“உங்களின் குழந்தைகள் உங்கள் வழியாக மட்டுமே வருகிறார்கள். அவர்கள் உங்களில் இருந்து வருவதில்லை” என்பது கலீல் ஜிப்ரானின் அற்புதமான வரிகள். ஆம். நம் குழந்தைகள் இந்த உலகத்தில் ஜனிப்பதற்கு நாம் வெறும் கருவி மட்டுமே. அவர்களுக்கென்று தனிச் சிந்தனை, விருப்பம், ஆசை என்று எல்லாமும் இருக்கும். அவர்களுக்கு நம்முடைய அன்பை மட்டுமே தரலாம். நமது நிறைவேறாத கனவுகள், ஆசைகளை அடைய உதவும் ‘மீடியம்’ அல்ல அவர்கள்.இப்போதெல்லாம் ஒற்றைக் குழந்தைகள் பெருகி வருகிறார்கள். அவர்கள் தனித்து வளர்வதால் விட்டுக் கொடுக்கும் தன்மை, சகிப்புத் தன்மை , பிடிவாதம், அதிகச் செல்லம் என்றுதான் வளர்வார்கள் என்னுமொரு மாயபிம்பம் அவர்கள் மேல் போர்த்தப்பட்டிருக்கிறது. இதை ஓர் ஆய்வாகச் செய்தவர் அமெரிக்காவின் போஹன்னன் (E.W.Bohannon) என்னும் ஓர் ஆராய்ச்சியாளர். 200 குழந்தைகளிடமும் அவர்களின் பெற்றோரிடமும் அவர் நடத்திய ஆய்வு முடிவில், ஒற்றைக் குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் அதிக செல்லம் கொடுத்து வளர்க்கிறார்கள். அதனால், அவர்கள் சுயநலம் கொண்டவர்களாகவும் பிறருடன் பகிர்ந்து கொடுக்கும் வழக்கம் குறைவாக இருப்பவர்கள் என்பதையும் தெரிவித்தார். ஆனால், இதற்கு முற்றிலும் மாறுபட்ட‌ கருத்தும் முன்வைக்கப்பட்டது. 

அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழத்தைச் சேர்ந்த உளவியலாளர் டோனி ஃபல்போ. இவர் 1986ஆம் ஆண்டு வரை வெளியான பல்வேறு ஆராய்ச்சிக் கட்டுரைகளை வைத்து ஒப்புநோக்கியதில், ஒற்றைக் குழந்தையாக வளர்பவர்களுக்கும் உடன்பிறந்தவர்களுடன் வளரும் குழந்தைகளுக்கும் குணநலன்களில் பெரிய வேறுபாடு இல்லை என்று தம் கருத்தை வெளியிட்டார்.

ஒற்றைக் குழந்தையாக வளர்பவர்கள் பெற்றோருடன் அன்பாகப் பழகுபவர்களாக இருப்பதையும் குறிப்பிட்டார். ஒற்றைக் குழந்தைகள் தனிமையை விரும்புபவர்கள், சுயநலம் மிகுந்தவர்கள், எளிதில் பிறருடன் ஒட்ட மாட்டார்கள், கர்வம் மிகுந்தவர்கள் என்று நிலவும் பொதுவான கருத்து முற்றிலும் தவறானது. விளையாட்டுத் துணைக்கும் பேச்சுத்துணைக்கும் யாருமே இல்லாமல் தனித்து விடப்பட்ட குழந்தை, பேசிப் பழக வாய்ப்பு கிடைக்காமல் போவதால்தான், பிற்காலத்தில் மற்றவர்களுடன் சேர முடியாத குணம் கொண்டதாக மாறுகிறதே தவிர, அது அந்தக் குழந்தையின் இயல்பு கிடையாது.

பொதுவாக ஒற்றைக் குழந்தைகளுக்கு முன்னால் இருக்கும் சவால் அவர்களது தனிமைதான். விளையாடவும் பகிர்ந்து கொள்ளவும் அக்காவோ தம்பியோ இல்லையென்ற ஓர் உணர்வு அவர்களுக்கு இருந்துகொண்டேயிருக்கும். அதனால் கற்பனையில் தங்களுக்கு ஒரு சகோதர உறவு இருப்பதாகச் சொல்வார்கள். ஒற்றைக் குழந்தைகளில் சிலர் தங்களுடன் அப்படி ஓர் அண்ணனையோ தங்கையையோ கற்பனையில் உருவாக்கி விளையாடுவதாகச் சில ஆய்வுகள் சொல்கின்றன. என் தோழிக்கு ஒரே மகள்தான். அவள் இரண்டாம் வகுப்பு படிக்கும் போது தனக்கு ஓர் அண்ணன் இருப்பதாகவும், அவன் அதே பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிப்பதாகவும் சொல்லத் தொடங்கினாள். பள்ளி இடைவேளையில் அண்ணன் வந்து தன்னைக் கவனித்துக்கொள்வதாகவும், தனக்குத் தின்பண்டங்கள் தருவதாகவும் சொல்வாள். முதலில் விளையாட்டாக எடுத்துக்கொண்ட தோழி, பிறகு விழித்துக்கொண்டார். விசாரித்ததில் அப்படி எதுவும் நடக்கவில்லை என்று தெரிந்தது. மகளின் கற்பனையே அது என்று புரிந்துகொண்ட தோழி, மகளுடன் அதிக நேரம் செலவு செய்யத் தொடங்கினார். அதன்பின்தான் அந்தக் குழந்தை அப்படிச் சொல்வதை நிறுத்தியது.

பொதுவாகவே அண்ணன், தங்கைகளுடன் பிறந்த குழந்தைகளைவிட, ஒற்றைக் குழந்தையாகப் பிறந்தவர்கள் தங்களுக்கு ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் உதவ யாரும் இல்லை என்பதால், தாங்களாகவே பிரச்னைகளைத் தீர்க்க முயற்சி செய்து வெற்றியும் காண்பார்கள். பாதகம் என்று பார்த்தால் சிலரின் பெற்றோர் தரும் அதிகப்படியான கவனிப்பால் மற்றவர்களும் அதுபோலவே முக்கியத்துவம் தரவேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்.

ஒற்றைக் குழந்தை வைத்திருப்பவர்கள் குழந்தை எதைக் கேட்டாலும் வாங்கித் தந்து பழக்கக் கூடாது. உடன் பிறந்தோர் இருந்தாலும் குழந்தைகளின் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றக் கூடாது. என் குழந்தை எதையாவது கேட்டால் முதலில் அது அவளுக்கு உடனடித் தேவையா என்று கேட்பேன். அது அவசியமா அல்லது அனாவசியமா என்று அவளையே சிந்திக்கத் தூண்டுவேன். அந்தப் பொருள் இல்லாமல் சமாளிக்க முடியுமா என்று பார்க்கச் சொல்வேன். இரண்டொரு நாள்கள் கழித்தே அதை வாங்க அழைத்துச் செல்வேன். அதற்குள் அந்தப் பொருளின் தேவை என்ன என்பது அவளுக்குப் புரிந்துவிடும். அடுத்தமுறை ஒன்றைக் கேட்கும்போது யோசித்துதான் கேட்பாள். 

சிலர் இருக்கிறார்கள். குழந்தையைப் பாசத்துடன் வளர்க்கிறேன் பேர்வழி என்று குழந்தையின் முன்பே அதன் அம்மாவை அதட்டுவார்கள். “பாப்பாவுக்குச் சோறு ஊட்டினியா?”, “தம்பிக்குத் தண்ணியைக் கையில் எடுத்துக் கொடு” என்று. இதையெல்லாம் பார்த்து வளரும் குழந்தைகள்‌ வளர்ந்தபின் அதேபோல்தான் அம்மாவை அதட்டி வேலை வாங்குவார்கள். எனக்குத் தெரிந்த ஒரு வீட்டில் அந்தப் பையன் பிளஸ் டூ படித்துக்கொண்டிருந்தான். ஒருநாள் காலை அங்கே செல்ல நேரிட்டது. அந்தப் பையனின் அம்மா அவனுக்கு ஷூ பாலீஷ் போட்டு வைத்ததோடு நில்லாமல், காலில் அதை அணிவித்தும் விட்டார்கள். அவனோ வெறுமனே காலைக் காட்டிக்கொண்டு நின்றான். என்னுடன் இருந்தவர் (வேற யாருங்க கணவர்தான்), “பாத்தியா, அந்தம்மா எவ்வளவு கேர் எடுத்துக்கிறாங்க… என்ன ஒரு அக்கறை… என்ன ஒரு அன்பு… ” என்று சிலாகித்ததோடு, “நீயும்தான் இருக்கியே… மூணாவது படிக்கிற பாப்பாவை அவளே ஷூ பாலீஷ் போட்டுக்க வெச்சு… அவளே தினமும் போட்டுட்டுப் போக வைக்கிற…” என்று ஏதோ வில்லி மாதிரி பார்த்தார். “அந்தம்மா பண்றதுக்குப் பேரு கேர் இல்லீங்க. நாளைய சமுதாயத்துக்கு ஒரு சோம்பேறியைத் தான் உருவாக்குறாங்க. இவங்க பண்ற மாதிரி நாளைக்கு அவனுக்கு வர்ற மனைவியும் வேலை செய்யணும்னு எதிர்பார்ப்பான். அது எவ்வளவு பிரச்னை…” என்றேன் அமைதியாக. ஒரு குழந்தை தனது அடிப்படைத் தேவைகளைச் செய்துகொள்ளக்கூடப் பெற்றோர், குறிப்பாக அம்மாவை எதிர்பார்க்கும்படி வளர்ப்பது தான் பெருந்தவறு. இது புரியாமல் இங்கே அக்கறை என்ற பெயரில் வேரில் அமிலத்தைதான் கொட்டுகிறார்கள்.

 நிறைய உடன்பிறப்புகளோடு இருந்தாலும் ஒற்றையாக இருந்தாலும் பெற்றோரின் வளர்ப்பு முறையே அவர்களின் குணாதிசயங்களைத் தீர்மானிக்கும். சகோதர சகோதரிகள் நிறைய இருக்கும் வீடுகளில் சொத்துப் பிரச்னைகள் இருக்கின்றன என்பதையும் மறுப்பதற்கில்லை தானே! பேச்சுவார்த்தை இன்றி ஆண்டுக் கணக்கில் பிரிந்திருக்கும் உடன்பிறப்புகளும் உண்டு.

ஒற்றைக் குழந்தைகள் இன்றைய காலகட்டத்தில் பரவலாக இருக்கின்றனர். சிலர் மேற்படிப்பு, வேலை, வெளிநாட்டு வாழ்க்கை என்ற சூழலில் ஒரு குழந்தை போதும் என்று முடிவு செய்திருப்பர். சிலர் உடல்நிலை அல்லது பொருளாதாரச் சூழல் காரணமாக இத்தகைய முடிவுக்கு வந்திருப்பர். மாறி வரும் சமுதாயச் சூழலில் இதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அவர்களை வீட்டுக்குள்ளேயே அடைத்து வைக்காமல் வெளியில் அக்கம்பக்கத்துக் குழந்தைகளுடன் கலந்து பழகவிட வேண்டும். வெளியில் விளையாட அனுமதிக்க வேண்டும். அப்போதுதான் விட்டுக் கொடுத்துச் செல்லும் குணம் வரும். சகிப்புத் தன்மை வளரும். கீழே சாதாரணமாக விழும் குழந்தையைக்கூடப் பதறிக்கொண்டு தூக்கக் கூடாது. வாழ்வின் இறுதிவரை பெற்றோர் குழந்தைகளின் கைகளைப் பற்றிக்கொண்டே இருந்தால் அந்தக் குழந்தைகளால் பிற்காலத்தில் தனித்து எதையும் செய்ய இயலாது. எந்த ஒரு முடிவையும் எடுக்க முடியாது.          

பாதுகாப்பாகவே இருக்கும் குழந்தைகள் அவை ஒற்றையோ அல்லது இணைக் குழந்தைகளோ வாழ்வில் எதையும் கற்றுக்கொள்ள முடியாது. அவர்கள் எதிர்நீச்சல் போடக் கற்றுக் கொடுக்க வேண்டும். அவர்கள் சம்பந்தப்பட்ட முடிவுகளை அவர்களே எடுக்கும் சுதந்திரத்தைக் கொடுக்க வேண்டும். அவர்களது வாழ்க்கைக்குள் பெற்றோர் ஊடுருவாது விலகி நின்று, தேவைப்படும் பட்சத்தில் அவர்களுக்கு வழிகாட்டலாம். அவர்கள் எடுக்கும் முடிவுகள் தவறிவிடும் நேரங்களில் அதைக் குத்திக் காட்டாமல், அவர்களுக்குத் துணையாக இருக்கலாம். இவையே பெற்றோராக நம் கடமை என்பதை முதலில் நாம் உணர்ந்துகொள்ள வேண்டும்.

குழந்தைகள் உலகம் அழகானது. வாழ்நாளில் குழந்தைப் பருவத்தை நினைத்துப் பார்த்தால் மகிழ்ச்சியை மட்டுமே தருவதாக அவர்களுக்கு அமைத்துக் கொடுப்போம். அப்படி இயலாதவர்கள் குறைந்தபட்சம் அந்த உலகின் அமைதியைக் குலைக்காமல் விலகி இருக்கப் பழகுவோம்.

(தொடரும்)

படைப்பாளர்:

கனலி என்ற சுப்பு

‘தேஜஸ்’ என்ற பெயரில் பிரதிலிபி தளத்தில் கதைகள் எழுதி வருகிறார். சர்ச்சைக்குரிய கருத்துகளை எழுதவே கனலி என்ற புனைபெயரில் எழுதத் தொடங்கியிருக்கிறார்.