இது வானவில் சுயமரியாதை மாதம் . LGBTIQA+ சமூகத்தின் உரிமைகளுக்குக் குரல் கொடுக்கும் மாதம். இந்திய சமூகம் இத்தகைய திருவிழாக்களை இப்போதுதான் கொண்டாட ஆரம்பித்திருக்கிறது. இன்னுமே முழு மனதாக, தன்னிறைவோடு வானவில் திருவிழாக்களைக் கொண்டாடுகிறதா என்றால் இல்லை என்பதே யதார்த்தம். சிறு குழப்பத்துடனும் தயக்கத்துடனுமே இதனை எதிர்கொள்கிறது. குஜராத்தைச் சேர்ந்த ஷாமா பிந்து என்ற பெண் தன்னைத் தானே திருமணம் செய்துகொண்ட வைபவத்தை ஆச்சரியத்துடனும் முகச் சுழிப்புடனும் கேலிப் பேசியும் இந்தச் சமூகம் பார்த்தது. ஆனால், அதற்கெல்லாம் அஞ்சவோ வெட்கப்படவோ இல்லை. இந்தப் பூமியில் எனக்கான வாழ்க்கையைத் தன் சொந்த விருப்பு வெறுப்பின் பேரில் வாழ்வதற்கான அனைத்து உரிமையும் தனக்குண்டு என்ற எண்ணத்தோடு செயல்பட்டார் ஷாமா பிந்து. இந்தியத் திருமணங்களில் நடக்கும் மெகந்தி சடங்கு தொடங்கி அனைத்தையும் அரங்கேற்றி, தன்னைத்தானே மகிழ்ச்சிக்குள்ளாக்கி மகிழ்ந்தார். ஷாமா பிந்து ஜூன், 11ஆம் தேதி அந்த மாநிலத்தின் கோயில் ஒன்றில் தன்னைத்தானே திருமணம் செய்துகொள்ள இருப்பதாகக் கூறியிருந்தார். இதற்கு எதிர்ப்புகள் கிளம்பின. இந்நிலையில், திட்டமிடப்பட்ட நாளுக்கு முன்பே, அவர் தன்னைத்தானே திருமணம் செய்துகொண்டார்.

ஒருவர் தன்னைத்தானே திருமணம் செய்துகொள்வது இந்து மதத்திற்கு எதிரானது என்று, பிந்துவின் திருமணம் கோயிலில் நடத்துவதற்கு அனுமதி வழங்க முடியாது என குஜராத் பா.ஜ.க. தலைவர் சுனிதா சுக்லா எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஒருவர் தன்னைத்தானே திருமணம் செய்துகொள்ள இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இடம் இல்லை என்று முத்த உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணகாந்த் வாக்ரைய்யா தெரிவித்திருந்ததும் பெரும் விவாதப் பொருளானது. தன்னைத்தானே திருமணம் செய்துகொள்வது இந்தியாவில் சட்டப்பூர்வமானது இல்லை. திருமணம் என்றால் அதில் இருவர் இருக்க வேண்டும் என்றும் நீதிபதி குறிப்பிட்டார். ஆனால், ஷாமாவுடைய கருத்தோ வேறு மாதிரியாக இருந்தது. தனக்கு யாரையும் திருமணம் செய்துகொள்ள விருப்பம் இல்லை. தெளிவுடனே இம்முடிவை எடுத்ததாகவும்,18 வயது நிரம்பிய தான் செய்வது சரி என்றே உணர்வதாகவும் தெரிவித்தார். இந்தியாவில் வருங்காலத்தில் தன்னை முன்னுதாரணமாக மற்றவர்கள் எடுத்துக்கொள்வார்கள் என்று நம்பிக்கையோடு தெரிவித்திருந்தார். இதன் மூலம் பெண்களின் உணர்வுகள், விருப்பங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்பதை உணர்த்துவதே பிந்து தன்னைத்தானே திருமணம் செய்வதில் முக்கியத்துவமானது என்கிறார்.

பிந்து தனது திருமணத்தை அவரது பெற்றோர் ஒப்புதலுடனே செய்துகொண்டார். ஆனால், பிந்துவைப் போல எல்லாருக்கும் அமைவதில்லை. சமூகம் கட்டமைக்கப்பட்டுள்ள ஆண்-பெண் திருமணம் தாண்டிய உறவுகள், தன்பால் ஈர்ப்பாளர்கள், திருநங்கைகள் என்று LGBTIQA+ சமூகத்தினர் முதலில் எதிர்ப்பை, தடைகளைச் சந்திப்பது குடும்பங்களில் தாம். இன்னும் குடும்பங்கள் இதனை எதிர்கொள்ளத் தயாராக இல்லை. இயற்கையால், உணர்வால் மாறுபட்ட திருநங்கை, திருநம்பிகளையே ஏற்றுக் கொள்ளாத குடும்பங்கள் தன் பாலின ஈர்ப்பாளர்களை எல்லாம் தமிழ்நாட்டில் ,இந்தியாவில் ஏற்றுக்கொள்ள வெகுகாலம் எடுக்கும்.

உலகெங்கும் தன்பால் ஈர்ப்பாளர்கள் தங்கள் திருமணத்தை பகிரங்கமாக அறிவித்து வருகின்றனர். இந்தியாவிலும் ஆண், பெண் இரண்டு தரப்பில் தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணம் செய்துகொண்டனர். சமீபத்தில் சேலத்தில் உள்ள கோயில் ஒன்றில் கார்த்திக் – கிருஷ்ணா என்ற இரு இளைஞர்கள் தாலிகட்டி திருமணம் செய்துகொண்டனர். இவர்கள் திருமணத்தை 4 பெண் அடிகளாரும், ஓர் ஆண் அடிகளாரும் நடத்தி வைத்தனர். கிருஷ்ணா கார்த்திக்கிற்குத் தாலி கட்டி, குங்குமம் வைத்து அவரைத் திருமணம் செய்துகொண்டார். இந்த நிகழ்வு வியப்போடு பார்க்கப்பட்டாலும் ஷாமா பிந்துவுக்குப் போன்ற எதிர்ப்பு தமிழ்நாட்டில் இல்லை. அதே போன்று சமூக செயற்பாட்டாளர், ஆவணப் பட இயக்குநர், வழக்கறிஞராக உள்ள திவ்ய பாரதி, வெளிப்படையாகத் தான் ஒரு தன்பால் ஈர்ப்பாளர் என்று அறிவித்து அவரது காதலியான ஷாலுவின் ஒளிப்படத்தோடும் “my life my rules, There is no space for your opinions” என்ற வாசகத்தோடும் பேஸ்புக்கில் பதிவிட்டார். பல்வேறு ஊடகங்களுக்கு வானவில் சுயமரியாதை மாதத்தை முன்னிட்டு பேட்டியும் அளித்தார். அவர் இன்றைக்கு வெளிப்படையாக இதனை அறிவித்திருந்தாலும் அவரது போராட்டம் மிகப் பெரியது. சென்னையில் நடைபெற்ற வானவில் சுயமரியாதை பேரணியில் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. மக்களவை உறுப்பினரும் தொடர்ந்து LGBTIQA+ சமூகத்திற்குக் குரல் கொடுப்பவருமான தமிழச்சி தங்கபாண்டியன் பேரணியைத் தொடங்கி வைத்தார். பூமியில் பிறந்த அனைவருக்கும் அவரவர் பிறப்பின்படி, அவரவர் விருப்பப்படி எல்லா விதமான உரிமைகளோடு தங்களின் பாலினத் தேர்வை உறுதிசெய்துகொள்ளவும் அதன்படி வாழவும் உரிமை உள்ளது என்று தனது உரையில் குறிப்பிட்டார் தமிழச்சி தங்கபாண்டியன்.

தமிழ்நாடு LGBTIQA+ செய்தது என்ன?

மரியாதையுடன் விழிக்கும் சொல்லான திருநங்கை என்ற பெயர் சூட்டியவர் 2010 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த கருணாநிதி. அவரது ஆட்சியில் தான் தமிழகத்தில் திருநங்கை வாரியம் அமைக்கப்பட்டது, அதன் பிறகு தற்போது முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தமிழக மாநிலத் திட்டக்குழுவில் திருநர் சமூகத்தின் பிரதிநிதியாக நர்த்தகி நட்ராஜை நியமித்தார். பல்வேறு துறைகளில் முன்மாதிரியாகத் திகழும் தமிழ்நாடு LGBTIQA+ உரிமைகளை உரிதாக்குவதில் முதன்மையாகத் திகழ்கிறது.

திருநர் நல வாரியத்தின் 14 ஆண்டுகால வரலாற்றில், இத்தனை ஆண்டுகளும் போராட்டங்களும் கழிந்த பிறகு, திருநம்பிகள் உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட்டு, அதன் மூலம் அவர்களுக்கும் சமூக நலத்திட்டங்கள் சென்றடைய வழிவகுக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் ஆனந்த் வெங்கடேஷ் ஆணையைத் தொடர்ந்து LGBTQIA+ மக்கள் மீது தொடுக்கப்படும் ஒடுக்குமுறைகளை நீக்கும் விதமாக மாநில காவல்துறை விதிகளில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. LGBTQIA+ மக்களின் அடையாளங்களைப் பொதுச்சமூகம் உறுதிப்படுத்தும் விதமாக, அதற்கு எதிரான மாற்று சிகிச்சைகள் சட்டவிரோதம் எனத் தமிழகத்தின் முதல் மனநலக் கொள்கையில் வரையறுக்கப்பட்டுள்ளது.

திருநர்களுக்கான தனிப்பட்ட சிகிச்சையகங்கள் சென்னை, மதுரையில் நிறுவப்பட்டுள்ளன. மேலும் பல சிகிச்சையகங்கள் நிறுவ, பணிகள் நடந்துவருகின்றன. திருநங்கைகளுக்கான சுய உதவிக்குழுக்கள் அமைக்கவும், அவர்கள் இலவசமாகப் பேருந்துப் பயணம் செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. திருநங்கைகள் மற்றும் ஆண்களுக்கு இடையிலான திருமணத்தை இந்து திருமணச் சட்டத்தின் கீழ் அங்கீகரித்து நீதியரசர் ஸ்வாமிநாதன் வழங்கிய தீர்ப்பு (2019), இரு பாலின பண்புகளுக்குள் அடைக்கப்பட முடியாத பிறப்புறுப்புடன் பிறக்கும் குழந்தைகளுக்குச் செய்யப்படும் தேவையற்ற அறுவை சிகிச்சைகள் தடை செய்யப்பட்டது மற்றும் LGBTQIA+ மக்களுக்கான கல்வி, வேலை வாய்ப்பு, இருப்பிடம், சுகாதாரம், மருத்துவக் கல்வி, சட்ட ரீதியான பாதுகாப்பு ஆகியவற்றை வலியுறுத்திய நீதியரசர் ஆனந்த் வெங்கடேஷ் அளித்த இடைக்கால உத்தரவுகள் என சென்னை உயர்நீதிமன்றம் பல முற்போக்குத் தீர்ப்புகளை வழங்கியுள்ளது.

இத்தகைய முற்போக்கு வளர்ச்சிகள் நிகழ்ந்தாலும், இன்னும் LGBTIQA+ சமூக மக்கள் கல்வி, வேலை வாய்ப்பு, சுகாதாரம், மருத்துவம், சட்ட ஆலோசனை எனச் சமூகத்தின் பல நிலைகளில் பாகுபாடுகளையும் வன்முறைகளையும் சந்தித்தும், ஒதுக்கி வைக்கப்பட்டுக் கொண்டும் தான் இருக்கிறார்கள். வானவில் சுயமரியாதை பேரணி அவர்களின் இருப்பையும் இந்திய நாட்டின் குடிமக்களாக அவர்களுக்கு இருக்கும் உரிமைகளையும் பறைசாற்றும் ஒரு நிகழ்வாகும். அந்தப் பேரணியில் அரசுக்குப் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.

1. கல்வி மற்றும் வேலை வாய்ப்பில், திருநம்பி, திருநங்கை மற்றும் இடைப்பால் /ஊடுபால் மக்களுக்குக்கிடையே இடஒதுக்கீட்டை (horizontal reservations) செயல்படுத்த வேண்டும்.

2. திருநங்கை எனும் சொல் திருநம்பிகளை உள்ளடக்காமல், திருநங்கைகளை மட்டுமே குறிக்கும், எனவே ‘திருநங்கை நல வாரியம்’ என்றிருப்பது மாற்றப்பட்டு, ‘திருநர் நல வாரியம்’ அல்லது, ‘திருநங்கை-திருநம்பி நல வாரியம்’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும்.

3. சமூக நலத்திட்டங்களின் கீழ் திருநங்கைகளுக்கான சிறப்பு சலுகைகளில் திருநம்பிகளும் இணைக்கப்பட்டு, அவர்களுக்கும் அத்திட்டங்கள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் .

4. கல்வி, வேலை வாய்ப்பு, சட்ட ஆலோசனை, விளையாட்டு, குடும்பம், சுகாதாரம் எனப் பல நிலைகளில் LGBTIQA+ சமூக மக்கள் சந்திக்கும் வன்முறை, பாகுபாடு, ஒதுக்கிவைக்கப்படுதல் போன்ற இன்னல்களைப் போக்க மாநில அளவிலான LGBTIQA+ கொள்கைகளை உருவாக்கும் குழுவில் தன்பாலீர்ப்பாளர், இருபால் ஈர்ப்பாளர், அனைத்துப் பாலீர்ப்பாளர், ஊடுபால் பண்புடையவர், பாலின ஈர்மறைக்கு அப்பாற்பட்டவர், திருநர் என எங்கள் சமூகத்தின் அனைத்து நபர்களையும் ஈடுபடுத்த வேண்டும்.

5. ஒரே பாலைச் சேர்ந்த இருவர் மற்றும் திருநர்களின் உறவுகளைச் சிறப்புத் திருமண சட்டத்தின் கீழ் அங்கீகரித்து, குழந்தை தத்தெடுக்கவும் வாடகைத் தாய் மூலம் பெற்றெடுக்கவும் வளர்க்கவும் ஆவண செய்ய வேண்டும். அதனுடன் வாரிசு உரிமைகளையும் உறுதி செய்ய வேண்டும்.

6. சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் படி (Sushma vs Commissioner of Police) கட்டாய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் சென்னை மாநகரைத் தாண்டி வேறு எங்கும் நிகழ்த்தப்படவில்லை என்றும் திருநங்கைகளைத் தாண்டி மற்ற LGBTIQA+ மக்கள் பற்றிய விழிப்புணர்வு உரையாடல்கள் நிகழவில்லை என்பதால் அதனை நடத்த வேண்டும்.

18 வயது முடிந்த திருநம்பி, தற்பால் ஈர்ப்பு உடைய பெண்கள், ஆண்கள் மற்றும் இருபால் ஈர்ப்பு உடைய பெண்கள், ஆண்களின் வழக்குகளில் காவல்துறையினர் எப்போதும் பெற்றோரின் பக்கமே துணை நிற்பது, அவர்களின் விருப்பத் துணையைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை மீறுவது ஆகும். அதையே அவர்களின் அனுபவங்கள் உறுதிப்படுத்துகின்றன. எனவே LGBTIQA+ மக்கள் சந்திக்கும் இன்னல்களைப் பற்றிய புரிதல், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் சென்னை அன்றி, மற்ற மாவட்ட காவல்துறை மற்றும் அதன் துணைத் துறை அதிகாரிகளுக்கு நிகழ்த்தப் பட வேண்டும்.

7. திருநர் மக்களின் சுய உறுதிப்படுத்தும் பாலினத் தேர்விற்கு உடல்ரீதியான பரிசோதனை இன்றி, மனநலச் சான்றிதழ் வழங்குதல், 18 வயது முடிந்த திருநம்பிகள் அவர்களின் பெற்றோர் அனுமதி இன்றி பாலினத்தை உறுதிப்படுத்தும் சிகிச்சை பெறுதல், அறுவை சிகிச்சைக்குப் பின் பராமரிப்பு பற்றிய விரிவான விளக்கங்கள் எனத் திருநர்களின் மாண்பைப் பாதுகாக்கும் விதமாகவும், அவர்களின் தனிப்பட்ட செயலாண்மையை வலியுறுத்தும் விதமாகவும், தமிழகத்தில் உள்ள திருநர் சிறப்பு சிகிச்சையகங்கள் பின்பற்ற வேண்டிய விதிகள் மற்றும் அங்கே கொடுக்கப்படும் சிகிச்சைகளின் தரம் குறித்த வரை முறைகள் வகுக்கப்பட வேண்டும். சென்னையிலும் மதுரையிலும் உள்ள திருநர் மக்கள் அரசு மருத்துவமனைகளை மனநல மற்றும் உட்சுரப்பியல் சிகிச்சைகளுக்காகவும் ஆலோசனைகளுக்காகவும் நாடும்போது, கட்டாயப் பெற்றோர் அனுமதி சான்றிதழ் கேட்கப்படுவதும், மார்பகங்களையும் பாலுறுப்பையும் காட்டச் சொல்லிக் கட்டாயப்படுத்தும் பழக்கங்கள் இன்னும் நடைமுறையில் இருப்பதும் பல்வேறு சம்பவங்களில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. வருங்காலங்களில் இத்தகைய அணுகுமுறைகளை மருத்துவமனை தவிர்க்க வேண்டும்.

8. Sushma vs. Commissioner of Police வழக்கு தீர்ப்பில் சுட்டிக்காட்டியபடி, LGBTIQA+

குழந்தைகளுக்கும் பாலின உறுதித்தன்மை அற்ற (gender-nonconforming ) குழந்தைகளுக்கும் ஆதரவளிக்க அவர்கள் சந்திக்கும் இன்னல்களைப் பற்றிய புரிதல் மற்றும் விழிப்புணர்வை பள்ளி, கல்லூரிகளில் பணிபுரியும் நபர்களுக்கு வழங்கவும், ஆசிரியர் – பெற்றோர் சங்கங்களின் மூலம் பெற்றோருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஏற்பாடு செய்ய வேண்டும்..

9. ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு 2021 இல் உருவாக்கப்பட்ட NCERT ஆசிரியர் பயிற்சி பாடத்திட்டத்தை (teachers’ training curriculum) மாநில அளவில் ஏற்று அதை state, matric, international, montessori and central boards என அனைத்து வாரியங்களிலும் கட்டாயமாக்க வேண்டும்.

10. மக்கள் அவர்களின் விருப்பப்படி உபயோகிக்கும்படி பொது மற்றும் தனியார் நிறுவனத்தின் தங்கும் விடுதிகள், கழிவறைகள், மற்ற வசதிகளில் ஆண், பெண் எனும் இரட்டை விகுதியைத் தாண்டி, பாலின ஈர்மறைக்கு அப்பாற்பட்டவர்களும் அவற்றைப் பயன்படுத்துவதற்கு வகை செய்ய வேண்டும்.

11. LGBTIQA+ அடையாளங்களை உறுதிப்படுத்தும் வகையில் சட்டம், மனநலம், சமூகநல, செவிலியர் பயிற்சி, மருத்துவம் என அனைத்துப் பாடத்திட்டங்களையும் மாற்றி அமைக்க வேண்டும்.

12. அரசாங்கத்தின் கீழ் செயல்படும் தங்கும் விடுதிகள், குடும்பச் சூழல் மற்றும் வன்முறையின் காரணமாக வீட்டைவிட்டு வெளியே LGBTQIA+ சமூகத்தைச் சேர்ந்த தற்பால் ஈர்ப்பாளர் மற்றும் இருபால் ஈர்ப்பாளர் பெண்களையும் வரவேற்கும் விதமாக மாற்றப்பட வேண்டும் மற்றும் திருநர் விடுதிகளில் திருநர் மற்றுமல்லாத மற்ற LGBTQIA+ மக்களையும் வரவேற்க வழிசெய்ய வேண்டும்.

13. Sushma வழக்கின் தீர்ப்பு மற்றும் National Medical Commission வழங்கிய உத்தரவின் படி மருத்துவப் பாடங்களில் உள்ள இழிவான சொற்கள் அகற்றப்பட்டு, பாலினப் பொருத்தமின்மை மற்றும் பல்வேறு பாலின, பாலீர்ப்பு பண்புகள் நோயாகக் கருதப்படாமல், அவற்றைப் பற்றிய சரியான, புதிய தகவல்களைக் கொண்ட, மேம்படுத்தப்பட்ட பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட வேண்டும்.

14. பாலின உறுதிப்பாடு அறுவை சிகிச்சைக்கும் மற்ற சிகிச்சைகளுக்கும் ஆகும் செலவுகளைக் குறைக்கும் வகையில் அரசு, மருத்துவக் காப்பீடு வழியாகவோ அல்லது அதற்குரிய கட்டணங்களைக் குறைத்தோ உதவ வேண்டும்.

15. தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் பாலினத்தை உறுதிப்படுத்தும் அறுவை சிகிச்சைகளையும் அது சார்ந்த மற்ற சிகிச்சைகளையும் காப்பீட்டுக் கொள்கைகளில் உள்ளடக்க வேண்டும்.

16. தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தேசிய திருநர் அடையாள அட்டையை ஆண் /பெண்/ திருநர் என வழங்கும் வழிகளையும், அதை வழங்க அறுவை சிகிச்சையோ உடல் ரீதியான பரிசோதனைகளோ தேவையில்லை (under Section 7 of the Act as per the final Rules 2020) என்பதையும் உடனடியாக அறிவுறுத்த வேண்டும்.

17. தேசிய அடையாள அட்டைகளில் உள்ளது போலவே தமிழக அரசு அடையாள அட்டைகளிலும் ஆண், பெண், திருநர் எனும் விகுதிகளை நடை முறைப்படுத்த வேண்டும்.

அதை வெளியீட்டுத் துறையின் வர்த்தமானி வெளியீட்டிலும் அங்கீகரிக்க வேண்டும்.

18. தமிழகப் பள்ளிக் கல்வித்துறையின் நிகழ்கால மற்றும் கடந்த கால மாணவர்களின் பாலின அடையாள மாற்று முறையின் போது ஆண், பெண், திருநர் எனத் தேசிய அடையாள முறையைப் பின்பற்ற வேண்டும் எனவும், மாநில அடையாள அட்டையோ அல்லது அறுவை சிகிச்சை சான்றிதழோ அவசியம் இல்லை எனவும் பள்ளிக் கல்வித் துறை அறிவிக்க வேண்டும்.

19. தமிழக அரசும் ஊடகங்களும் LGBTQIA+ சமூகத்தினால் உருவாக்கப்பட்ட, சென்னை உயர்நீதிமன்றத்தினால் பரிந்துரைக்கப்பட்ட அகராதியைப் பின்பற்ற வேண்டும்.

இப்படி 19 கோரிக்கைகளை வானவில் சுயமரியாதை பேரணியில் LGBTQIA+ சமூகத்தினர் முன் வைத்துள்ளனர்.

தன்பால் ஈர்ப்பாளர்களை உலகம் தவறானதாகவும் இயற்கைக்கு மாற்றாகவும் கூறிவந்த நிலையில், அதுவும் இயற்கையின் அங்கம்தான் என்பதைப் பல ஆய்வு முடிவுகள் மூலம் அறிவியல் ஒப்புக்கொண்டுள்ளது. அதைத் தொடர்ந்து உலகின் பல்வேறு நாடுகளில் தன்பால் ஈர்ப்பாளர்களுக்குச் சட்டரீதியான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணத்தைச் சட்டபூர்வமாக்குங்கள் என்று நாடாளுமன்றத்தில் தனிநபர் மசோதா தாக்கல் செய்தார் நாடாளுமன்ற உறுப்பினரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான சுப்ரியா சுலே. இந்தியாவில் மட்டுமல்ல சர்வதேச அளவில் LGBTQIA+ சமூகத்தின் பல்வேறு சட்டச் சிக்கலுக்குத் தொடர்ந்து ஆளாகி வருகின்றனர். தங்கள் உரிமைகளைப் போராடி பெறும்படிதான் தன்பாலின ஈர்ப்பாளர்களின் நிலை இன்றும் உள்ளது. உக்ரைனில் பல போராட்டங்களுக்குப் பிறகு தன்பாலின ஈர்ப்பு என்பது சட்டவிரோதமானது இல்லை என அறிவிக்கப்பட்டது. ஆனால், இன்னும் தன்பாலின ஈர்ப்பாளர்கள் ஒருவரை இன்னொருவர் திருமணம் செய்துகொள்வதற்குச் சட்டபூர்வமாக அனுமதி இல்லை. உக்ரைன் மீதான ரஷ்யப் படையெடுப்பு LGBTQIA+ சமூகத்தினரை வெகுவாகப் பாதித்துள்ளது. அதாவது போரின்போது தன்பாலின ஈர்ப்பாளர் ஒருவர் இறக்கும் பட்சத்தில் அவரை மணந்த மற்றொரு தன்பாலின ஈர்ப்பாளரிடம் அவரின் உடல் ஒப்படைக்கப்படாது என்பது உக்ரைனின் சட்டம். ஆனால், இதுவே தன்பாலின ஈர்ப்பாளர்களாக இல்லாத ஓர் ஆண் அல்லது பெண் போரில் இறக்கும்போது அவருடைய துணையிடம் உடல் ஒப்படைக்கப்படும். இந்தப் பாகுபாடு களையப்பட வேண்டும் என LGBTQIA+ சமூக மக்களும் சமூகச் செயற்பாட்டாளர்களும் இணைந்து சுமார் 28,000 கையொப்பமிட்டு, மனுவை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியிடம் சமர்ப்பித்துள்ளனர்.

வெகு சில படங்களே LGBTQIA+ சமூகத்தில் வலியை உணர்த்தும் விதமாக வெளிவந்துள்ளன. ஆனால், பல்வேறு படங்களில் அவர்களைத் தரக்குறைவாகக் காண்பிப்பது இன்று வரை தொடர்கிறது. பா. ரஞ்சித் இயக்கியுள்ள ‘நட்சத்திரம் நகர்கிறது’ திரைப்படம் தன்பாலின ஈர்ப்பாளர்கள் குறித்த படமாக உருவாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தகவல் உறுதியாகும் பட்சத்தில் தமிழின் முதல் தன்பாலின ஈர்ப்பாளர்கள் சினிமா என்ற பெருமையை இப்படம் பெறும். வலுவான சட்டங்கள் மூலம் LGBTQIA+ சமூகத்தினர் உரிமைகளை உரித்தாக்குவதோடு, திரைப்படங்கள் மூலமே மக்களிடம் LGBTQIA+ சமூகத்தினர் எதிர்கொள்ளும் வலிகளை, உணர்வுகளைக் கொண்டு சேர்ப்பது இன்றைய காலத்தின் கட்டாயமாக உள்ளது.

படைப்பாளர்

சுகிதா சாரங்கராஜ்

15 ஆண்டுகளுக்கு மேலாக ஊடகவியலாளராகப் பணியாற்றி வருகிறார். தற்போது நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் துணை ஆசிரியராகவும் அதன் டிஜிட்டல் பிரிவின் தலைமை அதிகாரியாகவும் பணியாற்றி வருகிறார். அரசியல், சமூகம் சார்ந்த விவாத நிகழ்ச்சியை நெறியாள்கை செய்து வருகிறார். இவர் எழுதிய பாலின சமத்துவம் தொடர்பான பல்வேறு கட்டுரைகளுக்கு 4 முறை laadli விருதினை தேசிய அளவில் பெற்றுள்ளார். இவர் பங்கேற்று ஒளிபரப்பான 33 % என்ற பெண்களின் அரசியல் அதிகாரப் பகிர்வு நிகழ்ச்சிக்காகவும் laadli விருதினைப் பெற்றுள்ளார். குழந்தைகள் உரிமை தொடர்பாக இவர் எழுதிய கட்டுரைகளுக்காக Unicef fellowshipக்குத் தேர்வு செய்யப்பட்டார். இவரின் பாலின சமத்துவம் தொடர்பான கட்டுரைகளுக்காக 2022 ஆம் ஆண்டுக்கான laadli media fellowship க்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.