பெண் உடல் உறுப்புகளில் கருப்பை இன்றியமையாதது.கருப்பையின் அடிப்பகுதியே கருப்பைவாய். கருப்பையின் வாசல்தான் இந்த கருப்பைவாய்.கருப்பைவாய் வழியாகத்தான் கருப்பைக்குள் செல்லமுடியும். பெண்களின் மாதசுழற்சி காலத்தில் கருப்பைவாயின் வழியாகத்தான் உதிரம் வெளியே வருகிறது. உடல்உறவின் போதும் விந்தணுக்கள் கருப்பைவாய் வழியாகத்தான் கருப்பையினுள் சென்று, கருக்குழாயை அடைந்து, அங்கே கருமுட்டையைச் சந்திக்கிறது. இந்தக் கருப்பைவாய் ஆனது கருப்பையைப் போலவே சுருங்கிவிரியும் தன்மை உடையது. அதனால்தான் கர்ப்பமாக உள்ளபோது கருப்பையினுள் இருக்கும் குழந்தை வெளியே வந்துவிடாதபடி கருப்பைவாய் மூடிக்கொள்ளும். குழந்தை பிறப்பதற்கான சரியான நேரம் வரும்போது இந்தக் கருப்பைவாயானது குழந்தை வெளியேவர தேவையான அளவு விரிந்து கொடுத்து, குழந்தை வெளியேவர வழிவிடுகிறது. இத்தகைய சிறப்புமிக்க கருப்பைவாய் பராமரிப்பு பெண்களுக்கு இன்றியமையாதது.


கருப்பைவாய் பகுதியில் உள்ள செல்கள் இயல்பு நிலையை மீறி கட்டுப்பாடற்ற ஒழுங்கற்ற முறையில் பெருகுவதையே கருப்பைவாய் புற்றுநோய் என்கிறோம். ஆரம்ப நிலையில் இதைக் கண்டறிந்தால் முற்றிலும் குணம் அடைய முடியும். ஆரம்ப நிலையில் தவறவிட்டுவிட்டால் இந்நோய் நாளடைவில் முற்றி அதனைச் சுற்றியுள்ள மற்ற உறுப்புகளுக்கும் பரவும். இதனால் உறுப்புகள் செயலிழந்து இறப்பை ஏற்படுத்தும்.


இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் இப்புற்றுநோயினால் பாதிக்கப்படுவதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. அதிலும் குறிப்பாக தென் மாநிலங்களில் உள்ள பெண்களுக்கு இதன் தாக்கம் அதிகமாக இருப்பதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இந்நோய் பெரும்பாலும் முப்பது வயதிற்கு மேற்பட்ட பெண்களை அதிகமாகத் தாக்குகிறது.

கருப்பைவாய் புற்றுநோய் ஒரு தொற்றுநோய் அல்ல என்பதை நினைவில்கொள்வோம். ஆனால், ஆரம்ப நிலையில் கண்டறியாமல் விட்டுவிட்டால் இது மரணத்தைத் தரக்கூடியது என்பதையும் நாம் நினைவில்கொள்ள வேண்டும்.

கருப்பைவாய் புற்றுநோய் வருவதற்கான காரணங்கள்:

1)கருப்பைவாய்ப் பகுதியில் நீண்ட நாட்களாக இருக்கும் ஆறாதபுண்.
2) புகைப்பிடித்தல், புகையிலை பழக்கம்.
3) HPV (பாப்பிலோமா வைரஸ்) வைரஸ் கிரிமியால் (HPV 16,18,31,35,39,45,51,52 வகை) ஏற்படும் தொற்று.
4) வளர்இளம் பருவத்திலேயே உடலுறவு கொள்ளுதல்.
5) பலருடன் உடலுறவுகொள்ளுதல்.
6) சுகாதார குறைவு, தன் சுத்தம் பேணாமை.
7) அதிகமான பிள்ளைப்பேறு.
8) அதிகமான கருக்கலைப்பு.
9) குறைவான நோய் எதிர்ப்பு சக்தி.
10) அக்கி, கிளாமைடியா, ட்ரைகோமோனாஸ் தொற்றுநோய்கள்.
11) ஊட்டச்சத்து குறைபாடு.
12) கர்பத்தடை மாத்திரைகளை அதிக அளவில் உட்கொள்ளுதல்.தற்காப்பு :


1) வளர்இளம் பருவத்தில் உடலுறவு கொள்ளாமல் இருத்தல் வேண்டும். இப்பருவம் நமது எதிர்கால வளர்சிக்கான பருவம் என்பதை வளர்இளம் பருவத்தினர் உணர்ந்து படிப்பிலும் அறிவை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்தவேண்டும்.
2) பாதுகாப்பான உடல் உறவு.
3) பலருடன் உடல் உறவுகொள்வதைத் தவிர்த்தல்.
4) கருப்பைவாய் பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ளுதல்.
5) பிறப்புறுப்புகளைத் தூய்மையாக வைத்திருத்தல்.

கருப்பைவாய் புற்றுநோயின் அறிகுறிகள் :


1)மாதசுழற்சி உதிரப்போக்கு அல்லாத நேரத்திலும் அடிக்கடி உதிரப்போக்கு ஏற்படுதல்.
2) மாதசுழற்சி உதிரப்போக்கு முடிந்த பிறகும் சிறிது சிறிதாய் உதிரப்போக்கு ஏற்படுதல்.
3) அதிக அளவு வெள்ளைப்படுதல்.
4) துர்நாற்றமுடன் வெள்ளைப்படுதல்.
5) உடலுறவிற்குப் பின் பிறப்புறுப்பில் இருந்து ரத்தம் வெளியேறுதல்.
6) அடி முதுகு வலி, அடி வயிறு வலி.
7) பசியின்மை.
8) உடல் எடை குறைதல்.

கருப்பைவாய் புற்றுநோய் வரும்முன் கண்டறியும் திட்டம்:


கருப்பைவாய் புற்றுநோயை வரும்முன் கண்டறிய பல வழிமுறைகள் இருப்பினும் எளிய பரிசோதனை முறையான VIA/VILI (வயா/விளை) மூலம் இதனை கண்டறிய  முடியும்.


இப்பரிசோதனை முறை மிக எளிதானது, துரிதமானது,வலியில்லாதது. விளக்கு வெளிச்சத்தில் கருப்பைவாய் முதலில் பார்க்கப்படும். அசிட்டிக் அமிலம், லூகால்ஸ் அயோடின் திரவங்களை ஒன்றன்பின் ஒன்றாகக் கருப்பைவாயில் தடவிய பின்னர் ஏற்படும் நிறமாற்றங்களைக் கொண்டு புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள் கண்டறியப்படும்.
ஆரம்ப ஆய்வு பரிசோதனையில் புற்றுநோய் சாத்தியக்கூறுகள் இருந்தால் கால்போஸ்கோப்பி (colposcopy) கருவி மூலம் கருப்பைவாய் பரிசோதிக்கப்படும். இதில் கருப்பைவாயில் உள்ள ரத்தஓட்ட நாளங்களில் ஏற்படும் மாற்றங்கள் கொண்டு புற்றுநோய் அறிகுறிகள் உறுதிசெய்யப்படும். அவ்வாறு அறிகுறிகள் உறுதிசெய்யப்பட்டால் கருப்பைவாயின் திசுவை எடுத்து திசு பரிசோதனை செய்யப்படும். திசு பரிசோதனையின் அடிப்படையில் உறுதி செய்யப்பட்டு சிகிச்சை தொடங்கப்படும்.

சிகிச்சை:  

புற்றுநோய் உறுதி செய்யப்பட்டபின் அது எந்த நிலையில் உள்ளது என்பது வகுக்கப்படும். புற்றுநோய்க்கு முந்தைய ஆரம்ப நிலையில் மூன்று நிலைகள், புற்றுநோயில் நான்கு நிலைகள் என மொத்தம் ஏழு நிலைகள் உள்ளன. இதில் எந்த நிலையில் புற்றுநோய் உள்ளது என்பது வகுக்கப்பட்டு இதற்கு தகுந்தாற்போல் ஒவ்வொரு நிலைக்கும் ஏற்றவாறு சிகிச்சை அளிக்கப்படும்.

காப்போம் காப்போம்
கருப்பைவாய் காப்போம்!


செய்வோம் செய்வோம்
கருப்பைவாய் பரிசோதனை செய்வோம்!

படைப்பாளர்:

மருத்துவர் அனுரத்னா. இவர் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவராகப் பணியாற்றுகிறார். ஓய்வு நேரங்களில் விளிம்புநிலை மக்களை அவர்கள் இருப்பிடத்துக்கே தேடிச்சென்று மருத்துவ உதவி வழங்குகிறார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மூலமாக சமூகத்தில் அறிவியல் சிந்தனைகளை பரப்பிவருகிறார். பெண்கள் மற்றும் இதர ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியல் போராட்டங்களில் பங்குகொள்கிறார். மனிதி அமைப்பின் உறுப்பினராக உள்ளார். கட்டுரைகள் மற்றும் கவிதைகள் எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். 2012ம் ஆண்டு வெளிவந்த “மனிதநேய மாமுனிவர்” என்ற நூலின் ஆசிரியர்.