“மொகஞ்சதாரோ, ஹரப்பாவில் நமக்குக் கிடைத்த வெளிப்பாடுகளின் கண்டுபிடிப்புகளில் மிகவும் குறிப்பிடத்தக்கது என்னவென்றால், செம்புக்காலத்திற்கோ அதற்கும் முன்னதாகவோ வரலாற்றைக் கொண்டுள்ளது சைவ சமயம். எனவே அதை உலகத்தின் மிகப் பழமையான வாழும் சமயம் என்றே எண்ண வைக்கிறது” _ இப்படித்தான் சொல்கிறது சிந்துவெளி நாகரிக ஆய்வாளர் சர் ஜான் மார்ஷல் அவர்களின் குறிப்பு. அகழ்வாய்வின்போது சிவலிங்கத்தை ஒத்த பல கற்கள் ஆய்வாளர்களுக்கு கிடைத்திருந்தன. இரு கொம்புகளுடன் விலங்குகள் சூழ அமர்ந்திருக்கும் மனித உருவ முத்திரையே ஈசனின் பசுபதித் தோற்றம் எனவும், அதுவே மிகப் பழைய சிவன் சிற்பம் என்றும் சிந்துவெளி ஆய்வாளர்கள் முடிவுக்கு வந்திருந்ததைத் தொடர்ந்தே இத்தகைய குறிப்புகள் எழுதப்பட்டிருக்க வேண்டும்.

கி.மு. 5ஆம் நூற்றாண்டுக்கும் 4ஆம் நூற்றாண்டுக்குமிடையே தொகுக்கப்பட்டதாகக் கருதப்படும் சுவேதாசுவதரம் என்ற உபநிடதமே மிகப் பழைமையான சைவ நூலாகக் கொள்ளப்படுகிறது. அக்கால கட்டங்களில்தாம் தெளிவான அடையாளங்களுடன் சைவம் முழுமையான ஒரு மதமாகத் தன்னை முன்னிருத்திக்கொண்டது. உலக இன்பங்களைத் துறந்து தாந்திரீக நெறியில் சிவனை வழிபடும் வழக்கம் கிறித்து காலத்திலேயே தொடங்கிவிட்டது. மெல்ல மெல்ல சைவம் தென்கிழக்காசியா வரை தழைத்தோங்கியது. கம்போடியாவின் அங்கோர் வழித் தோன்றலின் முதல் மன்னன் ஈசானவர்மன் சைவத் துறவியிடமே அரசமணிமுடி பெற்றுக்கொண்டதும், சாவகத்து மயாபாகித்துப் பேரரசு மன்னன் விசயன் சைவ அரச மகுடம் பெற்று நாட்டை ஆண்டதுமான வரலாறுகள் துறவிகளின் மதமாக இருந்த சைவம் அரச ஆதரவைப் பெறத் துவங்கியதைச் சுட்டுகின்றன.

இந்திய ஆப்பிரிக்கக் கண்டம் பிரிவதற்கு முன்னரே, இலங்கை அதன் ஒரு பகுதியாக இருந்தபோதே அங்கு சிவ வழிபாடு துவங்கிவிட்டது என்று நம்புகிறார்கள் இலங்கையில் சைவவழிபாட்டை பின்பற்றும் தமிழர்கள். கிறிஸ்துவுக்கு முந்தைய பிராமி சாசனங்களில் காணப்படும் சிவ என்ற பெயரும் நந்தி திரிசூலம், பிறைநிலா முதலான சிவச் சின்னங்களும் பண்டையக் காலத்திலேயே சிவ வழிபாடு இலங்கையில் சிறப்புப் பெற்று காணப்பட்டமைக்குச் சான்று பகர்கின்றன. கி.மு. 5ஆம் நூற்றாணடில் விசயன் இலங்கைக்கு வரும்போது ஈழத்தின் ஆதிக்குடிகளாகிய நாகர்களது தலைசிறந்த வழிபாட்டுத் தலமாகச் சிவத்தலங்கள் விளங்கின எனக் கூறுகிறது மகாவம்சம்.

வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் சிவபூமி என்றே திருமூலரால் திருமந்திரத்தில் போற்றப்படும் ஈழம், பஞ்ச ஈஸ்வரங்களால் சூழப்பட்ட நாடாக விளங்கியது. இன்றும் திருக்கேதீஸ்வரம், முன்னீஸ்வரம், தொண்டேஸ்வரம், கொக்கொட்டிச்சோலை தாந்தோன்றீஸ்வரம், மாமாங்கேஸ்வரம் ஆகிய பண்டையத் திருத்தலங்கள் அந்தக் கருத்துக்கு வலு சேர்க்கின்றன. விஷ்ணு வழிபாடு பிற்காலத்தில் இந்தியாவிலிருந்து வந்தாலும்கூடத் தனி மதமாகாமல் சைவத்தின் உப பிரிவாக அடங்கிவிட்டது. அன்றிலிருந்து இன்றுவரை இலங்கை இந்துக்கள் சிவனை முழுமுதலாக வணங்கும் சைவர்களே. அவர்களுக்குள் சைவ, வைணவ பேதம் பெரிதாக இல்லை. அவர்களைப் பொறுத்தவரை அரியும் அரனும் ஒன்றுதான்.

“மற்றுமொரு வரலாற்றுப் பொக்கிஷத்தைக் காட்டுகிறோம், வாருங்கள்” எனச் சொல்லித்தான் தோழி மெரினா, மன்னார் மாவட்டத்தில் முக்கியத் துறைமுக நகரமான மாந்தோட்டப் பகுதிக்கு அழைத்துச் சென்றிருந்தார். நினைவுக்கெட்டாத பழங்கால வரலாறுகளைத் தனக்குள் புதைத்துக்கொண்டு அமைதியாக நிற்கும் திருக்கேதீஸ்வரம் உண்மையில் பொக்கிஷம்தான். கோயில் என்றாலே கூட்டம், தள்ளுமுள்ளு, நீண்ட வரிசை, காசுகட்டினால் விரைவுத் தரிசனம் எனப் பழக்கப்பட்டுப் போயிருந்த மனதிற்கு, அந்த அமைதியும் கூட்டமின்மையும் வியப்பாக இருந்தது. மெதுவாக ஆற அமர ஒவ்வோர் இடமாகச் சுற்றிக்கொண்டிருந்தோம். நாங்கள் சென்ற நேரத்தில் (2017) இந்திய அரசின் நிதியுதவியுடனும் தமிழ்ச் சிற்பிகளின் கைவண்ணத்துடனும் கோயில் புனரமைக்கப்பட்டுக் கொண்டிருந்தது. எங்களைப் பார்த்தவுடன், “தமிழ்நாட்டிலிருந்தா வர்றீங்க?” என்ற கேள்வியுடன் ஓடிவந்தார் கட்டுமானப்பணியாளர் அண்ணன் ஒருவர். நாகப்பட்டினத்தைச் சேர்ந்தவராம், வெகுநாட்களாக இங்குதான் இருக்கிறேன் என அறிமுகப் படுத்திக்கொண்டவர், நான் கேள்வி கேட்ட வேகத்தைப் (முந்திரிகொட்டைத் தனத்தைப்) பார்த்துப் பயந்துபோய், “எனக்கு ரொம்பத் தெரியாதுக்கா, எங்கூட வாங்க” எனக் கூறி, ஓர் ஓரத்தில் அமர்ந்து தேவாரத்தைப் பாராயணம் செய்துகொண்டிருந்த வயது முதிர்ந்த ஒருவரை அறிமுகம் செய்துவைக்க, அவர் இலங்கைத் தமிழில் கதைக்கத் துவங்க, நானும் மகளும் பல நூறு ஆண்டுகள் வரலாற்றுக்குள் ஊடுறுவி பயணிக்கத் துவங்கினோம்.

இலங்கேஸ்வரன் ராவணனும் அவனது மாமனார் மயனும் திருக்கேதீஸ்வரத்தின் தொன்மையான கோயிலைக் கட்டினார்கள் என்பது நம்பிக்கை. சிவபக்தனான ராவணனைக் கொன்றதால், ராமன் பிரம்மகத்தி தோஷம் பிடிக்காமல் இருக்க, முன்னேசுவரத்தில் பொன் லிங்கமும் திருகோணேசுவரத்தில் ரத்தினலிங்கமும் திருகேத்தீஸ்வரத்தில் வெள்ளி லிங்கமும் பிரதிஷ்டை செய்து வழிபட்டு பின், ராமேசுவரத்தில் மணலால் லிங்கம் அமைத்து வழிபட்டார். அதனால் திருகேதீஸ்வரம் ராமேஸ்வரக் கோயிலுக்கு முற்பட்டது என்கிறது வரலாறு. மகாபாரதத்தின் நாயகன் அர்ச்சுனன் தெற்கே தீர்த்த யாத்திரை மேற்கொண்டபோது இத்தலத்தை வழிபட்டதாகவும் அப்போதுதான் மாந்தோட்டத்தையடுத்த பகுதியை ஆண்டு வந்த நாக இளவரசி அல்லி அரசாணியைச் சந்தித்ததாகவும் சொல்லப்படுகிறது. “பொது ஆண்டுக்கு ஆறு நூற்றாண்டுகளுக்கு முன்னர் இலங்கைக் கடற்கரையில் இறங்கிய இளவரசன் விஜயன், பல்லாண்டுகளாகச் சிதிலமடைந்து கிடந்த திருக்கேதீஸ்வரம் கோயிலைக் கட்ட ஏற்பாடு செய்தான்” என்கிறது மயில் வாகனப்புலவரால் எழுதப்பட்ட யாழ்ப்பாண வைபவமாலை.

கி.பி. 1028இல் ராசேந்திர சோழனால் ஈழம் கைப்பற்றப்படுகிறது. இன்றைய ஆட்சிமாற்றக் காட்சிகள் போலவே, அன்று சோழர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் ஊரின் பெயர்களும் ஆலயங்களின் பெயர்களும் மாற்றம் செய்யப்படுகின்றன. திருக்கேதீஸ்வரம் ஆலயம் ராஜராஜேஸ்வரம் என்ற பெயர் பெறுகிறது. மாந்தோட்ட நகரம் ராஜராஜபுரமாகிறது. பாதுகாப்பிற்காக, ஆலயத்தைச் சுற்றி நன்னீர், கடல் நீர் கொண்ட இரு அகழிகள் அமைக்கப்படுகின்றன. ஆண்டுதோறும் ஏழு நாட்கள் விழாவெடுத்து, வைகாசி விசாகத்தன்று தீர்த்தவிழா நடத்தியதாக ராசேந்திரசோழன் கல்வெட்டுக் கூறுகிறது.

கி.பி. 13ஆம் நூற்றாண்டில் முதலாம் சுந்தர பாண்டியனின் காலத்தில் பாண்டியச் சிற்பக்கலையின்படி புதுப்பித்துக் கட்டப்பட்டதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. கி.பி. 1505இல் இலங்கைக்குள் நுழைந்த போர்த்துக்கீசியர்கள், கண்ணில் பட்ட இந்துக் கோயில்களையெல்லாம் அழிக்கத் துவங்குகின்றனர். 1590இல் அவர்களின் இலக்கு திருக்கேதீஸ்வரம் ஆலயம் என்பதை அறிந்த மக்கள் முக்கியப் பொருள்களையும் கௌரியம்மன் திருவுருவத்தையும் பெயர்த்தெடுத்து இரவோடிரவாக, காட்டுமார்க்கமாகச் சென்று, தற்போதைய மடுமாதா கோயில் அமைந்துள்ள காட்டுப் பிரதேசத்தில் மறைந்துகொண்டனர். அங்கேயே சிறிய கோயில் ஒன்றையும் எழுப்புகின்றனர். போர்த்துக்கீசியர் கோயிலைக் கொள்ளை அடித்து, சிலைகளை நாசம் செய்து மதில், கோபுரம் ஆகியவற்றை பீரங்கியால் தாக்கி, கோயிலை உடைத்த கற்களைக்கொண்டு மன்னார் துறைமுகத்தைக் கட்டினர்.

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர்

அதன்பின் மண்மாரியால் கோயில் மண்ணால் மூடப்படுகிறது. நாளடைவில் அந்த இடம் அடர்ந்த காடாக மாறிப்போனது. காலம் உருண்டோடியது. சுமார் மூன்று நூற்றாண்டுகளாகத் திருக்கேதீஸ்வர ஆலயமும் மாந்தோட்டமும் மக்களின் நினைவடுக்குகளில் இருந்து மறைந்தே போய்விட்டது. யாழ்ப்பாண நல்லூரில் தோன்றிய ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் என்பவர் திருவாசக, திருமந்திர, தேவார நூல்களைப் படித்ததன் வாயிலாக, “மாந்தோட்டத்தில் மறைந்துபோய் ஒரு மருந்து இருக்கிறது” என்று திருக்கேதீஸ்வரநாதனை சைவ உலகுக்கு நினைவூட்டுகிறார், 1872இல் யாழ்ப்பாணச் சமயநிலை என்று அவர் வெளியிட்ட பிரசுரம் மக்களை விழிப்படையச் செய்கிறது. ஆனாலும் அவர் மறைவுக்குப் பின்னரே கி.பி. 1893இல் கோயில் இருந்து மறைந்ததாகக் கருதப்பட்ட 40 ஏக்கர் நிலத்தை பழனியப்பச் செட்டியார் என்பவர் இலங்கை சைவ மக்கள் சார்பாக 3100 ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தார். நகரின் சிதைவுகளை அகற்றுகிறார்கள். கடலுக்குள் மூழ்கிய அத்திபட்டி கிராமம் போல, மணலுக்குள் மூழ்கிய மாந்தோட்ட கோயில் அமைதியாகத் துயில்கொண்டிருப்பதைக் காண்கிறார்கள். புனர் நிர்மாணம் செய்கின்றனர். 1894இல் பூமிமாதாவின் மடியிலிருந்த திருவுருவங்கள் தங்களை வெளிப்படுத்திக்கொண்டன. பழைய கோயிலின் மூலஸ்தானம், அர்த்தமண்டபம், பலிபீடம், சோழர்கள் கட்டிய கேணிகள், நந்தி, விநாயகர் கற்சிலைகள், ஆலயத்தில பாவிக்கப்படும் தட்டங்கள் எனத் தோண்டத் தோண்ட புதையலாகக் கிடைக்கிறது. கௌரியம்மன் மட்டும் கிடைக்கவில்லை. அதனால், மூன்று நூற்றாண்டுகளுக்கு முன் போர்த்துக்கீசியரிடமிருந்து பாதுகாக்க மக்கள் அம்மனை எடுத்துச் சென்றதாகக் கூறப்பட்ட செய்தி நிரூபிக்கப்பட்டுகிறது. அகழ்வாய்வின் போது சிவலிங்கம் பின்னப்பட்டதால் மூலநாதராய் வைக்காது பின்புறமுள்ள மண்டபத்தில் பிரதிஷ்டை செய்தனர். காசி வாரணாசியிலிருந்து தருவிக்கப்பட்ட சிலிங்கத்தை மூலவராக வைத்து திருப்பணிகள் செய்து 1903இல் மகா கும்பாபிஷேகம் செய்கின்றனர்.

நாட்டைத் துவம்சம் செய்த யுத்தத்திற்கு ஆலயமும் தப்பவில்லை. ஆலயத்தின் உள்ளே இருந்த பல்வேறு மடங்களும் அழகிய வேலைப்பாடுகள் மிகுந்த தேரும்கூட யுத்தத்தின் வெறிக்குப் பலியாகின. கிட்டத்தட்ட 12 நெடிய ஆண்டுகள் கோயில் மூடிக்கிடந்தது. யுத்தம் முடிவுக்கு வந்த பின்னரே ஆலய நாயகர்கள் மக்களுக்கு அருள்பாலிக்கத் தொடங்கினர்.

ஐந்து நிலைகளுள்ள ராஜ கோபுரத்துடன் ஆரவாரமற்று அமைதியுடன் காணப்படுகிறது ஆலயம். பெரிய விசாலமான கோயில். உள்ளே இரண்டு டன் எடையுள்ள வெண்கல ஆலயமணி பிரமாண்டமாகக் காட்சியளித்தது. லண்டனிலிருந்து தருவிக்கப்பட்டதாம். வலதுபுறம் குணவாசல் பிள்ளையார், இடதுபுறம் குணவாசல் சுப்பிரமணியர் சந்நிதிகள், நடுவில் நந்தி மண்டபம். சூரிய சந்திர சந்நிதிகள், கொடிமரம், பலிபீடம் இருக்கிறது. பிரகாரம் முழுக்க சந்நிதிகளும் சிற்ப உருவங்களுமாக நிறைந்திருக்கிறது. அழகிய வேலைப்பாடுகளுடன் இருக்கும் ஐந்து பெரிய தேர்கள் வைகாசி விசாகத்தின்போது பவனி வருகிறதாம். நெரித்துத் தள்ளும் கூட்டம் கிடையாது. கடவுளின் பெயரைச் சொல்லி காசு பிடுங்க சுற்றி வளைக்கும் கும்பல்கள் இல்லை. உளியின் சத்தம் மட்டும் கேட்டுக்கொண்டேயிருக்கிறது பிரகாரங்களெங்கும்.

இலங்கையின் வரலாற்றுப் பக்கங்களில் மத துவேஷங்களுக்கும் குறைவில்லை. புத்த பகவான் இலங்கைக்கு மூன்று முறை வந்ததாகவும் அப்போது இங்குள்ள 16 இடங்களுக்கும் சென்று பௌத்த நெறியைப் போதித்ததாகவும் கூறும் மகாவம்சம், கி.மு.249இல் பௌத்த மதம் ஈழத்தில் அறிமுகம் செய்யப்படும்போது சிவ ஆலயங்களை அழித்து பௌத்தக் கோயில்கள் அமைத்தமை பற்றியும் (ch.XXXVII:4) கூறுகிறது. ஏன் குறிப்பாக அந்த 16 இடங்கள் என ஆராய்ந்தால், இந்த 16 இடங்களும் பௌத்தம் இலங்கையில் அறிமுகம் ஆவதற்கு முன்பு சிவ வழிபாட்டில் மிகவும் செல்வாக்குடன் மேலோங்கிக் காணப்பட்ட இடங்களாக இருந்திருக்கின்றன. அதனாலேயே இந்த 16 இடங்களும் இலக்கு வைக்கப்பட்டன எனக் கொள்ளலாம்.

சிங்களர்கள் எப்போதும் தங்கள் குடியிருப்பை ஏற்படுத்தும் முன்னர் அவ்விடங்களில் புத்தர் சிலைகளையோ பௌத்த விகாரங்களையோ அமைத்துவிடுவதையே வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். அதனாலேயே தமிழர் பகுதிகளில் புத்தபிரான் ஆக்கிரமிப்பு கடவுளாக மாறிப்போனார். இந்து மதத்தில் இருந்து தோற்றம் பெற்றதே பௌத்த தர்மம். எனவேதான், பௌத்த மதத்தைப் பின்பற்றும் சிங்கள மக்கள் இந்துக் கடவுளர்களையும் வழிபடுகிறார்கள். ஆனால், இந்து தெய்வங்கள், புத்தவிகாரையின் காவல் தெய்வங்களாக, புத்த பிரான் என்ற பெரும் சக்தியின் பின்னாலேயே இருக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் எண்ணமாக இருக்கிறது. முல்லைத்தீவு செம்மலை நீராவியடி பிள்ளையார் கோயில் ‘நீராவியடி கணதேவி ஆலயம்’ எனப் பெயர் மாற்றப்பட்டு அருகிலிருந்த பௌத்த விகாரையின் ஒரு பகுதியாக மாற்ற முற்பட்டது. மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயம் அருகே தமிழர்களின் பழமை மிக்க விநாயகர் ஆலய வளாகத்துக்குள் ராணுவம் புத்தவிகாரை அமைத்தது என அதற்கான உதாரணங்கள் ஏராளம்.

திரிகோணமலை திருக்கோணேஸ்வரத்தில் தலத்தை மறைத்து எழுந்து நிற்கும் விகாரை 2004ஆம் ஆண்டில் பழங்கற்கால செங்கல்கள் எடுத்துவந்து பயன்படுத்தப்பட்டது. அதற்குப் பின்னர் திருக்கோணேஸ்வரர் ஆலயத்திற்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. “ஒரு இனத்துக்குச் சொந்தமான பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து தமிழர் தாயகத்தில் பௌத்தத்தின் திணிப்பு உள்ளது. சிறுகச் சிறுக எமது தாயகம் சிங்கள ஆக்கிரமிப்பில் உள்வாங்கப்பட்டு, எமது கலாச்சாரமும் மொழியும் மதமும் சிங்களத்தினால் முற்றாக ஆக்கிரமிக்கப்பட்டு உருத் தெரியாமல் போகப்போவது நடக்கிறது. உலகில் அருகிவரும் சிறுபான்மையினங்களின் பட்டியலில் ஈழத்தமிழினமும் விரைவில் இடம் பெறும்” என விரக்தியாகக் கூறுகிறார் ஆசிரியர் நண்பர் ஒருவர்.

சைவமா, இந்துவா என்ற குழப்பமும் இந்தியாவைப்போல இலங்கையிலும் பரவிக்கிடக்கிறது. காளி, கண்ணகி, மாரி, திரௌபதி, பைரவர், பெரிய தம்பிரான், ஐயனார், கடல்நாச்சி, பேச்சி போன்ற நாட்டார் தெய்வங்களும் இலங்கையில் வணங்கப்படுகின்றன. சைவத்தின் முயற்சியால் நாட்டார் தெய்வங்கள் சிவனின் அவதாரங்களாக, சிவனின் மனைவிகளாக, சிவனின் பிள்ளைகளாக உருமாறியிருக்கிறார்கள். நாட்டாரியல் ஆய்வாளர்கள் இதை மேல்நிலையாக்கம் என்று அழைத்தாலும், ஈழத்து சைவத்தை இந்து என்று வேறு பெயர் கொண்டழைப்பதை இலங்கைத் தமிழர்கள் விரும்புவதில்லை. இந்திய இந்துத்துவ அரசியலின் அழுத்தத்தால் இலங்கைச் சைவத்தையும் இந்துத்துவமாக மாற்ற முயலும் அரசியலை அவர்கள் எதிர்க்கிறார்கள்.

“இலங்கையில் இந்தியப் பண்பாடு செழித்தோங்க வேண்டுமென்ற விருப்பம் இந்தியாவுக்கு இருந்தால், வேற்றுக் குறிப்பு பார்க்காமல் உள்ளூர்ச் சைவத்தையே வளர்க்க வேண்டும், இல்லை ஹிந்து என்ற பெயர் இருந்தால்தான் உதவுவோம் என்றால் அதற்குப் பெயர் அக்கறை இல்லை, உள்நோக்கம். அது இங்கு கனவிலும் நிறைவேறப் போவதில்லை, ஏனென்றால் இந்த நாடு ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சிவபூமி. “நாம் இந்து அல்ல, சைவர்கள்” என்கிறார் எழுத்தாளரும் வரலாற்றாளருமான வி. துலாஞ்சனன்.

திருக்கேதீஸ்வரம்

தன்னைச் சுற்றி நிகழும் வரலாறுகளையும் சூழ்ச்சியையும் இயற்கைப் பேரழிவுகளையும் மத துவேஷங்களையும் கடந்து சலனமின்றி அருள்பாலித்துக்கொண்டிருக்கிறார்கள் திருக்கேதீஸ்வரநாதனும் கௌரிஅம்மையும். நண்பகல் பூசைக்காக, லண்டன் மணி ஓங்கி ஒலிக்க, தென்னாடுடைய சிவனே போற்றி… எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி… போற்றி… தேவாரம் ஓதுவாரின் கணீர்க்குரல் செவிகளில் நுழைந்து மனமெங்கும் பரவுகிறது.

(தொடரும்)

படைப்பாளர்:

ரமாதேவி ரத்தினசாமி

எழுத்தாளர், அரசுப்பள்ளி ஆசிரியர். பணிக்கென பல விருதுகள் வென்றவர். இவர் எழுதி வெளிவந்துள்ள ‘கனவுகள் மெய்ப்படட்டும்’ கட்டுரைத் தொகுப்பு பரவலாக கவனம் பெற்றுள்ளது. 2014, 2015ம் ஆண்டுகளில் ஐ நா சபையில் ஆசிரியர் பேச்சாளராகக் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார். அடுப்பங்கரை டூ ஐநா தொடரில் அவரது ஐ நா அனுபவங்களை நகைச்சுவையுடன் விவரித்திருக்கிறார். இந்தத் தொடர் ஹெர் ஸ்டோரீஸ் வெளியீடாகப் புத்தகமாக வெளிவந்து பாராட்டுகளைப் பெற்று வருகிறது. இலங்கை இவருக்கு இதில் இரண்டாவது தொடர்.