“அப்பா பேர சொல்றதுல என்ன இருக்கு, சொல்லுங்க.”

”இல்ல அப்பா பேர போடுறது இல்ல…”

“அம்மா பேரு தான், அம்மா இனிஷியல்தான். அம்மா கெசட்லயே மாத்திட்டாங்க.”

இப்படிச் சொன்னவுடன் எதிர்தரப்பில் குழப்பான நிலையில் முகத்தை வைத்துக்கொண்டு, “அதெல்லாம் தப்பு, அப்பா பேரு போடணும்” என்று கட்டாயத் தோரணையில கோபம் வெளிப்படும்.

இப்படியாகச் சின்ன வயதிலிருந்து பள்ளியில் ஒவ்வொரு வகுப்பு ஆசிரியரிடமும் நண்பர்களிடமும் பொதுவெளியிலும் நான் கடந்து வந்த எல்லோரிடமும் இதையேதான் சொல்லிக்கொண்டு வந்திருக்கிறேன். எல்லாரிமும் ஒரே எதிர்வினைதான். அப்போது அந்த எதிர்வினைக்கு என்ன அர்த்தம் என்று தெரியாமல் இருந்தது.

பேர் சொல்லாமல் இருந்தால்தான் என்ன? அதில் என்ன இருக்கிறது? இதுக்கு ஏன் இவ்வளவு கண்டிப்பு என்று தோன்றும். அதுக்கு யாரும் விடை சொல்லத் தயாராக இல்லை. இப்பவும்தான்.

அப்பா இறந்துவிட்டார் என்றால் பாவ மடல் வாசிக்கிறவர்கள்கூட, அப்பா உயிரோடுதாம் இருக்கிறார், விவாகரத்து ஆகிவிட்டது என்று சொன்னதும் பார்த்தாலே ‘தீட்டு’ என்பதுபோல் பார்ப்பார்கள். நாம் எப்போதுமே அவர்களுக்கு suspected people தான்.

பள்ளிப் படிப்பு முடியும் வரை அம்மா இனிஷியல் தான். இனிஷியல் போடுவதுகூடப் பிரச்னை இல்லை. அப்பா பேர் சொல்லாமல் கடந்து போவதுதான் கொலைக் குற்றமாக இருந்தது. அப்படியும் எந்தவோர் இடத்திலும் அப்பா பேர் சொல்லச் சொல்லி நிர்பந்தம் வந்தது இல்லை. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், அம்மாவின் கணவருடைய முழுப் பெயர் என்னவென்று தெரியாமல்தான் இருந்தது. ஆனால், Digital India அப்படி இல்லை.

முதுகலை படிப்புக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பம் நிரப்பும் போது, 10 வருஷமாக எங்கேயும் குறிப்பிடாத அவருடைய பெயரைப் போடக்கூடிய நிர்பந்தம் வந்தது. இப்போதுகூட முதலமைச்சர் ஃபெலோஷிப்புக்குப் பெயரே தெரியாத அந்த நபரோட தொழில் குறித்துக் குறிப்பிட வேண்டும் என்று கட்டாயமாக்கியிருக்கிறது அரசு.

அப்பா என்ற கதாபாத்திரம் என் வாழ்க்கையில இருந்ததே இல்லை. ஆனால், அவருடைய பெயர் மட்டும் ஏன் என்னைச் சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருக்கிறது? அந்தப் பெயர் மட்டும் யாருக்கு, எதுக்கு, ஏன் தேவை உள்ளதாக இருக்கிறது?

அந்த நபரோட பெயர் தெரியாதது எனக்கு எந்தவோர் இடத்திலும் நெருடலாக இருந்தது இல்லை. ஓர் இடத்தைத் தவிர, ஏதோ ஏரியா பிரச்னையில் என் தம்பி இன்னொரு பையன்கூட மல்லுக்கு நின்றான். எவ்வளவோ தடுத்துப் பார்த்தும் அவன் அடங்குற மாதிரி இல்லை. ஏன் இப்படி என்று கேட்டதற்கு, “அவன் என்னை ….. புள்ளைன்னு சொல்லிட்டான்” என்றான். “சரி, ஆமான்னு சொல்லிட்டு வாடா” என்றேன். ஆனால், அவனால் அது முடியவில்லை. அப்பன் பேரு தெரியாதது ஆகப் பெரிய அவமரியாதையாக இருந்தது அவனுக்கு.

ஒரு கிரிமினல் வக்கீல் கேட்கிறார், அப்பா பெயர் போடவில்லை என்றால் எப்படி என்று. அப்பா பெயர் போடவில்லை என்றால் ஆசிரியர் என்ன சொல்வாங்க தெரியுமா என்று கேட்கிறார்கள். பெயரே தெரியாதவருக்கு தொழில் என்னவென்று அரசு கேட்கிறது. ஜீவனாம்சம் கேட்டதற்கு எனக்குப் பிறந்த குழந்தைகளே இல்ல என்று சொன்னவனுடைய பெயரைச் சொல்லச் சொல்லிக் கட்டாயப்படுத்துறது இந்தச் சமூகம். அப்போதுதான் அப்பா பெயர் ஏன் விருப்பத் தேர்வாக இருக்கக் கூடாது என்று தோன்றும்.

எப்போதுமே அம்மாவைத் தியாகியாகக் காட்டுகிற சினிமா, அப்பாவை மட்டும் எப்படியெல்லாம் காண்பித்திருக்கிறது என்று பார்த்தால், வாரணம் ஆயிரம் கிருஷ்ணன், தங்க மீன்கள் கல்யாணி, அபியும் நானும் ரகுராமன், பேரன்பு அமுதவன் என்ரு குடும்பத்துக்காகத் தன்னையே அர்ப்பணித்துக்கொள்கிற அப்பாக்கள். உடல், பொருள், ஆவி அனைத்தும் பிள்ளைகளுக்கும் மனைவிக்கும் என்ரு நினைத்து வாழ்கிற சாமிடா அவர் என்கிற அளவுக்கு, அப்பாவைப் பற்றி Romanticize செய்து வைத்திருக்கிறது.

சரி நமக்குதான் இப்படி, அப்பா இருக்கிறவர்களின் வாழ்க்கை வரம் வாங்கிக்கொண்டு வந்ததாக இருக்கும் என்று நினைத்தால், பெற்ற பொண்ணையே Sexual abuse செய்யக்கூடிய அப்பா, சாதி மாறி காதல் கல்யாணம் பண்ணிக்கொண்டதால் கொல்லத் துணிந்த அப்பா, மகளுக்கு சுதந்திரம் வழங்கியது தான்தான் என்று மார்தட்டிக்கொள்கிற அப்பா, மகள் வழி பேத்தியை Molestation செய்த அப்பா, விருப்பமே இல்லாதவனுக்குக் கல்யாணம் பண்ணி வைத்து, கடமை முடிந்தது என்று பெருமிதம் கொள்ளும் அப்பா, மனைவியின் விருப்பம் என்னவென்றுகூடக் கேட்காத அப்பா, பெண் பிறந்திருந்தால் ஒழுக்கமாக இருந்திருப்பேன் என்று சொன்ன அப்பா, மூன்றும் பெண் என்பதால் விட்டுவிட்டுச் சென்ற அப்பா, சாராயமே சரணம் என்று சாலையில் விழுந்துகிடக்கின்ற அப்பாக்களைதான் நான் அதிகமாகப் பார்த்திருக்கிறேன். பெரும்பாலான அப்பாக்கள் இப்படியாகதான் இருந்திருக்கிறார்கள், இருக்கிறார்கள்.

எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படம் பிடிக்காதவர்கள் யாரவது இருக்க முடியுமா? குறிப்பாக ஒற்றைப் பெற்றோர் குழந்தைகளுக்கு எல்லாம் அந்தப் படம் மிகப்பெரிய உத்வேகம் என்று சொல்லலாம். எனக்கும் அப்படிதான், அம்மா அப்படிதான் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க வைத்த படம். ஆனால், கிளைமாக்ஸில் “அப்பா இல்லாம வளரவிட்றாதடா.” என்னதான் கதை அம்மாவுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுத்தாலும், அப்பா என்கிற கதாபாத்திரம் இருந்தே ஆகவேண்டும். தேவை இல்லை என்று ஒரு பெண் முடிவு எடுக்கக் கூடாது.

சீரியல்களில் மனைவி மீது சந்தேகப்பட்டுப் பல வருடங்கள் பிரிந்து இருக்கும் கணவன், “என் பொண்ணு அப்பா இல்லாம வளரக் கூடாது”, “அப்பா யாருனு தெரியாம இருக்கக் கூடாது” என்றெல்லாம் பிள்ளைக்கு அப்பா தேவை என்பதைக் கட்டாயப்படுத்தி, பிள்ளைகளுக்காக குறிப்பாகப் பெண் குழந்தைகளுக்காக அவர்கள் சேர்ந்துவிட வேண்டும் என்கின்றன. அப்படியான கதைகளையும் வசனத்தையும் காட்சிகளையும் பெரிய அளவுக்கு எமோஷனலாக பில்டப் செய்து, மனதில் பதிவு செய்கிற வேலைகளை நாசுக்காகவும் தீவிரமாகவும் செய்துகொண்டு வருகின்றன டிஆர்பி தமிழ் சீரியல்கள். குடும்பத்துக்கும் தனக்கும் பத்துப் பைசாவுக்குப் பிரயோஜனம் இல்ல என்றாலும் அப்பா என்ற ஒருவர் பெயருக்காவது இருந்தே ஆக வேண்டும் இவர்களுக்கு!

ஏன் என்றால் அப்பா என்கிற ‘ஆண்’ என்கிற Superior Batchயை இழந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கும். அதற்குத் தேவையான எல்லா சலுகைகளையும் செய்து தருவதற்கு இந்த ஆண் மேலாதிக்கச் சமூகம் எப்போதுமே தயராக இருக்கும். அப்பா இல்லை என்பதவிட, அப்பா தேவையானவர் என்கிற அழுத்தத்தை இந்தச் சமூகம் கொடுத்துக்கொண்டே இருக்கும். பாசத்துக்கு இல்லைனாலும் பாதுகாப்புக்குத் தேவை என்பதை உணர்த்திக்கொண்டே இருக்கும். பால்ய காலத்தில் சொந்த உறவுகளால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான, அப்பா இல்லாததால்தான் நமக்கு இப்படியெல்லாம் நடக்கிறதோ என்று ‘அப்பா’வை நினைக்க வைத்த முதலும் கடைசியும் நிகழ்வு அதுதான்.

தாய்வழிச் சமூகத்தில் அப்பா யாரென்று தெரியாமல்தான் இருந்திருக்கிறோம். ஆனால், இப்போ அப்படி இருக்குறது மிகப் பெரிய சமூக இழிவு. சமூகத்தின் பழமைவாதக் கட்டமைப்புக்குள் யோசிக்காத, மகளின் உரிமையில் மூக்கை நுழைக்காத, ஆதிக்க மனோபாவத்தில் செயல்படாத அப்பாக்கள்தாம் கொண்டாட்டத்திற்குரியவர்கள்.

(தொடரும்)

படைப்பாளர்:

மை. மாபூபீ, சென்னைப் பல்கலைக்கழகம் இதழியல் மற்றும் தொடர்பில் துறையில் முனைவர்பட்ட மாணவி. அரசியல், சமூகம் பெண்ணியம் சார்ந்த கட்டுரைகளை எழுதிவருகிறார். தீக்கதிர் நாளிதழ், கீற்று, Thenewslite போன்ற இணையதளங்களில் கட்டுரைகள் வெளிவந்திருக்கின்றன.