வாழ்வில் எதிர்பாராத இழப்புகள், உறவுச் சிக்கல்கள், உறவில் முறிவு, ஏமாற்றங்கள் வரும்போது, அதில் இருந்து வெளியே வந்து, நம்மை மகிழ்ச்சியாக வைப்பதற்கு நிறைய தேர்வுகள் இருந்தாலும் நம் கண்களுக்கு அந்த வாய்ப்புகளோ தேர்வுகளோ சாத்தியங்களோ தெரிவதில்லை.

இதில் வழி எதுவும் இல்லை என்ற எண்ணங்கள் போலியாக இருந்தாலும் அந்த உணர்வுகள் உண்மையே. ஏனென்றால், உண்மையில் உணர்வுகள்தாம் நம் வாழ்வில் உண்மையான, நேர்மையான சிறந்த வழிகாட்டிகள். நம்மைப் பற்றிய உண்மையை அப்படியே பறைசாற்றக் கூடிய உண்மையாளர்கள்.

உணர்வுகளை அடிப்படையில் நான்கு வகையாகப் பிரிக்கலாம். மகிழ்ச்சி, வருத்தம், கோபம், பயம்.

இதில், மனதுக்கு மகிழ்ச்சியைத் தராத தருணங்களில் வருகின்ற உணர்வுகளை, உணரப் பிடிக்காமல், நேராக எதிர்கொள்ள முடியாமல், அதைக் கடந்து செல்கிறோம் அல்லது மழுங்கடிக்கச் செய்கிறோம். ஓர் உணர்வை இன்னோர் உணர்வாக மாற்றுவதற்கு முயற்சி செய்துகொண்டிருப்போம்.

உணர்வுகளை அப்படியே ஏற்றுக்கொண்டு, உணர்வதற்கு முயற்சி செய்வதில்லை. உணர்வுகளை அப்படியே, அதே உணர்வாக உணராதவரை நமக்கு எந்த வழியும் புலப்படுவதில்லை.

கணவன், மனைவி இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இதில் கணவன் திருமணத்திற்குப் பிறகு மனைவியைக் கவனிப்பதோ மரியாதையுடன் நடத்துவதோ இல்லை. மனைவி வேலைக்குச் செல்ல ஆரம்பித்தார். பொருள் ஈட்ட ஆரம்பித்தார். ஆனால், இந்த உறவில் விரிசல் பெரிதாகிக்கொண்டே தான் போனது. இரண்டு குழந்தைகள் பிறந்தார்கள். குழந்தைகள் பெரிதான பின்னரும் இந்த உணர்வு ரீதியான, உடல் ரீதியான துன்புறுத்தல் மனைவிக்கு நடந்துகொண்டே தான் இருந்தது. 15 வருடங்களுக்கு மேல் ஆகியும் இதே கதை தான்.

15 வருடங்களாகத் தனது குழந்தைகளுக்காக, இவற்றையெல்லாம் எப்படி எல்லாம் பொறுத்துக்கொண்டார், பொறுமையாகச் சமாளித்துக்கொண்டு வாழ்ந்து வருகிறார் என்பதை விரக்தியுடன், புலம்பலாக, தான் ஒரு பொறுமைசாலி என்ற பிம்பத்தை மையப்படுத்தி, சொல்லிக்கொண்டிருந்தார்.

மூன்று மாதங்களுக்கு முன்னால் பிரேக் அப் நடந்த, பெண்ணின் மனநிலையும் சரி, உறவு பிரச்னைகளில் சிக்கி நிற்கும் இந்த மனைவியிடமும் சரி, வாழ்க்கையில் உறவினால் ஏற்பட்ட கவலை என்ற உணர்வை உணராமல், ஒத்துக்கொள்ளாமல், ஐயோ எனக்கு இப்படி ஆகிவிட்டது, எனக்குப் போய் இப்படி நிகழ்ந்துவிட்டது, நான் எப்படி இந்த நிலைமைக்கு ஆளானேன், என் உணர்வுகளை மறுதலித்து, என் குழந்தைகளுக்காக வாழ்ந்துவிடுவேன் என்பது போன்ற எண்ணங்களும் உணர்வுகளுமே மேலோங்கி நிற்கின்றன. “உணர்வுகளை ஏற்றுக்கொள்ளாதவரை, நிகழ்வுகளையும் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை” என்பதே உண்மை.

பெரும்பான்மையானவர்களுக்கு, உணர்வு ரீதியாகத் துன்பத்துக்கு உள்ளாகும் போது வரும் எண்ணங்கள் இவைதான்.

நெட்ஃபிளிக்ஸ்ல் இந்தத் தொடரைப் பார்த்தால் சரியாகிவிடும். அமேசானில் பொருள்களை வாங்கிக் குவித்தால் சிறிது நன்றாக உணரலாம். தோழி ஒருத்தி தாங்க முடியாத துன்பம் வரும் போதெல்லாம், அவளுக்குப் பிடித்த டிசைனில் டாட்டூ குத்திக் கொள்வதாகச் சொல்வாள். அதோடு மட்டுமல்ல, வருத்தப்படும்போது ஆல்கஹால் எடுத்துக்கொண்டு உணர்வுகளை மழுங்கடிக்கறோம். பிறர் மீதான கோபத்தை, நிறைய சாப்பிட்டு, நாம் உடலின் மீது காண்பித்துக்கொள்வோம். யாரோ ஒருவர் மீதான மீதான வருத்தத்தில், சாப்பிடாமல் இருந்து, நம் உடலை வருத்திக்கொள்வோம்.

தோழமைகளே, இவை எல்லாம் தவறு என்று விழுமிய கல்வி போதிக்கவில்லை. ஆனால், உணர்வுகளை நீங்கள் அனுமதிக்காததும் அதை ஒத்துக்கொள்ளாததுமே, நீங்கள் இவையெல்லாம் தேர்ந்தெடுக்க காரணமாக இருக்கிறது என்பதையே நான் இங்கு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். நீங்கள் மகிழ்ச்சியோடு இருக்கும்போது இதையெல்லாம் நீங்கள் செய்தால், மகிழ்ச்சி.

ஒரு சிறிய கற்பனை செய்துகொள்ளுங்கள். அது ஒரு துவக்கப் பள்ளி. நீங்கள் ஆசிரியராக நின்றுகொண்டிருக்கிறீர்கள். அங்கு சில குறும்புத்தனம் செய்கிற மாணவர்கள் இருக்கிறார்கள். இப்போது அந்த குறும்புக்கார மாணவர்கள் உங்கள் கவனத்தை ஈர்க்க, ஏதாவது சுட்டித்தனம் செய்துகொண்டே இருப்பார்கள். நீங்கள் கவனிக்காமல் இருந்தால், அவர்களுடைய சுட்டித்தனம் அதிகரித்துக்கொண்டே போகும்.

நீங்கள் அவர்களைக் கவனிக்காமல் விட்டால், அவர்கள் பெஞ்சின் மீது ஏறி நின்று குதிக்கும் அளவுக்கு மேலே செல்வார்கள். உங்கள் வேலையை நீங்கள் செய்யவே முடியாது. ஏதோ ஒரு வகையில், நீங்கள் முழுமையாக, செயல்பட முடியாதவாறு, இடைஞ்சல்களை உருவாக்கிக்கொண்டே இருப்பார்கள். ஆனால், நீங்கள் எப்போது அவர்கள்மீது கவனம் செலுத்துகிறீர்களோ, அப்போதே அவர்களுடைய, குறும்புத்தனமும் அடங்கிவிடும். உங்கள் கவனத்தை ஈர்ப்பதற்காக அவர்கள் செய்யும் முயற்சிகளும் குறைந்துவிடும்.

அதே போல்தான் நாமும் நம் உணர்வுகளை ஏற்க மறுக்காத வரை, அதை உணராதவரை, மீண்டும் மீண்டும் ஏதோ ஒருவகையில் தோன்றி, வாழ்க்கையை முழுமையாக வாழவிடுவதும் இல்லை. வாழ்வதற்கான வழிகள் நமக்குப் புலப்பட அனுமதிப்பதும் இல்லை. பிரச்னைகளுக்கான தீர்வுகளும் இல்லாமல் முடிவில்லாமல் சென்று கொண்டே இருக்கும்.

மேலே குறிப்பிட்ட இந்த மனைவி, கவலையை அப்போதே உணர்ந்திருந்தால், அதை ஒத்துக்கொண்டிருந்தால், அவருக்கான வாய்ப்புகளாக, விவாகரத்து, அல்லது எப்படிக் கையாள்வது, உடல்ரீதியான துன்பங்களில் இருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்வது, உணர்வு ரீதியான துன்பங்களை எப்படித் தவிர்ப்பது போன்றவற்றைக் கண்டுபிடித்திருப்பார். அப்போது, அதில் வருகின்ற வாய்ப்புகளில் ஒன்றான, அல்லது தேர்வுகளில் ஒன்றான, ‘குழந்தைகளுக்காக நான் இந்த வாழ்க்கையை வாழப் போகிறேன்’ என்பது அவருடைய தேர்ந்தெடுக்கப்பட்ட தேர்வாக இருந்தால், இத்தனை வருடங்களுக்குப் பிறகு, இங்கு புலம்பல்களுக்கு அவசியமே இல்லை. இத்தனை வருடங்களில் கையாளக் கற்றுக்கொண்டிருப்பார் என்பதே உண்மை. பொறுமையாக இருப்பது தேவை இல்லாமல் போயிருக்கும்.

அடுத்த முறை, உங்களுக்குக் கவலையோ வருத்தமோ கோபமோ வரும்போது,

  1. சிறுது நேரம் அந்த உணர்வுகளோடு செலவிடுங்கள். அதை உணருங்கள்.
  2. பின்னர், அந்த உணர்வுக்கான காரணத்தை ஆராயுங்கள்.

இந்த முதல் இரண்டு படிகளுமே மனதிற்குத் தெளிவைத் தரும்.

  1. வெளிப்படுத்த வேண்டுமா, வெளிப்படுத்துவது எப்படி என்பதைச் சிந்திக்கலாம்.

உங்களுக்கு வாய்ப்புகள் அல்லது தேர்வுகள் கண்முன்னே வந்து நிற்கும். ஏனென்றால், உணர்வுகள் வெங்காயம் போன்றவை. நீங்கள் உணர உணர, ஏற்றுக்கொள்ள ஏற்றுக்கொள்ள, வெங்காயம் போன்று ஒவ்வோர் அடுக்காக உரிந்து ஒன்றுமில்லாமல் ஆகிவிடும். அதன் பின்னர் பிரச்னைகளைக் கையாளுவதற்கான வழிமுறைகளும் எடுக்க வேண்டிய தீர்மானங்களும் அழகாகத் தெரியவரும்.

இந்த வாழ்க்கையில் நீங்கள் உண்மையாக இருக்க வேண்டிய முக்கியமான நபர் நீங்கள்தான். மற்றவர்களை விட்டுவிடுங்கள். உங்களுக்கு மட்டுமாவது நீங்கள், உண்மையாக இருக்கலாம் தானே? அதற்கு உண்மையான, இந்த உணர்வுகள் உதவி செய்யும்.

உணர்வுகளில் நல்லது கெட்டது என்பதைவிட, அவை உண்மையானவை என்பதை அறியுங்கள். உங்கள் வாழ்வைக் கொண்டாடுவதற்கு, உணர்வுகளை அப்படியே உணர்வதும் ஏற்றுக்கொள்வதும் உதவி செய்யும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை.

உணர்வுகளை உணர்ந்து வாழ்பவர்களுக்கு அத்தனை வழிகளும் பாதைகளும் திறந்திருக்கும் என்பது உறுதி. ஆனால், ஏன் சில நேரம் மகிழ்ச்சியைத் தரும் வாய்ப்புகளையும் மகிழ்ச்சியைத் தரும் பாதைகளையும் தேர்ந்தெடுப்பதற்கு தவறிவிடுகிறோம். அல்லது உறவுச் சிக்கல்களில் இருந்து வெளிவர மறுக்கிறோம். ஏன் அவ்வளவு எளிதாக விடுபட முடிவதில்லை என்பது குறித்து அடுத்துப் பார்க்கலாம்.

உணர்வுகளை உணர்ந்து, வாழ்வைக் கொண்டாடலாம்!

(தொடரும்)

படைப்பாளர்:

ஜான்சி ஷஹி

மனநல ஆலோசகர். மன நலத்திற்கான தெரப்பிகளையும் ஆற்றுப்படுத்துதலையும் வழங்கி வருகிறார். வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழவும், பிடித்த எதிர்காலத்தை அமைத்துக்கொள்ளவும், பொது மக்களுக்கு பயிற்சிப் பட்டறைகளை நடத்திவருகிறார். இவர் பெங்களூர் கிரைஸ்ட் பல்கலைக்கழகத்தில் மாணவர் மன நல ஆலோசகராக (student counsellor) பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.