திறன்பேசியில் இரண்டு சிம்கள் இருந்தால் ஒன்று வாட்ஸ்அப்புக்கு மற்றொன்று வாட்ஸ்அப் பிஸினஸ்க்கு என்றே பலர் உபயோகிக்கிறார்கள்.  இன்னும் சிலர் வாட்ஸ்அப்பில் புலிக்குட்டியை விற்கும் தொழில் செய்ய முயன்று கைதாகிறார்கள். இப்படி எல்லாம் இல்லாமல் வாட்ஸ்அப்பைப் பயன்படுத்தி தங்கள் தொழிலை வளர்த்தவர்கள் பலர்.  இந்த வாட்ஸ்அப் சார்ந்த சந்தையை யார் கவனிக்கிறார்களோ இல்லையோ, வாட்ஸ்அப் கவனிக்கிறது. கர்நாடக கிராமத்தில் இருந்து ஆர்கானிக் வாழைப்பழம் விற்கும் விவசாயி ஸ்ரீநிதியும் அமெரிக்க ரிட்டர்ன் சாம்பவியும் தொழில் முனைவோர் ஆன கதைகளைத் தெரிந்துவைத்திருக்கிறது. வாட்ஸ்அப்பின் இந்திய வாட்ஸ்அப் வெற்றிக் கதைகள் பக்கத்தைச் சென்று பார்த்தால் அதில் பாதியளவு பெண் தொழில் முனைவோர்களின் வெற்றிக் கதைகள்தாம்!.

பெண்கல்வி குறித்த விழிப்புணர்வு அதிகம் உள்ள மாநிலம் தமிழ்நாடு. ஆனால், பொருளாதார ரீதியான அவசியம் இல்லாதபட்சத்தில் அதே பெண் வேலைக்குச் செல்வது அப்படி ஒன்றும் எளிதில்லை. குறிப்பாகத் திருமணத்திற்குப் பிறகு. அதிலும் சரியாகச் சொல்வதென்றால் குழந்தை பிறந்த பிறகு. படிப்பது குழந்தைக்குப் பாடம் சொல்லித் தர என்கிற அளவில்தான் பெரும்பாலும் பெண்களின் கல்வி உதவுகிறது இங்கே.  ஆனால், பெண்கள் தொடர்ந்து தன் காலில் நிற்கவும் சம்பாதிக்கவும் முயன்று கொண்டேதான் இருக்கிறார்கள். பக்கத்து வீட்டுப் பிள்ளைகளுக்கு டியூஷன் எடுப்பது, சுடிதார் பிளவுஸ் தைப்பது என வீட்டில் இருந்தே பணம் ஈட்ட முயல்கிறார்கள். இதில் வாட்ஸ்அப் தொழில்நுட்பம் ஒரு புதிய கதவைத் திறந்துவிட்டது. வீட்டில் இருந்துகொண்டே பல பெண்கள் வெற்றிகரமான தொழில் முனைவோராக வலம்வருகிறார்கள். மெசேஜிங் செயலியாக மட்டும் இருந்த வாட்ஸ்அப் ஆண், பெண் பேதமின்றி வணிக நோக்கில் அதிகம் பயன்படுத்தப்பட்டதால் அறிமுகமானதுதான் வாட்ஸ்அப் பிஸினஸ்.

இரண்டாயிரத்து ஒன்பதாம் ஆண்டு பிரையன் ஆக்டன், ஜேன் கோம் இணைந்து வாட்ஸ்அப்பை உருவாக்கினார்கள். முன்னாள் யாகூ பணியாளர்கள் இவர்கள்.

ஸ்டேட்டஸ் காட்டும் செயலி என்பதுதான் தொடக்கம். ஐபோன் பாப் அப் நோட்டிபிகேஷன் வந்த பிறகு நண்பர்கள் ’பல்லு விளக்குகிறேன், பவுடர் போடுகிறேன்’ என அடிக்கடி ஸ்டேட்டஸ் மாற்றி வேடிக்கையாக விளையாட செயலி ஹிட்டாகிவிட்டது. ஸ்டேட்டஸ் காட்டும் செயலி உடனடி தகவல் பறிமாறும் மெசேஜிங் செயலி ஆனது இப்படித்தான். தகவல் மட்டுமின்றி, படம், வீடியோ, ஃபைல் எனப் படிப்படியாக எல்லாவற்றையும் பறிமாறிக்கொள்ளும்படி வளர்ந்தது. 2014ஆம் ஆண்டு ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமாக மெட்டா வசம் வந்தது வாட்ஸ்அப். சிறு குறு வணிகர்களுக்காக வாட்ஸ்அப் பிஸினஸ் அறிமுகமானது 2018இல். தமிழில் என்வினவி, புலனம், கட்செவி அஞ்சல், பகிரி போன்ற வார்த்தைகள் வாட்ஸ்அப்பைக் குறிக்க பயன்படுத்தப்படுகின்றன.

வாட்ஸ்அப் பிஸினஸில் உள்ள சில வசதிகளைத் தெரிந்துகொள்ளலாம். உங்கள் தொழில் சம்பந்தமான பிஸினஸ் ப்ரபைலை உருவாக்க முடியும் என்பது முதல் வசதி. வாட்ஸ்அப் பிஸினஸ் ஆப்பை நிறுவிய பிறகு, வலது மூலையில் உள்ள மூன்று புள்ளிகளைத் தொட்டால் வரும் பிஸினஸ் டூல்ஸை அழுத்தினால் பிஸினஸ் ப்ரபைல் ஆப்ஷனைக் காண்பிக்கும். இதில் தொழில் பெயர், முகவரி, மேப், தொலைபேசி எண், வேலை நேரம் போன்ற அடிப்படை தகவல்களைப் பதிவு செய்துகொள்ளலாம். வாடிக்கையாளருக்குத் தேவைப்படும் எல்லா அடிப்படைத் தகவல்களும் எளிமையாகக் கிடைக்க இது ஒரு சிறந்த வழி.

அடுத்ததாக கேட்டலாக் எனும் வசதி இருக்கிறது. இதில் பொருள்களை விற்பவர்கள், அந்தப் பொருளின் படம் விவரம் விலை போன்ற தகவல்களை பட்டியலிடலாம். பொருள்களை விற்காமல் கார் வாஷ், அழகு நிலையம், ப்ளம்பிங் வேலைகள் போன்ற சேவை தொடர்பான தொழிலாக இருந்தாலும், தொடர்புடைய படம், விவரம் போன்றவற்றைப் பட்டியலிட்டு வைக்கலாம். வாடிக்கையாளர் வாங்க வேண்டும் என நினைத்தால் படங்களைத் தேர்ந்தெடுத்து சுலபமாக ஆர்டர் கொடுக்க முடியும்.

புதிதாக வந்த ஆர்டர், முடிந்துவிட்ட ஆர்டர், பணபாக்கி விவரம் போன்றவற்றை லேபிள் செய்யும் வசதியும் இருக்கிறது. இதனால் சுலபமாக தகவல்களைத் தொகுத்து வைத்துக்கொள்ள முடியும். பணம் வராத ஆர்டர்கள் பட்டியல், முடிக்காத ஆர்டர் பட்டியல் எனச் சுலபமாகப் பட்டியல்களைப் பார்த்து வேலையை அதற்கேற்ப வகுத்துக்கொள்ளமுடியும்.  கீழே உள்ள கூட்டல் குறியீட்டை அழுத்தி புதிதாக லேபிள்களை உருவாக்கவும் முடியும். பொருளை அனுப்பியாகிவிட்டது. வாடிக்கையாளர் இன்னும் பின்னூட்டம் அளிக்கவில்லை என்றால் அதை லேபிள் செய்துகொள்ளலாம். வாரத்திற்கு ஒருமுறை பின்னூட்டம் அளிக்காத வாடிக்கையாளர் அனைவரையும் தொடர்புகொண்டு பின்னூட்டம் அளிக்கும்படி கேட்கலாம்.

வாடிக்கையாளர்கள் அடிக்கடி கேட்கும் ஒரே மாதிரி கேள்விகளுக்க ஒரே மாதிரி பதிலைத் திரும்பத் திரும்ப தட்டச்சு செய்யாமல் உடனடி பதில் வசதியைப் பயன்படுத்தி பதிவுசெய்து வைக்கலாம். குயிக் ரிப்ளை எனும் ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்து ஷார்ட்கட்டில் /1 என டைப் செய்து கீழே நன்றி வாக்கியத்தைத் தட்டச்சு செய்யுங்கள். வாடிக்கையாளருக்கு நன்றி சொல்ல வேண்டும் என்றால் /1 அழுத்தினால் நன்றி செய்தி முழுவதும் வந்துவிடும். கூட்டல் குறியை அழுத்தி /2 /3 /a /b என எத்தனை வேண்டுமோ அத்தனை உடனடி பதில்களைப் பதிந்துகொள்ளலாம்.

கடை திறக்கும் முன்பே ’பன்னு வேணும் ரொட்டி வேணும்’ எனச் சில வாடிக்கையாளர்கள் அன்புத் தொல்லை தரலாம். வேலை நேரம் இல்லாத சமயங்களிலோ அல்லது நாம் வெளியில் இருக்கும் சமயங்களிலோ வரும் வாடிக்கையாளர் கேள்விகளுக்கு, அவே மெசேஜ் வசதியைப் பயன்படுத்தலாம். ’இப்போது பதிலளிக்க இயலாது. இத்தனை மணிக்கு உங்களை தொடர்பு கொள்கிறோம் என்பது மாதிரி நாம் பதிவு செய்து வைத்திருக்கும் பதில் தானாகவே சென்றுவிடும்.’ அதைப் போலவே வரவேற்பு செய்தி அல்லது அறிமுகக் குறிப்பு போன்று எதேனும் இருந்தால் வெல்கம் மெசேஜ் ஆக பதிந்து வைத்துக்கொள்ளலாம்.

பிஸினஸ் டூல்ஸ் பக்கத்தின் வலது மூலையில் உள்ள செட்டிங்ஸில் வந்த மெசேஞ்கள், அனுப்பியது, படித்தது எத்தனை எத்தனை போன்ற புள்ளி விவரங்களைத் தெரிந்துகொள்ள முடியும். அடுத்துள்ள ஷார்ட் லிங்கை சொடுக்கினால் பிஸினஸ் கணக்கிற்கான லிங்க், க்யூஆர் கோட் வசதிகளைப் பெறலாம்.

கால் டு ஆக்ஷன், சாட் பாட் வசதியும் இருக்கிறது. அடுத்ததாக வாட்ஸ்அப் வழியே பணம் செலுத்தும் வசதியும் அறிமுகமாகியுள்ளது. தொழில்நுட்பம் எதுவாக இருந்தாலும் தரமும் புதுப்புது யோசனைகளும் அவசியம். தமிழக கிராமமான சின்னாளப்பட்டியில் காகிதத்தை வைத்து கலைப்பொருட்கள் செய்யும் போலியோவால் பாதித்த குணவதி மேலும் சில பெண்களுக்கு வேலைவாய்ப்பளித்து வழிகாட்டுகிறார். குணவதியின் வெற்றி ரகசியம் வாட்ஸ்அப் மட்டும் அல்ல. உழைப்பும் தன்னம்பிக்கையும் கூட.

(தொடரும்)

படைப்பாளர்:

இரா. கோகிலா. இளநிலை கணிப்பொறி அறிவியல் படித்தவர். சிறுவயதில் இருந்தே வாசிப்பில் ஆர்வம் உண்டு. புனைவுகளில் ஆரம்பித்த ஆர்வம் தற்போது பெரும்பாலும் பெண்ணியம், சமூகம், வரலாறு சார்ந்த அபுனைவு வகை புத்தகங்களின் பக்கம் திரும்பியிருக்கிறது. பயணம் செய்வது பிடிக்கும்.  கல்விசார்ந்த அரசுசாரா இயக்கங்களில் தன்னார்வலராகச் செயல்படுகிறார்.