழுங்கில் வராமல் நாற்பத்தி எட்டு நாள் இடைவெளிவிட்டு வந்ததுக்குக் காரணம் கேட்டாள்.

“பத்து முடிஞ்சதுமே பெரியபிள்ளையாகீட்டாள். இது குழந்தை அம்மா. அதுக்குள்ள வயிற்றில முட்டை எல்லாம் சரியான வளர்ச்சி பெற்றிருக்காது. அதுதான் ஆரம்பத்தில முன்ன பின்ன வாறது” என்றாள்.

“எனக்கோ என்ர மக்களுக்கோ டானேண்டு இருபத்தெட்டில இருந்து முப்பதுக்குள்ள இரண்டாம் சாமத்தியம் வந்து ஈ எண்டு கொண்டு நின்டிச்சுதே” என்றாள் பாட்டி.

“அப்பவெல்லாம் பதினாலு பதினைஞ்சு வயதில நடக்கிறது இப்ப பால் குடி மறந்ததுமே பருவமாகிப் போய் நிக்குதுகுகள் அதுவும் இதுவும் ஒன்றே ” என்றாள். சில நாட்களாய் புலம்பித் திரிந்த பாட்டி அவளோடு கதைத்த பின்தான் தன் புலம்பலை நிறுத்தினாள்.

சாவித்திரி மாமி சொன்ன முட்டை எங்கேயிருக்கிறது? மனிதருக்குள்ளும் முட்டை இருக்குமா? அது எப்படி இருக்கும் கோழி முட்டை போலா எண்ணிக்கொண்டே, உறங்கிப் போனாள் சக்தி.

இரண்டாம் முறை வந்ததற்குப் பின் கடந்த இரண்டு மாதமாக, பிடிக்காத அந்த அவஸ்த்தைக்கு முகம் கொடுக்கும் அவசியம் சக்திக்கு ஏற்படவில்லை. ஆனாலும் தனியறைக்குள் இருப்பதும் தனியாக வீட்டில் இருப்பதும் இப்போதெல்லாம் முன்னைவிட அதிகம் பயமாக இருந்தது சக்திக்கு, பாட்டி வீட்டிலில்லாத நேரங்களைச் சந்திக்கவே பயந்தாள். பாடசாலை இல்லாத நாட்களில் வீட்டிலிருக்க நேரும் போது பாட்டி எங்கு சென்றாலும் அவளது சேலைத் தலைப்பையே பற்றிக் கொண்டு அலைந்தாள். பாட்டிக்கருகில் அவளது சேலைத் தலைப்பைப் பற்றிக் கொண்டு பகல்களிலும் தூங்கத் தொடங்கினாள். தூங்கும் போதும் பாட்டி அருகில் இருக்கிறாளா என்பதில் அவதானமாக இருந்தாள். அதிகமாகச் சோர்ந்து தெரிந்தாள்.

“பெரிசாகினால் மற்றப் பெட்டையள் எல்லாம் பொது பொதுவென்று நிக்குங்கள் என்ர தேஞ்சு போய் நிக்குது. வயது வராமல் பெரியபிள்ளை ஆகினதில பிள்ளைக்கு உடம்பில நல்ரத்தமில்லை வெளுறிப் போய்க் கிடக்கு” என வருவோர் போவோரிடமெல்லாம் புலம்பத் தொடங்கியிருந்த பாட்டிக்கு, இரண்டு மாதம் வராமல் இருப்பது இப்போது திருப்தியாக இருந்தது. இன்னும் இரண்டு மூன்று வருசம் கழிச்சு உடம்பு நன்றாகத் தேறிய பிறகு, ஒழுங்கா மாத ஒழுக்கு வந்தால் போதும் எனச் சொல்லிக்கொண்டாள். அதற்குள் தேற்றி எடுத்துப் போட வேண்டும் என்று கறுப்பு எள்ளும் உளுந்தும் கருப்பட்டியும் வாங்கி வந்து மர உரலில் போட்டு இடித்துக்கொண்டிருந்த போதும் சக்தி பாட்டிக்கு அருகில் பாய் போட்டுப் படுத்திருந்தாள்

இண்டைக்கும் முருங்கைக்காய் வாங்கவோ, தூதுவளை இலை ஆயவோ தான் சாவித்திரி மாமி அவர்கள் வீட்டுக்கு வந்தாள். சக்தி பாட்டியின் சேலையால் போர்த்துக் கொண்டு சுருண்டு கிடப்பதைப் பார்த்து விட்டு, “அடி விசர்ப் பெட்டை மாதாமாதம் குலப்பன் காச்சல் வாற மாதிரி எல்லே சுருண்டு கிடக்கிறாய். பெண்ணாய் பிறந்தால் இனி இதுதான் நிரந்தரம். சமாளிக்கத் தான் வேணும். இதெல்லாம் ஒண்டுமில்லை எண்டு நினைச்சுக் கொண்டு ஓடியாடி அலுவலைப்பார். இப்படியே படுத்துக் கிடந்தால் அதுவே பழக்கமாகிப் போயிடும்” என்றார். சக்தி தலையை மட்டும் போர்வையிலிருந்து விலத்தி அவரைப் பார்த்துப் பலகீனமாய் புன்னகைத்தாள்.

“அவளுக்கு ஒண்டுமில்லை. வந்து இரண்டு மாசத்துக்கு மேலாச்சு. வயதுக்கு முன்னால பெரிசாகினதில பிள்ளைக்கு உடம்பில நல்ரத்தம் இல்லை போல இருக்கு. சோர்ந்து கிடக்குது. முகத்தைப் பார் காமாலைக்காரிபோல வெளுறிப்போய் கிடக்கு” என்றாள் பாட்டி. சாவித்திரி மாமி டாக்டர் போல கண் ரப்பையை இழுத்துப் பார்த்தார். “நாளுக்கு நாலு பச்சை முட்டை குடுத்துப் பாருங்கோ” என்றார்.

“நாலு குடுக்க எனக்குக் கட்டுமே. எனக்கு மக்கள் போடுற பிச்சையில இதின்ர வயித்தையும் கழுவுறன். போற வயதில எனக்கும் வளருற வயதில இதுக்கும் கொள்ளியால விதி எழுதி வைச்சிட்டுப் போயிருக்கிறாள் என்ர மகள்” பாட்டி புலம்பத் தொடங்கினாள்

“நாளுக்கு ஒரு முட்டை என்றாலும் பரவாயில்லை பச்சையா உடைச்சு வாய்க்குள்ள ஊத்துங்கோ சொல்லுறன்.”


“பிச்சை எடுத்துத் தன்னும் நான் குடுத்தாலும் அது குடிக்க வேணுமே, முட்டையை வாய்க்குக் கிட்டக் கொண்டு போனாலே ஊரைக் கூட்ட ஓங்காளிக்கும். “

“உங்களிட்டை தான் செல்லம் பண்ணுவாள் கொண்டு வாங்கோ நான் குடுக்கிறன். நல்லெண்ணெய் போத்திலையும் கொண்டு வாங்கோ.”

பாட்டி கொண்டுவந்து கொடுத்தார். சக்தியை எழும்பவைத்து கட்டாயமாக வாயைத் திறக்க வைத்து முட்டையை உடைத்து வாய்க்குள் ஊற்றினார் சாவித்திரி மாமி. கண்ணை மூடிக்கொண்டு வாய்க்குள் ஏந்தியவள் அடுத்த கணமே பெரும் ஓங்காளமுடன் வெளியில் கக்கினாள். அத்துடன் நிற்காது அடிவயிறு வரை சுருட்டி குடக்கணக்கில் வாந்தி எடுக்கத் தொடங்கினாள்.

“பாத்தியே நான் சொன்னன் ” என்று பாட்டி அங்கலாய்க்க சாவித்திரி மாமி அவளை யோசனையாய் பார்த்துக்கொண்டு நின்றாள். வாந்தி எடுத்துத் துவண்டு போனவளை அவளது மணிக்கட்டைப் பற்றி மறுகையால் தோளில் அணைத்து அறைக்குக் கூட்டிக்கொண்டு போய் படுக்கவிட்டாள். போர்வையை எடுத்து போர்த்திவிட்டு, அவள் அணிந்திருந்த சட்டையை இடுப்பில் பிடித்து வயிற்றுப் பக்கம் வரை உயர்த்தினாள். அவளது அடிவயிற்றிலிருந்து மெதுவாக மேல் நோக்கி வருடினாள். சக்திக்குப் பிடிக்காமல் கூச்சமாக இருந்தது. ஆனாலும் சாவித்திரி மாமிக்கு வைத்தியம் தெரியும் என்று ஊரில் எல்லோரும் சொல்வதால் தடுக்க முடியாமல் படுத்துக் கிடந்தாள் .

சாவித்திரி மாமி சட்டையை நேராக முழங்கால் வரை இழுத்து விட்டுப் போர்வை போர்த்தி வெளியே வந்தாள். பின் அவள் பாட்டியுடன் பேசுவதும், பாட்டி பெரிதாய் அழும் சத்தமும் கேட்டது. பாட்டியின் அழுகை கேட்டு பெரியம்மா ஓடி வருவதும் அவளின் அவசரக் குரலும் கேட்டது. பின் வாயில் எதையோ வைத்து அடைத்தது போல பாட்டியின் ஓலம் அமத்தலாகக் கேட்டது.

சக்திக்கு எழுந்து சென்று பார்க்க வேண்டும் போல் இருந்தது எழும்ப முடியாமல் உடல் சாய்த்து விழுத்தியது. யாரும் அருகில்லில்லாத போது தனியாக அந்த அறையிலிருப்பதற்கு சக்தி பயந்தாள். உடல் நடுங்க கண்களை மூடினாள், எதையோ நினைக்கவோ, சந்திக்கவோ மறுப்பவள் போல . தனக்கு ஏதோ பொல்லாத நோய் வந்துவிட்டதோ என எண்ணினாள். தான் சாகப் போகிறேனோ அதைத்தான் சாவித்திரி மாமி சொல்லியிருக்கக் கூடுமோ? அது தான் பாட்டி கத்தியதோ என நினைத்தாள். பயமாக இருந்தது.

பெரியம்மா உள்ளே வந்தாள். தான் அறையில் தனியாக இல்லை என்றதும் ஆசுவாசமாக உணர்ந்தாள் . சக்தியின் தலைமாட்டில் அமர்ந்து தலையை வருடினாள், சக்திக்கு அந்த வருடல் தேவையாக இருந்தது. அம்மா இருந்தால் இப்படித்தான் செய்திருப்பாள் எனத் தோன்றியது. பெரியம்மாவோடு பேசப் பிடித்தது. உடல் சோர்ந்து கிடந்த போதும் பெரியம்மா கேட்டவற்றிற்கெல்லாம் அரை மயக்கத்தில் பதில் சொல்லிக் கொண்டிருந்தாள்.

“முடக்கு வீட்டுத் தாத்தாவின்ர செத்தவீட்டுக்கு நீங்கள் எல்லாரும் போன அண்டைக்கு , வெளியில திரியாமல் வீட்டுக்குள்ள இருக்க வேணும் எண்டு சொல்லிப் போட்டு பாட்டி போன பிறகு , அக்கா தேத்தண்ணி போட்டுக் குடுக்கச் சொன்னதாம் எண்டு வந்தவர்.”

“தப்பு எண்டு உனக்குத் தெரியாதா?”

“முதல் அவர் என்ன செய்யப் போறார் எண்டு தெரியாது . அவர்… அவர் ஏதோ கூடாது செய்யிறார் எண்டு எனக்குத் தெரியும் போது பயம் வந்தது.”

“நீ ஏன் சத்தம் போட்டுக் கத்தயில்லை.”

“பயந்து நோவில ஒருக்காத்தான் கத்தினான் ஒரு வீட்டிலையும் ஒருத்தரும் இல்லாமல் செத்தவீட்டுக்குப் போனதால கேக்கயில்லை. பிறகு என்ர யங்கியை என்ர வாய்க்குள்ள அடைஞ்சு போட்டு என்னை அமத்தினவர் . எனக்குக் கத்த முடியாமல், மூச்சு வராமல் பயமாவும் நோவாவும் இருந்தது.”

“பிறகும் ஏன் பிள்ளை ஒருத்தரிட்டும் சொல்லையில்லை. “

“அவர் சட்டைக்குள்ளாள கைவிட்டதுக்குத்தான் அவரைப் பிடிக்கயில்லை பார்மசிக்குப் போகமாட்டன் எண்டு சொன்னதுக்கு அக்கா கோவம் போட்டிட்டா, குறை சொன்ன எண்டு நீங்கள் அடிச்சனீங்கள் . பாட்டி பேசும். சொல்லுறதுக்கு எனக்கு வேற யாரும் இல்லை.”

சக்தி இப்போது தான் நிகழ்ந்தது போலத் தேம்பினாள்.

“சொன்னால்… அம்மா செத்தது போல கிணத்துக்குள்ள தூக்கிப் போட்டிடுவார். எண்டு சொன்னவர். எனக்குக் கிணத்துக்குள்ளை விழுந்து சாகப் பயம்.”

சக்தியின் குரலும் உடலும் நடுங்கியது.

“ஐயோ, என்ர குடி நாசமாய் போச்சே” என்று அழுதுகொண்டே பெரியம்மா வெளியே ஓடினாள். “என்ர பிள்ளை சுகமில்லாமல் இருக்கிறாளே அவளின்ர வாழ்க்கைக்கு நான் என்ன பதிலைச் சொல்ல… உன்ர பேத்தியைப் பார்க்கிறதை விட்டிட்டு என்ன செய்து தொலைச்சனி அம்மா?” எனப் பாட்டியிடம் சீறினாள் .

“என்ர பிள்ளைக்குத் தெரிஞ்சு, ஊருக்குத் தெரிஞ்சு அவளின்ர குடும்பம் குழம்புறதுக்கு முதல் உதைக் கழுவிப்போடு சொல்லிப்போட்டன் அம்மா ” எனப் பாட்டியிடம் கத்துவதும் பாட்டியும் ஏதோ பதிலுக்குக் கத்துவதும் அழுவதும் கேட்டது. சாவித்திரி மாமி சமாதானம் செய்வதும் கேட்டது,

என்னவாக இருக்கும் நான் சாகப் போகிறேனா? என்னைக் காப்பாற்றவே முடியாது என சாவித்திரி மாமி சொல்லி விட்டாவா? அதனால் தான் அழுகிறார்களா? என்னாச்சு எனக்கு? பார்மசி அண்ணா செய்ததாலதான் நான் சாகப் போகிறேனா? அண்டைக்கும் இது மாதிரித்தான் இரத்தமாகக் கொட்டியதே. , இந்த இரத்தம் தான் எல்லாத்துக்கும் காரணமா? சக்திக்கு பயம் இன்னும் அதிகமானது. தப்புச் செய்தவர் சாகாமல் நான் ஏன் சாக வேணும் பலவீனத்திலும் கேள்வி வந்தது.

மயக்கமும் விளிப்புமாகத் துவண்டுகிடந்தாள்.

மதியம் எடுத்த வாந்திக்குப் பின் எதுவுமே சாப்பிடவில்லை . மாலையில் , பாட்டி அவளுக்குப் பிடித்த அரிசிமா புட்டவித்து நிறைய தேங்காய் போட்டு சர்க்கரையுடன் கொடுத்தாள். ஓரளவு சாப்பிடக் கூடியதாக இருந்தது. இரவு மீண்டும் சாவித்திரி மாமி வந்தாள். அவர்களுடன் போய் வாசலில் இருக்கவேண்டும் போலிருந்தது. ஆனாலும் களைப்பும் நித்திரையும் வந்தது. அவர்கள் வீடில் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையுடன் போர்த்திப் படுத்துக்கொண்டாள்.

தன்னருகே பேச்சுச் சத்தம் கேட்டதில் நித்தரை குழம்பி கண் விழித்த போது பெரியம்மாவும் சாவித்திரி மாமியும் நிற்பது தெரிந்தது. ஏதோ ஒரு மருந்தை சாவித்திரி மாமி குடிக்கத் தந்தாள். குடித்து சற்றுக்கெல்லாம் சக்திக்கு மீண்டும் நித்திரை வந்தது. உறங்கத் தொடங்கினாள்.

சக்தி கண் விளித்த போது அப்போதும் இரவாகத்தான் இருந்தது. லைட் போடாமல் மூலையில் அரிக்கேன் லாம்பு கொளுத்தி வைத்திருந்தாள் பாட்டி. இப்போது சாவித்திரி மாமி பெரியம்மா இருவரையும் காணவில்லை. கண் திறக்க முடியாமல் மிகவும் அசதியாக இருந்தது.

இவள் விளித்தது கண்டதும், தரையிலமர்ந்து, அவள் படுக்க வைக்கப்பட்டிருந்த வாங்கில் அவளது கால் மாட்டில் தலை சாய்த்திருந்த பாட்டி தலை உயர்த்திப் பார்த்தார். அடி வயிற்றிலும் அதற்குக் கீழேயும் அறுப்பது போல வலித்தது. உதறுவது போல குளிரடிப்பதாக உணர்ந்தாள். “பாட்டி” என்றாள் சத்தம் எழுவதே சிரமமாக இருந்தது. அதைவிட வாய் திறந்த போது வயிறு வலித்தது. “என்ன குஞ்சு” பாட்டி கண்ணைத் துடைத்துக் கொண்டு முகத்துக்கு அருகே வந்தாள். பாட்டியின் கத்தாத கனிவான குரல் பிடித்திருந்தது. அம்மா இருந்திருந்தால் இப்படித்தான் இருந்திருப்பாள் என எண்ணினாள்.

அந்த முதல் நாளைப்போல அதைவிட அதிகமாக கொளகொளப்பாக, மிகவும் ஈரமாக உணர்ந்தாள். அந்த ஈரம் பாதத்தின் குதியால் வழிவது போலவும் முதுகுவரை சொதசொதவென நனைப்பது போலவும் இருந்தது சக்திக்கு. எழ முயன்றாள் முடியவில்லை.

“எனக்கு என்ன பாட்டி. நான் சாகப் போறேனா?”

“இல்லையடி என்ர ராசாத்தி” பாட்டி கண்களைத் துடைத்துக் கொண்டாள். “குளிருது பாட்டி.” ரகசியம் போல இருந்தது அவளின் குரல். பாட்டி லைட் போடாத இருட்டுக்குள் கைகளைத் துழாவி தனது சேலையை எடுத்து நான்காக மடித்து போர்த்துவிட்டார். “பாதத்தை மூடு பாட்டி குளிருது.” பாதம் வரை சேலையை இழுத்தவர் சட்டென கையை இழுத்து முகத்துக்குக் கிட்டக் கொண்டு சென்று பார்த்தார். அவளது கால்களுக்கிடையில் கையை நுழைத்து விளக்கு வெளிச்சத்தில் பார்த்தார். லாம்பைக் கொண்டு வந்து அவள் படுத்திருந்த இடத்தைச் சுற்றி தரையைப் பார்த்தவர் தலையில் கை வைத்து, “ஐயோ” என்றார். பின், கதவைத் திறந்துகொண்டு அந்த இரவில் வெளியே ஓடினார்.

சக்திக்குக் கண்கள் சொருகிய போது பெரியம்மாவும் வாயைச் சேலைத் தலைப்பால் பொத்தியபடி பாட்டியும் நிற்பது தெரிந்தது. பெரியம்மாவின் வீடுவரை ஓடிப்போய் வந்ததில் பாட்டிக்கு மூச்சிரைத்தது. ஏதாவது செய். ஐயோ என்ற குஞ்சு பதறிக்கொண்டிருந்தாள் பாட்டி. பெரியம்மாவின் கண்கள் கலந்கியிருப்பதை மங்கலாகக் கண்டாள். அம்மா இருந்தால் சக்தியின் வலி கண்டு இப்படித்தான் அழுதிருப்பாளோ…

அவளது நினைவு மங்குவதற்கு முன்னான இறுதிக் கணத்தில், ‘அம்மா இருந்திருந்தால் இப்படி ஒரு நிலையில்தான் கிடந்திருக்க மாட்டேன் என்று தோன்றியது.’ “ம்ம்மா, அப்…” என்ற வார்த்தைகளுடன் நினைவு தவறியது.

அடுத்த நாள்!

இரவு கக்கூசுக்குப் போக வந்து தண்ணியள்ளும்போது தடுக்கி கிணற்றுக்குள் விழுந்த சக்தியை, பெரியம்மா தான் காலையில் முகம் கழுவ கிணற்றடிக்கு வரும்போது முதலில் கண்டு குளறினார்.

“பாதகத்தி பெத்தவளே என்ர ராசாத்தி, என்னை நம்பி விட்டுட்டுப் போனியேடி.” பாட்டி அம்மாவைக் கிடத்தியிருந்த இடத்தில் குந்திக்கொண்டு கிணற்றைப் பார்த்துக் கதறிக்கொண்டிருந்தார்.

வயிற்றுப் பிள்ளையுடன் சாவுகண்டு அக்கா அதிர்ந்து போகாமல் பார்மசி அண்ணா அக்கறையாக அணைத்துப் பிடித்திருந்தார்.

சக்தி வானத்தில் குத்திட்ட விழிகளால் அம்மாவைத் தேடியபடி மிதந்து கொண்டிருந்தாள்.

படைப்பாளர்:

மாலினி

இலங்கையில் பிறந்தவர். ஜெர்மனியில் வளர்க்கிறார். இலங்கைப் பத்திரிகைகள், வானொலி என ஆரம்பித்த எழுத்து, இப்போது கவிதைகள், கட்டுரைகள், கதைகள் என நகர்ந்துகொண்டிருக்கிறது.

.