“யக்கா… யக்காவ்….” குரல் கேட்டுத் திரும்பினேன். தோளில் ஒரு கனத்த பையும் இரு கைகளிலும் தூக்க மாட்டாமல் இரண்டு பெரிய பைகளுமாக நின்றிருந்தார் அந்தப் பெண். “செத்தோடம் இந்தப் பையை வைச்சிக்கீறிகளா, ப்ளைட் ஏறனோடனே வாங்கிக்கறேன்.” மதுரை விமான நிலையத்தின் கெடுபிடியான சடங்குகளை முடித்து கொழும்பு செல்லும் விமானத்திற்காக கேட் எண் 2 ஐ நோக்கிச் சென்றுகொண்டிருந்த நான், பையை வாங்குவதற்கு யோசித்தேன். எதில் என்ன இருக்குமோ, யார் கண்டது? “ஒண்ணுமில்லக்கா, பயப்படாதீக பூரா சுடிதார்தான், யாவாரத்துக்குத்தான் போறேன், இதுக்கும் லக்கேஜ் போட்டா ஒண்ணும் மிச்சமிருக்காது, உங்ககிட்ட ஹேண்ட்லக்கேஜ் இல்லியே, அதான் கொடுத்தேன்” என்று சிரித்துக்கொண்டே நான் சம்மதிக்கும் முன்னரே என் கையில் திணித்துவிட்டு நகர்ந்தார்.

மதுரையிலிருந்து கொழும்பு கிளம்பும் ஒவ்வொரு விமானத்திலும் பெண்கள் பலரும் பெரிய பெரிய பைகளில், சேலைகள், கவரிங் நகைகள், கல்வெள்ளி கொலுசுகள், ஆயத்த ஆடைகள், சல்வார்கள் அடங்கிய வியாபாரப் பைகளுடன் வருவதைப் பார்க்க முடியும். மதுரையைச் சுற்றியுள்ள, பெரும்பாலும் அதிகம் படித்திராத கிராமத்துப் பெண்களின் தொழில் இது. மதுரை புது மண்டபத்திலும் அதைச் சுற்றியுள்ள ஜவுளிக்கடைகளிலும் கிடைப்பதையெல்லாம் வாங்கிக்கொண்டு, இருபது டாலர் கட்டி மல்ட்டி அரைவல் டூரிஸ்ட் விசா எடுத்துக்கொள்கின்றனர். பத்து, பன்னிரண்டு பேர் குழுவாகக் கிளம்பினால், அதிகபட்சம் ஒருவாரம்… கொழும்புத் தெருக்களில் சுற்றி வியாபாரத்தை முடித்துக்கொண்டு திரும்பிவிடுகிறார்கள். “ஒரு தரம் போயிட்டு வந்தா, செலவெல்லாம் போக இருபதாயிரம் நிக்கும்க்கா. (அடடா@ அவசரப்பட்டு அரசு வேலையில சேர்ந்திட்டமோ?) மாசத்துக்கு ரெண்டு, மூணு தடவை போயிட்டு வந்திருவோம். தீவாளி, பொங்கல், கிறிஸ்மஸூக்குப் போனா வர பதினைஞ்சி நாளாவும், ஆனா உருப்படியா கையில ஒரு தொகை சேரும்” என்று வியாபார ரகசியம் சொல்கிறார்கள். இப்படித்தான் விமான நிலையத்தில், என் கையில் பையைத் திணித்து அறிமுகமானார் மதுரை காளவாசல் பகுதியில் இருக்கும் ராஜாமணி அக்கா. பெரிதாகப் படிப்பில்லை, ஆங்கிலம் தெரியாது, இலங்கையில் யாரையும் தெரியாது, திடீரெனெ கணவர் இறந்ததும், இரண்டு பிள்ளைகளை வளர்ப்பதற்கு வேறு வழி தெரியாமல் கையில் கிடைத்ததை வாரிக்கொண்டு விமானம் ஏறி இருக்கிறார். முதல் முறை திக்குதிசை தெரியாமல், ஒரு கட்டைப்பையில் சில சேலைகளை அடைத்துக்கொண்டு கொழும்பு வீதிகளில் ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கி விற்பனைக்கு அலைந்தவர், இன்று கொழும்பு முதல் யாழ்பாணம், மன்னார் வரை சர்வ சாதாரணமாகச் சென்று வாடிக்கையாளர்களைச் சந்தித்து வருகிறார். அவரது அனுபவங்களைக் கேட்டபோது வியப்பாக இருந்தது. என்னவொரு தைரியம், தன்னம்பிக்கை… இப்படித்தான் பெண்கள் பலருக்கும் விற்பனை சந்தையாகத் திகழ்கிறது இலங்கை. ராஜாமணி அக்கா போல நூற்றுக்கணக்கான பெண்களை விமானத்திலும், கொழும்பு கடைவீதிகளிலும் பார்க்கமுடியும். அங்கு பெரிதாக உற்பத்தி ஏதும் இல்லாததால், இங்கிருந்தே அனைத்து உடுப்புகளும் பெண்களுக்கான ஆபரணங்களும் இன்னும் அவர்கள் சொல்லியனுப்பும் அத்தனைப் பொருள்களும் இந்தப் பெண்களின் வழியாகச் செல்கிறது. இம்போர்ட், எக்ஸ்போர்ட், டியூட்டி, வரிகள், நிபந்தனைகள், அரசு அனுமதி, ஜி.எஸ்.டி என்று எந்த நடைமுறைகளுமின்றி, இந்தியப் பொருள்கள் இலங்கையை அடைந்துவிடுகின்றன ஐம்பது நிமிடங்களில்.

அழகிய கடலாலும் மயக்கும் வனத்தாலும் சூழப்பட்ட இலங்கை எப்போதும் அண்டை நாடுகளிலிருந்து தனித்து நிற்கிறது. வளர்ந்த நாடுகளை மிஞ்சும் அளவுக்கு அதன் மக்கள்தொகை வளர்ச்சி வீதம் குறைவாக உள்ளதால், மிக உயர்ந்த வாழ்க்கைச் சுட்டெண்ணைக் கொண்டுள்ளது. உடுத்தும் உடுப்பிலும் உண்ணும் உணவிலும் வாழ்க்கை முறையிலும் மேலை நாட்டின் தாக்கம் தெரிகிறது.

தமிழர்கள் எங்கிருந்தாலும் அவர்களின் வாழ்க்கைமுறை கொண்டாட்டமாகவே இருக்கிறது. அதுபோலவே இலங்கையிலும். இந்துக் கோயில்கள், மசூதிகள், தேவாலயங்களில் வண்ணமயமான சடங்குகள் நடைபெறுகின்றன. மிகச் சாதாரண குடும்பத்தில்கூட வீட்டிலுள்ள அனைவரின் பிறந்தநாளும் எந்த வயதிலும் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுவது பார்த்து வியப்படைந்தேன். அதேபோலத்தான் திருமணநாளும். குழந்தை பிறப்பு முதல் ஒவ்வொரு பருவத்திலும் கொண்டாட்டங்கள்தாம். பெண் குழந்தைகள் பூப்படையும் விழாவை, ‘சாமத்தியவீடு’ எனப் பெரிதாகக் கொண்டாடுகிறார்கள். இந்தியாவைப்போலவே திருமணங்களும் ஆடம்பரமாகிவிட்டன. சமீபக் காலமாகக் காதல் திருமணங்கள் அதிகரித்துள்ளன என்கிறார்கள். மரணித்தவரைக்கூட மிக அழகாக அலங்கரித்து இரண்டு, மூன்று நாட்கள் பார்வைக்கு வைத்து ஆடம்பரமாக அனுப்பி வைக்கின்றனர்.

மதக் கலாச்சார மையங்களாக அனுராதபுரம், சிகிரியா, பொலன்னறுவை, கண்டி, கதிர்காமம் மற்றும் ஆடம்ஸ் பீக் போன்றவை வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றன. கிட்டத்தட்ட இந்தியாவிலிருந்து மறைந்துவிட்ட பௌத்தம் இலங்கையில் உயிர்ப்புடன் செழித்து வளர்ந்திருக்கிறது. தமிழர்கள் வாழும் இடமெங்கும் கதிரேசன் (முருகப் பெருமான்) இருக்கிறான். சைவத்தின் இருப்பிடமாகிய தமிழ்நாட்டில்கூட இவ்வளவு பக்தியைப் பார்க்க முடியாது. சைவத் தமிழர்கள் அனைவரின் நெற்றியிலும் திருநீற்றைக் காணமுடிகிறது. பலரும் ருத்திராட்ச மாலை அணிகிறார்கள். முறையாக விரதம் பிடிக்கிறார்கள். விரதமிருந்து கேரளாவின் ஐயப்பன் கோயிலுக்கு வருகிறார்கள். ஏர்போர்ட்டில் ஐயப்பன் கோயில் சீசன்களில் இருமுடி கட்டிய சாமிகளின் நீண்ட வரிசையைப் பார்க்கமுடிகிறது. கத்தோலிக்க தேவாலயங்கள் மிகக் கட்டுக்கோப்பாக இயங்குகின்றன. வேளாங்கண்ணிக்கு வரும் கத்தோலிக்கர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கிறது.

இலங்கையின் தேசிய கீதமாக, சிறீலங்கா தாயே என்ற பொருள்படும் பாடல் உல்ளது. தேசியக் கொடியில் வாள் தாங்கிய சிங்கமும் நான்கு மூலைகளிலும் அரச இலைகளும் காணப்படுகிறது. தமிழ் மற்றும் முஸ்லிம்களைக் குறிக்கும் வண்ணம் ஆரஞ்சு மற்றும் பச்சை நிறமும் உள்ளது. தேசிய மலராக நீலோற்பவம் என்று அழைக்கக்கூடிய நீலத் தாமரையும் நாகமரம் தேசிய மரமாகவும் தேசியப் பறவையாகக் காட்டுக்கோழியும் உள்ளன. தேசியப் பிராணி அணில் என்றாலும்கூட, எங்கும் யானைகளின் உருவம் பொதிந்த ஆடைகளையும் பைகளையும் சித்திரங்களையும் காண முடிந்தது.

தமிழ், சிங்களம், ஆங்கிலத்தில் அச்சு மற்றும் ஒளிபரப்பு ஊடகங்கள் அனைத்துப் பகுதிகளுக்கும் செல்கின்றன. தொலைக்காட்சியின் தாக்கம் அதிக அளவில் காணப்படுகிறது. அச்சு ஊடகங்களில் தினசரி பத்திரிகைகளில் தூயத் தமிழ் வார்த்தைகள் பயன்படுத்தப்படுகின்றன. அரசு ஆணைகள், அலுவலக கடிதங்களை வாசித்தால் தலை சுற்றுகிறது. இதுதான் தூயத் தமிழ் எனில், நாம் பயன்படுத்தும் தமிழ்?

பொது இடங்களில் புகைப்பிடிப்பதும் சிறுநீர் கழிப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது. அரசின் விதிகளையும் சட்டதிட்டங்களையும் மிகச் சரியாகப் பின்பற்றவும் செய்கின்றனர். சாலைவிதிகளும் அபராதங்களும் கடுமையாக இருக்கின்றன. கீழ்மட்டங்களில் லஞ்சம், ஊழல் என்ற பேச்சுக்கே இடமில்லை என்கிறார் நண்பர் மடுதீன். அரசு அலுவலகங்களில் எந்த வேலையை முடிக்கவும், எந்தக் கோப்பை எத்தனை மேசைகள் நகர்த்தவும் ஒரு பைசா லஞ்சம் கொடுக்கத் தேவையில்லை என அறிந்து பெருமூச்சு விட்டுக்கொண்டேன்.

‘ஆசிரியர் பணி மாறுதலுக்குக்கூடவா?’ என அவசரமாகக் கேட்க, “நீங்கள் ஆசிரியர் சங்கப் பொறுப்பிலிருக்கிறீர்கள்தானே?” என நக்கலாகக் கேட்டு, முறைத்தவரின் கண்களைச் சந்திக்கப் பயந்து திரும்பிக்கொண்டேன். எந்தச் சிறு பிரச்னைகளுக்கும் நீதிமன்றத்தை நாடும் வழக்கம் இருப்பதால், சட்டத்தரணிகளின் தேவை அதிகமாகவே இருக்கிறது.
பொதுப் பள்ளிகள், பொது மருத்துவமனைகள்தாம் எங்கெங்கும். அன்றாட கூலிக்காரர்களுக்கும் நாட்டை ஆளும் அமைச்சர்களுக்கும் அரசுப் பொது மருத்துவமனைதான். அவர்களின் பிள்ளைகளும் பொதுப் பள்ளியில்தான் படிக்கின்றனர். “கல்வியும் மருத்துவமும் இலவசமாகக் கொடுக்க ஏலலை எண்டால், பின்ன அரசு என்னத்துக்கு இருக்கு?” என்று கூர்மையாகக் கேட்கிறார்கள். அதனால், பிள்ளைகளின் கல்விக்காகப் பெற்றோர் வாழ்நாளெல்லாம் உழைத்து ஓடாய்த் தேய வேண்டியதில்லை. இது தவிர வேறு எந்த இலவசங்களையும் யாரும் எதிர்பார்ப்பதுமில்லை, அரசு கொடுப்பதுமில்லை.

அந்நியச் செலாவணியை நாட்டுக்குள் கொண்டுவருவதில் மூன்றாவது இடத்தில் சுற்றுலாத்துறை இருக்கிறது. சுற்றுலாப் பயணிகளில் கணிசமான தொகையினராக இருக்கும் புலம்பெயர் தமிழர்கள் தமது தாயகத்தைப் பார்ப்பதற்காக வருகின்றனர். ஆனால், 2019 ஈஸ்டர் தாக்குதலுக்குப் பிறகு முடங்கத் தொடங்கிய சுற்றுலாத்துறை, கொரோனா, பொருளாதாரச் சிக்கல் எனத் தொடர்கிறது. ஒரு பயணி இலங்கைக்கு வருகை தருவதன் மூலம் ஒரு நாளைக்குச் சராசரியாக 170 முதல் 180 அமெரிக்க டாலர்கள் வரை வருமானம் கிடைப்பதாகக் கூறுகிறார் நாடு முழுவதும் சுற்றுலாவை மேம்படுத்தும் பொறுப்பில் இருக்கும் கிர்மார்ஃபெர்னாண்டொ.

இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களின் விலை கேட்டால் மூர்ச்சையடைந்து விடுவீர்கள். அதனால், சைக்கிளில் செல்வோர் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. வாகனங்களை இறக்குமதி செய்வதில் அர்த்தம் இருக்கிறதுதான். ஆனால், நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்ட மீன் வளம் நிரம்பிய ஒரு தீவுதேசம் கருவாட்டையும் மீனையும் இறக்குமதி செய்துகொண்டிருப்பதை உலக நாடுகள் வியப்போடு பார்க்கின்றன. மீன்தொழிலைப் பிரதானமாகக் கொண்ட அந்த ஊரில் இறக்குமதி செய்யப்படும் டின் மீன்கள் எவரும் புரிந்துகொள்ள முடியாத ஆச்சரியமே. அதேபோல் ஒரு காலத்தில் பாலுக்குப் புகழ்பெற்ற இலங்கையில் இன்று பால்மாவு பாக்கெட்டுகள் வீடெங்கும், கடைத்தெருவெங்கும் இறைந்து கிடக்கின்றன. பசும்பால் மிக அரிதாகவே கிடைக்கிறது.

“எந்நீர் ஆய்னும், முன்நீர் சூழ் ஈழத்து இளநீர் போல வாராது” என்று ஒருகாலத்தில் யாழ்ப்பாணத்து தேங்காய் உலகெங்கும் பவனி வந்தது. இன்று, “உள்ளூர் தொழிற்சாலைகளின் தேவை மற்றும் மக்களின் பயன்பாடு அதிகரிப்பு காரணமாக, இலங்கையில் 700 மில்லியன் தேங்காய் பற்றாக்குறை நிலவுகிறது” என்று அமைச்சர் அருந்திகா பெர்னாண்டோ சிம்பாலிக்காக தென்னை மரத்தில் ஏறி உரையாற்றுகிறார்.

இந்தியாவிற்கும் இலங்கைக்குமான உறவு, பரிவர்த்தனை உறவில் இருந்து கேந்திர கூட்டாளி உறவாகப் பரிணமித்துள்ளது, “இலங்கை இப்போது நம்பியிருக்கக்கூடிய உண்மையான நண்பன் இந்தியா என்பதை இலங்கை மக்கள் அங்கீகரித்துள்ளனர்” என்கிறார் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரீஸ். “சீனாவையும் தனக்குச் சாதகமாக இலங்கை அழகாகக் கையாளும். தனக்கு எப்போது சீனா வேண்டுமோ அப்போது சீனாவை நோக்கி இலங்கை போகும், எப்போது தனக்கு இந்தியா வேண்டுமோ அப்போது இந்தியாவை நோக்கிப் போகும்” என்று பதிலுரைக்கிறார் கொழும்பு பல்கலைக்கழக் பொருளியல்துறை பேராசிரியர் கலாநிதி கோபாலபிள்ளை அமிர்தலிங்கம்.
சிங்களப் பெண்கள் சேலை உடுத்தும் முறை ஒசாரியா என்று அழைக்கப்படுகிறது. அதுவே அவர்களது பாரம்பரிய உடை. பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கிறது. தமிழ்ப் பெண்கள் தமிழகப் பெண்கள் போலவே சேலை உடுத்துகின்றனர். கிராமப் புறங்களில் வசிக்கும் வயதான பெண்கள் கைலி அணிவதைப் பார்க்க முடிகிறது. ஆண்கள் எந்த வேலை பார்ப்போரும், எப்போதும் முழுக்கை சட்டையுடன், டக்இன் செய்து டிப்டாப்பாக வலம் வருகின்றனர். இளம் பெண்கள் அணியும் உடையில் மேலை நாட்டு தாக்கம் தெரிகிறது. இளம் வயதினர் முதல் முதியவர் வரை ஸ்கர்ட் அணியும் வழக்கமும் இருக்கிறது.

Tropical beach with palm in Sri Lanka


பெண்களுக்கான உரிமைகளை வழங்க எந்த மதமும் விரும்புவதில்லை என்பதற்கு புத்த மதமும் விதிவிலக்கல்ல. புத்தரின் மகள்கள் எனப் பெருமைப்படுத்தப்படும் பௌத்த பிக்குணிகளுக்கு அடையாள அட்டைகள் வழக்க மறுக்கப்படுகிறது. “தேவையான அனைத்து ஆவணங்களும் என்னிடம் இருந்தன. ஆனால், பௌத்த மத விவகாரங்களுக்கான துறை எனக்கு அடையாள அட்டை வழங்க மறுத்துவிட்டது“ என்று கண்ணீர் விடுகிறார் அமுனுவட்டே சமந்தபத்ரிகா தேரி எனும் இளம் பௌத்த பெண் துறவி. இலங்கையின் அடையாள அட்டை என்பது வாக்களிப்பது முதல் வங்கிக்கணக்கு தொடங்குவது வரை அனைத்திற்குமான தேவை. சமந்த பத்ரிகா போல துறவிகள் அடையாள அட்டை பெற தகுதியற்றவர் என்று கூறி 2004ஆம் ஆண்டில் உரிமை பறிக்கப்பட்டது. “புத்தரின் மகள்களாக நாங்கள் இந்த மண்ணில் பிறந்தோம், இது பாலின பாகுபாடு இல்லாமல் வேறு எதுவும் இல்லை” என்று பிபிசிக்கு அளித்த பேட்டியில் குமுறுகிறார். நாட்டின் மிக மூத்த பெண் துறவியான கோத்மலே ஸ்ரீ சுமேதா பிக்குணி. மசிங்களத்தில் பிக்குணி என்ற சொல்லே இல்லை என்பதையறிந்து அதிர்ச்சியாகிறது.

யாழ்ப்பாணம், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழர் வாழும் இடங்களில் உள்ள பள்ளிகளுக்குள் போதைப்பொருள்கள் சர்வ சாதாரணமாகப் புழங்குகிறது. தமிழ் மக்களின் மிகப்பெரிய அடையாளம் கல்விதான். தமிழ் மக்களின் கல்வி கல்விக்கூடங்களிலேயே அழிக்கப்படுவதாக வருத்தப்படுகிறார்கள் ஆசிரியத் தோழிகள்.
இலங்கையில் பல இனத்தவரும் பல மதத்தவரும் வாழ்வதால் அவரவர் கலாச்சாரத்துக்கு அமைவாகத் திருமணச் சட்டங்கள் உள்ளன. கண்டிய சிங்கள மக்களுக்குக் கரையோர சிங்கள மக்களிலிருந்து வேறுபட்ட சட்டமும், முஸ்லிம்களுக்கு அவர்களின் மதம் சார்ந்த இஸ்லாமிய சட்டமும், வட மாகாணத்தைச் சேர்ந்தவர்களுக்கு தேச வழமை சட்டமும் இருப்பதுடன், எல்லோருக்கும் பொதுவான சட்டமாகப் பொது திருமண சட்டமும் உண்டு. ஆண்களின் திருமண வயது 14 ஆகவும், பெண்களின் திருமண வயது 12 ஆகவும்தான் 1995 ஆம் ஆண்டு வரை இருந்திருக்கிறது. 1995 ஆம் ஆண்டின் சட்டத்திருத்தத்தின்படி ஆண், பெண் இருவருக்குமான ஆகக்குறைந்த திருமண வயது 18 ஆக உள்ளது. முஸ்லிம் சட்டம் இஸ்லாமிய ஆண் ஒருவர் நான்கு திருமணம் செய்துகொள்ள அனுமதி வழங்குகிறது.

பாரம்பரிய இலங்கையின் இசை மயக்கமூட்டுகிறது. தமிழர்கள் பரதநாட்டியத்தையே கலாச்சார நடனமாக ஏற்றுக்கொள்ள, கண்டிய நடனமும், வடிக பட்டுன நடனமும் சிங்கள கலாச்சார நடனங்களாக இருக்கின்றன. குடும்ப விழாக்களில் மது அருந்துவது இயல்பானதாக இருக்கிறது.

இலங்கையின் மிகப்பெரிய கலாச்சார நிகழ்வாக சிங்கள தமிழ் புதுவருடம் (சிங்களத்தில் அழுத் அவுருது) கருதப்படுகிறது. சிங்களத் தமிழ் புத்தாண்டுக் கொண்டாட்டங்களில் காலையில் பால் காய்ச்சி இனிப்புகளைப் பரிமாறிக் கொள்கின்றனர். ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி அன்று (போயா தினம்) விடுமுறை விடப்படுகிறது. புத்தரின் வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்வுகள் குறித்த நாட்கள் அனைத்தும் விடுமுறைதான். கி.மு. மூன்றாம் நூறாண்டு முதல் இலங்கையில் கொண்டாடப்பட்டு வரும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இலங்கையின் கண்டி தலதா மாளைகை பெரஹரா திருவிழாவில் கண்டி நகரமே விழாக்கோலம் கொள்கிறது. நல்ல மழைக்கான வேண்டுதலுக்காகவும் புத்தரின் பல் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட தினமாகவும் கருதி இத்திருவிழா கொண்டாடப்படுகிறது. மே மாதத்தில் வரும் முழு நிலவு பௌத்தர்களுக்கு மிக முக்கியமானது. புத்தரின் பிறந்த தினத்தைக் குறிக்கும் அந்த நாள், புத்த பூர்ணிமா, புத்த ஜெயந்தி அல்லது வெசாக் என்று அழைக்கப்பட்டு மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

இலங்கையில் தேசிய விளையாட்டு கைப்பந்தாக இருந்தாலும்கூட, அனைவருக்கும் பிடித்த விளையாட்டாக இருப்பது கிரிக்கெட். பிரதான கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் அன்று பொருளாதாரத்தை ஈட்டித்தரும் வணிகத் துறைகள் அனைத்தும் மூடப்படுவது சாதாரணமாகிவிட்டது. 1996 இல் இலங்கை ஆஸ்திரேலியாவை வென்று உலகக்கோப்பையைக் கைப்பற்றியபோது, ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் அளவிற்கு இருந்தது மக்களின் கொண்டாட்ட மனநிலை.

‘தமிழ் மக்களின் உருவத் தோற்றம், இந்தியா – இலங்கை சமயத் தொடர்பு, கலாச்சாரத் தொடர்பு, பழக்கவழக்கங்கள் அத்தனையும் பார்த்தால், இந்தியாவின் கடல் கடந்த மற்றொரு மாநிலமாகவே இலங்கையை எண்ணத் தோன்றுகிறது. இலங்கையர்களின் வாழ்வியல் முறைகள் ஒவ்வொன்றிலும் தென் இந்தியர்களின் வருகை வெளிப்படையாக செல்வாக்கு செலுத்துகிறது. இந்தியத் துணைக்கண்டத்துடன் இலங்கையின் கலாச்சாரமானது பின்னிப்பிணைந்துள்ளது.

(தொடரும்)

படைப்பாளர்:

ரமாதேவி ரத்தினசாமி

எழுத்தாளர், அரசுப்பள்ளி ஆசிரியர். பணிக்கென பல விருதுகள் வென்றவர். இவர் எழுதி வெளிவந்துள்ள ‘கனவுகள் மெய்ப்படட்டும்’ கட்டுரைத் தொகுப்பு பரவலாக கவனம் பெற்றுள்ளது. 2014, 2015ம் ஆண்டுகளில் ஐ நா சபையில் ஆசிரியர் பேச்சாளராகக் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார். அடுப்பங்கரை டூ ஐநா தொடரில் அவரது ஐ நா அனுபவங்களை நகைச்சுவையுடன் விவரித்திருக்கிறார். இந்தத் தொடர் ஹெர் ஸ்டோரீஸ் வெளியீடாகப் புத்தகமாக வெளிவந்து பாராட்டுகளைப் பெற்று வருகிறது. இலங்கை இவருக்கு இதில் இரண்டாவது தொடர்.