வெற்றிலைச் செல்லம் எனப்படும் வெற்றிலைப் பெட்டி, வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு புகையிலைப் போன்ற பொருள்கள் வைக்கப் பயன்படும் சிறு பெட்டி. இரண்டடுக்காக உள்ள இந்த எவர்சில்வர் பெட்டியில், கீழ்த்தட்டில் வெற்றிலையையும் மேல்தட்டில் பாக்கையும் சுண்ணாம்பையும் அதற்கான சிறு தடுப்பு அறைகளில் வைத்திருப்பார்கள். புகையிலை போடுபவர்கள் புகையிலையும் வைத்திருப்பார்கள். சிலர் அதனுடன், பாக்குவெட்டி என்னும் பாக்கை வெட்டும் சிறு உபகரணம் ஒன்றையும் வைத்திருப்பார்கள்.

பிஸ்கட் பிஸ்கட்

என்ன பிஸ்கட்

ஜாம் பிஸ்கட்

என்ன ஜாம்

ராஜம்

என்ன ரா

கோரா

என்ன கோ

மாகோ

என்ன மா

செல்லம்மா

என்ன செல்லம்

வெத்திலைச் செல்லம்

என்ன வெத்திலை

போடு வெத்திலை

என்ன போடு

செவிட்டில போடு

இது நாங்கள் விளையாடும் போது பாடும் பாடல்.

‘வெத்தலையப் போட்டேண்டி சக்தி கொஞ்சம் ஏறுதடி…’

‘வெத்தலை வெத்தலை வெத்தலையோ கொழுந்து வெத்தலையோ…’

‘வெத்தலை போட்ட ஷோக்குலே தான்’

‘பாக்கு வெத்தல போட்டேன் பத்தலை’

‘வாடி வெத்தல பாக்கு வாங்கித் தாரேன் நீயும் போட்டுக்கோ’

‘கொட்டப்பாக்கும் கொழுந்து வெத்தலையும் போட்டா வாய் சிவக்கும்’

எனத் தமிழ்த் திரையுலகம் பார்த்த வெற்றிலைப் பாடல்கள் ஏராளம்.

வெற்றிலை, சுண்ணாம்பு தொடர்பாகப் புத்தகங்களே வெளிவந்துள்ளன!

“வாட வெத்தலை வதங்க வெத்திலை

வாய்க்கு நல்லால்லே

நேத்து வச்ச சந்தனப் பொட்டு

நெத்திக்கு நல்லால்லே

குருவி கொத்தின அரளிப் பூவு

கொண்டைக்கு நல்லால்லே

மாமன் வந்து தோப்பிலே நிக்குது

மனசுக்கு நல்லால்லே”

என்கிறது ஒரு நாடோடிப் பாடல்.

………….க் கல்யாணம்

கொட்டுமேளம் கோவிலிலே

வெற்றிலை பாக்கு கடையிலே

சுண்ணாம்பு சூளையிலே

அவரவர் வீட்டில் சாப்பாடு

எனக் கஞ்சனைக் குறிக்கும் பாடல் ஒன்றும் உண்டு.

பாடல்களுக்குப் பாராட்டு மட்டும் பெற்று சன்மானம் எதுவும் பெறாத கவிஞர் ஒருவரின் பாடல்.

‘எண்ணான்கு முப்பத்திரண்டு பற்காட்டி,

இசைவுடனே பண்ணாகச் செந்தமிழ்

பாடிவந்தாலும் இப்பாரில் உள்ளார்

அண்ணாந்து கேட்பர், அழகழகென்பர்,

அதன்பிறகு சுண்ணாம்பு பட்ட இலையும்

கொடார் கவி சொன்னவர்க்கே!’

‘வேண்டாத உறவுக்கு வெறும் வெற்றிலை’- ஒருவரது உறவு வேண்டாம் என்றால் வெறும் வெற்றிலை கொடுத்திருக்கிறார்கள். அதனால் ஏற்பட்ட பழமொழி.

“வெத்தல பாக்கு வெச்சு அழைச்சாத்தான் வருவியா?” குடும்ப விழாக்களுக்கு வெற்றிலை, பாக்கு வைத்துதான் அழைத்திருக்கிறார்கள். என்னை அழைக்கவில்லை என குறை சொல்லும் உறவினர்களிடம் இவ்வாறு சொல்வார்கள். அதை எடுக்கவில்லை என்றால், அழைப்பை ஏற்கவில்லை என்பது பொருள்.

அவ்வாறு அழைக்கும்போது அவர் இறந்திருந்தால், அவர் வரப்போவதில்லை அதனால் ஏற்பட்ட பழமொழி, “செத்தவன் கையில் கொடுத்த வெத்திலைபோல” என்கிறார்கள். ஆனால், எங்கள் ஊரில் கையில் வலு இல்லாமல், ஒரு பொருளைத் தூக்கினால், செத்தவன் கையில் வெத்திலை கொடுத்தது போல ஏன் தூக்குகிறாய், ஒழுங்காகத் தூக்கு என்பார்கள். ஒரே பழமொழியின் இரு பயன்பாடு.

மூன்று கோழி மூன்று நிறம்; கூண்டுக்குள் போனால் ஒரே நிறம். அது என்ன? வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு. இது விடுகதை.

இவ்வாறு வெற்றிலை என்பது தமிழர்களின் வாழ்க்கையின் ஓர் அங்கமாகவே இருந்திருக்கிறது. இன்றும் தெரு ஓரத்தில் இருக்கும் சிறு கடைக்கு ‘வெற்றிலை பாக்கு கடை’ என்பது தான் பெயர்.

அடை எனும் சொல்லுக்கு இலை என்பது பொருள். அரசனுக்கு வெற்றிலை பாக்குக் கொடுப்பவர் அடைப்பக்காரர் எனப்பட்டனர். அதாவது, மன்னருக்கு வெற்றிலை கொடுப்பதற்கென்றே ஓர் ஆள் இருந்திருக்கிறார். அவர் அரசரின் மெய்க்காப்பாளர் போலவே எப்போதும் கூடவே இருந்திருக்கிறார். வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தில், கட்டபொம்மனின் அடைப்பக்காரர் கொல்லப்படவே, அவரின் அம்மாவிடம் ‘நான் தான் இனி உன் மகன். எனக்கு முன் நீ இறந்தால், நானே உனக்கு எள்ளும் தண்ணீரும் இறைப்பேன்’ எனச் சொல்லுவதாக வசனம் உண்டு. அந்த அளவிற்கு அடைப்பக்காரரின் பங்கு இருந்திருக்கிறது.

கம்பனுக்குச் சோழ மன்னன் அடைப்பம் தாங்கினான் என்ற கதை ஒன்றும் உண்டு.

அனைத்துக் குடும்ப விழாக்களிலும் வெற்றிலை முக்கிய அங்கம் இன்று வரை வகிக்கிறது. திருமணத்தை நிச்சயம் செய்யும் விழாவிற்குக்கூட நிச்சய தாம்பூலம் என்பதுதான் பெயர். திருமணத்திற்கு எடுத்துச் செல்லும் சீர்வரிசை என்றாலும், இரு குடும்பத்தினரும் தங்களுக்குள் மாற்றிக்கொள்ளும் தாம்பாளம் என்றாலும் வெற்றிலைக்குப் பெரும் பங்கு உண்டு.

திருமணம் முடிந்ததும் பெண் வீட்டிற்கு முதலில் போகும் போது, மணப்பெண்ணின் தங்கை மணமகனுக்கு, வெற்றிலை கொடுத்து, வரவேற்கும் வழக்கம் எங்கள் ஊரில் இருந்திருக்கிறது. சில குறும்புக்கார தங்கைகள், சுண்ணாம்பு வைக்காமல் கொடுத்திருக்கிறார்கள். சுண்ணாம்பு வைக்கவில்லை என்றால், வெற்றிலை மிகவும் காரமாக இருக்கும். இன்னமும் சில தங்கைகள் கூடுதலாகச் சுண்ணாம்பு சேர்த்து, மாப்பிள்ளையின் வாயைப் பதம் பார்த்த நிகழ்வுகளும் நடந்திருக்கின்றன.

சுண்ணாம்பு மருந்தாகவும் பயன்பட்டிருக்கிறது. அறுத்த கைக்குச் சுண்ணாம்பு கொடுக்க மாட்டாள் என்று பழமொழி உண்டு.

திருமணத்தின் போது, பெரியவர்கள் மணமக்களுக்கு வெற்றிலையில் காசு சுற்றிக் கொடுத்துள்ளார்கள். அதுவே இன்று வரை ‘சுருள்’ என கொடுக்கப்படுகிறது.

குடும்ப விழாக்கள் முடிந்து விடை பெறும்போது, வெற்றிலை கொடுத்திருக்கிறார்கள். விடைபெறுபவர் அதைப் பெற்றுக் கொண்டு, விடை பெறுவது விழாவின் முழுமையைக் குறிப்பதாக இருந்திருக்கிறது. அந்த வழக்கமே இன்று வரை ‘தாம்பூலப் பை’ என உள்ளது.

வயதுக்கு வந்த பெண்ணைப் பார்க்கப் போனால், வெற்றிலை, இனிப்பு, வாழைப்பழம் கொடுப்பதை நானே என் மிக இள வயதில், பார்த்திருக்கிறேன்.

இறந்தவர்கள் நினைவாகப் புண்ணியம் கொடுக்கும் போது, மறவாமல் வெற்றிலை கொடுப்பார்கள். இப்போது சாப்பிட வருபவர்கள் வெற்றிலை விரும்புவதில்லை என்பதால், அதற்கென சிறு தொகையைக் கொடுக்கிறார்கள்.

வீடுகளில் தேள் போன்ற பூச்சிகள் நிறைய வந்தால், தேவசகாயத்திற்கு நேர்ச்சை செய்து, தெருவில் இருப்பவர்களுக்குக் கொடுப்பார்கள்.

எடத்துவா (கேரளா) ஜார்ஜியார் கோயில் திருவிழாவின் தேர் வரும் போது, சொரூபத்தை (சிலை) நோக்கி, வெற்றிலை வீசுவார்கள். ஒரு வெற்றிலைகூடக் கீழே விழாது. யாராவது பிடித்து வைத்துக்கொள்வார்கள். அவ்வளவு கூட்டம் இருக்கும்.

எங்கள் ஊரில், ஈத்தாமொழி (கன்னியாகுமரி மாவட்டம்) வெற்றிலையை மலையாள வெற்றிலை என்பார்கள். அது கொஞ்சம் காரமாக இருக்கும். அதற்காக அதைச் சிலர் வாங்குவார்கள். சிலர் வாங்க மாட்டார்கள். காய்ந்த வாழையின் பட்டைகளில் பொதியப்பட்ட வெற்றிலைக் கட்டுகளை, கவுளி என்பார்கள். சிலரை ஒரு கவுளி வெற்றிலை ஒரு நாளுக்குத் தின்பாள் என்பார்கள். கொட்டப் பாக்கு, கழிப்பாக்கு, பச்சைப் பாக்கு எனப் பாக்கிலும் பல வகை உண்டு. பாக்கு சொத்தையாக இருந்தால் தலை சுற்றும். அதனால், அதை ஊதிப் பார்த்துதான் சாப்பிடுவார்கள்.

முதலில் பாக்கைக் கடித்துக்கொண்டு, வெற்றிலை மேல் , சுண்ணாம்பைத் தடவி மடித்து வாயின் ஓரமாக ஒதுக்கி மெல்வார்கள். ‘விரைவில்’ என்று சொல்லுவதற்குப் ‘பாக்கு கடிக்கும் நேரத்தில்’ எனச் சொல்லுவதுண்டு. மெல்லமெல்ல, சிறிது சிறிதாக வாயின் நிறம் சிவப்பாக மாறத் தொடங்கும். சிலர் அதனுடன் புகையிலையும் சேர்த்துக்கொள்வார்கள். வெற்றிலை மடிக்கும்போது ஏதாவது ஒன்றின் அளவு கூடினாலோ குறைந்தாலோ வாய் சிவக்காது; சுவை மாறி விடும்

வயதானவர்கள், இடித்துச் சாப்பிடுவார்கள். அதற்கென உரல் ஒன்று வைத்திருப்பார்கள். ஏறக்குறைய நாம் இப்போது பூண்டு தட்டுவதற்குப் பயன்படுத்தும் உரல்போல இருக்கும். இந்த உரல் கல்லிலும் இருக்கும், பித்தளையிலும் இருக்கும். என் அப்பம்மா உரல் என்றால், கனமாக இருக்கும். எங்கும் எடுத்துச் செல்வது சிரமம் என இந்த இரும்பு உரலை வைத்திருந்தார்கள். அவர்கள் வெற்றிலை இடிக்கும் தாளம் இன்னமும் என் நினைவில் உள்ளது.

‘சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோன்றுகிறது’ பாடலில் வெற்றிலை இடிக்கும், அதைத் தோண்டி வாயில் போடுவதை, இசையாக அழகாக இளையராஜா இசை அமைத்து இருப்பார்.

சிலர் வெற்றிலை எச்சிலைத் துப்புவதெற்கென தனிப் பாத்திரம் வைத்திருப்பார்களாம். ஆனால், நான் யாரிடமும் பார்த்ததில்லை.

பூக்கவோ காய்க்கவோ செய்யாமல் இருப்பதால், வெற்று இலை வெற்றிலையாக மருவி இருக்கிறது. உலகில் முதன்முதலாக வெற்றிலை பயிரிட்ட நாடு மலேசியா என்கிறார்கள். இப்போது எங்கள் ஊரில் எல்லா வீடுகளிலும் வெற்றிலைக் கொடி உள்ளது. பெரிய அளவில் பயன்பாடு இல்லை என்றாலும் செடி பார்க்க அழகாக இருக்கிறது. நிழல் இதமாக இருக்கிறது. சிலர் கோயிலுக்கென, மருந்துக்கென பறித்துச் செல்வதுண்டு.

எங்கள் வீட்டு வெற்றிலைக் கொடி

தமிழ் நாட்டில், வெற்றிலை போடும் வழக்கம் மிக மிக குறைந்துவிட்டாலும், இன்றும் வடஇந்தியாவில் பான் என்னும் வெற்றிலை போடும் வழக்கம் இருக்கிறது. கேரளாவிலும் கணிசமானவர்களிடம் வெற்றிலை போடும் வழக்கம் உள்ளது. அவர்களில் ஆண்களின் எண்ணிக்கையே கூடுதலாகத் தெரிகிறது. ஆனால், எங்கள் ஊரில் வெற்றிலை போடும் பெண்கள், குறிப்பாகப் பாட்டிகள்தான் கூடுதலாக இருந்தார்கள்.

கிராமங்களில் மணலில் எச்சிலைத் துப்பிக்கொள்ளலாம். அதுவே நகரத்திற்குச் சென்றாலோ உள் அரங்கத்திற்குள் சென்றாலோ அவர்களுக்குச் சிக்கல்தாம். அவர்கள் பெரும்பாலும் கண்ட இடத்தில் எச்சில் துப்பி அடுத்தவருக்கு இடைஞ்சலாகவே இருந்திருக்கிறார்கள். ஒரு காலத்தில்,‘எச்சில் துப்பாதீர்’ என்ற வாசகம் நாடெங்கிலும் நீக்கமற நிறைந்திருந்தது. அதற்குத் தேவையும் இருந்தது.

வெற்றிலைக்கு நிறைய மருத்துவக் குணங்கள் உண்டு என்கிறார்கள். வெற்றிலை சீரணத்தை விரைவுபடுத்தும்; வெற்றிலையைத் தீயில் வாட்டி கட்டிகளின் மேல் வைத்துக் கட்டினால் கட்டிகள் உடையும். காய்ச்சல், சளிக்கு மருந்தாக பயன்படுத்துவார்கள்.

ஆனாலும் தொடர்ச்சியாக வெற்றிலை பயன்படுத்திய பலரை மருத்துவர்கள் அந்த வழக்கத்தை நிறுத்தச் சொல்லி வலியுறுத்தியிருக்கிறார்கள். அவர்கள் வழக்கத்தை நிறுத்த மிகவும் சிரமப்பட்டார்கள். அதனால் எந்தப் பழக்கத்திற்கும் அடிமை ஆகாமல் இருப்பதே நல்லது.

படைப்பாளர்:

பாரதி திலகர்

தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார்.