ஒரு காட்டில் நரியும் கொக்கும் மிக நெருங்கிய நண்பர்களாக இருந்தன. ஒருநாள், நரி கொக்கை விருந்துண்ண தனது வீட்டுக்கு அழைத்தது. நரிக்குத் தட்டையான பாத்திரத்தில் உணவு உண்ணுவது எளிது. எனவே கொக்குக்கும் தட்டையான பாத்திரத்தில் உணவைப் பரிமாறியது. கொக்கின் தேவையைப் பற்றி சிந்திக்கவில்லை. கொக்குக்கு உண்பதற்கு மிகவும் சிரமமாக இருந்தது.

அடுத்த முறை, கொக்கு நரியை விருந்துண்ண வீட்டுக்கு அழைத்தது. கொக்குக்கோ கழுத்து நீளமாக இருப்பதால், ஜாடியில் உணவருந்துவது எளிது. இப்போது கொக்கு நரியின் தேவையைப் பற்றி சிந்திக்காமல், உணவை ஜாடியிலேயே பரிமாறியது. இந்த முறை நரிக்கு மிகவும் சிரமமாக இருந்தது.

நாமும் இதே போன்று தனக்கு வேண்டியதைப் பெற இயலாத ஒரு சுழற்சியைத்தான், நம் உறவுகளில் உருவாக்கிக் கொண்டே இருக்கிறோம்.

(அவள், அவன் என்ற பதங்களே, பாலினத்தை வேறுபடுத்திக் காட்ட உதவுவதால் அவர் என்று குறிப்பிட முடியவில்லை.)

அவள்: எனக்கு மிகவும் தண்ணீர் தாகமாக உள்ளது; தண்ணீர் வேண்டும்.

அவன்: இந்தா ஜூஸ் குடி. இந்த ஏரியாவில், இந்த ஜூஸ் மிகவும் பிரசித்திப் பெற்றது. அதனால்தான் ஜூஸை வாங்கி வந்தேன்.

அவள்: எனக்கு காபி போட்டுக் கொடுக்கிறாயா?

அவன்: நான் நன்றாக மசாலா டீ போடுவேன். முதல் முதலில் எங்கள் வீட்டுக்கு வந்திருக்கிறீர்கள். நான் மசாலா டீ போட்டுத் தருகிறேன்.

அவள்: ஏங்க, தெருமுனைக்குச் சென்று, எனக்குக் கொஞ்சம் பூ வாங்கி வருகிறீர்களா?

அவன்: நாளை கடையில் போய் உனக்கு மைசூர் சில்க்கே வாங்கித் தருகிறேன்.

அவள்: எனக்கு தாஜ்மஹால் பார்க்க வேண்டும் எனச் சிறு வயதிலிருந்தே ஆசை. போகலாமா?

அவன்: தாஜ் மஹால் என்ன பெரிய தாஜ் மஹால்? நான் உன்னை வெளிநாடு கூட்டிட்டுப் போறேன்.

அவள்: என்னோடு சிறிது நேரம் உட்காருகிறீர்களா? மிகவும் தனிமையில் உள்ளது போல் உள்ளது.

அவன்: சரி வா, நாம் ஏதாவது சினிமாவுக்குப் போகலாம்.

இந்த மாதிரியான உரையாடல்களைக் கேட்கும் போது, இதுதான் எனக்குத் தோன்றும், “இவர்களுக்கு என்ன பிரச்னை? அடுத்தவருக்கு , அவர் வேண்டியதைக் கொடுத்தால் என்ன?”

கவனித்துப் பார்த்தால், இவர்கள் எல்லாம் ஒருவரை இன்னொருவர் அன்பு செய்பவர்கள், இவை அவர்களுக்குள் நடக்கும் உரையாடல்கள்தாம்.

ஆனால், அந்த அன்பை வெளிப்படுத்துவதில் முக்கியமாக இருப்பது, அவர்கள் கேட்பதைக் கொடுப்பதுதானே? அதுதான் எளிதானதும்கூட.

ஒருவர், தண்ணீரைக் கேட்டால் தண்ணீரைக் கொடுக்க வேண்டியதுதானே?. அதற்குப் பின், வேண்டுமானால் உங்களுக்குப் பிடித்ததையும் கொடுக்கலாம். ஆனால், அவர்கள் கேட்பதைக் கொடுக்காமல் போவது, அலட்சியம் செய்வதுபோல்தானே?

நிறைய நேரங்களில் நாம் அடுத்தவரை எவ்வளவு நேசிக்கிறோம் என்பதை வெளிப்படுத்த ஆசைப்படுவோம். ஆனால், அது முடிவில் மிதமிஞ்சிய செயலாக்கம் ஆகிவிடும் (over performance). அடுத்தவரின் தேவைகளையும் ஆசைகளையும் காதில் வாங்காதது போல் ஆகிவிடும்.

உண்மையில் அன்பை வெளிப்படுத்த, மகிழ்ச்சியைக் கொடுக்க, அவர்கள் வேண்டியதைக் கொடுத்தாலே போதும். அடுத்தவரின் உணர்வுகளை மதித்து, தேவைகளைப் புரிந்து கொண்டாலே போதும். எளிமையான விஷயங்களை நாம்தான் சிக்கலாக்கிக்கொள்கிறோம்.

சில நேரங்களில், அடுத்தவரின் மகிழ்ச்சிக்குரிய விஷயங்களை, நாமே கற்பனை செய்துகொள்வோம். மற்றவரின் வார்த்தைகளைக் காது கொடுத்து கேட்பதில் என்ன பிரச்சினை?

தெருமுனைக்குச் சென்று பூ வாங்குவது எளிதாக இருக்கும் போது, அதைச் செய்யாமல், இன்னொன்று செய்வதாக வாக்குறுதி அளித்துவிட்டு, அதைச் செய்யாமல் போனால், உங்கள் மீதான நம்பிக்கையைக் குறைத்துவிடும்தானே?

பொதுவாக, நம்மால் தர முடியாததை, நம்மை அன்பு செய்பவர்கள், நம்மைப் புரிந்தவர்கள், ஒரு போதும் கேட்பதில்லை என்பதே உண்மை.

ஆனால், நாம் இவ்வாறு நம் விருப்பத்திற்கேற்ப மற்றவர்களுக்குச் செய்துவிட்டு நமக்கு வேண்டியதை அவர்களிடம் இருந்து எதிர்பார்த்தால் எப்படிக் கிடைக்கும்?மீண்டும் மீண்டும் நரியும் கொக்கும் விருந்து வைத்த கதைதான்.

ஏனென்றால் ஒருவருடன் உறவில் இருப்பது என்பது ஒரு சாய்ஸ்தான். நீண்ட நாள் நட்புறவில் அல்லது காதல் உறவில் அல்லது திருமண உறவில் இருக்கிறீர்கள் என்றால், ஒவ்வொரு முறையும், அவர்களுடனான உறவையே தேர்ந்தடுத்துக்கொண்டிருக்கிறீர்கள் என அர்த்தம். அடுத்தவருக்கு வேண்டியதை நாம் கொடுக்கும் போதுதான், நாம் ஒவ்வொரு முறையும் எடுக்கின்ற சாய்ஸ், அழகாக வெளிப்பட்டுக்கொண்டே இருக்கும். அன்பும் புரிதலும் அதிகமாக்கிக்கொண்டே செல்லும்.

கொஞ்சம் காது கொடுத்துக் கேட்டு, இந்த ஒரு சிறிய மாற்றத்தைச் செய்தால், நிறைய மாற்றங்களைப் பார்க்கலாம்.

தண்ணீரைக் கேட்டால், தண்ணீரைக் கொடுங்கள். Over performance ஐ ஒதுக்கி வையுங்கள்.

எனவே, எப்போதும் உறவில் அடுத்தவர் விருப்பத்தைக் காது கொடுத்துக் கேட்டு, ஓவர் பெர்ஃபார்மன்ஸை ஒதுக்கி வைத்து, வேண்டியதைக் கொடுப்பதன் மூலம், நமக்குத் தேவையானதைப் பெற்று வாழ்வைக் கொண்டாடலாம் வாங்க.

(தொடரும்)

படைப்பாளர்:

ஜான்சி ஷஹி

மனநல ஆலோசகர். மன நலத்திற்கான தெரப்பிகளையும் ஆற்றுப்படுத்துதலையும் வழங்கி வருகிறார். வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழவும், பிடித்த எதிர்காலத்தை அமைத்துக்கொள்ளவும், பொது மக்களுக்கு பயிற்சிப் பட்டறைகளை நடத்திவருகிறார். இவர் பெங்களூர் கிரைஸ்ட் பல்கலைக்கழகத்தில் மாணவர் மன நல ஆலோசகராக (student counsellor) பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.