சென்ற கட்டுரையில் கனடாவைச் சேர்ந்த என் பேராசிரியையும் நானும் தமிழ் மற்றும் தமிழர் உரிமைகள் குறித்துப் பேசிய சுவாரசியமான உரையாடலை விவரித்திருந்தேன். பேராசிரியருடன் நான் பல உரையாடல்களைச் செய்திருந்தாலும், இந்தியாவில் பெண்கள் விடுதலை மற்றும் அவர்களின் அதிகாரமையம் குறித்து நாங்கள் பேசிக்கொண்டவை மிக முக்கியமானவை. இந்த உரையாடல் மூலம், இந்தியப் பெண்களின் நிலை எப்படி இருந்தது, இருக்கிறது, இருக்கப் போகிறது என்பது குறித்த என் எண்ணங்களைச் சீரமைத்துக்கொள்ள உதவியது. இந்தியப் பெண்களுக்கு எல்லா சுதந்திரமும் கிடைத்துவிட்டது என்று நம்பும் அனைத்துப் பாலினத்தவரும் உங்கள் கருத்துகளைச் சீரமைத்துக்கொள்ள இந்தக் கட்டுரை உதவும்.

உலகம் முழுவதும் பெண் அடிமைத்தனம் இருந்தது. இன்றும் இருக்கிறது என்பது நிதர்சனமான உண்மை. உலகில் முதன்முதலில் ஒடுக்கப்பட்ட வர்க்கம் ‘பெண்’ என்று கார்ல் மார்க்ஸ் கூறுகிறார். அதற்கான அடிப்படைக் காரணம் தனிசொத்து அமைப்பு என்றும் அவர் கூறினார். அப்படி என்றால் எப்போது முதன்முதலில் செல்வம் தேவைக்கு அதிகமாகக் கிடைக்கப் பெற்று உபரி உருவானதோ அப்போது இருந்து பெண் அடிமையாக்கப்பட்டாள் என்று அர்த்தம்கொள்ள முடிகிறது. ஏன் என்றால், அந்த உபரி செல்வத்தைத் (உணவு, கால்நடை, நிலம் போன்றவை) தனக்குப் பின் தன் பிள்ளைகள் மட்டுமே பெறவேண்டும் என்று ஆண்கள் விரும்பியதால் பெண்ணின் கட்டற்ற பாலியல் சுதந்திரம் பறிக்கப்பட்டு, திருமணம் என்ற சமூக அமைப்பு தொடங்கப்பட்டது. ஆனால், பெண்களுக்குத் தடை செய்யப்பட்ட கட்டற்ற பாலியல் சுதந்திரம் ஆண்களுக்குத் தடை செய்யப்படவில்லை. காரணம், திருமண அமைப்பு தொடங்கிய காலம் முதன் இந்த உலகம் ஆண்களுக்கான உலகமாக மாறியது. இங்கு ஆண்கள் வைத்ததுதான் சட்டம். பெண்கள் எப்படி இருக்க வேண்டும், இருக்கக் கூடாது என்றெல்லாம் சட்டம் வகுப்பதும் ஆண்கள் தாம்.

கல்வி முதல் கலவி வரை இன்றளவும் ஆண் வைத்ததுதான் சட்டம். இந்த ஒடுக்குமுறைகளை எதிர்ந்துப் பெண்கள் கேள்வியே கேட்கவில்லையா என்ன? கண்டிப்பாகக் கேட்டிருப்பார்கள். இனி பெண்கள் மட்டுமில்லை, அதிகாரம் மிகுந்த ஆண்களால் ஒடுக்கப்படும் மற்ற ஆண்களும் தங்களை நோக்கிக் கேள்விகள் எழுப்பாமல் பார்த்துக்கொள்ள, சமூகத்தில் அதிகார வலிமை மிகுந்த ஆண்களால் கண்டுபிடிக்கப்பட்ட ஆயுதம்தான் மதம். பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகளின் வேர் மதம். உலகில் உள்ள அனைத்து மதங்களும் பெண்களுக்கு எதிரானவை. கடவுள் என்ற கோட்பாடு சரணாகதியைப் போதித்தது. கேள்வி கேட்காமல் அனைத்தையும் நம்பச் சொல்லித் தந்தது. கடவுளின் பெயரில் பல கட்டுக்கதைகளைக் கூறி, ஏமாற்றி கேள்வி கேட்கும் தன்மையையே மறக்கச் செய்துவிட்டார்கள் ஆதிக்கவாதிகள். உலகம் முழுவதும் இதன் அடிப்படையில்தான் மதங்கள் தோன்றின. இந்தியா மட்டும் இதில் விதிவிலக்கு அல்ல.

இந்தியா மதச்சார்பற்ற ஜனநாயக நாடு. இங்கு இந்து மதம்தான் பெரும்பான்மையான மதம். ‘இந்து’ என்ற வார்த்தைக்கு வரலாற்றில் பல வகையான விளக்கங்கள் இருந்தாலும், இந்த வார்த்தை மதத்தோடு பொருத்தப்பட்டு முழுதாக 200 ஆண்டுகள்கூட ஆகவில்லை. ‘இந்து மதம்’ என்ற சொல் 1830ஆம் ஆண்டில் கிறிஸ்தவம், இஸ்லாம் போன்ற பிற மதக் குழுக்களிடமிருந்து மற்ற இந்தியர்களை வேறுபடுத்தி அடையாளப்படுத்துவதற்காக பிரிட்டிஷ் காலனித்துவவாதிகளால் உருவாக்கப்பட்ட சொல். ஆங்கிலேயர்கள் சமூகங்களை மதத்தின் அடிப்படையில் வகைப்படுத்தத் தொடங்குவதற்கு முன்பு, இந்தியர்கள் பொதுவாகத் தங்கள் மத நம்பிக்கைகள் மூலம் தங்களைத் தாங்களே வரையறுத்துக்கொள்ளவில்லை. மாறாக அடையாளங்கள் பெரும்பாலும் வட்டாரம், மொழி, வர்ணம், ஜாதி, தொழில் மற்றும் பிரிவு ஆகியவற்றின் அடிப்படையில் பிரிக்கப்பட்டன. 18ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய வணிகர்களும் காலனித்துவவாதிகளும் இந்திய மண்ணில் தோன்றிய மதங்களைப் பின்பற்றுபவர்களை, கூட்டாக இந்துக்கள் என்று குறிப்பிடத் தொடங்கினர்.

இந்தியாவின் ஆதிக்கச் சாதிகளின் மத நம்பிக்கையான சனாதன தர்மம்தான் இன்றைய இந்து மதத்தின் வேர். இந்தச் சனாதன தர்மத்தில் பெண்களுக்கு என்னென்ன விதிகள் கூறப்பட்டுள்ளனவோ அவை அனைத்தும் இந்து மதத்தில் இன்றளவும் பின்பற்றப்படுகின்றன. இந்து மதத்தின் புனித நூலாகக் கருதப்படும் ‘மனுஸ்மிருதி’ என்னும் நூல் ஒரு சட்ட புத்தகம். இன்றளவும் பல ஆதிக்கச் சாதிகளால் இந்த நூல் பெரிதும் மதிக்கப்படுகிறது. அதே மனுஸ்மிருதி பெண்களைப் பற்றி இவ்வாறு சொல்கிறது, “ஒரு சிறுமி, ஒரு இளம் பெண் அல்லது ஒரு வயதான பெண்ணாயினும் தனது வீட்டில்கூட சுதந்திரமாக எதையும் செய்யக் கூடாது. குழந்தைப் பருவத்தில் ஒரு பெண் தன் தந்தையின் கட்டுப்பாட்டிலும், இளமையில் கணவனின் கட்டுப்பாட்டிலும், கணவன் இறந்தவுடன் தன் மகன்களின் கட்டுப்பாட்டிலும் இருக்க வேண்டும்.” இது போன்ற பெண்களின் முன்னேற்றத்தைத் தடுக்கும் பல பிற்போக்கான சட்டங்களைக் கொண்ட நூல்தான் மனுஸ்மிருதி. இதைப் பற்றி மனுஸ்மிருதியைத் தூக்கிப் பிடிக்கும் ஆதிக்கவாதிகளிடம் கேட்டால், அவர்கள் வசதியாக ஒரு பதிலைச் சொல்லிவிட்டு, கடந்துவிடுவார்கள்: மனுஸ்மிருதி இன்று புழக்கத்தில் இல்லை என்று. ஆனால், மனுஸ்மிருதி பெண்களைப் பற்றிக் கூறும் கூற்றுகளும் பெண்களுக்கு வகுத்த சட்டங்களும் ஒவ்வோர் இந்திய ஆணின் ஆழ் மனத்திலும் நீக்கமற நிறைந்திருக்கின்றன.

ஒவ்வோர் இந்திய வீட்டிலும் மனுஸ்மிருதி இல்லாமல் இருக்கலாம். ஆனால், வாய்மொழியாகவும் வாழ்வியல் வழியாகவும் சமூக உரையாடல்கள் வழியாகவும் இன்றும் மனுஸ்மிருதி புழக்கத்தில்தான் இருக்கிறது. இதுமட்டும் அல்லாமல் பெரும்பான்மையான இந்தியப் பெண்கள் சனாதன தர்மத்தில் உள்ள ‘வர்ணாஷ்ரம தர்ம’ சாதி அமைப்பால் ஒடுக்கப்படுகிறார்கள். இந்த முறைப்படி, அனைத்து சாதிப் பெண்களும் சமூகத்தின் கடைசி படிநிலையில் உள்ள தாழ்ந்த சாதியாகக் கருதப்படுகிற ஆண்களைவிடத் தாழ்ந்தவர்களாகக் கருதப்படுகிறார்கள். அப்படி இருக்கையில் இந்தியப் பெண்களின் நிலை எவ்வளவு மோசமானது என்று விவரிக்க முடியாது. இயற்கையாகப் பெண்களுக்கு வரும் மாதவிடாய் தொடங்கி, குழந்தை பெற்றெடுப்பது வரை உடல் ரீதியாக ‘தீட்டு’ என்ற பெயரில் தீண்டாமைக்கு உட்படுத்தப்படுகிறாள். உழைப்பு ரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் எண்ணற்ற சுரண்டலுக்கு ஆளாகிறாள். இந்த இழி நிலையில் இருந்து மொத்தமாக அவர்களை மீட்டெடுப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல. தொடர் சீர்திருத்த பிரச்சாரம் மூலம்தான் மெல்ல மெல்ல இந்த இழி நிலையிலிருந்து பெண்களை மீட்டெடுக்க வேண்டும். இந்திய அரசும் இடஒதுக்கீடு போன்ற பல சமூக நலத்திட்டங்கள் மூலம் பெண்களை முன்னேற்றப் பாதையை நோக்கி வழிநடத்துகிறது. இருந்தாலும், ஓர் இரவில் சமூக மாற்றம் நிகழ்ந்து விடாது. நாம் மாற்ற நினைப்பது பல்லாயிரம் காலமாக நடைமுறையில் இருக்கும் ஒரு சமூக கட்டமைப்பை.

இந்தச் சமூகக் கட்டமைப்பை உடைப்பது சாதாரண காரியம் இல்லை. அதே நேரத்தில் முடியாத காரியமும் இல்லை. சொல்லப்போனால் மெல்ல மெல்ல இந்த இழிவான சமூகக் கட்டமைப்பு மாறிவருகிறது. அதுவும் நவ தாராளமயமாக்கலுக்குப் பிறகு பெண்களின் முன்னேற்றம் வீட்டிற்கும் நாட்டிற்கும் மிக அவசியமாக மாறியது. ஏன் என்றால் நவ தாராளமயம் வந்த பிறகு இந்தியாவில் பல நடுத்தர மற்றும் கீழ் வர்க்கத்தைச் சேர்ந்த குடும்பங்களுக்குப் பொருளாதாரச் சிக்கல் ஏற்பட்டது. ஆண் மட்டும் சம்பாதிக்கும் பணம் குடும்பங்களுக்குப் போதாத நிலை வந்தது. வீட்டில் உள்ள பெண்களும் சம்பாதித்தால்தான் ஓரளவு நிலையான வாழ்க்கை வாழ முடியும் என்ற நிலை உருவானது. எனவேதான் இந்திய ஆண்கள் பெண்களை, கல்வி கற்கவும் வேலைக்குச் செல்லவும் ‘அனுமதி’ அளிக்க தொடங்கினார்கள். இதன் மூலம் பெண்களின் முன்னேற்றம் என்பது ஆண்களின் தேவைக்கு ஏற்றவாறுதான் தீர்மானிக்கப்படுகிறது என்று புரிந்துகொள்ள முடிகிறது. நவ தாரளமையத்திற்குப் பல இருண்ட பக்கங்கள் இருந்தாலும் பெண்கள் கொஞ்சமாவது முன்னேற இந்தப் பொருளாதாரக் கொள்கை உதவுகிறது என்பதை மறுக்க முடியவில்லை. எனவே, இந்தியாவில் பெண் விடுதலை என்பது சமூகச் சூழல் எதைக் கோருகிறதோ அதைப் பொருத்து தீர்மானிக்கப்படுகிறது.

பெண் விடுதலையைத் தடுப்பதற்கு முக்கியமான பங்கு வகுப்பதில் ஒன்று பாலினப் பாத்திரங்கள். பாலினப் பாத்திரங்கள் என்பது கடந்த காலத்தில் தேவையான ஒன்றாக இருந்திருக்கலாம். ஆண் வேலைக்குச் சென்றதால் பெண் வீட்டு வேலைகளைச் செய்தாள். இப்போது பெண்ணும் வேலைக்குச் செல்லும் சூழல் உருவாகியுள்ளது. எனவே, நியாயப்படி ஒரு குடும்பத்தில் உள்ள ஆண், பெண் மற்றும் எல்லாப் பாலினத்தவரும் வீட்டில் இருக்கும் வேலைகளைப் பகிர்ந்து செய்ய வேண்டும். ஆனால், இந்தக் கால மாற்றத்தைக் கொஞ்சம்கூட உணராத ஆண் சமூகம், பெண்கள் வேலைக்குச் சென்றாலும் செல்லவில்லை என்றாலும் வீட்டு வேலை மற்றும் குழந்தை வளர்ப்பு போன்ற முக்கியப் பொறுப்புகளைப் பெண்கள் தலையில் மட்டும் கட்டிவிட்டு, ‘இதுதான் நம் கலாச்சாரம்’ என்று தப்பித்துக்கொள்கிறது. மதத்தின் பெயரால் தொடங்கிய ஏமாற்று வேலை இப்போது ‘கலாச்சாரம்’ என்ற பெயரில் தொடர்கிறது.

மொத்தத்தில் இந்தியாவில் பெண்கள் முன்னேற எத்தனை முயற்சிகள் எடுத்தாலும் ஆண்கள் அவர்களின் சுயநலத்திற்காகப் பெண்களை அடக்குவதற்கு புதுப் புது காரணங்களைக் கண்டுபிடித்துக்கொண்டே இருப்பார்கள். பெண்கள் எல்லாக் காலங்களிலும் அவர்களுக்கு எதிராக நடக்கும் ஒடுக்குமுறைகளை எதிர்த்துச் சண்டை செய்துகொண்டே இருக்க வேண்டும். இந்தச் சண்டையைப் பற்றி நன்கு உணர்ந்த பெண்ணால்கூட ஒரு நல்ல ஆண் மகனை வளர்க்க முடியாது. இந்தச் சமூகம் விடாது. அந்த ஆண் மகன் மீண்டும் இந்தச் சமூகக் கட்டமைப்புக்குள் சிக்கி ஆணாதிக்கவாதியாகதான் வாழ்கிறான். எனவே, அடுத்த தலைமுறை ஆண்களைச் சரியாக வளர்க்கக்கூடிய சூழல் இந்தச் சமூகத்தில் எப்போது உருவாகிறதோ அன்று வரை இந்தப் போராட்டம் தொடரும். அந்த நாள் வரும் வரை பெண்ணியம் பேசுவோம்.

(தொடரும்)

படைப்பாளர்:

தீபிகா தீனதயாளன் மேகலா

தமிழகத்தைச் சேர்ந்த தீபிகா, தற்போது கனடாவின் மக் ஈவன் பல்கலைக்கழகத்தில் மானுடவியல் பட்டப்படிப்பு பயின்றுவருகிறார். தான் கற்றுவரும் மானுடவியல் கோட்பாடுகளை தமிழ் நிலப்பரப்புக்கும், அமெரிக்கக் கண்டத்துக்கும் பொருத்திப் பார்த்து கட்டுரைகளை எழுதத் தொடங்கியுள்ளார். வரலாறு மற்றும் தமிழ் மேல் தீவிர பற்று கொண்டவர். இவரது யூடியூப் செய்தி சேனலின் சுட்டி: https://www.youtube.com/channel/UCyNXWPShwgZG4IsyjP7BnAQ