ஜில்ஜில் தொலைக்காட்சி நேயர்களுக்கு வணக்கம்! சமீபத்தில் தந்தையாகி இருக்கும் ஆண் டென்னிஸ் வீரர் சாணிநாத் குர்மா நம்மிடையே இருக்கிறார். இவர் சமீபத்தில் விம்பிள்டன் ஆண்கள் இரட்டையர் போட்டியில் வெற்றி பெற்றிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. வணக்கம் சாணிநாத் குர்மா, வாழ்த்துகள்! எப்படி உணர்கிறீர்கள்?

சாணிநாத்: நன்றி! இந்த வெற்றிக்காகச் சிறுவயது முதலே கடுமையாகப் பாடு பட்டிருக்கிறேன்; மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

நெறியாளர்: சிறுவயது முதலா? உங்களுக்குத் திருமணமாகி ஓராண்டு தானே ஆகிறது?

சா: ஆமாம் அதற்கென்ன?

நெ: குழந்தை பெற்றுக்கொள்வதற்கு அவ்வளவு உழைப்பா? ஹா ஹா ஹா.

அரங்கத்தில் நிறைத்திருக்கும் பார்வையாளர்களும் ப்ராம்ப்டர் சொன்னபடி சத்தமாகச் சிரிக்கிறார்கள்.

சா: ஓ! என் விம்பிள்டன் வெற்றியைச் சொல்கிறீர்கள் என்று நினைத்தேன். அந்த ஆட்டத்தின் இறுதிச் சுற்றில்…

நெ: இனியும் தொடர்ந்து டோர்னமெண்டுகளில் பங்கெடுக்கப் போகிறீர்களா?

எப்போது தான் செட்டில் ஆகப் போகிறீர்கள்?

சா: குழந்தைக்கு நல்ல தந்தையாக இருப்பேன்… ஆனால், விளையாட்டை விடமாட்டேன்!

நெ: ஓ! எப்படிக் குழந்தை, விளையாட்டு இரண்டையும் பாலன்ஸ் செய்யப் போகிறீர்கள்? ஒரு தந்தையாக உங்கள் கடமையை நீங்கள் உணர்கிறீர்களா?

சா: ம்… இல்லை, கொஞ்ச நாள் ஓய்வெடுத்துக் கொண்டு…

நெ: சிறப்பான முடிவு. தந்தைமையின் புனிதம் எவ்வளவு உயர்வானது என்று நிரூபித்துவிட்டீர்கள். புகழ் மிக்க விளையாட்டு வீரராக இருப்பது, பொறுப்பான அன்புத் தந்தையாக இருப்பது, ஓர் ஆணுக்கு எது முக்கியம் என்று கருதுகிறீர்கள்?

சா: ம்… இரண்டுமே முக்கியம் என்று…

நெ: Oh how ambitious you are! தந்தையான பின்பும் விளையாட்டில் தொடர்ந்து தீவிரமாகச் செயல்படுவது உங்கள் குடும்ப வாழ்க்கையைப் பாதிக்கும் என்று நினைக்கிறீர்களா?

சா: இல்லை… என் மனைவி மிகவும் அன்பானவர், திறமையானவர்…

நெ: ஓ! நீங்கள் நிஜமாகவே மிகவும் கொடுத்து வைத்தவர். Can we have a big round of applause for that loving and caring woman please!

கைதட்டலில் அரங்கம் அதிர்கிறது!

நெ: உங்கள் மனைவியும் அவர் குடும்பமும் உங்கள் வெற்றிக்குப் பக்கபலமாக இருந்திருப்பார்கள் என்பதில் வியப்பில்லை; அவர்கள் உங்களுக்கு எந்த மாதிரி அறிவுரை, ஆலோசனை வழங்குவார்கள்? கொஞ்சம் சொல்லுங்களேன்!

…..

நெ: சரி, நீங்கள் மிகவும் உணர்ச்சி வயப்பட்டிருக்கிறீர்கள். புதிதாகத் தந்தையான எல்லாருக்குமே உங்கள் மன உணர்ச்சிகள் புரியும் என்று நினைக்கிறேன். உங்களுக்கு நிச்சயம் ஓய்வு தேவை. குழந்தைக்கும் தந்தையின் அரவணைப்பு முக்கியம் அல்லவா?

சாணிநாத் முகம் சிவந்து அழுகிறார். Breaking news வெளியிடப்படுகிறது.

*

நேரலையில் உடைந்து அழும் சாணிநாத். குடும்பத்தில் பிரச்னையா?

வெற்றியை நோக்கி ஓடி வாழ்க்கையை இழந்த சாணிநாத்… யூடியுப் சேனல்கள் தயாராகிக்கொண்டிருக்கின்றன.

படைப்பாளர்

ஜெ.தீபலட்சுமி

பெண்ணிய செயற்பாட்டாளரும் எழுத்தாளருமான ஜெ.தீபலட்சுமி தொடர்ச்சியாக பெண்ணுரிமைக் குரலை எழுப்பி வருபவர். ‘இப்போதும் வசந்தி பேக்கரியில் பெண்கள் காணப்படுவதில்லை’ என்ற நூலை எழுதி இருக்கிறார். ஊடகங்களில் பெண்ணியக் கட்டுரைகள் எழுதிவருகிறார். ஆங்கிலம், தமிழ் என இரு மொழிகளிலும் சரளமாக எழுதியும், பேசியும் வருகிறார். எழுத்தாளர் ஜெயகாந்தனின் சிறுகதைகள் சிலவற்றைத் தொகுத்து ‘The Heroine and other stories’ என்ற நூலாக மொழிபெயர்த்திருக்கிறார்.