“அம்மா, மீன் ரொம்ப டேஸ்டா இருக்குமா.”

” இந்தாடா செல்லம். இன்னொன்னு வைச்சு சாப்பிடு.”

“அம்மா, எல்லாருக்கும் இருக்கா? இருந்தா அக்காவுக்கு வைச்ச மாதிரியே எனக்கும் வைமா. சூப்பரா இருக்கு.”

“புரட்டாசி மாசம் மீன் கொஞ்சம் வெல குறைவா கிடைச்சது. நிறைய வாங்கிட்டு வந்தேன். எல்லாருக்கும் போதும் போதும்ங்கிற அளவு இருக்கு. தேவையானதைச் சாப்பிடுங்க.”

பல்லவியும் சூர்யாவும் போட்டிபோட்டுக் கொண்டு உணவை ருசித்துக்கொண்டு இருந்தனர்.

“அம்மா, இன்னிக்கி எங்க வகுப்புல ப்ளஸ் டூ முடிச்சிட்டு எல்லாரும் என்ன படிக்கப் போறீங்கன்னு டீச்சர் ஒவ்வொருத்தரா கேட்டாங்க. மேற்படிப்பு என்னென்ன படிக்கலாம்ன்னு நிறைய சொன்னாங்க. நான் வக்கீலுக்குப் படிக்கப் போறேன்னு சொன்னேன்மா. என் கனவு வழக்கறிஞர் ஆகணும்ங்கிறதுதான்.”

“ம்… நல்லதுதான். ஆனா…”

“அம்மா, நான் பைலட் ஆகப் போறேன் மா.”

“அதுக்கெல்லாம் எவ்ளோ செலவாகும் தெரியுமா?”

“நான் வக்கீலுக்குதான் படிக்கப் போறேன். ஒரு பெரிய வக்கீலாகி, அப்புறம் நீதிபதி ஆயி நிறைய வழக்குகளுக்குச் சரியான நீதி வழங்குவேன். அதுக்குத்தான் பக்கத்து வீட்டு லாயர் மாமாகிட்ட எப்பவும் பேசிக்கிட்டு இருக்கேன். அந்தக் கறுப்பு கோட் போட்டுக்கிட்டு கோர்ட்க்குப் போறது எவ்ளோ கெத்தா இருக்கும் தெரியுமாம்மா?”

“அக்கா, நானும் பைலட் ஆகப் போறேன். செம்ம கெத்தா இருக்கப் போகுது. அதுவும் என்னோட கனவுதான். ரெண்டு பேரும் கலக்கப்போறோம். உனக்கு ஒரு கவலையும் இல்லாம பார்த்துக்குவோம்மா.”

குழந்தைகள் பேசுவதைப் பார்த்து அமைதியாக இருந்தார் கமலா.

“என்னமா, நான் லாயர் ஆகணும்ன்னு சொல்றேன். தம்பி பைலட் ஆகணும்ன்னு சொல்றான். நீ ஒண்ணுமே சொல்ல மாட்டிங்கிற. எதாவது சொல்லுமா?”

“என்ன சொல்றது? நம்ம குடும்பத்துலதான் பொண்ணுகளை ப்ளஸ்டூக்கு மேல படிக்க வைச்சதில்லையே… பாட்டி படிக்கல. நான் ரெண்டாவதுதான் படிச்சிருக்கேன். நீ இப்போ ப்ளஸ் டூ படிக்கற. அதுவே பெருசு.”

“ஆமா, பொண்ணு படிச்சி என்னப் பண்ணப்போறா? அதுவுமில்லாம நாம செலவு பண்ணி படிக்க வைப்போம். படிச்சி வேலைக்கி போயி சம்பளத்தை நம்மகிட்டயா கொடுக்கப்போறா? வாக்கப்படற எடத்துலதான கொடுக்கப்போறா? பையனைப் படிக்க வைச்சாலாவது உபயோகமா இருக்கும். அவன் சம்பாரிச்சு நம்மகிட்ட கொடுப்பான். டே, சூர்யா நீ என்ன வேணா படி. ஆனா, பல்லவி நீ படிச்சி உங்க வீட்டுக்காரன் கைலதான் கொடுக்கப்போற. அதுக்கு எதுக்கு உன்ன படிக்க வைச்சிக்கிட்டு? உன்ன பன்னிரண்டாவதோட நிறுத்திட வேண்டியதான். அதுவே அதிகம். போதும் நிறுத்திடு உன் படிப்பை.”

உரையாடலில் ஓர் அணுகுண்டையே பல்லவி மனதில் வீசிப்போனார் பாட்டி சித்தாயி.

“என்ன பண்றதுமா நம்ம குடும்பத்துல பொண்ணுங்கள படிக்க வைக்க மாட்டாங்கம்மா. பொண்ணா பொறந்துட்டோம் நம்ம தலவிதி அப்படி எழுதிருக்கு. நாம என்னமா பண்ண முடியும்? அந்த ஆசையெல்லாம் வளர்த்துக்காதம்மா. நம்ம குடும்பமும் கஷ்டத்துல இருக்கு. புரிஞ்சுக்கோமா” என அம்மாவும் பாட்டியின் சொல்லுக்கு வலுசேர்க்க, பல்லவியின் கனவு சுக்குநூறாக உடைவது போல் துயரமானாள்.

“பாட்டி, நாங்க கண்ணாலம் பண்ணிக்கிட்டா சம்பாரிக்கறத அவங்ககிட்டதான் கொடுக்கணுமா? ஏன் எங்க அப்பா, அம்மாதான படிக்க வைச்சாங்க? அவங்கள நான் பார்த்துக்குவேன். நான் அப்படில்லாம் இருக்க மாட்டேன். உனக்கு தெரியாதா என்னைப் பத்தி? அப்பா, அம்மா நீ எல்லாம் எனக்கு உயிராச்சே!”

“கண்ணாலம் ஆயிட்டா பொறந்த வீடு விருந்தாளி வீடு ஆயிடும், நாங்களும் விருந்தாளிங்க ஆயிடுவோம். இங்க வந்தா ரெண்டு, மூணு நாள் இருந்துட்டுப் போக வேண்டியதுதான். பொம்பளைங்களுக்கு ரெண்டு வீடு. கண்ணாலம் ஆயிப் போற வீடுதான் நிரந்தரம்.”

“அப்படின்னா எனக்குக் கண்ணாலமே வேண்டாம். நான் பண்ணிக்க மாட்டேன். என்னைப் படிக்க வைங்க. நான் படிச்சிட்டு உங்ககூடயே இருந்துடறேன்.”

“பொண்ணா பொறந்தா கண்ணாலம் பண்ணித்தாம்மா ஆவணும். கண்ணாலம் பண்ணாம இருந்தா நம்ம சாதி சமூவம் என்னானு சொல்லும். இப்படித்தான் எல்லாரும் வாழ்றோம். நீ மட்டும் படிக்கறேன் படிக்கறேன்னு சொல்லிக்கிட்டு… அவ்ளோதான் பன்னெண்டாவதோட படிப்பை நிறுத்திட்டு ஆவற வேலையைப் பார்க்க வேண்டியதான்.”

“நீங்கெல்லாம் எப்படியோ போங்க. அப்பா வரட்டும் அவர் என்ன படிக்க வைப்பார்.”

“அடி போடி, உங்கப்பனாவது படிக்க வைக்கறதாவது.”

” பார்ப்போம் பாட்டி” என்று பாட்டியுடன் மல்லுக்கட்டிக் கொண்டிருந்தாலும் பல்லவி மனம் எதையோ இழந்தது போல இருந்தது. தன் தந்தை வந்து தீர்த்து வைப்பார் என முழுமனதோடு நம்பினாள்.

அப்பா வருவதை எதிர்நோக்கிக் காத்திருந்த பல்லவிக்கு அவரின் செருப்புச் சத்தம் கேட்டது. ஓடிச் சென்று, “அப்பா, ஏன் இவ்ளோ லேட்டு?” என்று கேட்டாள்.

“நான் எப்பவும் வர்ற நேரத்துக்குத்தான் வந்திருக்கேன். அம்மா, தம்பியெல்லாம் எங்கே போயிட்டாங்க? இதைப் பாட்டிக்கிட்ட கொடுத்துடு.”

“அப்பா, நான் லா படிக்கறேன்பா. பாட்டி நம்ம வீட்ல பொண்ணுங்கள படிக்க வைக்கற பழக்கம் இல்லைன்னு சொல்லிட்டாங்க. இதோட என் படிப்பை நிறுத்திடுவாங்களாம். தம்பிய மட்டும் காலேஜ் அனுப்புவாங்களாம். ஏன்னா அவன் ஆம்பளப் பிள்ளையாம். அவன் சம்பாரிச்சி கடைசி வரை உங்கள வைச்சு காப்பாத்துவானாம். என்னப்பா இப்படில்லாம் சொல்றாங்க? எனக்குக் கல்யாணமே வேண்டாம்பா. நான் உங்ககூடயே இருந்துடறேன். என்னை நீ படிக்க வைப்பன்னு தெரியும்பா.”

“பல்லவி நம்ம குடும்பக் கஷ்டம்தான் உனக்குத் தெரியுமே! உன்னைக் கல்யாணம் பண்ணிக் கொடுக்கக் காசு வேணும். வரதட்சணையெல்லாம் தரணுமில்லமா, நான் எங்க போவேன்? அதுல எங்க நான் செலவு பண்ணி வைக்கறது? அப்படியே படிக்க வைச்சாலும் நீ போற வீட்லதான் குடுக்கப்போற. நாங்க உன்கிட்ட வந்து எப்படிக் கேட்கறது அதெல்லாம் சரிப்பட்டு வராதும்மா. பொண்ணுகிட்ட வாங்கிச் சாப்பிடறன்னு நம்ம சாதிசனமெல்லாம் கேவலமா பேசும். நான் அதுக்கெல்லாம் ஆளாக மாட்டேன். மான மருவாத முக்கியம் மனுசனுக்கு. எப்படின்னாலும் கண்ணாலம் ஆன பிறகு தம்பிக்கிட்ட இருக்கற உரிமை உன்கிட்ட இருக்காதுதான்மா. நீ வேறொருத்தர் மனைவி ஆயிடுவ, வேறொரு குடும்பத்துக்குப் போயிடுவ.”

“தம்பி பைலட் ஆகணும்ன்னு சொல்றான். அப்போ அவன மட்டும் படிக்க வைக்கப் போறீங்களா? நான் என்னப்பா பாவம் பண்ணினேன். பொண்ணா பொறந்தது தப்பா?” கடும் விரக்தியில் பேசலானாள்.

“பைலட் படிக்க எம்புட்டு செலவாகும் அதெல்லாம் நம்மால முடியுமா? ஏதோ என்னால முடிஞ்ச காலேஜில படிக்க வைப்பேன். ஆயிரம் இருந்தாலும் அவன் பையன் கடைசி வரைகூட இருக்கறவன். நீ ப்ளஸ் டூ நல்லா படிம்மா. அவ்ளோதான் என்னால படிக்க வைக்க முடியும், அப்புறம் கண்ணாலம் காட்சின்னு எவ்ளோ செய்ய வேண்டியிருக்கேம்மா என்ன பண்றது? அதிகமா படிச்சா அதிகம் படிச்ச வரன் பார்க்கணும். வரதட்சணையும் அதுக்கேத்த மாதிரி அதிகமா கேட்பாங்க. நம்ம சாதி சனத்துல படிச்ச பையனுங்க கம்மியாத்தான் இருக்காங்க. அதனால இதுவே உனக்குப் போதுமா? ஒன்னும் கவலைப்படாத! உன் மனசுக்குக்கேத்த மாதிரி உனக்கு நல்ல வாழ்க்கை அமையும்.”

“அடப் போப்பா என்ன கண்ணாலமோ போ! நா பண்ணிக்க மாட்டேன். என் படிப்பைத் தடை பண்ற எதுவும் எனக்கு வேண்டாம். நான் படிக்கத்தான் போறேன். எப்படியாவது என்னைப் படிக்க வைப்பா” என்று பெரும் மன உறுதியோடு சொல்லிப்போனாள் பல்லவி. எங்கிருந்து இவ்வளவு உறுதி வந்தது என்று அவளுக்கே தெரியவில்லை.

அடுத்த நாள் அப்பாவிற்குக் கடும்காய்ச்சல் அடிக்க, அம்மா அந்த ஊர் அரசாங்க மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். குட்டிகளுக்கு அப்பா எப்போ வருவார் என்ற பதைபதைப்புடன் வீட்டில் காத்திருக்க, “ஐயோ, பெத்த வயிறு பத்தி எரியுதே… ஒடம்பு நெருப்பா கொதிக்குதே. எவன் கண்ணு பட்டுச்சோ என் மகனுக்கு இப்படி சொகமில்லாம போச்சே! இப்பல்லாம் காய்ச்சல்னாவே கொரோனாங்கிறான் டெங்குங்கிறான். என்ன எழவு காய்ச்சலோ?” என்று பாட்டி புலம்பி தீர்த்தார்.

“நம்ம ஊருக்குப் புதுசா ஒரு டாக்டர் வந்திருக்காங்களாம். அவங்க ரொம்ப நல்லா பார்க்கறாங்களாம். அப்பாவுக்குச் சாதாரண காய்ச்சலாத்தான் இருக்கும், எல்லாம் சரியாயிடும் நீ கவலைப்படாத பாட்டி” எனப் பல்லவி கூறிக்கொண்டே அப்பா எப்போ வருவார் என வாசலைப் பார்க்கலானாள்.

(தொடரும்)

படைப்பாளர்:

சாந்த சீலா

சாந்த சீலா கடந்த 17 ஆண்டுகளாக ஆசிரியராகப் பணிபுரிகிறார். கும்முடிப்பூண்டியை அடுத்த பூவலை கிராமத்தின் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர். பேருந்து வசதி கூட சரியாக இல்லாத இந்த ஊரிலேயே தங்கி, பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு கல்வியறிவு தருகிறார். இவரால் இந்தப் பள்ளியில் இடைநிற்றல் குறைந்திருக்கிறது. பள்ளி மேலாண்மைக் குழுவின் ஆசிரிய உறுப்பினராகவும் இருக்கிறார். கல்வியின் நோக்கமான படைப்பாற்றல் வெளிப்பட குழந்தை மையக் கல்வி அமைய வேண்டும் என்றும் விளிம்புநிலை குழந்தைகளும் மையநீரோட்டத்தில் இணைய வேண்டும் செயல்படும் அரசு பள்ளி ஆசிரியர். குழந்தைகளைக் கொண்டாடுவோம் கல்வி இயக்கம், குழந்தைநேயப் பள்ளிகள் கூட்டமைப்பு போன்ற அமைப்புகளில் செயலாற்றிக் கொண்டுவருகிறார்.