மகிழ்ச்சியாக வாழ்வதற்குப் பணம் தேவையற்றது என்று மிக எளிதாக அடித்துவிட்டுப் போய்விட முடியும். மகிழ்ச்சியாக இருப்பதற்குப் பணம் தேவையில்லாமல் இருக்கலாம். ஆனால், பணம் இருக்கும் இடத்தில் மகிழ்ச்சி பறிபோவதற்கு அதுவே காரணமாகிவிட முடியும். முக்கியமாக நவீன சமூக அமைப்பில் ஆண், பெண், பால்புதுமையினர் ஆகிய அனைவர் உறவிலும் பணம் வகிக்கும் பங்கு மிக முக்கியமானது. குடும்ப அமைப்புகளில் நிலவும் இல்லத்து வன்முறைகள், ஆணாதிக்கம் போன்ற பல்வேறு சவால்களை அலசி ஆராய்கிறோம். பல பிரச்சினைகளுக்கு நாம் ஓரளவு தீர்வுகளையும் முன்வைக்கிறோம். திருமண உறவில் வன்புணர்வு, மனைவியின் வீட்டுவேலைகளுக்குச் சம்பளம் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்பது வரையில் பேசுபொருள்களில் முன்னேறியிருக்கிறோம்.

குடும்ப வாழ்வில் அல்லது உறவில் உருவாகும் பல பிரச்சினைகளுக்கும் விரிசல்கள், மனஅழுத்தங்களுக்கும் காரணமாக இருக்கும் ஒரு விடயத்தைப் பற்றி நாம் அவ்வளவாகப் பேசுவதில்லை. இன்னும் சொன்னால், அதனை ஒரு பிரச்சினையாகவே யாரும் கருதுவதில்லை. அதுதான்பணம்!

தன்னைவிடவும் அதிக சம்பளம் வாங்குவதற்காகவே குழந்தைப் பராமரிப்பு, வீடு என்கின்ற காரணங்களைச் சுமத்தி மனைவி வேலைக்குச் செல்வதைத் தடுக்கும் கணவர்களை எல்லாம் சமூகம் மிக எளிதாக ஏற்றுக்கொள்ளப் பழகிவிட்டது. குழந்தைகளைக் காரணமாகச் சொல்லிக்கொண்டு வேலைக்குப் போவதிலிருந்து நின்றுவிட்டதை மிகச் சாதாரணமாக, ஏன் பெருமையாகவே தம்பட்டம் அடிக்கும் பெண்கள்கூட நம் மத்தியில் இருக்கவே செய்கிறார்கள். பிள்ளைகளுக்காகத் தன் கல்வியை, தொழிலை, கனவுகளைத் தியாகம் செய்த தனக்கு ’நல்லதாய்’ என்கின்ற மெச்சுதல் தவிர வேறெந்த வெகுமதியும் கிடைக்காதென்பதை அந்தப் பெண் உணரும் காலத்தில் அவரைவிட்டு அவர் நம்பிய எல்லாமே விலகித் தூரமாகியிருக்கும்.
இது ஒரு வகை. இன்னொரு வகையினரும் இருக்கிறார்கள்.

மிக இணக்கமான தம்பதியர் என நான் மதிப்புக்கொண்டிருக்கும் இணையரில் ஆண் இப்படிக் கூறுவார், ”அவ எவ்வளவு சம்பாதிக்கிறா, என்ன சம்பாதிக்கிறா, இது எதுவும் எனக்குத் தெரியாது. நான் கேட்டதுமில்லை.” அவர் தனது மனைவி சம்பாதிப்பதற்கும் செலவு செய்வதற்குமான உரிமையை மதிக்கிறார் என்ற வகையில் அவரின் நிலைப்பாட்டை நான் மிகவும் சரியென்றே நம்பியிருந்தேன். இதுபோலத்தான் பலபெண்களும், ”என் கணவர் சம்பளம் பற்றியெல்லாம் எனக்குத் தெரியாது. வீட்டுச் செலவுக்கென்று மாதம் இவ்வளவை ஒதுக்கிடுவார்” என்றுகூறுவதைக் கேட்டிருக்கிறேன். அப்போதெல்லாம், அவர் இணையர் தம் மனைவி, குடும்பத்தை நன்றாகப் பார்த்துக்கொள்கிறார் என்பதோடு என் சிந்தனை நின்றுவிடும். ஆனால், சமீபத்தில் எனது தோழி ஒருவர் எழுப்பிய ஒரு கேள்வி என்னை மிகவும் சிந்திக்கவும் தேடவும் தூண்டியது. அவர் கேட்ட கேள்வி இதுதான்:

”செக்ஸின்போது நாம் நிர்வாணமாக இருக்கிறோம். ஆனால், பணம் என்று வரும்போது ஏன் திரைக்குப் பின்னால் நிற்கிறோம்? முக்கியமாக ஆண்கள்.”
வீடு, உணவுமேசை, படுக்கையறை, குளியலறை என்று எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்ளும் இருவர் ஏன் பணம் பற்றிப் பேசத் தயங்க வேண்டும் என்ற கேள்வி என்னைத் தொடர ஆரம்பித்தது. மேலே உள்ள கேள்வியைக் கேட்டவர் நேற்றோ சென்ற வருடமோ திருமணம் செய்துகொண்ட புதுமணப் பெண்ணில்லை. அனுபவக் குறைவினாலோ படிப்பறிவின்மையினாலோ இப்படியோர் அபிப்பிராயத்தோடு இருக்கிறார் என்பதற்குமில்லை. இருபத்தைந்து ஆண்டுகளாக ஒரே கணவருடன் வாழ்ந்து, மூன்று பிள்ளைகளை அவருக்குப் பெற்று, பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணியில் கம்பீரமாக வலம்வரும் ஆளுமை.

இருபத்தைந்து ஆண்டுகளாக அவருக்குத் தன் கணவரின் வருமானம் எவ்வளவு என்று தெரியாது என்பதும் அது அவரது தலைக்குள் அவ்வப்போது அலாரம் செய்யும் ஆபத்தான சமிக்ஞைபோல ஒளிந்துகொண்டிருப்பதும் ஒன்றும் விசித்திரமில்லை என்பதையும் யதார்த்த உலகு இப்படித்தான் இயங்கிக்கொண்டிருக்கிறது என்பதையும் பல பெண்களுடனும் ஆண்களுடனும் பேசிய பிறகு விரைவிலேயே புரிந்துகொள்ள முடிந்தது.
”உன் புருஷன் என்ன சம்பாதிக்கிறார், தெரியுமா உனக்கு?” என்று கேட்டதற்கு, ”அதைத் தெரிந்து நான் என்ன செய்யப் போறேன்? வீட்டு வாடகை கொடுத்தாரா, செலவுகளைப் பார்த்தாரா அதுவே போதும்” என்றுகூடப் பெண்கள் சொன்னார்கள்.

திருமணத்திற்குப் பிறகும் தங்கள் பள்ளி, கல்லூரி நண்பர்களுடன் நட்பைப் பேணிக்கொண்டு டின்னர் பார்ட்டிகள், சுற்றுலாக்கள் என்று ஆண்கள் வாழ்வை ருசித்துக்கொண்டிருக்கும்போது, அவர்களின் மனைவியர் குழம்பில் உப்பு சரியாக இருக்கிறதா என்று பார்த்தபடி சமையலறை வேலையிலோ பிள்ளைகளுடன் வீட்டுப்பாடம் படித்துக்கொண்டோ இருக்கிறார்கள். வேலைக்குச் சென்று சம்பாதிக்கும் பெண்களாக இருந்தாலும் இதுதான்நிலை.

வேலைக்குச் செல்லும் கணவருக்காக அதிகாலையிலேயே எழுந்து, சமைத்து, துணியை அயர்ன் போட்டுவைத்து, பல பத்தாண்டுகள் ஒன்றாக வாழ்ந்து உழைத்ததற்கெல்லாம் எந்தப் பலனும் இல்லாமல் மணமுறிவைக்கூடச் சட்டப்படி சந்திக்கத் துணிவில்லாமல் மகன் வீட்டிலோ மகளிடமோ பிறந்தவீட்டு உறவினர்களிடமோ தஞ்சமடைந்து வாழும் வயதான பெண்களும் இருக்கிறார்கள். இதே நிலையில் உழைத்ததையெல்லாம் அவளிடம்தான் கொடுத்தேன் என்ற புகாரோடு முதுமைநோய்க்கு மருத்துவம் பார்க்க முடியாமல் தின்றாடும்ஆண்களும் உள்ளார்கள். அவர் உழைத்துக் கொடுத்ததை அவருக்குத் தெரியாமல் அந்தப் பெண் அரண்மனை கட்டியோ தோட்டம்துறவு வாங்கியோ செலவு செய்திருக்கப் போவதில்லை. இருந்தாலும் இந்தப் புகாரைப் பெண் சந்திப்பதற்குக் காரணம் கணவனுக்கு நிர்வாகம் பற்றிய தெளிவு இல்லை. வீட்டுச் செலவுகளைப் பற்றி அவர்கள் ஒருநாளும் உட்கார்ந்து பேசியிருக்க மாட்டார்கள். உழைத்த பணத்தை, மனைவியின் கையில் கொடுத்ததோடு கடமை முடிந்துவிட்டது என்று கருதியிருந்திருப்பார்.

இந்த நிலைகளுக்கு மட்டுமல்ல, பெரும்பாலான மணமுறிவுகளுக்கும் காரணமாக இருப்பது பணத்தை முறையாக நிர்வாகம் செய்யாததுதான் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதா? முதலில் எனக்கும் ஆச்சரியமாகத்தான் இருந்தது.

திருமண உறவாக இருந்தாலும் அது இல்லாமல் இணைந்திருக்கும் உறவாக இருந்தாலும் இணையர்கள் இருவரும் வெவ்வேறு வாழ்க்கைப் பின்னணிகள், அனுபவங்களிலிருந்து வருபவர்கள். ஒவ்வொருவரும் அனுபவங்களை உணர்ந்து உள்வாங்கும்விதம் ஆளுக்கு ஆள் வித்தியாசமானது. எல்லாவற்றைப் பற்றியும் இரண்டு வித்தியாசமான பார்வைகள் இருப்பதைப் போலவே பணம் பற்றியும் இரண்டு வித்தியாசமான பார்வைகள் இருக்கலாம். உண்மையில் உறவும் பணமும் கைகோத்துச் செல்லவேண்டியதன் அவசியத்தையும் அதன் நலன்களையும் அறியாமல் நிகழும் தடுமாற்றங்களால் இதனைப் பற்றி நேருக்குநேரே பேசுவதிலுள்ள தயக்கங்கள் காரணமாகப் பிரிந்து சிதறும் அன்பானவர்கள் இருக்கிறார்கள். இணையர்கள் ஒருவரை இன்னொருவர் எவ்வளவு நேசிப்பவராக இருந்தாலும் வாழ்க்கையையும் அவனதும் அவளதும் பணத்தையும் ஒன்றிணைக்கும்போதுதான் சவாரிக்குரிய தளத்தை உருவாக்க முடியும். துணையுடன் ஆழமான தொடர்பை உருவாக்கும் அர்த்தமுள்ள பல வழிகளைக் கண்டடைய முடியும்.


திருமணத்திற்கு முன்பு, அல்லது இணைந்து வாழத் தீர்மானிப்பதற்கு முன்பு இருவரும் எவ்வளவு சம்பாதித்தார்கள், எப்படிச் செலவு செய்தார்கள் என்கின்ற ஆராய்ச்சி அவசியமில்லாதிருக்கலாம். ஆனால், ஒன்றாக இணைந்து வாழ்வதென்று கைகோத்த பின்பு, ஒருவரிடம் இன்னொருவர் வெளிப்படைத்தன்மையை எல்லா நிலையிலும் பேணுவதே நேர்மையான செயல்.

நீண்டகால உறவைப் பேண எண்ணுகின்ற, ஆரோக்கியமான வாழ்வை வாழ நினைக்கின்ற யாராக இருந்தாலும் கல்வி, தொழில், ஓய்வூதியம், பயணங்கள், பிள்ளைகள் போன்ற கனவுகள் இருக்கும். இந்தக் கனவுகளை, லட்சியங்களை நோக்கி உறவில் இருக்கின்ற இருவரும் இணைந்து முன்னேறும்போது அதன் விளைவுகள் பணத்தை நிர்வாகம் செய்வதாக மட்டும் இராது, இரண்டு தனிநபர்களுக்கிடையே ஆழமான நம்பிக்கையையும் கூட்டுணர்வையும் ஏற்படுத்துவதாக இருக்கும். சிலவேளைகளில் இருவரதும் இலக்குகளும் கனவுகளும் நோக்கங்களும் வெவ்வேறாக இருக்கலாம். அப்படியிருந்தாலும்கூட அவற்றை ஒரே மேசையில் அமர்ந்து நேருக்குநேராகப் பேசி முடிவுகளை எட்டக்கூடிய ஓர் அமைப்பை ஏற்படுத்திக்கொள்வது அவசியம். ஆனால், இந்த நிலை எளிதாக ஏற்பட்டு விடாது. தனது சம்பளம் எவ்வளவு என்று துணையிடம் சொல்லாமல் இருப்பதை சௌகரியமாகக் கருதுகின்ற, அது தனது பிரைவசி என்று நம்பிக்கொண்டிருந்தவர்கள் தங்களின் பேசெக்குடன் உடனே மேசைக்கு வந்துவிடுவார்களா என்றால் நிச்சயமாக இல்லை. இந்தத் தளத்தை நோக்கி நகர்வதற்கான பலகட்ட உரையாடல்கள் தேவைப்படும்.

இங்கு யார் அதிகம் சம்பாதிப்பவர், குறைவாகச் சம்பாதிக்கிறவர் என்ற ஈகோவுக்கு இடமிருக்கக் கூடாது. முழுநேர வேலை, பகுதிநேர வேலை, ஏன் ஒருவர் வெளிவேலைக்குச் செல்லவில்லை, வீட்டுநிர்வாகத்தையோ குழந்தைகளையோ இரண்டையுமோ பார்த்துக்கொள்கிறவராக இருந்தாலும் வெளிப்படைத்தன்மையுடன் இதுதான் என் / நம் சம்பாத்தியம், மாதாந்தம் என்னென்ன செலவுகள், கட்டணங்கள், பிறந்தநாள், திருமணம், விருந்து, பார்ட்டிகள், அன்பளிப்புகள், பயணங்கள், சேமிப்பு, மருத்துவம் என்று எல்லாவற்றையும் ஒன்றாக இருந்து கலந்துபேசி முடிவுகள் எடுக்கும்போது ஒருவரிடம் இன்னொருவருக்கு உண்டாகும் நெருக்கமும் புரிதலும் புதிதாக இருக்கும்.

ஒவ்வொரு மாதமும் குறைந்தது ஒருமுறை ஒன்றாக அமர்ந்து பணநிர்வாகம் பற்றிப் பேசவேண்டும். இது பணத்தைப் பற்றியது மட்டுமல்ல, ஒருவரின் உழைப்பையும் விருப்பங்களையும் கௌரவத்தையும் இன்னொருவர் உறுதிசெய்வதும்கூட!

இன்னும் பேசுவோம்…

படைப்பாளர்:

ஸர்மிளா ஸெய்யித்

விதிவிலக்கான துணிச்சலான சமூக செயற்பாட்டாளர். சமூக அநீதிகள் குறித்து அச்சமற்று விமர்சிக்கக்கூடியவர், எழுத்தாளர், கவிஞர். தற்சமயம், அமெரிக்கப் பல்கலைக்கழகம் University of Nebraska Omaha வில் மனித உரிமைகளுக்கான ஆராய்ச்சி அறிஞராகப் பணிபுரிகிறார். 

சிறகு முளைத்த பெண் (கவிதை 2012),
உம்மத் (2014 நாவல்),
ஓவ்வா ( கவிதை 2015),
பணிக்கர் பேத்தி (நாவல் 2019),
உயிர்த்த ஞாயிறு (2021 அனுபவம்)இருசி (2022 சிறுகதைகள்)அடங்க மறு (2022 கட்டுரைகள்)எங்கள் விருப்பத்திற்கு எதிராக (2022 கட்டுரைகள்)உயிர்ப்பும் மறுப்பும் (2022 கட்டுரைகள்)
ஆகியன இவரது நூல்கள்.