என்னுடைய பால்ய வயது தோழி, குடும்பச் சூழ்நிலை காரணமாக, பத்தாம் வகுப்புடன் படிப்பை நிறுத்திக்கொண்டாள். 19 வயதிலேயே, அவளுக்குத் திருமணத்திற்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தார்கள். நிறைய மாப்பிள்ளைகள் பெண் பார்க்க வந்துவிட்டு, பெண் கறுப்பாக இருப்பதாகக் கூறிச் சென்றார்கள். இப்படியே இரண்டு ஆண்டுகள் போனது.

இரண்டு வருடங்களுக்குப் பிறகு, வெள்ளையாக இருக்கும் ஒருவர், அவளைப் பெண் பார்க்க வந்தார். எல்லாரும், “சுமாராக இருப்பவர்களே வேண்டாம் எனச் சொல்லிவிட்டுப் போனார்கள். இந்த மாப்பிள்ளை எங்கே இவளைப் பிடிச்சிருக்குனு சொல்லப் போறான்? இவனும் பஜ்ஜிய தின்னுட்டு, அப்புறம் பதில் சொல்கிறோம்னு போகப்போறான்” என்றார்கள். ஆனால், நினைத்தற்கு மாறாக, அந்த மாப்பிள்ளையோ, பார்த்தவுடன் பிடித்திருக்கிறது என்று சொல்லிவிட்டார். மேலும் அந்த மாப்பிள்ளை, கல்யாணச் செலவையும் தானே ஏற்பதாகச் சொன்னவுடன் தோழிக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி. ஒரு சில மாதங்களில் திருமணமும் நடந்தது. இன்றும்கூட, அவள் யாருடனாவது தனது கணவர் குறித்துப் பேசும்போது அவள் கண்கள் ஒளிரும். அன்பும் புரிதலும் நன்றாகவே இருக்கிறது.

ஒருமுறை, அவர்கள் இருவரும் சாலையில் நடந்து போய்க்கொண்டிருக்கும் போது, பக்கத்து வீட்டு அக்கா என்னிடம் சொன்னார், “பாரு, அவளுக்கு எப்படி மாப்பிள்ளை கிடைத்திருக்கிறான்?” என்று. ஏன் அவளுக்கு என்ன குறைச்சல் என்று நான் திருப்பிக் கேட்டதும், பதில் சொல்ல முடியாமல் விழித்தார்.

சில வாரங்களுக்கு முன்னால் மீடியாவில் பிரலமான இரண்டு நபர்கள் திருமணம் செய்துகொண்ட போதும், இதே மாதிரியான பல கருத்துகளைப் பார்க்க முடிந்தது. அவர்களின் உடல் உருவ வேறுபாட்டை வைத்து நிறைய கிண்டல்களை இணையத்தில் காண முடிந்தது. தங்கள் கருத்துகளைச் சொல்கிறோம் என்ற பெயரில், பணத்திற்காக நடந்திருக்குமோ, இல்லை புகழுக்காக நடந்திருக்குமோ எனக் கணிப்புகள் வேறு.

யோசித்துப் பாருங்கள், அன்பைப் பெற அல்லது அன்பைக் கொடுக்க தகுதி வேண்டுமா என்ன? உண்மையில், அன்பைப் பெறுவதற்கும், எல்லா இன்பங்களைத் துய்ப்பதற்கும், இந்தப் பூமியில் இருப்பது ஒன்றே போதுமானது. இங்கு நாம் வாழ்வது ஒன்றே போதுமானது. நாமாக இருப்பதே போதும்.

ஆனால், நாம்தான் தகுதி வேண்டும் என நம்பிக்கொண்டிருக்கிறோம். நிறம், அழகு, பணம், வசதி, வேலை, குடும்பம், மதம், ஜாதி, நாடு என இந்தத் தகுதி பட்டியல் நீண்டுகொண்டே போகும். இதில் மதமும் ஜாதியும் பெரும் பங்கு வகிக்கிறது.

தங்கள் மதம்தான் உயர்ந்தது என்றும், அடுத்த மதம் கீழானது என்றும், அடுத்த மதத்தைப் பின்பற்றுபவர்கள் எல்லாரும் தங்களைவிடக் குறைவானவர்கள் என்றும் எண்ணிக்கொள்வது, எந்த வகையிலும் தன்னுடைய நலனுக்கும் மனித குல வளர்ச்சிக்கும் உதவுவதில்லை.

ஏனென்றால் அவ்வாறு நினைத்துக்கொள்பவர்கள், கடவுளின் அன்பிற்கு அவர்களுடைய மதம்தான் தங்களைத் தகுதி ஆக்குவதாகக் கருதிக்கொள்கிறார்கள். கடவுளின் அன்பைப் பெற, தகுதி என்ற ஒன்று அவர்களுக்குத் தேவைப்படுகிறது. அப்படியானால் அவர்களுக்கு, அடுத்த மனிதனிடம் இருந்து அன்பைப் பெறவும் தகுதி வேண்டும் தானே?

எல்லாச் சமயத் திருநூல்களும் அன்பையே பிரதானமாகச் சொல்லியிருந்தாலும், இங்கு பாவம், கர்மா, நரகம், எண்ணெய்ச் சட்டி எனப் பயமே போதிக்கப்படுகிறது. அன்பிற்குப் பதில், தங்களுடைய மதம்தான் உயர்ந்தது என்ற போர்வையில் பிரிவினை எண்ணங்கள் தாம் ஊக்குவிக்கப்பட்டு வருகின்றன.

இந்தச் சமயத்தில், ஒரு கதை ஞாபகம் வருகிறது, நோயுற்ற ஒருவர் மருத்துவரைக் காணச் சென்றாராம். மருத்துவரும் மருந்துச் சீட்டில் மருந்து எழுதிக் கொடுத்தார். நோயுற்றவர், மருந்துக் கடைக்குச் சென்று மருந்து வாங்கவும் இல்லை, மருந்து சாப்பிடவும் இல்லை. வீட்டிற்கு வந் தது, மருந்துச் சீட்டில் குறிப்பிட்டிருந்த மருந்தை, காலை, மாலை, மதியம் என மூன்று வேளை உரக்க வாசித்துவிட்டு, என்னுடைய டாக்டர்தான் மிகவும் சிறந்தவர், அவரைப்போல் யாரும் கிடையாது என்று குணமாகாத நோயுடன், பிதற்றிக்கொண்டிருந்தாராம்.

பக்கத்து வீட்டில் இருந்த இன்னொரு நோயுற்றவர், வேறொரு மருத்துவரைக் காணச் சென்றாராம். இவர், மருத்துவர் எழுதிக் கொடுத்த மருந்துச் சீட்டைக் கொடுத்து மருந்தை வாங்கி, வீட்டில் வைத்துக்கொண்டாராம். காலை மாலை மதியம் என மூன்று வேளை என மருந்தை எடுத்து கண்களில் ஒற்றிக்கொண்டாராம். சாப்பிடவில்லை, நோயும் குணமாகவில்லை. ஆனாலும் இவரும் சொல்லிக்கொண்டார், என்னுடைய மருத்துவர்தான் மேலானவர் என்று.

நோய் குணமாகாமலே, என்னுடைய மருத்துவர்தான் மிகவும் உயர்ந்தவர், உன்னுடைய மருத்துவருக்கு எதுவும் தெரியாது என இருவருமே மாறி மாறி சண்டையிட்டுக் கொண்டார்களாம். இதுதான் உண்மையில் சமுதாயத்திலும் மதம் என்ற பெயரில், ஜாதி என்ற பெயரில் நடந்துகொண்டிருக்கக்கூடிய சண்டை. ஏனென்றால் உண்மை பொருளுணர்ந்து, குணமடைந்து விட்டால் எல்லாரும் சமம் என்ற தெளிவு கிடைத்திருக்கும். சண்டைக்கு இடம் ஏது?

உண்மையை உணர்ந்த பாரதி அழகாகச் சொல்லிவிட்டுச் சென்றார்.

காக்கை குருவி எங்கள் ஜாதி- நீள்

கடலும் மலையும் எங்கள் கூட்டம்.

உயிருள்ள, உயிற்ற காண்கின்ற எல்லாமுமே ஒன்றுதான். அவருக்குத் தகுதி என்ற ஒன்று தேவைப்படவே இல்லை. அதனால்தான், நோக்கும் இடத்தில் இருந்தெல்லாம் அன்பைப் பெற்று, எளிதாகக் களித்திருக்க முடிந்தது.

மதங்கள் சொல்லும் சடங்குகளை, சம்பிரதாயங்களைத் தவறவிட்டால், அவை ஏற்படுத்திச் செல்லும் குற்ற உணர்வு ஒரு புறம் என்றால், உளவியல் ரீதியாக இவை ஏற்படுத்திச் செல்லும் போதாமை, பற்றாக்குறை உணர்வு மறுபுறம். ஏனென்றால், தகுதி வேண்டும் எனச் சொல்லும்போது, நம்மை, நம் வாழ்தலை மறுக்கிறோம் என்றுதான் அர்த்தம்.

கடவுளிடம் இருந்து அன்பைப் பெற மதம், ஜாதி போன்ற தகுதிகள் வேண்டும் எனத் தொடங்கும் இந்த விதி (law), அடுத்தவருக்கும் இந்தத் தகுதி இருந்தால்தான், அன்பைக் கொடுக்க வேண்டும் என்று நீளும். அடுத்தபடியாக தனக்கும் சில தகுதிகள் இருந்தால்தான், தானும் பிறரிடம் இருந்து அன்பைப் பெற முடியும் என்று ஆணித்தரமாக நம்பி, அந்தத் தகுதிபடுத்துதல் என்பதை நோக்கிய ஓட்டத்தில், தான் ஓர் பேரதிசயம் என்பதே மறந்தே போய்விடும். இது வாழ்வில் இன்பங்களை அனுபவிக்க முடியாதபடி, சிக்கலை ஏற்படுத்தி செல்கிறது. தகுதியே தேவைப்படாமல் இருக்கும்போது, அதை தேடித் தேடியே வாழ்க்கையின் பெரும் பகுதி போயிருக்கும்.

உண்மையில் இந்த உலகத்தில் பிறந்த எல்லோருக்கும் அறிவுத்திறனும் (intelligence), உள் ஆற்றலும் (potential) ஒரே அளவுதான். கூடுதல், குறைவு என்று எதுவும் இல்லை.

இதயம் இயங்குவது நின்றுவிட்டால், எல்லாருக்கும் முடிவு வந்துவிடும். குறிப்பிட்ட ஜாதியில் பிறந்ததால், நீங்களாகவே கூடுதல் எனக் கருதிக்கொள்வதால், உங்களுக்குக் கூடுதல் நேரம் ஒரு நிமிடம்கூட இங்கு கிடைக்காது. நீங்கள் குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்த, ஒரு கடவுளின் குழந்தைகள் என்பதால், இதயம் நின்ற பிறகும், கொஞ்சம் நேரம் பேசிவிட்டுச் செல்ல முடியாது.

நாம் புரிந்துகொள்ள வேண்டியது இதுதான். அடுத்தவருக்கு வைக்கும் ஒவ்வொரு தகுதியும் முதலில் நம்மிடம் இருந்துதான் ஆரம்பிக்கிறோம். அது ஜாதியாக இருந்தாலும் சரி, மதமாக இருந்தாலும் சரி, நிறமாக இருந்தாலும் சரி. ஒரு மதத்தைச் சார்ந்தவர் உயர்ந்தவர் என்றும் இன்னொருவர் தாழ்ந்தவர் என்றும் நினைத்துக் கொள்வதின் மூலம், நாம், நமக்குத்தான் முதலில் தீங்கு விளைவித்துக் கொள்கிறோம்.

முழுமையான அன்பைப் பெற தகுதி இல்லை என்றே, வாழ்ந்துவிட்டோம். தனக்கும் அடுத்தவருக்கும் தகுதி பார்ப்பதே பழகிவிட்டது. இப்படிச் சிந்திப்பதும் பேசுவதும் பழக்கமாகிவிட்டது. இதை நம்புவதற்கும் ஒத்துக்கொள்வதற்கும்கூடக் கடினமாக இருகிறது. என்ன செய்யலாம்?

இப்போதிலிருந்தாவது சொல்லப் பழகுங்கள், “இந்தவாழ்க்கையில், அன்பைப் பெறுவதற்கும், எல்லா இன்பங்களை அனுபவிப்பதற்கும், இந்த வாழ்வைக் கொண்டாட்டமாக வாழ்வதற்கும் நான் போதுமானவளாகவே / போதுமானவனாகவேஇருக்கிறேன்”. மாற்றம் முதலில் சுயத்தில் இருந்தே துவங்கட்டும்.

உண்மையில் இந்தப் பூவுலகில் வாழும் ஒவ்வோர் உயிரும் பரிபூரணமான அன்பிற்குத் தகுதியானதே!

ஒவ்வொரு உயிரும் வாழும் பேரதியமே, பேரதிசயத்துக்கு என்ன தகுதி வேண்டியிருக்கிறது!

அப்புறம் என்ன, வாழ்வைக் கொண்டாடலாம், வாங்க!

(தொடரும்)

படைப்பாளர்:

ஜான்சி ஷஹி

மனநல ஆலோசகர். மன நலத்திற்கான தெரப்பிகளையும் ஆற்றுப்படுத்துதலையும் வழங்கி வருகிறார். வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழவும், பிடித்த எதிர்காலத்தை அமைத்துக்கொள்ளவும், பொது மக்களுக்கு பயிற்சிப் பட்டறைகளை நடத்திவருகிறார். இவர் பெங்களூர் கிரைஸ்ட் பல்கலைக்கழகத்தில் மாணவர் மன நல ஆலோசகராக (student counsellor) பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.