காலம்: கி.மு. ஆறாம் நூற்றாண்டு
இடம் : பௌத்த விகாரைகள்

கையில் ஏடுகளுடன் அங்குமிங்கும் பௌத்த பிக்குகள் நடமாடிக்கொண்டிருந்தனர். எதிர்ப்படுவோர் மிகுந்த மரியாதையுடன் அந்தப் பிக்குகளை வணங்கிச் சென்றனர். ஏராளமான இளைஞர்களின் நடமாட்டம் தெரிந்தது. ஒருபுறம் நெசவு செய்யும் ஒலிகள் சன்னமாகக் கேட்டன. ஓவியக்கூடங்களும் சிற்பக்கூடங்களும் ஆங்காங்கே தென்பட்டன. மொழிப்பாடங்கள், மருத்துவம், வானவியலுக்கென தனித்தனி பகுதிகள் காணப்பட்டன. கண்ணில் படும் அத்தனை பேரிலும் சாதாரண குடிமக்களைக் காண இயலவில்லை. அனைவரும் உயர்சமூக மக்களென பார்த்த மாத்திரத்தில் அறிய முடிந்தது. ஆம், மதம் பரப்பும் அந்தப் பௌத்த விகாரைகளே கல்விக்கூடங்களாகவும் இயங்கிக்கொண்டிருந்தன. சமூகத்தின் உயர் அந்தஸ்தில் இருந்த துறவிகளுக்கும் பிக்குகளுக்கும் மட்டுமே கல்வி போதிக்கப்பட்டது. அவர்களை விடுத்து மேலதிகமாக அரசர் குலத்தவர்களும் வசதிபடைத்த செல்வாக்குள்ளவர்களின் பிள்ளைகளும் மட்டுமே உள்ளே நுழையமுடியும். மதம் சார்ந்த கல்வியோடு, உலோக வேலை, நெசவு, மரவேலை, ஓவியம், சிற்பக்கலை போன்றவை கற்றுக்கொடுக்கப்பட்டன. பிற சமூகத்தினருக்குக் கல்வி என்பது பௌத்த விகாரைகளை ஏக்கத்தோடு பார்த்து பெருமூச்சு விடும் விஷயமாகவே இருந்தது.

ஆசியாவின் மிக உயர்ந்த எழுத்தறிவு வீதம் கொண்ட இலங்கை 2500 ஆண்டுகள் மிக நீண்ட கல்விப் பாரம்பரியம் கொண்ட தேசமாக விளங்குகிறது. வங்கதேசத்திலிருந்து தந்தையால் நாடுகடத்தப்பட்ட விசயனின் இலங்கை வருகைக்குப் பின் இந்தியாவின் கல்விசார்ந்த முறைமைகள் இலங்கையிலும் பரவின. இந்தியாவிலிருந்து பிராமணர்கள் வரவழைக்கப்பட்டு குருகுலக்கல்வி முறைகள் ஏற்படுத்தப்பட்டன. அசோகப் பேரரசரின் மகன் மகிந்தனின் வருகையுடன் பௌத்த சமயப் போதனைகள் ஆரம்பமாகின. இலங்கை மன்னன் தேவநம்பிய தீசனை மகிந்தர் பௌத்தத்திற்கு மதம் மாற்ற, அதன் பலனாக, மகிந்த தேரருக்கு மகாமேக நந்தவனத்தை மன்னர் நன்கொடையாக வழங்க, இலங்கையின் முதல் பௌத்தக் கல்வி நிலையம் தோன்றியது. பிக்குமார்களே கல்வி கற்பிக்கத் துவங்கினர். அந்த விகாரைகள் பிக்குமார்களின் வதிவிடங்களாகவும் கல்வி பயிலும் இடங்களாகவும் படிப்படியாக வளர்ந்து பௌத்தக் கல்வி நிலையங்களாக மாற்றம் பெற்றன.

பௌத்த சமயத்தை வளர்ச்சியுறச் செய்வதன் மூலம், இலங்கைச் சமுதாயத்தை பௌத்த கலாச்சாரமிக்க நாடாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ள தேரவாத, மகாயான சிந்தனைகளின் மூலம் கல்வி புகட்டப்பட்டது. கிராமம் தோறும் ‘பன்சல’வில் ஆரம்பக்கல்வியும், ‘பிரிவேனா’வில் இடைநிலைக்கல்வியும், மகாவிகாரைகளில் உயர்கல்வியும் வழங்கப்பட்டன. சோதிடம், மருத்துவம் போன்ற உயர்பாடங்களும் பாளி, சமஸ்கிருதம் போன்ற மொழித் துறைப்பாடங்களும் உயர் சிறப்பு தொழிற்பாடங்களாகச் சட்டம், வானவியல், கட்டிடக்கலை, ஓவியம் போன்றவையும் முக்கியத்துவம் பெற்றன.

1505இல் இலங்கையை போர்த்துகீசியர்கள் ஆக்ரமித்த பின்னர், மதத்தையும் மொழியையும் பரப்ப கைக்கொண்ட சாதனமாகக் கல்வி மாறியது. கல்விப் பொறுப்பு கத்தோலிக்க மதகுருக்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பாரிஸ் பாடசாலை, ஆரம்ப பாடசாலை, கல்லூரி, ஆதரவற்றோருக்கான பாடசாலை என பல்வேறு கல்வி நிலையங்களைத் துவங்கினர். இக்காலத்தில் கல்வியின் நோக்கம், கத்தோலிக்க மதத்தைப் பரப்புதலும், அதன்மூலம் தமது வியாபாரத்திற்கான ஒத்துழைப்பை அதிகரித்துக்கொள்வதுமாகவே இருந்தது. அதனால் அவர்களது கலைத் திட்டம் சமயம் சார்பான பாடங்களுக்கே முக்கியத்துவம் அளித்தது. முதன்முதலில் மேற்கத்தியக் கல்வியை இலங்கையில் அறிமுகம் செய்தவர்கள் போர்த்துகீசியர்கள்தாம்.

1658இல் ஒல்லாந்தர்கள் காலத்தில் கல்விக்கான முழுப் பொறுப்பையும் அரசே செயல்படுத்தியது தமது புரட்டஸ்தாந்து மதத்தைப் பரப்ப கட்டாயக் கல்வியை அறிமுகம் செய்தனர். 15 வயதுவரை இலவச கட்டாயக்கல்வியை தந்ததுடன், பாடசாலை செல்வதற்கு முன்நிபந்தனையாக கிறிஸ்தவ சமயத்தைத் தழுவ வேண்டும் எனவும், தேவாலயங்களுக்கு ஒழுங்காகச் செல்ல வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டன. புரட்டஸ்தாந்து சபையைச் சார்ந்தவர்களே ஆசிரியர்களாகவும் நியமிக்கப்பட்டனர்.

1798இல் இலங்கைக்குள் காலடி எடுத்து வைத்த ஆங்கிலேயர்கள் கல்வியில் மாறாத தடங்களைப் பதித்தனர். பல்வேறு சீர்திருத்தங்கள் சடசடவென நடந்தன. ஆங்கிலம் சகல மாணவர்களுக்கும் கற்பிக்கப்பட்டது. ஆங்கிலம் என்றாலே தெறித்து ஓடுகின்ற கலாச்சாரம் அன்றும் இருந்ததாலோ என்னவோ இப்பாடசாலைகளுக்குச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை ஆரம்பத்தில் சொற்பமாகவே இருந்தது. 1805 முதல் 1818 வரை மிஷனரிகள் யுகம் என்று சொல்லும் அளவிற்கு மிஷனரிகள் இலங்கைக்கு வருகை தந்தன. இலங்கையின் கல்வி வரலாற்றில் புதிய திருப்பம் ஏற்பட்டது. அதிக அளவில் பாடசாலைகள் உருவாக்கப்பட்டன. இருமொழி கற்றவர்கள் அதிக அளவில் உருவாக்கப்பட்டனர். இருந்தாலும், கல்வியைப் பெறுவது ஆண்களுக்கு லகுவாக இருந்த அளவு பெண்களுக்குச் சாத்தியப்படவில்லை. பல்வேறு நாடுகளிலிருந்து வந்த மிஷனரிகளில் சிறந்ததாகவும், பொருளாதார வளம் மிக்கதாகவும் அமெரிக்க மிஷனரியே இருந்தது. கத்தோலிக்கத் திருச்சபை நகரமையங்களில், நிர்வாக மையங்களில் மட்டுமே பள்ளிகளைக் கட்டி வந்த சூழலில், அமெரிக்கத் திருச்சபை யாழ்ப்பாணத்தின் குக்கிராமங்களில்கூடப் பள்ளிகளையும் மருத்துவமனைகளையும் நிறுவின. கல்வியூட்டி, மதம் மாற்று என்பதே அமெரிக்கர்களின் கோட்பாடாக இருந்தது. அளித்த கல்விக்கு நன்றிக்கடனாக மதம் மாறச் செய்தனர். இவர்கள் பொது அறிவையும் கல்வித் திட்டத்தில் இணைத்தனர்.

சைவ வித்தியாபிவிருத்திச் சங்கத்தின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றிய ‘இந்துபோர்ட்’ இராசரத்தினம், அமெரிக்க மிஷினரிகளுக்குப் போட்டியாக, இந்து மதத்தைச் சேர்ந்த பள்ளிக்கூடங்களைக் கட்டத் துவங்கினார். தெருவின் ஒரு தொங்கலில் மிஷினரி பள்ளிக்கூடங்கள் இருந்தால், சைவ ப்ரகாசா, மங்கையர்க்கரசி, சன்மார்க்கா, இந்துக்கல்லூரி, செங்குந்தார் போன்ற சைவப் பள்ளிக்கூடங்களை மற்றொரு தொங்கலில் கட்டத் துவங்கினர். யாழ்ப்பாணக்குடா நாடு, முல்லைத்தீவு, பதுளை, புத்தளம், நாவலப்பிட்டி, மன்னார், கிளிநொச்சி, வவுனியா, ஊர்காவற்றுறை, நெடுந்தீவு முதலான இடங்களில் 174 சைவப் பாடசாலைகள் உட்பட, முன்னூறுக்கும் மேற்பட்ட பாடசாலைகளை உருவாக்கி இயங்கச் செய்தார். இது குறித்து ஆய்வு செய்ய, ஓய்வு பெற்ற பிஷப், அன்டர்சன் இங்கிலாந்திலிருந்து அனுப்பப்பட்டார். ஆய்வின் முடிவில் இலங்கைத் தீவின் மொத்தப் பள்ளிக்கூடங்களில் 49 சதவீதமான பள்ளிக்கூடங்கள் யாழ்ப்பாணத்தில் மட்டுமே இருப்பதான புள்ளி விபரத்தை அன்டர்சனின் அறிக்கை கூறுகிறது. இந்தத் திருச்சபைகளுக்கும் இந்துபோர்டுக்குமான போட்டிகளின் விளைவாகத்தான் நவீன யாழ்ப்பாணம் தோன்றியது. 1870இல் இலங்கை மருத்துவக் கல்லூரியும் இலங்கை சட்டக் கல்லூரியும் உண்டாக்கப்பட்டன.

தாய்மொழிக்கல்வி இயக்கத்தின் தந்தை எனப் போற்றப்படும் சர்.பொன். அருணாச்சலம் ஆங்கிலக் கல்வித் திட்டத்தில் அதிருப்தி கொண்டு, 1900, ஜூலையில் தாய்மொழிக்கல்வியை வலியுறுத்தி புதிய கல்வித் திட்டம் தொடர்பான அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்தார். “இங்கிலாந்தில் உள்ள ஆரம்பப் பாடசாலைகளில் ஆங்கிலத்தைத் தள்ளிவிட்டு ஜெர்மானிய மொழியைப் போதனா மொழியாக்கினால் எவ்வாறு இருக்கும் என யோசித்துப் பாருங்கள்?” என்று கேள்வி எழுப்பினார்.

1931ஆம் ஆண்டின் டொ நமூர் சீர்திருத்தத்தின்படி 21 வயதில் அனைவருக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டு, சட்டசபை உருவாக்கப்பட்டது. இன்றைக்கு 98% படித்தவர்கள் வாழுகின்ற நாடு என்று இலங்கையர்கள் பரவசப்பட்டுக்கொள்வதற்கு அடித்தளமிட்டது, அன்று கல்வி அமைச்சராகப் பொறுப்பேற்ற cww கன்னங்கராய் ஏற்படுத்திய இலவசக்கல்விமுறைதான். பணம் படைத்தோருக்கும் வெள்ளையர்களின் ஆதரவாளர்களுக்கும் மட்டுமே கல்வி என்றிருந்த நிலையைத் தூக்கியெறிந்து ஏழைக்கும் கல்வி வரமாகக் கிடைத்தது. 1931 முதல் 1948 வரையிலான வருடங்களில் கல்வியில் பாரிய மாற்றத்தை ஏற்பட்டுத்தியமையால் இது கன்னங்கராய் யுகம் எனப்படுகிறது.

இந்தியாவைப் போலவே இலங்கையும் நீண்ட காலமாக ஐரோப்பியர்களின் கல்வி முறையையே அடிப்படையாகக் கொண்டுள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கியும் உலக வங்கியும் இலங்கையின் கல்விக்கொள்கையில் நேரடியான முழுமையான பங்களிப்பினைச் செய்கின்றன. அனைவருக்கும் கல்வி என்பதுதான் இலங்கையின் கல்விக்கொள்கை, ஆனால் தரமான கல்வி என்பது இந்தியாவைப் போல இலங்கையிலும் சவாலாகவே உள்ளது.

நாடு முழுவதும் 43 லட்சம் மாணவர்கள், 2,47,000 ஆசிரியர்கள் 10,154 பாடசாலைகள் கொண்டதாக இலங்கைக் கல்வித்துறை விளங்குகிறது. ஆனால், பட்ஜெட்டில் 2% GDP மட்டுமே கல்விக்காக ஒதுக்கப்படுகிறது. ஆரம்பக் கல்வி துவங்கி, பல்கலைக்கழகம் வரை ஏழை, பணக்காரன், சாதி, மதம், இனம் மொழி போன்ற எந்தவிதப் பாகுபாடுமின்றி அனைவருக்கும் பொதுவானதாக இலங்கைக் கல்வித் திட்டங்கள் காணப்படுகிறது. அரசுப்பள்ளிகளிலுள்ள 12 லட்சம் மாணவர்களுக்குப் பகல் உணவு வழங்கும் திட்டம் இருக்கிறது. காலை 7.30க்குப் பள்ளி துவங்கும் பாடசாலைகள் மாலை 1.30 மணியுடன் முடிவடைகிறது. சிங்களம், தமிழ், ஆங்கிலம் என்ற மும்மொழி காணப்பட்டாலும், அனைத்துப் பாடசாலைகளிலும் மும்மொழிகள் கற்றுத் தரப்படுவதில்லை. செய்முறை அனுபவங்களைவிட மனப்பாடக் கல்வியே இங்கும் இருந்தாலும், எனது பார்வையில் கல்வித்தரம் சிறப்பாக இருப்பதாகவே தெரிகிறது. மொழிப்பாடமோ கணிதமோ ஆழ்ந்து படிக்கின்றனர். இலவசக்கல்வியுடன் பாடநூலும் சீருடையும் இலவசமாகவே வழங்கப்படுகின்றன. 10 வயதில் நடக்கும் பொதுப் பரீட்சையில் சித்தியடையும், குடும்ப வருமானம் குறைந்த மாணவர்களுக்கு அவர்களின் படிப்புக்காகக் குறிப்பிட்ட உதவித்தொகை பாடசாலைக்கல்வி முடியும்வரை ஒவ்வொரு மாதமும் வழங்கப்படுகிறது. அதற்காக, ஐந்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களைப் பெற்றோர் கசக்கிப்பிழியும் சூழலையும் பார்க்க முடிகிறது.

பாடசாலைக்கல்விக்குப் பின் தேசியக் கல்வியியல் கல்லூரிகளில் இணைந்து அரசு உதவிகளைப் பெற்று கல்வி பயின்று பட்டம் பெற்றுக்கொள்ள முடியும். இலங்கை யூ.ஜி.சி யால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் பட்டப்படிப்பு முடித்த ஒவ்வொருவருக்கும் எப்படியும் ஓர் அரசாங்க வேலை காத்துக்கொண்டிருக்கிறது. ஆனால், மேல்நிலை வகுப்பு உயர்தர பரீட்சை முடிக்கும் அனைவரும் பல்கலைக்கழகம் செல்ல முடியாது என்பதுதான் இங்குள்ள பிரச்சினை. ஏனெனில், இலங்கையில் தற்போதுள்ள 15 பல்கலைக்கழகங்களால், அனைவருக்கும் உயர்கல்வி கொடுக்கும் கட்டமைப்புகள் இல்லை. 25000 மாணவர்களை மட்டுமே பல்கலைக்கழகத்திற்குள் நுழைய, மீதியுள்ள 30000 மாணவர்கள் தகமை பெற்றும், அரசு பல்கலைக்கழகங்களில் படிக்கும் வாய்ப்பு கிடைக்காமல் போகிறது. குறிப்பிட்டளவு வாய்ப்புகளை பாரியளவு மக்களுக்கு வழங்குவதில் இலங்கை எதிர்நோக்கும் சவால்களின் விளைவாக மாணவர்கள் போட்டி போட்டு தங்களது வாய்ப்புகளைத் தக்க வைத்துக்கொள்ளப் போராடுகிறார்கள். வறிய நிலையிலிருக்கும் ஒருவரது பிள்ளைகூடத் தனது திறமையை வெளிப்படுத்தி கல்வியில் உயர் மட்டங்களை அடையலாம் என்ற நிலையில் இன்றைய கல்வி நிலை இருப்பது பாராட்டத்தக்கது. 1980இல் சர்வதேசப் பாடசாலைகள் வரத் துவங்கின. பெரும்பானமையான அரசுப் பாடசாலைகள் இருந்தாலும் ஆங்காங்கே தனியார் பாடசாலைகளையும் காண முடிகிறது.

யுத்தகாலத்தில் போர்ப்பயிற்சி பெற்ற சான்றிதழ் இருந்தால் மட்டுமே உயர்கல்வி படிக்கமுடியும் என்ற நிலையும் இருந்திருக்கிறது. “ஓ.எல். (பன்னிரண்டாம் வகுப்பு) தேர்வு மரத்தடியில் எழுதிக்கொண்டிருக்கும்போது வானில் வட்டமிட ஆரம்பித்தன செல் அடிக்கும் போர் விமானங்கள். எழுதியதை அப்படியே போட்டுவிட்டு, அருகிலிருந்த பதுங்குகுழிக்குள் ஒளிந்திருந்துவிட்டு, விமானம் ஷெல் அடித்து நாசம் செய்து போனபின், வெளியே வந்து தேர்வைத் தொடர்ந்தோம்” என லதா கந்தையா சொல்லும்போதே உடல் நடுங்கியது. “அன்றைய காலகட்டத்தில் காடுகளிலும் பதுங்கு குழிகளிலும் ஓடிஒளிந்த தேவாலயங்களிலும் அகதிகள் முகாம்களிலும் தான் எங்களுக்கு கல்வி வாய்த்தது. ஆனால், நாளை இருப்போமா, மரணிப்போமா என்ற நிலையிலும்கூட கல்வியை நாங்கள் கைவிடவில்லை, கல்வியா, செல்வமா, உயிரா எது வேண்டும் என்றால், கல்வியைத்தான் நாங்கள் கைக்கொள்வோம்” எனக்கூறி சிரிக்கிறார் லதா.

இலவசக்கல்வி மூலம் மட்டுமே மருத்துவர்கள் உருவாகிறார்கள். தனியார் மருத்துவப் பல்கலைக்கழகங்கள் என்ற ஒன்றை அறியாதவர்களாகவே இருக்கின்றனர். இங்கு இலவசமாகப் பல்கலைக்கழகக் கல்வி முடித்துவிட்டு, வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரியும் போக்கும் அதிக அளவில் காணப்படுகிறது. அரசுத் துறையில் இருப்போரைவிடத் தனியார் துறையில் பணிபுரிவோருக்கே அதிக ஊதியம் என்பது நடைமுறையில் உள்ளது. மருத்துவர்கள் அதிக அளவிலான ஊதியத்தையும் அதற்கு அடுத்த நிலையில் வங்கிகளில் பணிபுரிவோரும் பெறுகின்றனர். இந்தியாவோடு ஒப்பிடுகையில் ஆசிரியர்களுக்கான ஊதியம் என்பது மிகக் குறைவாகவே இருக்கிறது. அதி உயர்ந்த கல்வியாக மருத்துவம் பார்க்கப்பட்டாலும், வழக்குரைஞர் பணிக்கு அதிக மரியாதை இருக்கிறது. அரசுத் துறையின் உயர் அதிகாரிகளும் மாவட்ட ஆட்சியாளர்களும்கூட சட்டம் பயில முன்வருவது கண்டு ஆச்சர்யப்பட்டிருக்கிறேன்.

இலங்கையின் தேசிய மொழிகளான தமிழும் சிங்களமும் நிர்வாகம், கல்வி, நீதி போன்ற துறைகளிலும் ஆங்கிலம் வணிகத் துறையிலும் பயன்பாட்டில் உள்ளது. ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட கல்வித்திட்டங்கள் தற்போதுவரை பின்பற்றப்படுவதால், பிரிட்டிஷ் ஆங்கிலம் இலங்கைத் தமிழர்களால் பயன்படுத்தப்படுகிறது. ஈழத்தமிழர்களின் ஆங்கில உச்சரிப்பு மலையாளிகள் போலவே இருக்கிறது.

“ஆனால், எங்களுக்குக் கிடைத்த கல்வி இனப்பிரச்சினையைத் தீர்க்க தவறியது. இனப்படுகொலையை உருவாக்கியது, எங்கட இந்தக் கல்விமுறையில் வந்த கல்விமான்கள்தாம் இனப்பிரச்சினையை உற்பத்தி செய்தார்கள், இலவசக்கல்வியை மட்டும் நாங்கள் வைத்திருக்கவில்லை, இலங்கையின் மூன்று இனங்களுக்குள்ளும் மோதலையும் காயங்களையும் வைத்திருக்கிறோம். இலங்கையின் கல்வி முறைமை வெற்றி பெற்ற கல்வி முறைமையல்ல” என்கிறார், அரசியல் ஆய்வாளரான நிலாந்தன்.

இலங்கையில் சமீபக் காலமாகப் பாடசாலைக் கல்வி நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் தேதி நடத்தப்பட்ட ஈஸ்டர் குண்டுத் தாக்குதலை அடுத்து, பாடசாலை விடுமுறைகளுக்குப் பின்னால் சற்று வழமைக்குத் திரும்பிய கல்வி நடவடிக்கை, 2020 முதல் கோவிட் பெருந்தொற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டது. கோவிட் நிலமைகள் முழுமையாகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ள போதிலும் பொருளாதார நெருக்கடி காரணமாக கல்வி நடவடிக்கைகள் 2022 இல் மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளன. யூனிசெப் நிறுவனத்தின் சமீபத்திய ஆய்வின்மூலம் மலையகத் தோட்டப் பகுதியைச் சேர்ந்த பிள்ளைகளே அதிக அளவில் ஆரம்பக் கல்வியைக் கைவிடுவதாகத் தெரியவந்துள்ளது.

இன்றைய பொருளாதாரச் சூழ்நிலையில் நாட்டிற்கு அந்நிய செலாவணியைக் கொண்டு வருவதற்கான வேலைத் திட்டங்களின் ஒரு பகுதியாக அரச ஊழியர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பும் திட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அரச ஊழியர்கள் மத்தியில் ஆசிரியர்களே அதிக அளவில் வெளிநாடுகளுக்குச் செல்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதை அவதானிக்க முடிகிறது. வெளிநாட்டு புலம்பெயர்வு என்பது, ஆசிரியர்களின் தனிப்பட்ட விருப்பமாக இருந்தாலும், ஆசிரியர்கள் பெருமளவில் வெளியேறினால் மாணவர்களின் கல்வி பெரிதும் பாதிக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை. ஆசிரியர்கள் எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடியே அவர்களை வெளிநாடு செல்லத் தூண்டுகிறது. “ 92.3 சதவீதம் கல்வியறிவு கொண்ட இலங்கையில் அதை 100 சதவீதமாக மாற்றுவதே தமது இலக்கு” என்று கூறும் கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தனவின் இலக்கை அடைவதில் தற்போதைய பிரச்சினைகள் பெரும் சவால்களாக இருந்தாலும்கூட, அவற்றை வெற்றிகொண்டு இலங்கைக் கல்வித்துறை மீண்டுவந்துவிடும் என்பதே ஒவ்வோர் இலங்கையரின் ஆகப்பெரும் நம்பிக்கையாக இருக்கிறது.

(தொடரும்)

படைப்பாளர்:

ரமாதேவி ரத்தினசாமி

எழுத்தாளர், அரசுப்பள்ளி ஆசிரியர். பணிக்கென பல விருதுகள் வென்றவர். இவர் எழுதி வெளிவந்துள்ள ‘கனவுகள் மெய்ப்படட்டும்’ கட்டுரைத் தொகுப்பு பரவலாக கவனம் பெற்றுள்ளது. 2014, 2015ம் ஆண்டுகளில் ஐ நா சபையில் ஆசிரியர் பேச்சாளராகக் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார். அடுப்பங்கரை டூ ஐநா தொடரில் அவரது ஐ நா அனுபவங்களை நகைச்சுவையுடன் விவரித்திருக்கிறார். இந்தத் தொடர் ஹெர் ஸ்டோரீஸ் வெளியீடாகப் புத்தகமாக வெளிவந்து பாராட்டுகளைப் பெற்று வருகிறது. இலங்கை இவருக்கு இதில் இரண்டாவது தொடர்.