“தமிழ்நாடு போல இங்க சாதிப் பிரச்னையெல்லாம் இல்லியே?”


“நோ… நோ… யார்… என்ன சாதியெண்டே எங்கட சனங்களுக்குத் தெரியாது. சாதிப் பெயரைச் சொல்லி கதைச்சாலே ஜெயிலால போக வேண்டியதுதான்.”

“வாவ், சூப்பர், அப்போ கல்யாணத்துக்குக்கூட சாதி பார்க்க மாட்டீங்க போல.”

“அது… கல்யாணத்துக்கு மட்டும் சாதி பார்ப்பினம்.”

“ஓ… தேர்தலில் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும்போது சாதி பார்க்கறதில்லதானே?”

“ம்… இல்ல, சமீபக் காலமா, வேட்பாளர்கள் தாங்களே சாதி அடையாளம், சாதி அபிமானங்கள் அடிப்படையில் மக்களை ஈர்த்தெடுக்கும் போக்கும் காணப்படுதுதான், அதை ஒண்டும் செய்ய ஏலாதுதானே?”

“அது சரி, சாதி இருந்தாலும், தமிழகக் கிராமங்கள் போல, தீண்டாமை, ஒடுக்கப்படுதல் எல்லாம் கிடையாதுதானே?”

“அது கிராமப்புறத்தால இன்னும் இருக்குதான். ஆனா நகரத்தில, ஒரே ஓபிஸ்ல பணி செய்யற சனங்களுக்குள்ளகூட யார், என்ன சாதியெண்டு நாங்க அறிய ஏலாது.”

இலங்கைப் பயணத்தில் சந்தித்த தோழியின் தோழியுடன் கதைத்த உரையாடல்தான் இது. “இல்ல… ஆனா, இருக்கு” வடிவேலு கதையாகத்தான் இருக்கிறது இலங்கையில் சாதி குறித்த நடைமுறைகள்.

இலங்கைத் தமிழர்களுக்கிடையேயுள்ள சாதி அமைப்பு பெரும்பாலும் இந்தியாவிலிருந்தே இறக்குமதி செய்யப்பட்டதாக சமூக ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். விஜயனின் வருகைக்குப் பிறகே இலங்கையின் எழுதப்பட்ட வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. அதன்படி தேவா, நாகாஸ், யாக்காஸ், ரக்ஷா என்ற நான்கு இனக்குழுக்கள் ஆதி இலங்கைத்தீவில் இருந்ததாக அறியப்படுகிறது. ஆனால், காலப்போக்கில் வேதங்களின் வாயிலாக நான்கு வர்ண சாதி பெரும்பிரிவுகள் தோன்றி அவை நாலாயிரம் சாதிகளாகப் பிரிந்திருக்கலாம். வழக்கம்போல வேதங்களில் காணப்படும் சாதி நெறிகளைத் தவறாகப் புரிந்துகொண்ட காரணத்தால் சாதிகளில் பாகுபாடுகளும் ஏற்றத்தாழ்வுகளும் தோன்றியிருக்க வேண்டும்.

சோழப் பேரரசு இலங்கையில் மேற்கொண்ட அரசியல் சமூகப் பண்பாட்டு அம்சங்களின் வழியாக இந்துத்துவ சாதியப் பாகுபாடுகள் இலங்கை பூராவும் வியாபித்து செழித்து சடைத்து நின்றன. சமஸ்கிருத அறிமுகங்களும் அச்சமயத்தில்தான் நிகழ்ந்தது. போர்த்துகீசியர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் வசம் முதலில் அகப்பட்டது அரசியல் ரீதியிலும், புவியியல் ரீதியிலும் பலவீனமான யாழ்ப்பாண ராச்சியமே. அக்காலத்தில் யாழ்ப்பாண சாதிக்கட்டமைப்பு சைவ வேளாள மேட்டுக்குடியினரால் போசித்து வளர்க்கப்பட்டிருந்தது. வணிகத்தின் பெயரால் நாட்டுக்குள் நுழைந்தவர்கள்,

தமிழர்களது சாதிய வேறுபாட்டைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி கல்வியையும் கலாச்சாரத்தையும் கொடுத்து தமக்கான ஊதியம் செய்யப் பயன்படுத்திக்கொண்டனர். ஆங்கிலேயர் காலத்தில் நிர்வாகப் பொறுப்பேற்ற முதலியார்களும் வெள்ளாளர்களும் தம்மை ஸ்திரமாக ஸ்தாபனப்படுத்திக்கொண்டனர். கிட்டத்தட்ட 400 வருடங்கள் இலங்கையில் மாறி மாறி ஆட்சி செலுத்திய போர்த்துக்கீசியர்கள், ஒல்லாந்தர்கள், பிரிட்டானியர்கள், சாதிய அமைப்பைத் தகர்க்க விரும்பாமல் அதை அணைய விடாமல் பார்த்துக்கொண்டனர்.

தாமஸ் வன்றீ என்ற ஒல்லாந்த தளபதி 1697இல் எழுதிய அறிக்கையிலும், 1927 இல் பிரித்தானியர் எடுத்த கணிப்பீட்டிலும் தமிழர்களிடையே வழக்கத்திலிருந்த 33 வகையான சாதியைக் குறிப்பிட்டுள்ளனர். இவற்றுள் ஆகக் கீழ்நிலையில் இருந்த ஐந்து சாதியினர் பஞ்சமர் என அழைக்கப்பட்டனர். அவர்கள், 20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதிவரை, “ஆண், பெண் இருபாலரும் மேலங்கி அணியக் கூடாது, முழங்காலுக்குக் கீழே உடை உடுத்தக் கூடாது, தோளில் துண்டு போடக் கூடாது, பெண்கள் தாவணி போடக் கூடாது, திருமணத்தில் தாலி கட்டக் கூடாது” என ஒடுக்கப்பட்டிருக்கின்றனர்.

சாதிய அமைப்பே இலங்கையின் சமூகக் கட்டமைப்பின் அதிகார படிநிலையின் அடித்தளமாக இன்று இருக்கிறது. பாடசாலைக் கல்வி, வேலைவாய்ப்பு, பாராளுமன்ற ஆசனம் போன்றவற்றுக்குச் சாதி சார்பான இட ஒதுக்கீடு கிடையாது. திருமணச் சட்டங்களிலும் சாதி இடம்பெறவில்லை. ஆனாலும், தமிழர், சிங்களவர் ஆகிய தேசிய இனங்கள் இரண்டுமே வலுவான சாதிப் படிநிலையைக் கொண்டுள்ளன. சிங்களவரின் சாதி அமைப்பில் மலைநாட்டு சிங்களவர், கீழ்நாட்டு சிங்களவர் என இரு பிரிவுகள் காணப்படுகின்றன. பேராசிரியர் நந்ததேவ விஜேசேகர எழுதிய ‘இலங்கை மக்கள்’ என்னும் நூல் சிங்களர்களில் 43 வகையான சாதிகளின் பட்டியலைத் தருகிறது. தற்போது சிங்களர்களிடையே 13 வகையான சாதிகள் காணப்படுகின்றன. பரவர், முக்குவர், கம்மாளர், சாணார், கண்ணர், கொல்லர், தட்டார், தச்சர், அம்பட்டர், காடையர், குசவர், மரையர், நட்டுவர் பள்ளர், பறையர் வண்ணார், ஐயர், மறவர், செட்டியார், சிவியர் எனத் தமிழகத்திற்கு சற்றும் குறையாமல் இலங்கைத் தமிழர்களிடத்தில் சாதியப்பிரிவுகள் காணப்படுகின்றன. மலைநாட்டு தமிழர்களும் இந்திய வம்சாவளித் தமிழர்களும் இலங்கைக்கு வணிகர்களாகக் குடியேறிய தமிழ் மக்கள் குழுவும் இந்திய சாதி அமைப்பு முறையை அடிபிசகாமல் பின்பற்றுகின்றனர்.

பௌத்தம் சாதியத்தை எதிர்க்கிறது. அதன் காரணமாக, சிங்களவர்களிடையே நிலவும் சாதியம், தமிழர்களிடையே நிலவும் சாதியம் போல் இறுக்கமாக இல்லை, சாதி அடிப்படையில் உயர்வு தாழ்வு இருந்தாலும், தீண்டாமை இல்லை. கண்டிய கிராமங்களை ஆய்வு செய்த நியூட்டன் குணசிங்க, இலங்கையில் பௌத்தமானது, அதன் முற்போக்கு தன்மையை இழந்து இந்துத்துவ சிந்தனை முறையான கர்மாவைத் தன்னகத்தே வரித்து முற்பிறப்பில் செய்த பலனே சாதியில் மேலோனாகவும், கீழோனாகவும் பிறப்பதற்குக் காரணமென்ற சித்தாந்தத்தைத் தூக்கிப் பிடிக்கிறது என்கிறார்.

இலங்கையில் சாதியத்திற்கு எதிரான போராட்டங்கள் 1960 களில் உச்சக்கட்டத்தை அடைந்து தீண்டாமையின் பல அம்சங்களை இல்லாமலாக்கியது. இந்தப் போராட்டங்கள் கம்யூனிஸ்டுகள், தேசியவாதிகள், காந்தியவாதிகள், சீர்திருத்தவாதிகள் எல்லோரையும் இணைத்துக்கொள்வதில் வெற்றிகண்டது. தமிழ்நாட்டினைப் போல சாதி மறுப்பு மணங்களை ஊக்குவிக்க, சமூக அமைப்புகள் இல்லை. ஆனால், போராட்ட இயக்கங்கள் இந்த நிலையினை மாற்றியது. 36 இயக்கங்களில் ஒன்றுகூட சாதிய மேலாதிக்கத்தினை ஏற்றுக்கொள்ளவில்லை. புலிகள் அமைப்பு அதிக அளவில் சாதி மறுப்புத் திருமணங்களை நடத்தியது. புலிகள் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் சாதியை அடையாளப்படுத்தி பேசினால் 10,000 ரூபாய் அபராதம் கட்ட வேண்டும் என்ற சட்டம் இருந்தது. சாதிப்பெயரைச் சொல்லவே முடியாது. தீண்டாமை என்பது கிடையவே கிடையாது. போராளிகளின் அழிவுடன் இந்தச் சாதி ஒழிப்பு நடவடிக்கைகளும் முடிவுக்குவந்தன. காரணம், விடுதலைப்புலிகள் சார்பில் சாதியை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டாலும், அவர்களின் பிரதான நோக்கம் தமிழீழத்தை நோக்கி இருந்ததால், அக்காலத்தில் சாதியென்பது இல்லாமல் செய்யப்பட்டது என்பதைவிட ஒடுக்கிவைக்கப்பட்டது என்பதே உண்மை.

இந்தச் சாதிய இறுக்கமே ஈழத்தமிழர்களை, முஸ்லிம்கள் – மலையகத் தமிழர் – ஈழத்தமிழர் எனப் பிரித்தது. பின்னர் யாழ் – வன்னி – மட்டக்களப்பு என்றும் பிரித்தது. தற்பொழுது இங்குள்ள எந்தக் கட்சிகளுக்கும் சாதி குறித்து எந்த விழிப்புணர்வும் இல்லை. சமூக அறத்திற்காகப் போராட எந்த அமைப்புகளும் இல்லை. இனக்கலவரங்களைத் தூண்டிவிட்ட சக்திகள், தமிழர்கள், சிங்களவர்களைவிடத் தாழ்ந்த சாதி என்ற கருத்தையே விதைத்தன.

இந்தியாவில் இருந்து குடிபெயர்ந்த பிராமணர்கள் தற்போது தங்களைப் பிராமணர்கள் என்று கூறுவதில்லை. அவர்கள் சிங்களவரின் சாதி வகுப்பில் இணைந்துவிட்டனர். தமிழர்கள் மத்தியில் வெள்ளாளர்களும் சிங்களர்கள் மத்தியில் கொவிகமவினரும் முக்கிய சாதிகளாக விளங்கி இலங்கையின் அரசியல் பொருளாதாரத்தைத் தீர்மானிக்கின்றனர். மலையகத் தமிழர்களில் உயர் சாதியினராகக் கருதப்படுபவர்கள் லைன் அறைகளின் முதல் வரிசையைப் பிடித்துள்ளனர். அந்தப் பிரிவில் வெள்ளாளர்கள், கள்ளர்கள், அகமுடையர்கள், முதலியார்கள் உள்ளனர். தமிழ் மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் வெள்ளாளர்களே.

“கள்ளர் மறவர் கனத்ததோர்
அகம்படி மெள்ள மெள்ள
வெள்ளாளர் ஆயினரே” என்ற சொல்வழக்கு காணப்படுகிறது.

தமிழ்நாட்டின் பார்ப்பனர்கள் போல, இங்கு வெள்ளாளர்கள் ஆதிக்க சாதியாக மாறுவதைத் தடுப்பதற்காகவே ஆறுமுக நாவலர் போன்றோர் இந்த இணைப்பினை ஊக்கப்படுத்தியதாகச் சொல்கிறார்கள். யாழ்ப்பாணச் சனத்தொகையில் சுமார் 50 சதவீதம், தாழ்த்தப்பட்ட சாதியினங்களைச் சேர்ந்த மக்களாக இருக்கலாம் எனக் கணிக்கப்படுகிறது. ஆனால், அந்த மக்களின் பிரதிநிதியாக ஒரு நாடாளுமன்ற உறுப்பினர்கூட இல்லை.

கிராமப்புறங்களில் தீண்டாமை வெவ்வேறு வடிவங்களில் காணப்படுகிறது. ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களை வன்முறையாளர்களாகவும் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களாகவும் ஒரு பிம்பம் சமூகத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதனால் அரச பாடசாலைகளில்கூட ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் சாதிய அடக்குமுறைக்கு அதிகம் ஆளாகின்றனர் என்கிறார் அரசுப் பள்ளியில் போதிக்கும் தோழி ஒருவர். வட்டுக்கோட்டைப் பிரதேசத்தில் அரசப் பாடசாலையில் பயிலும் மாணவர் ஒருவர் கூறுகையில், “எங்களால் பள்ளிக்கூடத்துக்கு சந்தோசமா போய் வர ஏலாது, எங்களைச் சாதிப்பெயர் சொல்லி அண்ணாமார் கூப்பிடிவினர், நாங்க முறைச்சுப் பார்த்தாகூட அடிக்க வருவினம், ரீச்சர், சேர் மார்கூட என்ன நடந்தாலும் எங்களைத்தான் பிழை சொல்லுவினம், எங்களுக்குப் படிக்கவே விருப்பம் இருக்காது. இப்பிடிச் செய்தா யாருக்குதான் படிக்க மனம் வரும்? எங்கட இடத்தில் ஓ.எல். வரைக்கும் படிக்குறதெ பெரிசு” என்கிறார்.

“பிள்ளைகள் எல்லோரையும் நாங்க சமமாகத்தான் பார்க்க வேணும். ஆனா, எல்லா வாத்திமாரும் அப்படி நடத்தினது இல்ல, உயர்சமூகப் பெண் பிள்ளைகளிடம் இவங்கள் கதைச்சா அதை யாரும் கண்டா பெரும் பிரச்சினை. சாதியச் சொல்லி அடிச்சுப் போடுவாங்கள். படிப்பிக்கிற ரீச்சர் மாரே இப்பிடிச் சாதியச் சொல்லி சொல்லி அவங்களை அவமானப்படுத்தினா அவங்களும் என்ன செய்வாங்கள்?” என்கிறார் ஆசிரியர் ஒருவர் கவலையோடு.


பல்கலைக்கழகத்தில் யார் எவர் எனத் தெரியாமல் காதலில் சிக்குபவர்கள்கூட இரண்டாம் ஆண்டில் சாதியறிந்து தம் காதலை முடிவுக்குக் கொண்டு ந்து விடுகிறார்கள். காதலுக்குக் கண் வேண்டுமானால் இல்லாமல் இருக்கலாம். ஆனால், காதலுக்குச் சாதி இருக்கிறது என்பதே சமூக யதார்த்தம். பேராசிரியர் கா.சிவத்தம்பி யாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக்கப்படாதது, யாழ்ப்பாண நகர மேயராக இருந்த செல்லன் கந்தையனை கைநீட்டி அடிக்கலாம் என்று மாநகரசபை உறுப்பினர்களைவிட்டு அடிக்க வைத்தது அனைத்தும் சாதியத்தின் பூச்சுகள்தாம்.

சிங்களவரிடம் சம உரிமை கேட்டு போர்க்கொடி தூக்குபவர்கள் தங்கள் வீட்டு கோடிக்குள் தாங்கள் செய்கிற ஒடுக்குமுறை தெரிவதில்லை. தமிழ்தேசியம் பேசும் எவரும்கூடப் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக ஏதும் பேசுவதில்லை, வாக்குவங்கி சரிந்துவிடும் என்ற காரணத்தால். சாதிகள் ஒன்றும் இல்லை என்று முழுப்பூசணிக்காயைச் சோற்றில் மறைப்பவர்கள் ஒடுக்கப்பட்ட சாதியினர் அல்ல, ஒடுக்கும் சாதியினராகத்தான் இருக்கிறார்கள். இலங்கை அரசு எவ்வாறு இனங்களுக்கு இடையே எந்தவிதப் பிரச்சினையும் இல்லை, நாம் எல்லோரும் இலங்கையர் என்ற போர்வையில் சிங்கள பேரினவாதத்தைக் கட்டமைக்கின்றதோ அதே போர்வையில்தான் சாதியம் என்று ஒன்றில்லை, இது மக்களைப் பிளவுபடுத்தும் சதி வேலை என்று புலம்புகிறார்கள் சக்திமான்களாய் இருக்கும் சாதிமான்கள்.

“1853 இல் புகையிரத சேவை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டபோது சாதியத்தை உடைக்க போக்குவரத்து நவீனமயமாக்கல் உந்துசக்தியாகுமென்று மார்க்ஸ் எழுதினார். ஆனால், உலகத்திலேயே இரண்டாவது மிகப்பெரிய புகையிரத சேவையைக் கொண்டுள்ள இந்தியாவில் சாதி அழியவில்லை, மாறாகச் சாதியானது நவீன வடிவங்களுக்கு ஏற்றவாறு தன்னை தகவமைத்து வருகிறது” என்பார் ஆனந்த் டெல்டும்டே என்ற அறிஞர். இது இந்தியாவுக்கு மட்டுமல்ல, இலங்கைக்கும் பொருந்துவதாக அமைகிறது. கொடுமையான போர்ச்சூழல்கள், மாறிவரும் உலகமயமாக்கல், நவீன மயமாதல், புலம்பெயர் வாழ்வு, பொருளாதாரச் சிக்கல்கள் என அனைத்தையும் கடந்து சாதியம் தன்னைத் தகவமைத்து இலங்கைச் சமூகத்தில் நிலை பெற்றிருக்கிறது என்பதே நிதர்சனம்.”

(தொடரும்)

படைப்பாளர்:

ரமாதேவி ரத்தினசாமி

எழுத்தாளர், அரசுப்பள்ளி ஆசிரியர். பணிக்கென பல விருதுகள் வென்றவர். இவர் எழுதி வெளிவந்துள்ள ‘கனவுகள் மெய்ப்படட்டும்’ கட்டுரைத் தொகுப்பு பரவலாக கவனம் பெற்றுள்ளது. 2014, 2015ம் ஆண்டுகளில் ஐ நா சபையில் ஆசிரியர் பேச்சாளராகக் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார். அடுப்பங்கரை டூ ஐநா தொடரில் அவரது ஐ நா அனுபவங்களை நகைச்சுவையுடன் விவரித்திருக்கிறார். இந்தத் தொடர் ஹெர் ஸ்டோரீஸ் வெளியீடாகப் புத்தகமாக வெளிவந்து பாராட்டுகளைப் பெற்று வருகிறது. இலங்கை இவருக்கு இதில் இரண்டாவது தொடர்.