பெண் குழந்தைகளின் உயர்கல்விக்காக உதவித் தொகை பெறுவதன் பொருட்டு தமிழக அரசு https://penkalvi.tn.gov.in என்ற இணையதளத்தைக் கடந்த மாதம் வெளியிட்டது . மிக முன்னோடியான வரவேற்கத் தகுந்த திட்டம் இது.

இருநூறு ஆண்டுக் காலம் பின்னோக்கிப் பார்த்தால், பெண் குழந்தைகளுக்கான கல்வி இந்தியாவில், தமிழ்நாட்டில் எப்படி இருந்தது என்று வரலாறு சொல்லும். 1800களில் பெண் குழந்தைகளுக்கு வீடுகளில் மட்டுமே கல்வி தரப்பட்டது என்று வரலாறு கூறுகிறது.

1826 இல் மதராஸ் பிரஸிடென்ஸி அரசில் கவர்னராக இருந்த சர் தாமஸ் மன்றோவின் கூற்றுப்படி, பள்ளிக் கல்வி பெற்ற பெண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. சரியாக இந்த 300 ஆண்டுகளில் பெண்கல்வி இன்று ஒப்பீட்டளவில் மிகச் சிறப்பாகக் குறிப்பிட்ட அளவில் வளர்ச்சி பெற்றிருந்தாலும் அதற்காகப் பெண்ணினம் கடந்துவந்த பாதையும் இன்னல்களும் சொல்லில் அடங்காதவை.

1850களில் பெண்களுக்குப் பள்ளிகளை ஆரம்பித்த சாவித்ரி பாய் பூலே தம்பதி எடுத்த முயற்சிகளும் போராட்டங்களும் சொல்லும் செய்திகள் ஏராளம். அதே காலகட்டத்தில் பெண்கள் கல்வியில் வளர்ச்சி பெற வேண்டும் என்று  தொடர்ந்து போராடிய ஈஸ்வர சந்திர வித்யாசாகர், அவர் ஆரம்பித்த35 பெண் குழந்தைகளுக்கான பள்ளிகளில் பயின்ற பெண்களும் இன்றைய பெண்கல்வியின் வரலாற்று விதைகள் .’இவர்களைப் போலவே ரமாபாய் ராணடே , பெண் கல்வியின் ஜான்சிராணியாக கர்ஜித்தவர்.

வட இந்தியாவில் பெண்கல்விக்காகப் போராடிய இவர்களைப் போல, தென் இந்தியாவில் அன்றைய சென்னை பிரசிடென்சி பகுதியில் பெண்கல்விக்காக முழக்கமிட்டவர் பண்டித ரமாபாய். அப்போதைய ரிப்பன் பிரபுவின் காலத்தில் அமைக்கப்பட்ட கல்வி ஆணையமான ஹண்டர் குழுவின் முன் அவர் பேசியது, இந்த நாட்டில் 99% படித்த ஆண்கள்கூட பெண் கல்வி கற்பதை விரும்பவில்லை என்ற முழக்கம்.

பண்டித ரமாபாய்… மாட்டு வண்டியில் பல மைல்கள் பயணித்து, பெண்களுக்கான மாலை நேர வகுப்புகளைப் பல ஊர்களில் திண்ணை, கோயில் வாசல் என நடத்தியதும்கூடப் பெண்கல்வியின் ஆரம்ப வரலாற்று வேர்களே.

இவற்றின் தொடர்ச்சியாகவே கிறிஸ்தவ மிஷினரிகள் கல்வியைத் தர முன்வந்தன. பெண்களின் கல்வியில் இவை பெரும் பங்கு வகித்தன. கிறித்தவ மிஷினரிகளைத் தொடர்ந்து இந்து, முஸ்லீம் அமைப்புகளும் கல்வியைத் தர முன் வந்ததும் இன்றைய பெண்களின் கல்வி வளர்ச்சிக்கு அடுத்தடுத்த சங்கிலிகள். இப்படி உருவான பள்ளிகளை ‘அரசு உதவி பெறும் பள்ளிகள்’ (Government Aided Schools)என்ற வரையறைக்குள் பின்னாளில் கொண்டுவந்தது அரசு.

இப்படி பெண்களின் கல்விக்கு உறுதுணையாக இருந்த பள்ளிகளில் படித்து வெளிவந்த பெண் குழந்தைகள் ஏராளம். அங்கு படிக்கும் குழந்தைகளும் சமூகத்தின் அடித்தட்டு பிரிவில் இருந்து வரும் பொருளாதாரத்தில் நலிவுற்ற குடும்பங்களின் குழந்தைகள்தாம், நடுத்தர வர்க்கத்தின் குழந்தைகள்தாம்.

ஆனால்.தற்போதைய பெண்களின் உயர்கல்விக்கான 1000 ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தில், அரசு உதவி பெறும் பள்ளிகளான இந்தப் பள்ளிக் குழந்தைகளுக்கு இடம் இல்லை என்பது வேதனை.

சமகாலத்தில் அரசின் கொள்கை, பெற்றோரின் விழிப்புணர்வு, சமூகத்தின் வளர்ச்சி இவற்றின் அடிப்படையில் பெண்கல்வி என்பது அடுத்த கட்ட நகர்வுக்கு வளர்ந்துள்ளது.

பெண்கல்வியைப் பள்ளிக் கல்வியில் 100% சேர்க்கை என்று உறுதி செய்தாலும் உயர்கல்வியில் சேர்க்கை பாதியைக்கூட எட்ட முடியாத வகையிலேயே இருக்கிறது. இதற்குப் பல காரணங்கள் இருந்தாலும் முக்கியக் காரணம், பொருளாதாரப் பிரச்சனைதான்.

உதாரணத்திற்கு, கிராமப் பகுதிகளில் வாழும் பெண்களை, ஏறக்குறைய 40 வயது கடந்தவர்களிடம் அவர்களது படிப்பு பற்றிக் கேட்டால், அவர்கள் கூறும் பதில்கள் இப்படித்தான் இருக்கும். அப்போது எல்லாம் எங்கள் வீட்டில் பண வசதி இல்லை, புத்தகம், நோட்டுகள் வாங்கித் தர முடியவில்லை. அதனால் படிக்க வைக்க முடியவில்லை என்றுதான் பெரும்பாலும் கூறுவர்.

அதே போல சமீபக் காலத்தில் ஏராளமான பெண் குழந்தைகள் பள்ளிக் கல்வியை முடித்த உடன் குடும்பப் பொருளாதாரத்தைத் தாங்க, வேலைக்குச் சென்று விடுவதைப் பார்க்க முடிகிறது. அப்படியான இளவயதுடைய பெண்களிடம் கல்லூரி படிக்கவில்லையா என்று கேட்டால், காலேஜ் படிக்க பண வசதி இல்லை என்றுதான் கூறி வருத்தப்படுவர்.

எனில் பெண் குழந்தைகளின் உயர்கல்வி என்பது பெரும்பாலும் பொருளாதாரத்தைச் சார்ந்தே அமைகிறது. அப்படிப்பட்ட பொருளாதாரப் பிரச்னையைத்தான் களைய முற்பட்டு இருக்கிறது தமிழக அரசு. இந்த உதவி பல லட்சக்கணக்கான குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கையை ஒளியுடையதாக்கும் என்பதில் ஐயமில்லை. ஆனால், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் அனைத்திலும் படிக்கும் பெண் குழந்தைகளுக்கான திட்டமாக இது ஏற்படுத்தப்பட்டு இருக்க வேண்டும்.

அப்படி இருக்குமானால் தான் அடித்தட்டு மக்களுக்கான உண்மையான திட்டமாகப் பார்க்க இயலும். ஏனெனில் எத்தனையோ கிராமங்களில் அரசுப் பள்ளிகள் கிடையாது. அரசுப் பள்ளிகள் இல்லாத இடங்களில் அரசு உதவி பெறும் பள்ளிகள்தாம் கல்வி கொடுக்கும் பணியைக் காலம் காலமாகச் செய்து வருகின்றன. அங்கும் லட்சக்கணக்கான பெண் குழந்தைகள் கல்வி பெற்று வருகின்றனர்.

தற்போது அரசின் அறிவிப்பான அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்கு மட்டும்தான் மாதம் 1000 ரூபாய் என்பது அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் பெண் குழந்தைகளுக்கு மிகப் பெரிய இழப்பாகப் பார்க்கப்படுவதாகக் கூறுகின்றனர். சமூகத்திலும் இது சம வாய்ப்பை வழங்காத திட்டமாகப் பார்க்கப்படுகிறது. நாமே இதை ஆய்வுக்கு உட்படுத்தினால் உண்மை விளங்கும்.

பேருந்துகளில் அனைத்துப் பெண்களுக்கும் இலவசக் கட்டணச் சலுகை அறிவித்தது மொத்த பெண் சமூகத்திற்கும் வரவேற்பாக இருந்தது. ஏனெனில் உண்மையாகவே இத்திட்டம் அடித்தட்டு மற்றும் நடுத்தர வர்க்கப் பெண்களின் பொருளாதார விடுதலையுடன் தொடர்புடையதாக இருக்கிறது.

அதேபோல உயர்கல்வி படிக்கும் அனைத்து விளிம்புநிலை, நடுத்தரப் பெண் குழந்தைகளும் படிக்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை அரசு கவனத்தில்கொள்ள வேண்டும். அங்கு படிக்கும் எல்லாப் பெண் குழந்தைகளுக்கும் மாதம் 1000 ரூபாய் என்று மறுபரிசீலனை செய்தால், பெண் கல்வியில் தமிழ்நாடு விடிவெள்ளியாகத் திகழும். Her Stories தளத்தின் வழியாக அரசுக்கும் முதல்வருக்கும் கோரிக்கையாக வைக்கிறேன்.

(தொடரும்)

படைப்பாளர்:

சு உமாமகேஸ்வரி

உமாமகேஸ்வரி , அரசுப் பள்ளியில் ஆசிரியர் , கல்வி முறை குறித்தும் வகுப்பறை செயல்பாடுகள் குறித்தும் தொடர்ந்து பேசியும் எழுதியும் வருபவர். பாடப்புத்தகம், பாடத்திட்டம் ஆகியவற்றைத் தாண்டி குழந்தைகளது மன உணர்வுகளையும் மகிழ்ச்சியையும் மதித்து, அதற்கு ஏற்புடைய சூழலை அமைத்துத் தர முயற்சி மேற்கொள்பவர்.