ஆண்டு : 1981 , ஜூன் 1 இடம்: யாழ்ப்பாணம்

இந்த நாள் உலகத் தமிழர்களின் வரலாற்றில் ஓர் ஆறாத வடுவாகப் பதிவாகப் போகிறது என்பதை எவரும் அறிந்திருக்கவில்லை. இன முரண்பாடுகள் காரணமாக, கடுமையான ஆயுத யுத்தங்கள் நடந்துகொண்டிருந்த காலம். தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்குமான இன முரண்பாட்டுத் தீர்வாக மாவட்ட சபை முறைமை கொண்டுவரப்பட்டதால், அந்த மாவட்ட சபைக்கான தேர்தல் பிரச்சாரம் நடந்துகொண்டிருந்தது. நிகழ்வுக்கு முந்திய நாள் மே 31, மாலை 5 மணி: தமிழர்களின் பண்பாட்டு அடையாளங்களில் ஒன்றான ‘பொது ஜன நூலகம், யாழ்ப்பாணம்’ தனக்கு நேரப்போகும் ஆபத்தை உணராமல், பெருமையுடன் கம்பீரமாக நின்றிருந்தது. வழக்கம்போல் நிரம்பி வழிந்திருந்த மாணவர்கள், வாசகர்கள் கூட்டத்தைச் சமாளித்து அனுப்பிவிட்டு, வேலை நேரம் முடிந்து, தான் படித்துக்கொண்டிருந்த புத்தகத்தை, மறுநாள் தொடரலாம் எனப் பாதியில் வைத்துவிட்டு, நூலகத்திலிருந்து வீட்டுக்கு வந்துவிட்டார் உதவி நூலகர் பீதாம்பரம். பாவம், நாளை புத்தகம் மட்டுமல்ல, நூலகமே இருக்கப் போவதில்லை என்பதை அவர் அறிவாரா என்ன?

மே 31 மாலை 7 மணி: வழக்கம்போல கலவரம் மூண்டிருந்தது. இனவாத சிங்கள அரசு பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டிருந்தது. இரவு மணி 8.15. யாழ்ப்பாண மாநகர முதல்வர் இராசா. விஸ்வநாதன் நாச்சிமார் கோயில் அருகில் பொதுக்கூட்டமொன்றில் தேர்தல் பிரச்சாரத்திற்காகப் பேசிக்கொண்டிருந்தார். திடீரென மிகப்பெரிய வெடிச் சத்தம். மக்கள் கலைந்து ஓடுகிறார்கள். சிங்கள வன்முறைக் கும்பலொன்றால் யாழ்ப்பாணம் நகர் சூறையாடப்படுகிறது. கடைவீதிகள், முக்கிய கட்டிடங்கள் எரித்து நாசமாக்கப்பட்டன. தமிழர்களின் முதல் பிராந்திய பத்திரிகையான ‘ஈழ நாடு’ பத்திரிகை அலுவலகத்திற்குள் நுழைகிறது வன்முறைக்கும்பல். ஊடகவியலாளர் சச்சிதானந்தமும் பத்திரிகை நிர்வாகத்தினரும் கதவுகளுக்குப் பின்னால் மறைந்து நின்றார்கள். சீருடையணிந்த ஆயுததாரிகள் பெட்ரோல் குண்டுகளை எறிந்து, அவர்கள் உருவாக்கிய பத்திரிகை அலுவலகத்தை, அச்சு இயந்திரங்களை முற்றாக எரிக்கிறார்கள்.

வன்முறையாளர்களின் வெறி அடங்கவில்லை. அடுத்து எதை எரிக்கலாம், எதைத் தின்னலாம் என வெறியுடன் அலைகிறது அந்தக் காடையர் கூட்டம். அவர்கள் கண்ணில் படுகிறது தமிழர்களின் அறிவுக்களஞ்சியமாகச் செருக்குடன் நின்ற அந்தப் பொதுஜன யாழ் நூலகம். ஜூன் 1, காலை தமிழர்களுக்கு மோசமாக விடிந்திருந்தது. “தேர்தல் பணிக்கென அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட காவல்துறையினர் அருகிலிருந்த விளையாட்டரங்கிலே தங்கவைக்கப்பட்டிருந்தனர். இலங்கை அரசின் காவல் துறையினரும் ராணுவமும் அவர்களுடன் கட்டாக்காலிகளும் இணைந்து தமிழ்த் தேசியத்தின் பொக்கிஷமான நூலகத்தினை எரித்தார்கள்” என்கிறார் நூலக எரிப்பின் நேரடி சாட்சியாளரான யாழ் மாநகர சபையின் முன்னாள் ஆணையாளரும் வட மாகாண சபையின் அவைத்தலைவருமான சி.வி.கே.சிவஞானம், பிபிசி தமிழுக்குத் தெரிவித்துள்ள நேர்காணலில். அருகிலிருந்த சென் பற்றிக்ஸ் கல்லூரியின் மாடியில் இருந்து நூலகம் எரிவதை நேரில் பார்த்துக்கொண்டிருந்த மொழியியல் அறிஞரும் தமிழ் ஆய்வாளருமான தாவீது அடிகளார் அக்கணமே உயிரிழந்தார் என்பதே அந்நூலகத்தின் பெருமதியை உலகுக்குச் சொல்கிறது. நூலகப் பாதிப்பை மறுநாள் நேரில் பார்த்த நுஃமான், எரித்து சாம்பலாக்கப்பட்ட நூலகத்தின் நினைவுகளை இப்படி எழுதுகிறார்:

நேற்று என் கனவில் புத்தர் பெருமான் சுடப்பட்டிருந்தார்.

சிவில் உடையணிந்த அரச காவலர்கள் அவரைக் கொன்றனர். யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே அவரது சடலம் குருதியில் கிடந்தது. இரவின் நிழலில் அமைச்சர்கள் வந்தனர். எங்கள் பட்டியலில் இவர் பெயர் இல்லை, பின் ஏன் கொன்றீர் என்று சினந்தனர்.

‘இல்லை ஐயா, தவறுகள் ஏதும் நிகழவேயில்லை.

இவரைச் சுடாமல் ஒரு ஈயினைக்கூடச் சுட முடியாது போயிற்று எம்மால், ஆகையினால் தான்’ என்றனர்.

சரி சரி உடனே மறையுங்கள் பிணத்தை என்று கூறி அமைச்சர்கள் மறைந்தனர்

சிவில் உடையாளர்கள் பிணத்தை உள்ளே இழுத்துச் சென்றனர். 90,000 புத்தகங்களினால் புத்தரின் மேனியை மூடி மறைத்தனர். சிகாலோகவாத சூத்திரத்தினைக் கொழுத்தி எரித்தனர். புத்தரின் சடலம் அஸ்தியானது, தம்மபதமும்தான் சாம்பலானது.

அப்படியென்ன சிறப்பு அந்த நூலகத்திற்கு என்ற ஐயம் எழலாம், இருக்கிறது… 1933இல் ஜெர்மனியின் பெர்லின் நகர வீதிகளில், ஹிட்லரின் நாசி படைகள் பல அரிய புத்தகங்களைத் தீயிட்டுக் கொளுத்தினர். பெர்லின் நகரமெங்கும் புத்தகங்களின் சாம்பல் பறந்துகொண்டிருந்தது. அதே 1933ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த, புத்தகங்களின் மேல் அளவற்றப் பற்றுக்கொண்டிருந்த கே.எம். செல்லப்பா, யாழ்ப்பாணத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கான ஒரு நூலகத்தின் தேவை குறித்து, பொதுமக்களுக்கு ஒரு கடிதம் எழுதிக்கொண்டிருந்தார். பத்திரிகைகளில் விளம்பரமாக வந்த கடிதத்தைப் பார்த்த பொதுமக்கள், தங்களிடமிருந்த அரிய நூல்களை அனுப்பினர். தேவையான நிதிஉதவி செய்தனர். அதே ஆண்டில் 844 புத்தகங்களுடன் யாழ்ப்பாண மத்திய நூல் நிலையம் உருவானது. தனி நபரால் ஆரம்பிக்கப்பட்ட அந்த நூலகம், 1935 இல் யாழ்ப்பாண நகரசபையிடம் முறைப்படி கையளிக்கப்பட்டது.

உலகெங்கும் இருந்து தனி நபர்கள், அயலக தூதரகங்கள், தொண்டு நிறுவனங்கள் அரிய பல புத்தகங்களை அனுப்பிக் குவித்தன. 1959 இல் புதிய கட்டிடம் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டு, தமிழர்களுக்கான தலைசிறந்த நூலகமாகத் திகழ்ந்தது. பல நூற்றாண்டுகள் பழமையான ஓலைச்சுவடிகள், 1800களில் வெளியிடப்பட்ட பல பத்திரிகைகளின் மூலப்பிரதிகள், ஆனந்தகுமாரசாமியின் பழமையான ஏட்டுச் சுவடிகள், 1585இல் கத்தோலிக்க மதத் தலைவர்களால் தமிழில் எழுதப்பட்ட நூல்கள், கண்டி சிறையிலிருந்தபோது ராபர்ட் க்னாஸ் எழுதிய History of Cylon நூலின் பிரதி, முதலியார் ராச நாயகத்தின் பண்டைய யாழ்ப்பாணம், சித்த வைத்திய ஓலைச்சுவடிகள், கையெழுத்துப் பிரதிகள், தமிழ் மட்டுமல்லாது ஆங்கில, லத்தீன் மொழியில் எழுதப்பட்ட அரிய நூல்கள் என யாழ்ப்பாண பொதுநூலகம் 97,000 அரிய நூல்களுடன் தென் கிழக்காசியாவிலேயே மிகப்பெரும் நூலகமாக, தமிழ்ப் பண்பாட்டு அடையாளமாகத் திகழ்ந்தது.

15ஆம் நூற்றாண்டில் மதுரையில் முகமதிய படையெடுப்பின்போது அங்கிருந்த சுவடிகளைப் பாதுகாப்பதற்காக அவற்றை வல்லங்களில் ஏற்றி யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைத்திருந்திருக்கிறார்கள். சிலப்பதிகாரத்தின் மூலப்பிரதியை உ.வே. சாமிநாதர் யாழ்ப்பாணத்திலிருந்துதான் எடுத்திருக்கிறார். பல்வேறு காரணங்களால் தமிழகத்தில் ஓலைச்சுவடிகள் அழிக்கப்பட்ட போது யாழ்ப்பாணத்தில் அவை பாதுகாக்கப்பட்டன. இவையனைத்தும் அந்நூலகத்தில்தான் பாதுகாக்கப்பட்டிருந்தன. அத்தனை சிறப்பு வாய்ந்த நூலகம்தான் பண்பாட்டுப் பெருமையறியாத காடையர்களால் கொளுத்தப்பட்டது.

20ஆம் நூற்றாண்டின் உலக அளவிலான இன, கலாச்சார அழிப்புகளில் ஒரு மிகப்பெரும் வன்முறையாக இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளது. கட்டிடக்கலை நிபுணர் வி.எஸ்.துரைராஜா எழுதியுள்ள The Jaffina Public Library rises from its ashes’ என்ற ஆவண நூலும், ஊடகவியலாளர் சி. சோமிதரன் இயக்கியுள்ள ‘எரியும் நினைவுகள்’ என்ற ஆவணப்படமும் மனித இனத்திற்கு எதிரான இக்குற்றத்தை உலகுக்குச் சொல்லும் சாட்சியாக நிற்கின்றன.

யாழ்ப்பாணம் நூலக எரிப்பு என்பது ஒரு சாதாரண சம்பவமல்ல, அது தமிழர்களை உளவியல் ரீதியாக அடுத்த கட்டத்துக்கு நகர்த்திய வரலாற்று நிகழ்வு. இதைத் தொடர்ந்து, “இந்த இரண்டு இனங்களும் ஒரே நாட்டில் வாழ இயலாது என்பதை அண்மைக்கால சம்பவங்கள் காட்டுகின்றன. நிரந்தரத் தீர்வாக இரண்டு நாடுகள் அமைய வேண்டும்” என்று முழக்கமிட்டார் பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன். ஈழத்தமிழ்நாடு முழக்கம் தீவிரமடைந்தது. “தமிழர்களின் கைகளிலிருந்து புத்தகங்கள் பறிக்கப்பட்டு எரிக்கப்படும்போது அவர்கள் ஆயுதம் ஏந்துவதன் நியாயத்தை அந்த நூலக எரிப்பு சொல்லியது” என்கிறார் சோமிதரன்.

ஆண்டு 2022, மே, ஜூன், ஜூலை 9 : 41 ஆண்டுகள் கடந்து அந்தத் துயர சம்பவத்தின் வடு கிளறி விடப்பட்டுள்ளது. தனிச் சிங்களச் சட்டம் இயற்றப்பட்டதை எதிர்த்துப் போராடிய தமிழ்த் தலைவர்களின் ரத்தத்தால் நனைந்த பூமியான காலிமுகத்திடலில் துவங்கியது, ‘கோட்டா கோ ஹோம்’ புரட்சி. விளைவாக ராஜபக்க்ஷேவின் வீடுகள், அவரது பெற்றோரின் கல்லறைகள், சொத்துகள் தீவைத்து நாசமாக்கப்பட்டன. 9.7.2022 அன்று ஜனாதிபதியின் அலுவலகத்திற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் அலுவலகத்தைத் தங்கள் வசப்படுத்தி மகிழ்ந்தனர். பிரதமர் ரணிலின் வீடும் தீக்கிரையாக்கப்பட்டது. தொல்பொருட்களும் நீண்டகாலம் சேகரித்து வைக்கப்பட்ட அரிய புத்தகங்கள் அடங்கிய மதிப்புமிக்க நூலகமும் சேர்ந்தே எரிந்ததாகக் கண்ணீர்மல்க ஊடகங்களுக்குப் பேட்டியளிக்கிறார் ரணில். இந்த நேரத்தில் ஒருவேளை 1981, ஜூன் 1ஆம் நாள் அவருக்கு நினைவுக்கு வந்திருக்கலாம். அவருக்கு மட்டுமல்ல, கடந்த காலங்களின் ஆறாத வலியையும் வடுக்களையும் தாங்கி வாழும் தமிழர்களுக்கும்தான்.

உலகமே பார்க்க, பஞ்சத்தை எதிர்கொண்டுள்ள படித்த கூட்டத்தின் நகர்வு எத்தனை கண்ணீர்ப்புகை குண்டுக்கும் நீர்த்தாரைக்கும் ஓடி ஒளியாமல் கரம்கோத்து முன்னேறிக்கொண்டேயிருக்கிறது. வரலாற்றில் பல்வேறு புரட்சிகளை வாசித்திருக்கிறோம். தமிழ் சினிமாக்களில் நம்ப முடியாத புரட்சிக் காட்சிகளைப் பார்த்திருக்கிறோம். அதையும் மிஞ்சிய காட்சிகள் நமக்கு வியப்பூட்டுகின்றன. அந்தப் போராட்டக்காரர்களின் தொகை நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. தங்களது மரணத்தைப் பற்றிக்கூட அவர்கள் கவலைப்படுவதாகத் தெரியவில்லை, உணவுப்பொருளின்றி, கல்வியின்றி தங்கள் வம்சம் நாசமாகப் போகுமென்று அவதானித்தவர்கள் போல ராணுவத்தால் அமைக்கப்பட்ட மின்சார வேலிகளைத் தகர்த்து முன்னேறினர்.

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக மக்கள் புரட்சி அதிகாரத்தால், ஆயுதமுனையால் ஒடுக்கப்படாமல் வெற்றி பெற்றிருக்கிறது. அதற்காக, இந்தப் புரட்சியை அக்டோபர் புரட்சியுடனோ மாவோவின் லாங் மார்ச்சுடனோ ஒப்பிட முயற்சிப்பது அறியாமையைத்தான் காட்டும். ஏனெனில் அங்கு போராடிக்கொண்டிருக்கும் மக்கள் அரசியல் கருத்தியல்களால் ஒன்றுபட்டவர்கள் அல்ல, தங்கள் குழந்தைகளின் அன்றாட பால்மாவுக்கும் உண்ணும் உணவுக்கும் எரிபொருளுக்கும் போராடும் மக்கள் இவர்கள். ஒருவேளை இந்த அடிப்படை அன்றாடத் தேவை பூர்த்தியானால் போராட்டமும் முடிவுக்கு வந்துவிடலாம்.

ஓடித்திரியும் ராஜபக்க்ஷே குடும்பத்திற்கும் புதிதாகப் பதவியேற்ற ரணில் விக்ரமசிங்கவிற்கும் பெரிய வேறுபாடு ஏதுமில்லை. இவர் தமிழர்களின் மீட்பருமில்லை, வீழ்ந்து கிடக்கும் இலங்கையைத் தூக்கி நிறுத்தும் மந்திரவாதியுமல்ல. இருவருமே சிங்கள பௌத்த மேலாண்மை கருத்தியலை மூச்சாகக்கொள்பவர்கள். தமிழினத்தை எதிரிகளாக வரித்தவர்கள். இலங்கையின் பொருளாதாரப் பின்னடைவு என்பது பத்தாண்டுகளுக்கு முன்னமே துவங்கிவிட்டது. உலக வங்கியின் அறிவிக்கப்படாத எஜமானர்களான மேற்கத்திய நாடுகளின் நிபந்தனைகளுக்கெல்லாம் ‘எஸ் பாஸ்’ சொல்லி வாங்கிக்குவித்த போர்த்தளவாடங்களின் கடன் கழுத்தை இறுக்கியது. ஏனெனில் மேற்கத்திய நாடுகள் வழங்கிய ‘ஆயுத உதவிகள்’ எல்லாம் அநியாய வட்டியுடனான கடன் ஒப்பந்தங்களே. அரசு நிலைகுலைந்ததை இனவாதம், மதவாதம் என்ற முகமூடிகள் போட்டு சில காலம் ஒப்பேற்றினர். இலங்கையின் பொருளாதார முதுகெலும்பு உடைந்து பல ஆண்டுகளாகிவிட்டன. இந்தச் சவப்பெட்டியின் இறுதி ஆணிதான் இன்றைய போராட்டத்திற்குக் காரணமான எரிபொருள் தட்டுப்பாட்டு. இந்தக் கடும் பொருளாதார நெருக்கடியின் விளைவாகக் கடந்த இரு மாதங்களில் மட்டும் கிட்டத்தட்ட ஒன்றறை லட்சம் சிங்கள இளைஞர்கள் புலம் பெயர்ந்துள்ளனர் என்கிறது ஒரு செய்தி. புலம் பெயர்தலின் வலியை, ஏதிலியாக மற்றொரு நாட்டிடம் கையேந்தும் வலியை சிங்களர்களும் அனுபவிக்க ஆரம்பித்துள்ளனர்.

ராஜபக்க்ஷேக்கள் ஓடுவதைக் கண்டும் மாளிகைகள் கைப்பற்றப்பட்டு ஹோம்டூர் போட்டு மகிழ்வதிலும் உள்ள உளவியல் புரிகிறது. அவர்கள் மகிழ்ச்சியில் எந்தத் தவறும் இல்லை. கொடுங்கோலர்களும் பாசிசத் தலைவர்களும் பயந்து ஓடுவது வரலாற்றில் அடிக்கடி காணக்கிடைக்கும் காட்சிதான். ஆனால், புரட்சி உணர்வுப்பூர்வமான கும்பலின் வன்முறைச் செயலாக மாறிவிடக் கூடாது. 13.7.2022 இரவு போராட்டக்காரர்கள் நாடாளுமன்றத்திற்குள் நுழைய முயற்சி செய்துகொண்டிருக்கிறார்கள் என்ற செய்தி அச்சமூட்டுவதாக உள்ளது. ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றுள்ள ரணில் விக்கிரமசிங்கே அவசரநிலை பிரகடனப்படுத்தியுள்ளதோடு, நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் முப்படைகளுக்கும் உரிமை அளிப்பதாகக் கூறியுள்ளது மேலும் கவலைக்குள்ளாக்குகிறது.

அரச தொலைக்காட்சியான ரூபவாஹினி தனது ஒளிபரப்பை நிறுத்தியுள்ளது. அமெரிக்கத் தூதரகம் தனது சேவையை இரண்டு நாட்களுக்கு நிறுத்துவதாக அறிவித்துள்ளது. நாடு தலைமையின்றி, அரசின்றி ஸ்தம்பித்து நிற்கிறது. அரசியல் காட்சிகள் நிமிடத்திற்கு நிமிடம் மாறுகின்றன. இத்தனை களேபரங்களுக்கிடையேயும், “ஜனாதிபதி பதவி விலகிய பின்னர் ஜனாதிபதி செயலகத்தையும் அலரி மாளிகையையும் ராணுவத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும்” என ஓமல்பே தேரர் குறுக்குசால் ஓட்டிக்கொண்டிருக்கிறார்.

தமிழர்களை வேரோடும் மண்ணின் மரபோடும் அழிக்க நினைத்து, அவர்களின் பண்பாட்டுத் தடத்தை எரித்தவர்கள்… நேற்றைய இன அழிப்புப் போரின் வெற்றி நாயகர்களாகக் கொண்டாடப்பட்டவர்கள், அதே மக்களால் வில்லனாக்கப்பட்டு நாடு நாடாகத் தஞ்சம் கேட்டு ஓடிக்கொண்டிருக்கிறார்கள். இந்த (கோத்த) “பய ராஜ” பக்ஷேக்கள் பூமியின் எந்த மூலைக்குச் சென்றாலும், இவர்கள் விரட்டியடித்ததினால் உலகெங்கும் பரவிக்கிடக்கும் எம் தமிழர்கள் இவர்களுக்கு ‘தக்க வரவேற்பு’ அளிக்க ஒவ்வொரு நாட்டின் வாயிலிலும் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

வரலாற்றில் இருந்து நாம் பாடம் படிக்கத் தவறுகின்ற போது மீண்டும் மீண்டும் அந்தத் தவறான வரலாறு மீட்டப்படும் என்பதற்கு இந்தத் தேசத்தின் வரலாறு சான்றாக இருக்கிறது. எந்த மக்களைக் கேடயங்களாகப் பயன்படுத்தி தாங்கள் ராஜபோக வாழ்க்கை வாழ்ந்தார்களோ, அந்த மக்களே இன்று அவர்களுக்கு எதிரான ஆயுதங்களாக மாறியுள்ளனர்.

மக்களே ஆயுதங்கள் மக்களே கேடயங்கள் – மா சே துங்

(தொடரும்)

படைப்பாளர்:

ரமாதேவி ரத்தினசாமி

எழுத்தாளர், அரசுப்பள்ளி ஆசிரியர். பணிக்கென பல விருதுகள் வென்றவர். இவர் எழுதி வெளிவந்துள்ள ‘கனவுகள் மெய்ப்படட்டும்’ கட்டுரைத் தொகுப்பு பரவலாக கவனம் பெற்றுள்ளது. 2014, 2015ம் ஆண்டுகளில் ஐ நா சபையில் ஆசிரியர் பேச்சாளராகக் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார். அடுப்பங்கரை டூ ஐநா தொடரில் அவரது ஐ நா அனுபவங்களை நகைச்சுவையுடன் விவரித்திருக்கிறார். இந்தத் தொடர் ஹெர் ஸ்டோரீஸ் வெளியீடாகப் புத்தகமாக வெளிவந்து பாராட்டுகளைப் பெற்று வருகிறது. இலங்கை இவருக்கு இதில் இரண்டாவது தொடர்.