கற்றுக்கொள்வது கடினமானதன்று. கற்றுக்கொண்ட விஷயம் தவறு என அறிந்தவுடன், அதை மனதில் இருந்து விலகச் செய்வதுதான் கடினம். –மார்ட்டின் ஃபிஷர்
இந்தப் பூமியில், எல்லா உயிர்களும் கற்றுக்கொள்கின்றன. பறவைகள் கூடுகட்டவும் முட்டையிட்டு அடைகாக்கவும் கற்றுக்கொள்கின்றன. மாமிச உண்ணிகள், பிற விலங்குகளை வேட்டையாடக் கற்றுக்கொள்கின்றன. தாவர உண்ணிகள், எந்தெந்த தாவரத்தை உண்ணலாம் எனக் கற்றுக்கொள்கின்றன.
எல்லா விலங்குகளும் தங்களுக்கு வரும் அபாயங்களிலிருந்து தங்களைப் பாதுகாக்கவும் கற்றுக்கொள்கின்றன. இப்படி ஒவ்வொரு விலங்கும் தான் வாழ்வதற்குத் தேவையானவற்றை, அவற்றிற்குரியவற்றை மட்டும் கற்றுக்கொண்டு, அதை வாழ்தலுக்குப் பயன்படுத்திக்கொள்கின்றன.
ஆனால். மனிதன் அப்படியல்ல, மனிதனுக்கு இதைத்தான் கற்றுக்கொள்ள வேண்டும் என்று இல்லை. தனக்குத் தேவை இல்லாததையும் கற்றுக்கொள்கிறான். தெரிந்தோ தெரியாமலோ தன்னுடைய வளர்ச்சிக்குத் துணைபுரியாத விஷயங்களையும் தன்னுடைய நலனுக்கு உதவாத, தனக்கு மகிழ்ச்சியைத் தராத விஷயங்களையும் கற்றுக்கொள்கிறான். மேலும் அவ்வாறு கற்றுக்கொண்டதை மறப்பதும் மனிதனுக்கு எளிதாக இல்லை.
அந்தக் குடும்பம் சென்னைபோன்ற ஒரு நகரத்தில் வாழ்ந்துவந்தது. அப்பாவும் அம்மாவும் பிள்ளைகள் நலனில் அக்கறை உள்ளவர்களாகவே இருந்தார்கள். அவர்களின் குழந்தை, பானுவுக்கு ஆறு வயது. அது நகரம் என்பதால், அவர்கள் வீட்டில் தங்கியிருந்து படிப்பதற்காக, கிராமத்தில் இருந்து அவர்களது உறவுக்கார இளைஞன் வருகிறார்.
அந்த உறவுக்கார இளைஞனால், அந்தக் குழந்தை பாலியல்ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாகிறாள். குழந்தை சென்று தாயிடம் முறையிடுகிறாள். தாயின் அறியாமையினால், கிராமத்துக்காரன் எல்லாம் உத்தமன் என்ற எண்ணத்தில் குழந்தையிடம், “இதெல்லாம் உனக்கு எப்படித் தெரியும்? சின்ன புள்ள,சின்ன புள்ள மாதிரி பேசு” என அதட்டுகிறார்.
குழந்தைக்கு அம்மாவின்மீது கோபமும் வெறுப்பும் வருகிறது.
சில மாதங்களுக்குப் பிறகு, ஒரு திருமணத்திற்காக உறவினர்கள் எல்லோரும் சேர்ந்து வெளியூர் போக நேர்கிறது. அப்போது, காரில் இடம் இல்லாததால், அந்தக் குழந்தையை, அதே நபரின் மடியில் அம்மா உட்காரவைக்கிறார். அம்மாவின் கட்டாயத்தின் பேரில், தனக்குத் தீங்கு செய்தவனின் மடியில் உட்கார்ந்த குழந்தைக்கு, இயலாமையினால் அவமானமாக போய்விட்டது. அம்மாவின் மீதான வெறுப்பு பன்மடங்கு ஆகிறது.
குழந்தை, இந்த நிகழ்ச்சியின் மூலம் கற்றுக்கொண்ட விஷயங்கள் இதுதான். தான் பாதுகாப்பாக இல்லை. தன்னுடைய அம்மா தனக்கு தீமைதான் செய்வார்.
குழந்தை பானு வளர்கிறாள். 21 வயதில் அம்மா பார்த்த மாப்பிள்ளையுடன் திருமணம் நடக்கிறது. திருமண வாழ்வில் மகிழ்சியாக வாழ முடியவில்லை. அம்மா பார்த்து வைத்த திருமணம் என்பதால் கணவரிடம் அதே வெறுப்பும் கோபமும் தொடர்கிறது.
ஆறுதல் தேடி வந்தபோது பானுவுக்கு வயது 25. அம்மா தனக்கு திருமணம் செய்து வைத்தது, தன் மீது இருந்த அன்பினால் என்பதும் தன்னுடைய கணவர் தன்னை நன்றாகக் கவனித்துக்கொள்வதால் அவர் மீதான வெறுப்பும் கோபமும் நியாமற்றது என்பதும் அவருடைய புத்திக்குத் தெரிந்தே இருந்தது. ஆனால், அதைச் செயல்படுத்த முடியவில்லை.
நமக்குத் தோன்றலாம், இது எளிதான விஷயம்தானே? இதை ஏன் பானுவால் செயல்படுத்த முடியவில்லை என்று…
ஒரு முறை நண்பர்களுடன் குடும்பமாக ஊட்டிக்கு டூர் போயிருந்தோம். அங்கே இரண்டு மலைக்குன்றுகளை இணைத்து ரயில் பாதை. கீழே ஆறு. அந்த ரயில் பாதையில் பயணிகள் நடந்துசென்றார்கள். தோழியின் கணவரும் உற்சாகத்தோடு சிறிது தூரம் நடந்துவிட்டார். அப்படியே அவர் பார்வை கொஞ்சம் கீழே போனது. அவ்வளவுதான், உடனே கால்கள் நடுங்க ஆரம்பித்துவிட்டன. திரும்பினால் போதும் என்றாகி விட்டது அவருக்கு. பயத்தின் காரணமாக, தவழ்ந்தவாறே திரும்பி வந்தார்.
அவருக்கு நன்றாகவே புரிகிறது , அந்த இடம் போதுமான பாதுகாப்புடனே கட்டப்பட்டிருக்கிறது என்பதும், தன்னைச் சுற்றி நிறைய பேர் இருக்கிறார்கள் என்பதும், தான் கீழே விழ மாட்டேன் என்பதும். ஆனால், அதையும் மீறி பயமும் நடுக்கமும் எப்படி வருகிறது?
நம்மிலும் நிறைய பேர் பல்லி, கரப்பான் பூச்சியைப் பார்த்தால் பயப்படுவதும், உயிரே போவது போல் அலறுவதும் ஏன்? அவற்றால் நமக்குப் பாதிப்பு ஏதும் இல்லை என நம் மூளைக்குத் தெரியும்தானே?
எப்போதோ அத்துமீறிய நபரைப் பார்த்து, இப்போதும் பயப்பட வேண்டிய அவசியம் என்ன? இப்போது வளர்ந்துவிட்டோம் தானே? எதிர் எதிரே நின்று கேள்வி கேட்பது சாத்தியம் எனப் புத்திக்குத் தெரியும், ஆனால், செய்ய முடிவதில்லையே.
அதே போன்றுதான் பானுவுக்கும், 4 வருடங்கள் வாழ்ந்த பிறகு, கணவர் நல்லவர்தான் எனப் புரிகிறது. ஆனால், அம்மா பார்த்து வைத்தவர் என்பதால், அவரைப் பார்த்ததும் எரிச்சல் வருகிறது. ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
வாழ்க்கையில் நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்திச் சென்ற சம்பவங்கள்,நமக்கு அவமானமானத்தை தந்து சென்ற நிகழ்வுகள், நம்மையும் மீறி நம்மைச் செயல்பட வைக்கும். ஏனென்றால், நமக்குப் பயன்தராத எண்ணங்களையும் சில பழக்கங்களையும் கற்றிருப்போம்.
சரி, இதில் இருந்துஎப்படி வெளியே வருவது?
முதலில் கற்றுக்கொண்ட அந்த விஷயங்களை மனதில் இருந்து அகற்ற வேண்டும். மீண்டும் புதிதாக, நமக்கு நன்மை தருபவற்றைக் கற்றுக்கொள்ள வேண்டும். இதற்கு கவுன்சிலிங் மற்றும் தெரப்பி முறைகளும் உதவி செய்கின்றன.
உதவி கேட்டு வந்த பானுவுக்கு, இப்போதும் அவருடைய அம்மாவின் கட்டாயத்தின் பேரில், இயலாமையினால்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்ற எண்ணம் மனதில் இருந்து அகற்றப்பட்டது. அவருடைய வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள அல்லது அவர் விரும்பும்படி அமைத்துக்கொள்ள அவருக்கு முழு உரிமையும் இருக்கிறது எனப் புதிதாக்க் கற்றுக்கொண்டார்.
அம்மா, தன்னை வற்புறுத்தி உட்கார வைத்த மடி வேறு. அம்மா, தன்னை திருமணம் செய்து கொடுத்த நபர் வேறு என்பதை தெரப்பி மூலமாக எளிதாக ஏற்றுக்கொண்டார். முடிவில் அவருடைய திருமண வாழ்வு என்பது அவர் முழுமனதுடன் எடுத்த தேர்வாக இருந்தது. மேலும் அம்மாவுடனான, கணவருடனான உறவை சீர்படுத்திக்கொண்டார்.
பாலியல்ரீதியான துன்புறுத்தலுக்கு உள்ளான குழந்தைகளுக்கு, அவை மனதளவில் பெரிய பாதிப்பையே விட்டுச் செல்கின்றன. பெரியவர்கள் ஆனாலும் அதன் பாதிப்பிலிருந்து, எளிதில் வெளிவர முடிவதில்லை.
சில உடல்ரீதியான, உணர்வுரீதியான துன்பங்களும் அவ்வாறே. அவை தருகின்ற அதிர்ச்சியிலிருந்து, அவ்வளவு எளிதில் வெளி வர முடிவதில்லை.
இவற்றிலிருந்து மீண்டுவர தெரப்பி முறைகள் பரிந்துரைக்கப்பட்டாலும், தாமாகவே வெளிவர விரும்புபவர்கள், தங்களுடைய எண்ணங்களில் சில மாற்றங்களைச் செய்து முயற்சிக்கலாம். ஏனென்றால், காலம் காயங்களை ஆற்றும் என்பது இந்த மாதிரியான காயங்களுக்குப் பொருந்துவதில்லை.
முக்கியமாக, அந்தசம்பவம் கடந்துவிட்ட ஒன்று என்பதை நினைவில் வையுங்கள். இப்போது இந்தக் கணத்தில் வாழ்வதுதான் உண்மை என்பதையும், இந்தப் பொழுது தருகின்ற பாதுகாப்பையும் முழுமையாக உணருங்கள்.
இதில் உங்கள் தவறு எதுவும் இல்லை. அடுத்தவர் செய்த ஒரு தவறுக்கு நீங்கள் உங்களை இழிவாகவோ குறைவாகவோ கருத வேண்டியதில்லை. குற்ற உணர்வுக்கு இடமே இல்லை. உங்கள் மீதான அதிகாரம், உங்களிடம் மட்டுமே உள்ளது. எனவே அடுத்தவர் என்ன நினைப்பார்கள் என வருந்தாதீர்கள்.
இது குறித்துப் பேச ஆரம்பியுங்கள். உதவி தேடிச் செல்லும் போது,நீங்கள் இந்த விஷயங்களைப் பகிர்ந்துகொள்ளப் போகும் நபர், உங்கள் நம்பிக்கைக்குரியவரா எனவும் உங்களைப் பற்றி முழுவதுமாகத் தெரிந்துகொள்ள தகுதியுள்ளவர்தானா என்பதையும் உறுதி செய்தபின், அவரிடம் உங்களுக்கு நடந்ததைப் பற்றிச் சொல்லுங்கள். பேசும்போது ரகசியம் தரும் பாதிப்பின் வீரியம் குறையும்.
ஆமாம் நடந்துவிட்டது. அதனாலென்ன? உங்களுக்காக நீங்கள் எப்போதும் இருக்கிறீர்கள் எனச் சொல்லிக்கொள்ளுங்கள். உங்களுக்கு நிறைய நிறைய அன்பைத் தாருங்கள். உங்கள் அன்பு முழுவதும் முதலில் உங்களுக்குத்தான். அதற்கு நீங்கள் முற்றிலும் தகுதியானவர்.
நாம் கற்றுக்கொண்ட விஷயங்கள் எதுவாக இருந்தாலும், அவை எப்போது நம்முடைய வளர்ச்சிக்குத் துணை நிற்கவில்லையோ நமது வாழ்வில் மகிழ்ச்சியைத் தரவில்லையோ அப்போதே அதை அழித்துவிடவும், புதிதாக்க் கற்றுக்கொள்ளவும் நம்மை திறந்த மனதுடன் வைத்துக்கொண்டு, என்றென்றும் வாழ்வைக் கொண்டாடலாம். வாங்க!
(தொடரும்)
படைப்பாளர்:
ஜான்சி ஷஹி
மனநல ஆலோசகர். மன நலத்திற்கான தெரப்பிகளையும் ஆற்றுப்படுத்துதலையும் வழங்கி வருகிறார். வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழவும், பிடித்த எதிர்காலத்தை அமைத்துக்கொள்ளவும், பொது மக்களுக்கு பயிற்சிப் பட்டறைகளை நடத்திவருகிறார். இவர் பெங்களூர் கிரைஸ்ட் பல்கலைக்கழகத்தில் மாணவர் மன நல ஆலோசகராக (student counsellor) பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.