மழைக்காலம் என்றால் எல்லார் மனதிலும் மகிழ்ச்சி துளிர்க்கும். கருமேகங்களை ரசித்துக்கொண்டே நடக்கும் போது, குளிர்க் காற்றை உடல் பரிசிக்கும் போது, ஓரிரு முதல் மழைத்துளி நம்மைத் தீண்டும் போது, திடீரென்று வேகம் கூடும் போது, குடையை விரிப்பதற்கும், ஓடி ஒளிந்து கொள்வதற்குமான இடைப்பட்ட நேரத்தில் நம் உடல் முழுவதும் பாதி நனைந்துவிடும். மண்வாசனையும் ஈரமும் சேர்ந்த அந்த உணர்வு நம்மை மெய்சிலிர்க்க வைக்கும். அதை ரசிக்காத இதயம் உண்டோ? இல்லை என்று பதில் சொல்லும் முன்பு, எங்களின் மழைக்காலத்தைப் பற்றி கொஞ்சம் சிந்தியுங்கள்.

சுதந்திரம் பெற்று 75 வருடங்கள் முடிந்துவிட்டன. ஆனால், வாழ்வியல் எப்பொழுது மாறப் போகிறது இந்த வடசென்னையில்? எங்கும் குப்பை, கழிவு, சாக்கடை, பூச்சி, கொசு, ஈ அதில் வாழும் மக்கள். இவை அனைத்தும் தென் சென்னையில் இல்லையா? அப்படி இருந்தால் எங்கே? வீட்டுவரி, தண்ணீர்வரி, மின்சார வரிகளை வடசென்னை மக்கள் செலுத்துவது இல்லையா? அண்ணாநகர், அடையாறு, திருவான்மியூர் எல்லாம் சுத்தமாக இருக்க, கே.பி.பார்க், பட்டாளம், சுந்தரபுரம், சிவராஜபுரம், தட்டான்குளம், புளியந்தோப்பு, ஜீவா ஸ்டேஷன் எல்லாம் எப்பொழுதும் குப்பையாக இருக்க காரணம் என்ன? இந்தப் பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகம் என்பது உங்கள் பதில் என்றால், எங்கு வாழும் மக்கள் அதிகமோ, அங்கு துப்புரவு ஊழியர்களின் எண்ணிக்கையும் அதிகமாகத்தானே இருக்க வேண்டும்? அவர்கள் ஒரு நாளைக்கு இருமுறை வந்து வேலை பார்க்க வேண்டும்? ஆனால், ஒருமுறைகூட வரவில்லை என்றால், வடசென்னையை ஏளனம் பேச உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது?

எந்தக் குழந்தை பலவீனமாக இருக்கிறதோ அந்தக் குழந்தையின் மீதுதானே தாய்மை அக்கறை காட்டுகிறது, மிருகங்களும் அப்படித்தானே? எந்த மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளனரோ, அந்த மக்களிடம்தானே, அரசின், அரசனின் பார்வை அதிகம் கவனிக்கப் படவேண்டும். சுகாதாரம் அற்ற ஒரு சமுதாயம் எதை நோக்கிச் செல்ல முடியும்?

அத்திப் பூத்தது போல், 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட கடுமையான மழையால் செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி, பெருங்களத்தூர், தாம்பரம், முடிச்சூர், வேளச்சேரி, அடையார் போன்ற இடங்கள் பெரும் சேதம் அடைந்தன. சென்னை மூழ்கியது, உலகமே சேர்ந்து சென்னையை மீட்டது. மக்களே மக்களின் துயரத்தைத் துடைக்க முன்வந்தனர். அன்று நல்ல உள்ளங்களையும் மக்களின் ஒற்றுமையையும் உலகம் அறிந்தது. அரசும் பல உதவிகளைச் செய்தது. ஆனால், வடசென்னை மூழ்காத மழைக் காலம் இங்கு உண்டோ?

வடசென்னையும் மழைக்காலமும் எங்களுக்கும் அரசுக்கும் புதியது அல்லவே. எல்லா வருடமும் மழை என்றால் அதிக பாதிப்பு வடசென்னைக்கும் வடசென்னை மக்களுக்கும் மட்டுமே. காரணம், வடிகால் வசதிகளின் அமைப்பும் பராமரிப்பும் சரிவர அமையாததும், அதிகப்படியான குடிசைவாசிகளும், தெரு ஓரங்களில் வசிக்கும் மக்கள் அதிகம் வாழும் இடம் என்பதாலும் இந்த இடங்களில் வாழும் மக்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இங்கு மாடி வீடுகளே இல்லை என்று நான் கூறவில்லை. ஆனால், இங்கு உள்ள மாடி வீடுகளும் ஒட்டிய சுவர்களில் அருகருகில் கட்டப்பட்ட வீடுகளே. நெரிசலும் அதிகம் நெருக்கமும் அதிகம்.

மழைக்காலங்களில் என் மக்கள் வாழும் வாழ்க்கை என்பது சாக்கடைக்கு நடுவில் வாழ்வது போன்றது.சாக்கடைகள் அனைத்தும் நிரம்பி, கழிவுநீரும் மழை வெள்ளமும் சேர்ந்து கருமை நிறமாக மாறி, ஜீவா ரயில் நிலையத்தையும் அதனைச் சுற்றி உள்ள இடங்களையும் சூழ்ந்து நிற்கும்.

எந்தச் சூழ்நிலையாக இருந்தாலும் மகிழ்ச்சியாக இருக்கும் எங்கள் குழந்தைகள், மழைக் காலத்தில் பெருமகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்குவர். பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டாலும் முட்டி அளவு தண்ணீரில் நீந்திச் சென்று, ‘இன்று பள்ளி விடுமுறை’ என்று எழுதி வைக்கப்பட்ட கரும்பலகையைப் பார்த்துச் சிரித்துவிட்டு, மீண்டும் நீந்தியபடியே வீடு வந்துசேர்வர். வழியில் கனரக வாகனங்களின் சக்கரங்களில் சிக்கிய நீர் அருவியாக மேலே தெறிக்கும் போதும், மாடி வீடுகளின் உடைந்து தொங்கும் வடிகால் குழாய் வழியாகக் கொட்டும் மழை நீரிலும் குற்றாலத்தில் குளித்தது போல் குளித்து மகிழ்வர்.

ஜீவா ரயில் நிலைய மேம்பாலத்தில் இருந்து, கீழே தேங்கியுள்ள வெள்ளத்தில் குதித்தும், காகிதக் கப்பல் செய்து ஓட்டியும், ஆடியும் பாடியும் ஓடியும் குதித்தும் குளித்தும் ஒரே ஆரவாரமாக இருக்கும், அவர்களின் மழைக்காலம். விளையாட்டில் பசி மறந்து போகும். அம்மாக்களும் விட்டுவிடுவார்கள். முதல் காரணம், வீட்டிற்குள்ளும் அதே அளவு அதே தண்ணீர் தானே என்று. இரண்டாவது காரணம், பசி என்றால் அவர்கள், எதைக் கொடுப்பது அவர்களுக்கு?

தென்சென்னையில் மழை வெள்ளம் வரும்போது, எங்கள் வீட்டில் பாம்பு வந்தது என்றும் நடுவீட்டில் மீன்கள் நீந்துகின்றன என்றும் படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிடும் மக்களே, வீட்டின் நடுவில் கழிவுநீரும் மனிதக் கழிவுகளும் மிதந்துக்கொண்டு இருக்கும் வேளையில், எப்படி உண்பது, உறங்குவது, பார்த்துக்கொண்டு இருப்பது? இதைப் படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிடதான் முடியுமா? தென்சென்னையில் எந்தப் பாதிப்பும் இல்லை என்று நான் கூறவில்லை. ஆனால், பெரிதும் பாதிக்கப்படுவது வடசென்னையே.

இன்றும் பொதுக் கழிவறைகளையும் தெரு ஓரங்களையும் பயன்படுத்தும் மக்கள் வடசென்னையில் உண்டு என்றால் நம் சமுதாய வளர்ச்சி எங்கே? இன்றும் இந்தியாவில் கழிவறைகள் இல்லாத வீடுகள் உண்டு என்றால், மங்கள்யான் செவ்வாய் கிரகத்தைச் சுற்றினால் என்ன? செவ்வாய் கிரகத்தைப் புகைப்படம் எடுத்து அனுப்பினால்தான் என்ன? முதலில் வாழும் கிரகத்தை, வாழ தகுதியான இடமாக மாற்றுவோம்.

மழை வெள்ளம் கழிவு நீருடன் சென்று சேராமல், அதற்காகத் தனி வடிகால் அமைப்புகளை அமைத்தால் என்ன? சாக்கடையுடன் கலந்து, மழைநீர் வீணாகப் போகாமல் அதனைச் சேமித்து தண்ணீர் பஞ்சத்தில் இருந்து மக்களைக் காக்க முயற்சி செய்யலாமே. கல்லணையையும் வீராணம் ஏரியையும் பெருமை பேசுவதைத் தவிர்த்து, புதிய அணைகளையும் ஏரிகளையும் அமைப்பது பற்றி சிந்திக்கலாமே?

‘டேய், இன்னும் எம்மாநேரம் தண்ணீல விளையாடுவிங்க, இங்க வாங்கட, முட்டிக்கு மேல தண்ணீ ஏறுது, ஸ்கூலுக்கு போய் நல்ல எடமா புடிச்சி வைங்கடா. இந்த மூட்டைய ஆளுக்கு ஒன்னு தூக்கினு போங்க. நா மிச்சத்த தூக்கியாறேன்’ முடிந்த வரை எடுத்துக் கொண்டு அனைவரும் பள்ளிக் கூடங்களுக்குச் சென்றனர்.

‘யக்கா நீ வரலையா? வா சீக்கிரம், எடம் புடிக்கணும் இல்ல. வருசா வருசம் இதே தொல்லையா இருக்கு, அந்த ஸ்கூல்ல எத்தன ஜனங்களதான் அடைப்பாங்களோ தெரியல. குடிக்க தண்ணீ மட்டும் கொடுத்தா போதுமா? போறதுக்கும் வரர்துக்கும் என்ன பண்றது? இந்தத் தண்ணீ வடியிற வரைக்கும் நாம பல்லு தேய்க்க முடியுமா? குளிக்க முடியுமா? எல்லாம் நம்ம விதி, வா போகலாம்.’

அரசுப் பள்ளிக்கூடங்களில் கழிவறைகள் எப்படி இருக்கும் என்பது நாம் அறிந்ததே. பள்ளியில் தஞ்சம் அடைந்து விட்டோம் என்பது மனதிற்குத் தெரிந்தாலும், இயற்கை உபாதைகளைத் தடுக்க முடியுமா? அதுவும் பெண்களின் நிலை மிகவும் கொடுமை. கர்பிணிகளும் குழந்தையைப் பிரசவித்த பெண்களும் மாதவிடாய் காலத்தில் இருக்கும் பெண்களும் எப்படி இங்கே தவிப்பார்கள் என்று எண்ணிப் பாருங்கள்.

‘டேய் புள்ளைங்களா, எலுமிச்சை சாதமும் தயிர் சாதமும் தராங்க. போய் நல்லா வாங்கி துண்ணுங்கடா, இந்தப் பத்து நாளுக்குதான் சோறு தருவாங்க, அப்புறம் ஒண்ணும் கிடைக்காது. புதுசா பண்டம், பாத்திரம் வாங்குற வரைக்கும் ஈரத்துணிக்குக்கூட வழியில்ல, எல்லாம் வெள்ளத்துல அடிச்சிகினு போய் இருக்கும்’ என்றார் ஒரு முதியவர்.

‘ஏ… கிழவி எலுமிச்சை சாதமுனு மஞ்ஜா சோறும், தயிர் சாதமுனு கஞ்சி வடிக்காத சோறும் தரானுங்க, அத வாங்கி நீ துண்ணு, எனக்கு வேண்டா’ என்றான் குறும்புக்கார பையன்.

தயிர் சாதத்தை வாங்கிய ஒருத்தி, ‘யண்ணா பால் இருக்கானா, பச்சபுள்ள பால் பத்தாம அழுகுது’ என்றாள். பாலுக்கு நா எங்க போறது, இந்தச் சோத்த கரைச்சி ஊத்து’ என்றார் பொட்டலம் வழங்குபவர்.

‘யம்மா இன்னாமா, இந்தச் சோத்துல உப்பே இல்ல, இத போய் துண்ண செல்லுற, எனக்கு வேண்டா’ என்றது ஒரு குழந்தை.

‘ஐயா, வயசான காலத்துல இந்த வேகாத சோறு செரிக்குமா? நீயே துண்ணுடா’ என்றார் ஒரு பெரியவர்.

‘அம்மியில வெச்சி அரைச்சாகூட இந்தச் சோத்த நசுக்க முடியாது போல, இதுல இந்தக் கிழவி இப்பவே, அப்பவேனு இருக்கு. இத கொடுத்த இப்பவே போய்டும் போல’ என்று புலம்பிக்கொண்டே தயிர் சாதத்தைக் கரைத்தாள் ஒருத்தி.

‘எலுமிச்ச சோத்துக்கு, ஊறுகா வைக்க முடியாதா உங்க கவர்மென்ட்டுக்கு?’ என்றான் ஒரு குடிமகன். குடிகாரனுக்கு மட்டும் என்றுமே பஞ்சம் இல்லை.

குடிசை மாற்றுவாரிய வீடுகள் மட்டும் உயரமாக கட்டப்பட்டதால் மழையின் பாதிப்பு அதிகம் இருக்காது. அங்கு வாழும் மக்கள் அருகில் உள்ள உறவினருக்கும் தெரிந்தவர்களுக்கும் உதவி நாடியவர்களுக்கும் உணவு சமைத்துக் கொடுப்பர். இங்கு வாழும் அத்தை ஒருத்தி தன் அண்ணன் குடும்பத்திற்குச் சமைத்துக் கொடுத்து அனுப்பினாள். ‘யம்மா இந்தா மா, அத்த சோறு செஞ்சி குடுத்துச்சி, பக்கத்துல இருக்கவங்களுக்கும் கொடுப்பியாம். ராத்திரிக்குச் சமச்சி அதுவே கொண்டு வருதாம், பட்டாளத்துல நிறைய தண்ணி வந்து, எல்லாரும் நீந்தி, வராங்கலாம், நா பாக்கப் போறேன்’ என்று சொல்லிக் கொண்டே ஒடினான்.

‘யக்கா பட்டாளத்துல தண்ணி வந்துடுச்சா, நா போய் பாத்துகுனு வரேன், நாத்தனாரு வேற மாசமா இருக்கு. இந்த மூட்டைங்கள கொஞ்சம் பாத்துக்கோ, வரேன்’ என்று சொல்லிவிட்டுச் சென்றாள்.

ஓர் ஓரத்தில் நின்று, வெள்ளத்தில் நீந்தி வருபவர்களைப் பார்த்துக்கொண்டு தன் நாத்தனாரைத் தேடினாள். பிறந்து ஒரு வாரம் ஆன குழந்தையைத் தூக்கிக்கொண்டு நடக்ககூட முடியாத நிலையில், ஒருத்தி நீந்தி வந்தாள். பக்கவாதம் வந்த தன் அப்பாவை, கட்டிலில் வைத்து பிள்ளைகள் சுமந்து வந்தனர். மரப்பலகைகளை இணைத்து தற்காலிகமாகச் செய்த படகில் குழந்தைகளை வைத்தும், மூட்டை முடிச்சுகளை வைத்தும் சில குடும்பங்கள் தள்ளிக்கொண்டு வந்தது. இரண்டு தோள்களிலும் இரண்டு குழந்தைகளை சுமந்துகொண்டு சிலர் நீந்திவந்தனர். இடுப்பில் மூன்று வயது குழந்தையையும் வயிற்றில் ஏழு மாதக் குழந்தையையும் சுமத்துவரும் தன் நாத்தனாரைப் பார்த்து, ஒதுங்கி நின்றவள், தானும் நீந்திச் சென்று இடுப்பில் இருக்கும் குழந்தையை வாங்கிக்கொண்டாள்.

புத்தகப் பையைத் தலையில் சுமந்தும், செல்லப் பிராணிகளைச் சுமந்தும் ஒரு கூட்டம் நீந்திவந்தது. ‘ஏன்டா உம்முனு மூஞ்சிய வெச்சிகினு இருக்க?’ ‘ இல்லடா மறுபடியும் எல்லாப் படத்தையும் மொதல்ல இருந்து எழுதணும்,நோட்டு புக்கு எல்லாம் வெள்ளத்துல போச்சு’ என்றான் ஒரு மாணவன்.

‘இன்னாடி இது நம்ம பொழப்பு, இப்பதான் மக படிச்சி முடிச்சான், அவ அவன் கைய புடிச்சி, கால புடிச்சி செலவு பண்ணி இப்பதான் அந்த மண்ணு வூட்டுக்குப் பட்டா வாங்கின, அவனும் பட்டா வாங்கினான், எல்லாம் வெள்ளத்துல அடிச்சுகுனு போச்சி, மண்ணுவூடும் கரைஞ்சி போச்சு, நம்ம விதி அப்படி’ என்றார் ஒருத்தர்.

குளிரில் நடுங்கியபடியே முதியவர்களும் நனைந்தபடியே இளையவர்களும் கரை வந்துசேர்ந்த பின்னர், எங்கு செல்வதறியாது, என்ன செய்வதறியாது சாலையில் நின்றனர். நோயால் மெலிந்து, மழையால் நனைந்து, குளிரால் வாடி இறந்த முதியவர் ஒருவரைச் சுமந்துகொண்டு, நீந்திவந்து கரை சேர்ந்த பிறகு, ‘இந்த வெள்ளத்துல உன்ன எப்படி நல்லபடி வழி அனுப்ப’ என்று அவரின் குடும்பம் கதறி அழுததைப் பார்த்து, கூடி நின்ற சமூகமே அழுதது.

மின்சார வசதிகள் துண்டிக்கப்பட்டு, இருளில் அவதிப்பட்டு, நனைந்த ஆடைகளில் இருந்து வரும் ஈர வாசனையும் சுத்தம் இல்லாத கழிவறைகளில் இருந்து வீசும் துர்நாற்றமும் இறந்து மிதக்கும் வாய் இல்லா ஜீவராசிகளும், அதில் இருந்து வீசும் வாடையும், வெளியில் சொல்ல முடியாத உபாதைகளையும் சகித்துக்கொண்டு வாழும் இந்த மக்கள் அனைவரும் உழைக்கும் வர்க்கம், உழைத்தால் மட்டுமே வாழ முடியும் என்ற நிலையில் வாழும் வர்க்கம். மழை வெள்ளத்தில் பூ விற்க முடியுமா? காய்கறி விற்க முடியுமா? சாலையோர உணவகங்களை நடத்த முடியுமா? அரசின் உதவிகளை நாடி காத்திருக்கும் இந்த மக்களின் நிலையை எண்ணிப் பாருங்கள்.

உங்களின் மழைக்காலம் இதயத்தைக் கொள்ளைக் கொள்ளும், எங்களின் மழைக்காலம் எங்களின் வாழ்க்கையைக் கொள்ளையடிக்கும். உங்களின் மழைக்காலம் இதயத்தை வருடும், எங்களின் மழைக்காலம் இதயத்தை ரணமாக்கும். இப்பொழுது சொல்லுங்கள், எப்படி எங்கள் மழைக்காலம் எங்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும்?

(தொடரும்)

படைப்பாளர்:

எம்.கே. வனிதா. உயிர்வேதியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். பல ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்கிறார். தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராகப் பணியாற்றியிருக்கிறார். பட்டிமன்றங்களிலும் பேசி வருகிறார்.