புற்றுநோய் என்பது உடலில் உள்ள அணுக்கள் ஒழுங்கற்று அதீத வளர்ச்சியைப் பெறுவது. ஒவ்வோர் அணுக்களும் வளர்சிதை மாற்றங்களுக்கு உட்பட்டது. ஆனால், வளர்சிதை மாற்றங்கள் சீராக இருத்தல் வேண்டும். தாறுமாறாகப் புதுப் புது செல்கள் உருவாவது என்பது ஆக்கபூர்வமான செயல் அல்ல, அதுவே புற்றுநோய் கட்டியின் ஆரம்பம்.

மார்பகங்களில் உள்ள திசுக்களில் ஏற்படும் புற்றுநோயே மார்பகப் புற்றுநோய். மார்பகத்தில் ஏற்படும் மாற்றங்களை உடனுக்குடன் நம்மால் அறிந்துகொள்ள முடியும். காரணம், அவை உடல் வெளிப்புற உறுப்பு. மாதத்தின் ஒவ்வோர் கட்டத்திலும் மார்பகங்கள் இயல்பான மாற்றங்களைப் பெறும். அவற்றை நாம் தெரிந்து வைத்தல் நலம். எடுத்துக்காட்டாக மாத சுழற்சிக்குச் சில தினங்களுக்கு முன்பிருந்து மார்பகங்கள் கனத்து இருப்பதுபோலவும், சிறிது வலியுடனும் காணப்படலாம். இது இயல்பானதே. இது ஹார்மோன்களின் தாக்கத்தால் ஏற்படுவது. மாத சுழற்சி உதிரப்போக்கு நின்றபின் இவை மீண்டும் பழைய இயல்புநிலைக்குத் திரும்பிவிடும்.

மார்பகப் புற்றுநோயின் காரணிகள்

1) மற்றொரு மார்பகத்தில் ஏற்கெனவே புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்ட நிலை.

2) மிக நெருங்கிய ரத்த உறவினருக்கு மார்பகப் புற்றுநோய் இருத்தல்.

3) மார்பகப் பகுதியில் கதிர்வீச்சு சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தால்.

4) 50வயதிற்கு மேலும் மாத சுழற்சி உதிரப்போக்கு தொடருதல்.

5) குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்காமல் இருத்தல்.

6) கொழுப்புச் சத்து உணவுகளை அதிகம் உட்கொள்ளுதல்.

7) கர்ப்பத்தடை மாத்திரைகளை அதிகம் உட்கொள்ளுதல்.

8) நீண்ட நாட்களாக மார்பகப் பகுதியில் ஆறாத புண்.

9) அதீத உடல்பருமன்.

செய்ய வேண்டியவை

1) மார்பக சுயபரிசோதனை ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தேதியில் செய்து மார்பகங்களின் இயல்புநிலையை அறிதல் வேண்டும்.

2) மாதசுழற்சி உதிரப்போக்கிற்குப் பின்னால் ஏழாவது நாளில் இருந்து மார்பக சுயபரிசோதனையை ஆரம்பிக்கலாம்.

மாதசுழற்சி உதிரப்போக்கு ஆரம்பித்த நாளை முதல் நாளாகக் கருத்தில் கொள்ளவேண்டும்.

3) மாதசுழற்சி உதிரப்போக்கு நின்ற பெண்கள் ஒரு குறிப்பிட்ட நாளைத் தேர்ந்தெடுத்து ஒவ்வொரு மாதமும் அதே நாளில் தொடர்ந்து மார்பக சுய பரிசோதனை செய்யவேண்டும்.

எல்லை

மார்பகப் பரிசோதனை செய்ய வேண்டிய எல்லை என்பது அக்குளின் நடுப்பகுதியில் இருந்து தொடங்கி மார்பின் கீழ்பகுதி, நெஞ்செலும்பின் நடுப்பகுதி, காறை எலும்பின் மேல்பகுதி வரை சென்று மீண்டும் அக்குள் பகுதிவரை சென்று முடியும்.

மார்பக சுய பரிசோதனை

1) மேலாடை இல்லாமல் இரண்டு மார்பகங்களும் ஒரே அளவில் உள்ளனவா என்பதைக் கண்ணாடிக்கு நேராக நின்று பார்த்துக்கொள்ள வேண்டும். கண்ணாடி முன்பு நின்று பார்க்கும்போது இரு கைகளையும் தலைக்குப் பின்னால் சேர்த்தாற்போல் வைத்துக்கொள்ளவும். அக்குள் பகுதியில் கட்டிகள் தென்படுகிறதா என்றும் பார்க்க வேண்டும்.

2) மார்பகங்களைக் கவனமாகப் பாருங்கள். உங்கள் கைகளால் தொட்டு உணருங்கள். இடதுபக்க மார்பகத்திற்கு வலது கையையும் வலதுபக்க மார்பகத்திற்கு இடது கையையும் பயன்படுத்தவேண்டும். கையின் இரண்டாவது, மூன்றாவது, நான்காவது அதாவது நடுமூன்று விரல்களின் மேல் மற்றும் நடுப்பகுதியைப் பயன்படுத்தி மார்பகத்தின் ஒரு பகுதியில் தொடங்கி, சிறுசிறு பாகமாக முழு மார்பகத்தையும் தடவிப் பார்த்து சுய பரிசோதனை செய்ய வேண்டும். பரிசோதனை செய்து முடியும்வரை விரல்களை எடுக்காமல் பரிசோதனை செய்ய வேண்டும்.

3) மார்பகங்களை கடிகார முள் சுழலும் திசையில் பரிசோதிக்க வேண்டும்.

4) மார்பகக் காம்புகளை அழுத்தி ஏதேனும் திரவங்கள் வெளிப்படுகிறதா எனப் பரிசோதிக்க வேண்டும்.

5) மார்பகத்தில் மாற்றங்கள் இருப்பின் மருத்துவரின் உதவியை அணுக வேண்டும்.

21 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் தொடர் பரிசோதனைக்குத் தங்களை உட்படுத்திக்கொள்ள வேண்டும்.

மார்பகப் புற்றுநோய் அறிகுறிகள்

1) மார்பக அளவு, வடிவம் சமச்சீரற்றநிலை.

2) மார்பகங்களின் மேல் தோல் கடினமாக இருத்தல்.

3) மார்பகங்களின் மேல் தோல் அமுங்கிய நிலை.

4) மார்பகத்தில் கட்டி ஏற்படுதல்.

5) ஆறாத மார்பகப்புண்.

6) மார்பகக் காம்பிலிருந்து திரவம் அல்லது ரத்தம் கலந்த கசிவு.

7) சிவந்த நிற மார்பகங்கள்.

8) மார்பகக் காம்பு உள்ளிருத்தல் அல்லது அமுங்கிய நிலை.

9) மார்பகங்கள் கனத்து இருத்தல்.

10) ஆரஞ்சு பழத்தோல் போன்ற தோற்றம்.

11) மார்பக ரத்தநாளங்கள் புடைத்து இருத்தல்.

12) மார்பகங்களில் சிறுசிறு புள்ளிகள் / குழிகள் ஏற்படுதல்.

பரிசோதனையும் சிகிச்சையும்

மார்பக சுயபரிசோதனையில் மாற்றங்கள் இருப்பின் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

நுண்ணிய ஊசி திசு பரிசோதனை, சதை பரிசோதனை, மார்பக கதிரியல் பரிசோதனைகள், நுண்ணோக்கி மூலம் திசு பரிசோதனை போன்ற படிப்படியான பரிசோதனைகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டு, புற்றுநோய் உறுதிசெய்யப்பட்டால் உடனடியாக அதற்கு மருத்துவத் தீர்வு காண வேண்டும்.

ஆரம்பகால நிலை எனில் மார்பகப் புற்றுநோய் எளிதில் குணப்படுத்தக்கூடியதே. மார்பகப் புற்றுநோயின் நிலையின் பொருட்டு அறுவை சிகிச்சையோ கதிர்வீச்சு சிகிச்சையோ மருத்துவ சிகிச்சையோ அல்லது கூட்டாக மூன்று சிகிச்சைகளுமோ தரப்படும்.

முறையான சிகிச்சை எடுக்காமலோ அல்லது நோய் முற்றிய நிலையில் அது பிற உறுப்புகளுக்கும் பரவியபின் சிகிச்சையைத் தொடங்கும்போது தான் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

படைப்பாளர்:

மருத்துவர் அனுரத்னா. இவர் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவராகப் பணியாற்றுகிறார். ஓய்வு நேரங்களில் விளிம்புநிலை மக்களை அவர்கள் இருப்பிடத்துக்கே தேடிச்சென்று மருத்துவ உதவி வழங்குகிறார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மூலமாக சமூகத்தில் அறிவியல் சிந்தனைகளை பரப்பிவருகிறார். பெண்கள் மற்றும் இதர ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியல் போராட்டங்களில் பங்குகொள்கிறார். மனிதி அமைப்பின் உறுப்பினராக உள்ளார். கட்டுரைகள் மற்றும் கவிதைகள் எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். 2012ம் ஆண்டு வெளிவந்த “மனிதநேய மாமுனிவர்” என்ற நூலின் ஆசிரியர்.