பதின்பருவ மயக்கம்

பதின்பருவம் என்பது வளரிளம் பருவமான பதிமூன்று வயதில் இருந்து பத்தொன்பது வயது வரையிலான ‘டீன் ஏஜ்’ பிராயத்தைக் குறிப்பது. குழந்தைப் பருவத்தில் இருந்து கொஞ்சம் முதிர்ச்சியடைந்ததும், இளம் பருவத்தை அடையும் தூரம் கொஞ்சம் குறைவாகவும் இருக்கும் இந்தப் பருவத்தைக் கொஞ்சம் எச்சரிக்கையாகத்தான் கடக்க வேண்டும்.

உடலின் ஹார்மோன்கள் மாற்றமடையத் துவங்கும் இந்தக் காலகட்டத்தில் உடலில் ஏற்படும் மாற்றங்களால் மனம் எக்கச்சக்கமான குழப்பத்தில் தவிக்கும். உலகம் புதிதாகத் தோன்றும். செயல்களிலும் நடையிலும் துள்ளல் வரும். எதையும் சாதிக்க அசட்டுத் துணிச்சல் வரும். கூடவே தேவையற்ற பிரச்னைகளும் வருவதால்தான் இந்தப் பருவம் பெற்றோருக்கு அடிமனதில் பயத்தை ஏற்படுத்துகிறது.

பெண்களுக்காவது தங்களது உடல் குறித்த மாற்றங்கள், பூப்பெய்துவது குறித்த செய்திகள் ஓரளவுக்காவது வீட்டிலிருந்தோ உறவுப் பெண்களிடம் இருந்தோ கிடைத்துவிடும். ஆனால், ஆண் குழந்தைகள் நிலை இந்த விஷயத்தில் இன்னும் மேம்படவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் உடல் குறித்த மாற்றங்களைப் பற்றி எந்தத் தகப்பனும் மகனிடம் வெளிப்படையாகப் பேசுவதில்லை. ஆகவே தான் ஆண் குழந்தைகள் தங்களது உடல் மாற்றங்களைக் குறித்து வெளியே தெரிந்துகொள்ள ஆரம்பிக்கிறார்கள். இதனால் பெரும்பாலான ஆண் குழந்தைகள் வேண்டாத தகவல்களையும் தவறான நம்பிக்கையையும் பெற நேரிடுகிறது. இதைத் தவிர்க்க பெற்றோரே குழந்தைகளிடம் நயமாக பேசினால் இத்தகைய பிரச்னைகள் எழாது.

அதுநாள் வரை கையைப் பற்றிக் கொண்டு தன் காலையே சுற்றிக் கொண்டு வளைய வந்த குழந்தை திடீரென தனியே செயல்படத் தொடங்கும். தனக்கென உள்ள விருப்பத்தின் பேரில் உணவோ உடையோ தேர்ந்தெடுக்கத் தொடங்கும். அப்போதே அவர்களுக்கென்று ஒரு தனி உலகம் அமைய ஆரம்பித்து விட்டதைப் பெற்றோர்கள் புரிந்துகொள்ள வேண்டும். அந்த உலகிற்குள் பெற்றோர் நண்பர்களாக நுழைந்தால் இருதரப்பிற்கும் எந்தவித மனக்கசப்புகளும் ஏற்படாது. அதை விடுத்து அவர்களின் சுயதேர்வுக்கு மதிப்பளிக்காது அவர்களைக் குழந்தைகளாகவே நடத்தும் பெற்றோரிடம் இருந்து மனதளவில் விலகிவிடுவார்கள். காலம் மாறுவதைப் புரிந்துகொண்டு பெற்றோர் தங்களது வளரிளம் பருவக் குழந்தைகளைக் கையாளக் கற்றுக்கொள்ள வேண்டும்.

இந்த வயதுக் குழந்தைகள் தங்களது தோற்றம் குறித்த சிந்தனையிலேயே அதிகம் இருப்பார்கள். அதனாலேயே திரைப்படக் கதாநாயக பிம்பங்களை ஆராதிப்பது, கதாநாயகிகளைப் போல ‘சைஸ் ஜீரோ’ உடலமைப்புக்கு மாற நினைப்பது என்று தோற்றம் அவர்களுக்கு பெரிய விஷயமாக இருக்கும். எதிர்பால் ஈர்ப்பு அதிகமாக இருக்கும் இந்த வயதில் அதுவரை தந்தையை ஹீரோவாகப் பார்த்து வந்த பெண், வெளியே இருக்கும் ஆண்களைப் பார்க்கத் துவங்குவாள். தாயை நேசித்து வந்த பையன், பிற பெண்களிடம் தாயின் சாயலைத் தேடத் தொடங்குவான். இது இயற்கையான ஒன்றுதான்.

இந்த வயதுக் குழந்தைகளுடன் அதிக நேரம் செலவழிப்பது பெற்றோருக்கு அடுத்தபடியாக ஆசிரியர்கள் தாம். ஓர் ஆசிரியர்/ ஆசிரியையின் உருவம்தான் முதலில் அவர்கள் எண்ணத்தில் பதிகிறது. அடுத்து அவரது பேச்சு, செயல்பாடு, நடத்தை ஒவ்வொன்றும் அவர்களை ஈர்க்கத் தொடங்குகின்றன. யார் செய்யும் செயலையும் தங்களுக்கு விருப்பமான ஆசிரியருடன் அவர்கள் ஒப்பிட்டுப் பார்க்கிறார்கள். இது அளவுடன் இருக்கும் வரையிலும் ஆபத்தில்லாதது. ஆனால், சம்பந்தப்பட்ட ஆசிரியரோ/ஆசிரியையோ இதைத் தங்களுக்குச் சாதகமாக்கிக்கொள்ள எண்ணுவதுதான் ஆபத்தில் போய் முடிகிறது. இன்றைய காலகட்டத்தில் ஆசிரியர்கள் மாணவர்களிடம் பாலியல் ரீதியாக நடந்துகொள்ளும் விதம்தான் பேசுபொருளாக இருக்கிறது.

வளரிளம் பருவக் குழந்தைகளுக்கு எப்போதுமே தங்களை ஒரு ‘சூப்பர் கேரக்டர்’ ஆகத் தங்கள் நண்பர்களிடம் வெளிப்படுத்திக் கொள்ளும் எண்ணம் இருக்கும். அதேபோல் எல்லோரும் விரும்பும் ஆசிரியரோ ஆசிரியையோ மற்றவர்களைவிடத் தனக்குத் தான் மிகவும் நெருக்கம் என்று காட்டிக்கொள்ள முயற்சிப்பார்கள். அது போன்ற சமயங்களில் ஒரு தெளிவான ஆசிரியர் அந்தக் குழந்தையின் செயல்பாடுகளைச் சுட்டிக் காட்டி, அவர்களது தேவையற்ற சிநதனைகளை மடைமாற்றி விட்டால் எந்தப் பிரச்னையும் வராது தடுக்கலாம். வளரிளம் பருவக் குழந்தைகளைக் கையாளும் விதம் குறித்து ஆசிரியர்களுக்கு முதலில் கற்றுத் தர வேண்டும்.

சினிமா கதாநாயக / நாயகிகளைப் பற்றியே பேச்சு நீளும். அவர்களது ஸ்டைல், ஆடை, அணிகலன்கள் என்று சிலாகித்துப் பேசுவார்கள். அப்போது அதைக் கண்டிப்பதைவிட, அது இயல்பான ஒன்றுதான் என்று நாம் கடந்து சென்று விட்டு, அவர்களும் கடந்து செல்லக் கற்றுத் தர வேண்டும். அதை விடுத்து கண்டிக்க மட்டுமே செய்தால் அவர்கள் சிந்தனை அதிலேயே தான் இருக்கும். இதை முதலில் பெற்றோர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

அதேபோல் உடல் தோற்றம் பற்றிய எண்ணம் எப்போதும் இருக்கும். அழகைவிட ஆரோக்கியம் முக்கியம் என்பதைப் பெற்றோர் தாம் எடுத்துரைக்க வேண்டும். அதற்கு முதலில் பெற்றோர் உடல்நலம் பேணுபவர்களாக, முன்மாதிரியாக இருக்க வேண்டும். சைஸ் ஜீரோ ஆக வேண்டும் என்று பட்டினிக் கிடக்கும் குழந்தைகளிடம் ஃபிட்னெஸ் பற்றி அறிவுறுத்தி, தாங்களும் சேர்ந்து உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

உடல் சார்ந்த குறைபாடுகள் இருக்கும் குழந்தைகளுக்கு, சாதிக்க அவையெல்லாம் ஒரு பொருட்டல்ல என்று மனதில் பதிய வைக்க வேண்டும். அவர்களின் தன்னம்பிக்கையைக் கெடுக்கக் கூடாது. அவர்களது எந்தவொரு முயற்சிக்கும் தடை போடாது ஊக்குவிக்க வேண்டும். சாத்தியமில்லை எனில் அதுகுறித்து தெளிவாக எடுத்துச் சொல்ல வேண்டும். விவாதங்களைத் தவிர்க்க வேண்டும்.

பதின்பருவத்தினர் தங்களது நட்பு வட்டாரத்தை அமைத்துக்கொள்வதில் கவனமாக இருக்க வேண்டும். பெற்றோர் அதற்கு உதவ வேண்டும். தங்கள் குழந்தைகளின் நண்பர்களைப் பற்றிக் கண்டுகொள்ளாமல் இருப்பதும் தவறு. அதிகமாக ஆராய்ந்து கொண்டிருப்பதும் தவறு. நண்பர்களை செலக்டிவாக வைத்துக்கொள்ள அவர்களுக்குப் பெற்றோர் தாம் கற்றுத் தர வேண்டும். எந்நேரமும் அறிவுரை மழை பொழிந்து கொண்டிருக்காமல் அவர்களுடனான நட்புலகில் நாமும் அவ்வப்போது (கவனியுங்கள் அவ்வப்போது தான்) பிரவேசித்து ஜாலியாக அவர்களுக்குச் சமமாக, அதே நேரம் நமது மரியாதை குறைந்துவிடாமல் அரட்டை அடிக்கலாம். இது நம் குழந்தைகளை மட்டுமல்ல அவர்களின் நண்பர்களையும் நம்முடன் நெருக்கமாக்கும். இது ஓர் ஆரோக்கியமான உறவாக அமையும்.

இந்த வயதில் எதையும் சுதந்திரமாகச் செய்யும் எண்ணம் மேலோங்கும். அதைத் தடுக்காமல் செயல்படச் சொல்லி தூர நின்று கண்காணிக்க வேண்டும். அவர்கள் செய்யும் செயல்கள் மூலம் ஏதேனும் பாதிப்பு வந்தால் அவர்களையே குற்றம் சாட்டாமல் ஆறுதலாக அரவணைத்துக்கொள்ள வேண்டும். ‘சொல்லிக் கொடுத்த சொல்லும், கட்டிக் கொடுத்த சோறும் எத்தனை நாள் காணும்?’ என்று ஒரு சொலவடை உண்டு. அவர்களைச் சுயமாக இயங்கச் செய்வது முக்கியமான ஒன்று. நாம் செய்யும் பெரும் தவறு என்னவென்றால், குழந்தைகளை எப்போதும் நமது கைப்பிடியிலேயே வைத்துக்கொண்டிருப்பது தான். பறக்கக் கற்றுக் கொள்ளாத பறவைக் குஞ்சும் நீந்தக் கற்றுக் கொள்ளாத மீன் குஞ்சும் எப்படி இந்த உலகத்தில் ஜீவிக்கும்?

தவறான போதனைகள், வழிகாட்டுதல்களால் சில பதின்ம வயதுக் குழந்தைகள் தடம் மாற நேரிடும். நேர்மறை எண்ணங்களைவிட, எதிர்மறை சிந்தனைகள் அதிகத் தாக்கத்தை ஏற்படுத்தும் வயது இது. அப்போது அதைக் கண்டறிந்து அவர்களுக்கு அதன் விளைவுகளைத் தெளிவுபடுத்த வேண்டும். உணர்ச்சி வசப்பட்டு நாம் தடாலடியாகச் செயல்பட்டால் குழந்தைகள் எந்த முடிவுக்கும் போய் விடுவார்கள். பெற்றோர் முதலில் நாசூக்காகப் பிரச்னைகளைக் கையாளத் தெரிந்து கொள்ள வேண்டும்.

பதின்ம வயதுக் குழந்தைகளுக்கான வாழ்வியல் தேடல்கள் மாறிக் கொண்டே இருக்கும். அதன் போக்கிலேயே விட்டுப் பிடிப்பது தான் இருசாராருக்கும் நல்லது. அதை விடுத்து பெற்றோர் தங்களது நிறைவேறாத கனவுகளையும், ஆசைகளையும் அவர்கள் மீது திணிக்கக் கூடாது. அவர்களுக்கென்று இருக்கும் சுய விருப்பத்தை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். அதை நிறைவேற்ற உதவ வேண்டும். அவ்வாறு இயலாதெனில் அதைப்பற்றி குழந்தைகளிடம் தெளிவாகக் கலந்துரையாடிப் புரிய வைப்பது நல்லது.

வளரிளம் பருவக் குழந்தைகள் எளிதாக எதிர்பாலரால் ஈர்க்ப்படுகிறார்கள். இது இயல்பாக ஹார்மோன்களின் விளையாட்டால் தான் என்று முதலில் பெற்றோர் புரிந்துகொள்ள வேண்டும். இந்த வயதில் வரும் பாலின ஈர்ப்பைக் காதல் என்று அர்த்தப்படுத்திக் கொண்டிராமல், அதைக் கடந்து செல்லும் தெளிவை ஏற்படுத்த வேண்டும். காதல், காமம் குறித்து குழப்பங்கள் அதிகரிக்கும். மனதில் தோன்றும் கேள்விகளுக்குப் பெற்றோரே முடிந்தவரை பதிலளித்து விடுவது நல்லது. அவ்வாறின்றி வெளியே விடை தேடுவதால் தான் தேவையற்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன.

உடல் மாற்றங்கள், பாலியல் சார்ந்த உணர்வுகள் கிளர்ந்தெழுதல் இவற்றிற்கெல்லாம் விடை தேடும் ஆர்வம் முளைத்திருக்கும். குழந்தைகளுடன் இது குறித்துப் பேசத் தயங்கும் பெற்றோர் அறிவியல் பூர்வமான புத்தகங்களை படிக்கச் சொல்லி அவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை நிவர்த்தி செய்யலாம். இந்தியா போன்ற பண்பாடு, ஒழுக்கம் நிறைந்த தேசத்தில் எப்படி இவ்வாறு பேசுவது என்று தயங்க வேண்டாம். ஏனெனில் முறையான பாலியல் அறிவு இல்லாத காரணத்தால் தான் இந்தக் கலாச்சார தேசத்தில் வன்புணர்வுகளும், பலாத்காரங்களும் அதிக அளவில் நடக்கின்றன. பசி, தாகம், உறக்கம் போல பாலுணர்வும் இயல்பானதென்பதைப் புரிய வைக்க வேண்டும். மனிதர்கள் எந்நேரமும் பாலுறவைப் பற்றியே சிந்தித்துக்கொண்டிருப்பதில்லை. அவர்களுக்கென்று இருக்கும் சமூக மதிப்பைத் தக்க வைத்துக்கொள்ள, சமுதாயத்தில் நல்ல அந்தஸ்தைப் பெற, பதின்பருவத்தில் எடுக்கும் முயற்சிகள் தாம் முக்கிய காரணிகள் என்று புரிய வைக்க வேண்டும். ஒவ்வொன்றுக்கும் உரிய பருவம் உள்ளதென்று உணர்த்த வேண்டும்.

தனது மதிப்பை உயர்த்த கல்வியிலும் இதர கலைகள் கற்றுக்கொள்வதிலும் கவனத்தைச் செலுத்த அறிவுறுத்த வேண்டும். எதிர்பாலினர் மீது ஏற்படும் ஈர்ப்பு, தேவையற்ற எதிர்மறை நடவடிக்கைகள் போன்றவற்றைப் புறந்தள்ளக் கற்றுக்கொடுக்க வேண்டும். முதலில் இது குறித்துப் பெற்றோரிடம் எடுத்துச் சொல்லும் வண்ணம் ஓர் இணக்கமான சூழலை இல்லத்தில் ஏற்படுத்த வேண்டும்.

திடீர் திடீரென மாறும் மனநிலை பதின்பருவத்துக்கே உரியது. அதைப் பெற்றோர் புரிந்துகொள்ள வேண்டும். அதை விடுத்து, “எதிர்த்துப் பேசிப் பழகிட்டியா?” என்று பிரச்னை செய்வது முதிர்ச்சியற்ற மனநிலை. அவர்களது பிரச்னை என்ன என்று காது கொடுத்து கேட்க வேண்டும். தீர்க்க முடியாத பிரச்னைகள் எதுவுமே இல்லை. தீர்வு இல்லாத பிரச்னைகளை இயற்கை நமக்குத் தருவதில்லை. ஆறுதல் தருவதுதான் பெற்றோரின் முதல் கடமை. குடும்பத்தினரின் அரவணைப்பில் இருக்கும் குழந்தைகள் பிரச்னைகளுக்கு அஞ்சுவது இல்லை. பெற்றோர் அவர்களுக்குத் தீர்ப்புச் சொல்வதற்கு முன் தாங்களும் அந்தப் பருவத்தைக் கடந்து வந்தவர்கள் தாமே என்று ஒருகணம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

கம்பளிப்புழு கூட்டுப்புழுவாகித்தான் அழகிய வண்ணத்துப் பூச்சியாக மாறுகிறது. அதற்குரிய பருவம் வரும்போது தான் அது கூட்டை உடைத்து வெளிவருகிறது. அதற்குள் நாம் அதற்கு உதவுவதாக நினைத்து கூட்டை உடைத்தால் பட்டாம்பூச்சி வெளியே வராது. இறந்துதான் போகும். அதேபோல் தான் பதின் பருவம் என்பது கூட்டுப் புழு பருவம். அதன் போக்கில் விட்டுக் கவனித்தால் அழகிய ஓவியச் சிறகுகளுடன் வளரும். கைப்பிடிக்குள்ளேயே வைத்திருந்தால் நம் வெப்பத்தில் அது சுருண்டு போய் விடும். இதைப் பெற்றோர்கள் புரிந்து கொண்டால் எல்லாமே சுபமாகி, சுலபமாகி விடும்.