சுரேஷ் ஏகக் கடுப்பில் இருந்தான். க்ளாஸ் டாப்பர், கல்லூரிகளுக்கு இடையேயான பல்வேறு நிகழ்ச்சிகளில், போட்டிகளில் வென்று பரிசுகளை அள்ளி இருக்கிறான்.

கேம்பஸ் இண்டர்வ்யூவில் கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் பளிச் பளிச் என்று தேர்வாளர்கள் அசந்து போகும்படி பதிலளித்தான்.

மோவாயில் கை வைத்தபடி, மூக்குக் கண்ணாடி வழியாக ஊடுருவிப் பார்த்துக்கொண்டிருந்த அந்தத் தேர்வாளர் அதுவரை பேசவில்லை. எல்லாரும் கேள்விகளை முடித்த பின்பு ஒரே கேள்வி கேட்டார்.

“எல்லாம் சரி, ஆனால் நீங்கள் திருமணமானதும் வேலையை விட்டுவிட்டால்?”

“மேம்… நான்…”

உறுதியான முடிவுடன் அவனது ஃபைலை மூடித் திருப்பிக் கொடுத்தார் அ.ஆ.இ.ஈ கம்பெனியின் எம்.டி ஏஞ்சலின் ஜெயக்குமார்.

“சாரி, எங்கள் கம்பெனியில் பல ஆண்களும் இப்படித்தான் திருமணமானதும் பொறுப்பின்றி வேலையை விட்டுவிடுகிறார்கள். We have least attrition rate with women… அதனால் இந்தப் பதவிக்கு நாங்கள் ஒரு பெண்ணைத்தான் தேர்வு செய்ய இருக்கிறோம். Very sorry!”

சில நிமிடங்களில் சுரேஷுக்கு அடுத்த இடத்திலிருந்த திவ்யாவைச் சுற்றி ‘ஓஹோ’ என்கிற கூச்சலும் கோஷங்களும் கேட்டன.

மகேஷ் வந்து தோளில் கை போட்டான்.

“இட்ஸ் ஓகே மச்சி. ஜாலியா இரு. இங்கே பாரு, நானெல்லாம் வேலை கிடைச்சா பார்ப்பேன்; இல்லையா கல்யாணம் பண்ணிட்டு நிம்மதியா மனைவி, குழந்தை, வீடுன்னு செட்டில் ஆகிடுவேன். வாழ்க்கையில பணத்தைவிட நிம்மதி முக்கியம்.

அப்புறம், திவ்யாவுக்கு உன் மேல ஒரு கண்ணு. எப்டியும் உன்னைப் ப்ரபோஸ் பண்ணப் போறா. அப்றம் என்ன?”

சற்றே அமைதிப்பட்ட மனத்துடன் திவ்யாவுக்கு கங்கிராட்ஸ் சொல்லக் கிளம்பினான் அவளது வருங்காலக் கணவன் சுரேஷ்.

ஆண்கள் நலம்!

(தொடரும்)

படைப்பாளர்

ஜெ.தீபலட்சுமி

பெண்ணிய செயற்பாட்டாளரும் எழுத்தாளருமான ஜெ.தீபலட்சுமி தொடர்ச்சியாக பெண்ணுரிமைக் குரலை எழுப்பி வருபவர். ‘இப்போதும் வசந்தி பேக்கரியில் பெண்கள் காணப்படுவதில்லை’ என்ற நூலை எழுதி இருக்கிறார். ஊடகங்களில் பெண்ணியக் கட்டுரைகள் எழுதிவருகிறார். ஆங்கிலம், தமிழ் என இரு மொழிகளிலும் சரளமாக எழுதியும், பேசியும் வருகிறார். எழுத்தாளர் ஜெயகாந்தனின் சிறுகதைகள் சிலவற்றைத் தொகுத்து ‘The Heroine and other stories’ என்ற நூலாக மொழிபெயர்த்திருக்கிறார்.