வகுப்பறையில் அன்றைய நாள் செய்தித்தாளை வாசிக்கக் கூறியிருந்தேன்.

25 குழந்தைகள் கைகளில் அன்றைய சிறப்பு இதழாக கலாம் பிறந்த நாளையொட்டி வெற்றிக் கொடி இதழ் கொடுக்கப்பட்டிருந்தது.

வகுப்பில் பயிலும் இரு முஸ்லிம் குழந்தைகளில் ஒருவர் செய்தித்தாளை எடுத்துக்கொண்டு என்னிடம் ஓடிவந்தார்.

“மிஸ் … இது பத்தி நான் சொல்லணும்…” என்று அவசரமாகக் கூறினார்.

“இருடா… சொல்லலாம்” என்று சொல்லிவிட்டு, அப்படி என்ன வந்திருக்கிறது என்று செய்தித்தாளைப் பார்த்தபோது துணுக்குற்றேன். இது ரொம்ப நுட்பமாக அணுக வேண்டிய செய்தி. என்ன செய்யலாம்?

அக்டோபர் 13 ஆம் தேதி ஹிஜாப் வழக்கில் இரு வேறு விதமான தீர்ப்புகளை உச்சநீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு வழங்கியது குறித்த செய்திதான் அது. தனக்கான செய்தி, தன்னைப் போன்றோருக்கான செய்தி என்று எண்ணி இருக்கிறார் அந்த மாணவி. அப்போது அந்தக் குழந்தையைப் பேசவைப்பதுதான் சரி எனத் தோன்றியது.

பெண் குழந்தைகள் படிக்கும் பள்ளி இது. குறிப்பிட்ட சதவிகிதம் மூஸ்லிம் குழந்தைகள் படிக்கின்றனர். அவர்கள் பார்வையில் என்ன கூறப்போகிறார் அந்த மாணவி என்ற எதிர்பார்ப்போடு, சொல்லச் சொன்னேன்.

“என் பெயர் உமம்மா ஆயிஷா. இன்னிக்கு இப்படி ஒரு தீர்ப்பு சொல்லி இருக்காங்க” என்று கூறி, செய்தியை வாசித்தார். அவரே ஓரிடத்தில் நிறுத்திப் பேச ஆரம்பித்தார்.

“கர்நாடகாவுல ஹிஜாப் பத்தி இப்படிச் சொல்லி இருக்காங்க, நானும் ஒரு முஸ்லிம் பொண்ணுதான். நான் ஹிஜாப் போட்டுதான் நடக்கிறேன். ஆனால், கர்நாடகாவில் இப்படிச் சொல்லிருக்காங்க” என்று மீண்டும் செய்தித்தாளைப் படித்து, மதரீதியாக என்ற இடத்தில் நிறுத்தினார்.

“மதரீதியாக என்று சொல்வதெல்லாம் தப்பு, நான் ஹிஜாப் போட்டு வெளியில் நடக்குறதுதான் எனக்கான உரிமை. யூனிபார்ம் போடுறதுக்கு உரிமை இருக்கு. அதே மாதிரி ஹிஜாப் போடவும் உரிமை வேணும். போலீஸ், நர்ஸ் எல்லாம் அவங்களுக்கான யூனிஃபார்ம் போடறாங்க. ஆனா, ஹிஜாப் டிரஸ் முஸ்லிம்தான் போட முடியும். அதைப் போட விடணும். ஏற்கெனவே குஷ்பூ சொல்லி இருக்காங்க, அவங்க நடிகர், அவங்களும் முஸ்லிம்தான். ஹிஜாப் அணியறது அணியாதது அவங்க அவங்க விருப்பம்னு. எனக்கு ஹிஜாப் போடுவதுதான் பிடிக்கும். அது என்னுடைய படிப்புக்கு எந்த விதத்திலும் தடையில்லை” என்றார்.

அது மட்டுமல்ல, ஹிஜாப்புக்கு தடை விதித்த தீர்ப்பு எப்படி நியாயமாகும்? அது தவறு என்று நாற்பது மாணவிகள் முன்னிலையில் தைரியமாகப் பேசினார்.

அவரது கருத்துக்கு வலுசேர்க்கும்படி வகுப்பறையில் மற்ற மதங்களைச் சேர்ந்த குழந்தைகளும் சில கருத்துகளை முன்வைத்தனர். நாங்க சிலுவை அணிவது தடையில்லை தானே அப்படின்னா, அவங்க ஹிஜாப் போடறது எப்படித் தடையாகும் என்ற கேள்வியை முன்வைத்தனர். அதே போல நாங்க பொட்டு வைக்கிறோம், திருநீறு வைக்கிறோம், அது மாதிரிதானே அவங்க டிரஸ் போடறதும்? இதை எதுக்குத் தடை செய்யறாங்க?

இது ஓர் உரையாடல் அவ்வளவுதான். ஆனால், இதன் பின்னணியில் அந்தக் குழந்தைகளின் சிந்தனை எவ்வளவு ஆரோக்கியமாக இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

நாம் இப்போது பிரச்னைக்கு வருவோம். கர்நாடகாவில் அரசுக் கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப், பர்தா, புர்கா போன்றவற்றை அணிவதற்குத் தடை விதித்து பிரச்னை நடந்துகொண்டிருந்தது.

இதை எதிர்த்து அங்கு பயின்ற 6 முஸ்லிம் மாணவிகள் போராட்டம் நடத்தினர். அந்த மாவட்டத்தின் பக்கத்து ஊர்களில் உள்ள கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களும் இந்தப் போராட்டத்தில் இணைந்துகொண்டனர். இது இந்துத்துவா அமைப்பு – முஸ்லிம் அமைப்புகளுக்கு இடையேயான பிரச்னையாகப் பார்க்கப்படுகிறது. நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்தச் செய்தியால் கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்தனர். பிரச்னைக்கு முடிவு இல்லாமல் நாளுக்கு நாள் வளர்ந்து அந்தக் கல்லூரியின் மாணவிகள் கட்டாயமாக ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என்று கர்நாடக மாநில அரசு தடை விதித்தது.

அதைத் தொடர்ந்து உடுப்பி கல்லூரியில் உள்ள இஸ்லாமிய மாணவிகள் உயர்நீதிமன்றத்தில் இது குறித்து மனு தாக்கல் செய்தனர். இதை விசாரித்த உயர்நீதிமன்றம் இஸ்லாம் மதத்தில் ஹிஜாப் அணிவது கட்டாயம் இல்லை என்று இருப்பதனால் மாணவிகள் அணிந்து வரக் கூடாது என்று கடந்த மார்ச் மாதம் 15 ஆம் தேதி தீர்ப்பளித்தது.

மீண்டும் மாணவிகள் இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். கடந்த ஒரு மாத காலமாக இந்த மனுவைக் குறித்து விசாரிக்கும் பொழுது உச்சநீதிமன்றத்தில் ஹேமந்த் குப்தா, சுதன்ஷு துலியா நீதிபதிகள் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.

இரண்டு நீதிபதிகளும் இருவேறு முடிவுகளைத் தீர்ப்புகளாக வழங்கினர். ஹேமந்த் குப்தா ஹிஜாப் அணிவது தடை செய்வதை ஏற்கிறார். ஆனால், துலியா நீதிபதியோ பெண்களின் கல்வி முக்கியம், ஆகவே இதை ஒரு மதம் சார்ந்த விஷயமாக பார்க்காமல் உயர்நீதிமன்றம் போட்ட தடையை அகற்றி அரசு போட்ட தடையையும் நீக்குகிறார்.

இங்கிருந்துதான் நாம் ஆரம்பிக்க வேண்டும், பெண் குழந்தைகளின் கல்வி எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்தது என்று அதன் வரலாறு நமக்குத் தெரியும். இன்று ஒரு குழந்தை பள்ளிக்கு வருவது பொதுவாகப் பெண் குழந்தை பள்ளிக்குள் காலடி வைக்கக்கூடிய சூழல் எத்தகைய சவால்களைக் கடந்து வந்துள்ளது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பெண்கள் குழந்தைகளாக இருக்கும்போதே அவர்களுக்கு இந்தச் சமூகம் தரக்கூடிய அழுத்தம் பற்றி அறிவோம். ஆணாதிக்க சமுதாயத்தில் ஏற்படக்கூடிய பிரச்னைகள் எல்லாவற்றையும் தாண்டி ஒரு குழந்தை பள்ளிக்கு கல்வி கற்க வருகிறது என்றால், அதனுடைய ஆடையைக் காரணமாக காட்டி இத்தகைய பிரச்சினையை ஏற்படுத்துவது எத்தகைய நியாயம்?

இதை மதம் சார்ந்த நோக்கில் பார்ப்பதே தவறு. அவரவர் உரிமை. பெண் இந்த உடைதான் அணிய வேண்டும் என்று இந்த ஆணாதிக்க சமுதாயம் இத்தகைய தீர்ப்பு வழங்கியதை நாம் விவாதிக்க வேண்டும் . ஆனால், பெண் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்த நீதிபதி துலியா, வேறு கோணத்தில் மிகச் சரியாக வழிநடத்தி இருப்பதாகத்தான் பார்க்கிறோம்.

துலியா தனது வாதத்திற்கு வலுசேர்க்கும் வகையில் தென்னாப்பிரிக்க உச்சநீதிமன்றத்தில் வாதித்து வழங்கிய தீர்ப்பை மிக விரிவாக முன்வைத்து விளக்குகிறார்.

தென்னாப்பிரிக்காவில் வாழக்கூடிய தமிழ் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மாணவி, பள்ளிக்கு மூக்குத்தி அணிந்து செல்கிறார். அப்பொழுது அவரது பள்ளி நிர்வாகம் மூக்குத்தி அணிவதை ஏற்காமல் தடை செய்தது. பத்தாம் வகுப்பு பயிலும் மாணவி சுனாலி அதை மறுத்து அவரது பெற்றோரை அழைத்துவருகிறார். பெற்றோர் அவரது கலாச்சாரத்தின் அடிப்படையில் இதை அணிந்திருப்பதாகக் கூற அதற்கு பள்ளி மறுப்பு தெரிவித்தது. மாணவியின் இந்த மூக்குத்திப் பிரச்னை வழக்காக மாறியது. தென் இந்தியாவில் பெண்களின் கலாச்சாரம், நம்பிக்கைக்கு உரித்தானது. பொதுவெளியில் இன்னொருவரைத் துன்புறுத்தாத ஒருவரின் அதீத நம்பிக்கையைக் குறைத்து மதிப்பிடக்கூடாது என தென் ஆப்பிரிக்கா நீதிமன்றம் உத்தரவிட்டு, மூக்குத்தி அணிவதற்கு அனுமதி அளிக்க பள்ளிக்கு உத்தரவிட்டது. இது உச்சநீதிமன்றம் வரை சென்று கிடைத்த தீர்ப்புதான்.

இந்த விவரங்களையெல்லாம் தனது ஹிஜாப் தீர்ப்பில் விரிவாக எடுத்துரைத்திருக்கும் நீதிபதி துலியா, பள்ளி நிர்வாகமும் அரசும் பதில் அளிக்க வேண்டிய முக்கியமான கேள்வி: ஒரு பெண் குழந்தையின் கல்வியா அல்லது சீருடை விதிகளை அமலாக்குவதா? என்பதுதான்.

ஆகவே எட்டாம் வகுப்பு பயிலும் மாணவி உமம்மா ஆயிஷா கூறியது போல உடை உடுத்துபவரது சுதந்திரம், உரிமை. அதை வைத்துப் பெண் கல்வியைத் தடை செய்வதை இந்தச் சமூகம் ‌‌‌ஏற்கக் கூடாது. அது பெண்களை ஒடுக்குவதற்கு ஒரு வழியாகிப் போகும்.

(தொடரும்)

படைப்பாளர்:

சு உமாமகேஸ்வரி

உமாமகேஸ்வரி , அரசுப் பள்ளியில் ஆசிரியர் , கல்வி முறை குறித்தும் வகுப்பறை செயல்பாடுகள் குறித்தும் தொடர்ந்து பேசியும் எழுதியும் வருபவர். பாடப்புத்தகம், பாடத்திட்டம் ஆகியவற்றைத் தாண்டி குழந்தைகளது மன உணர்வுகளையும் மகிழ்ச்சியையும் மதித்து, அதற்கு ஏற்புடைய சூழலை அமைத்துத் தர முயற்சி மேற்கொள்பவர்.