சமீபத்தில் இந்து தமிழ் இணைப்பிதழான மாயாபஜாரில் ’டிங்குவிடம் கேளுங்கள்’ பகுதியில் ஒரு கேள்வி. ’பேய்க்குக் கால் இல்லை என்று சொல்கிறார்கள். ஆனால், ஜிங் ஜிங் என்று சலங்கைச் சத்தம் கேட்கும்போது, பேய் வருகிறது என்று சொல்கிறார்கள். பேய்க்குக் கால் உண்டா? உண்மையிலேயே பேய் உண்டா?’ என்று ஒரு குழந்தையின் ரசிக்கும்படியான கேள்வியைப் படித்தேன்.

சிறு வயதில் பேய்க் கதைகளைக் கேட்காத குழந்தைகள் இருக்கவே முடியாது. நம் மனதில் தேவதைகள், மந்திரவாதிகளுக்கு இணையான இடத்தை இந்தப் பேய்களும் பிடித்திருந்தன. வளர்ந்ததும் தேவதைகள், மந்திரவாதிகளின் மயக்கம் தெளிந்தாலும் பேய்கள் மட்டும் பெரும்பாலானவர்களின் மனதை நிரந்திரமாக பிடித்துக்கொண்டு விடுகின்றன. இங்கு பேய்களைப் பற்றி கதைப்பவர்களில் பெரும்பாலும் பேய்களைத் தாங்கள் பார்த்ததாகச் சொல்வதில்லை. இதில் அதிக சுவாரசியம் பெண் பேய்கள். பெண்களே சுவாரசியமானவர்கள்தாமே! ஆண், பெண் இறப்பு விகிதம் சமமாக இருந்த போதிலும் பேய்களில் பெண்களுக்கே 98% இட ஒதுக்கீடு. சுவாரசியமற்ற ஆண் பேய்களை யாரும் விரும்புவதில்லை போலும்! நீண்ட கூந்தலும் மல்லிகைப் பூக்களும் ஜல் ஜல் சலங்கைகளும் வெள்ளைப் புடவை / மேக்சி என்று அழகுணர்ச்சிகளைக் கொண்ட பெண் பேய்களே அதிக பயத்தைத் தருகின்றன! பேய்கள் என்றாலே நிறைவேறாத ஆசைகளுடன் அல்லது பழிவாங்கும் எண்ணத்துடன் அலைபவை என்ற லாஜிக் படியும் இந்த இடஒதுக்கீடு சரி என்றே தோன்றுகிறது!

படங்களிலோ செய்திகளிலோ நமக்குத் தெரிந்தவர்கள் மத்தியிலோ பேய்கள் பிடிப்பதும் அவை ஓட்டப்படுவதும் பெரும்பாலும் பெண்களுக்கே! இரட்டை வேலைப் பளு, குடும்ப அழுத்தம், குடும்ப, சமூகக் கலாச்சாரங்களைக் கட்டிக்காக்கும் பொறுப்பு, மாதாந்திர தொந்திரவு, பிரசவ உடல், மன மாற்றங்கள் என்று இரட்டை அழுத்தங்கள் பெண்களுக்குத்தானே?

மனஅழுத்தப் பேய்கள் பெண்களை அதிகம் பிடிப்பதில் வியப்பேதும் இல்லை. அதிலும் நாற்பதைக் கடந்த பெண்களுக்கு மாதவிடாய் நிறுத்த அறிகுறிகள் எனப்படும் மெனோபாஸ் (perimenopause) பேய் கூடுதலாகப் பிடித்துக்கொள்கிறது. அரிதாகத் தங்களுக்காக வாழ வேண்டும் என்று முனைகிற பெண்களும் முழுவதுமாகச் சமூகக் கலாச்சாரப் பேய்களிலிருந்து விடுபடுகிறார்களா என்று தெரியவில்லை.

காம, களத்திர, குரோத, கலாச்சாரப் பிணிப் பேய்களுக்குக் கால்கள் இல்லை. அந்தப் பேய்களைத் தூக்கிச் சுமக்கும் பெண்களுக்குக் கால்கள் உண்டு. அந்தக் கால்களில் இருக்கும் சலங்கைகளில் ஒலியும் உண்டு; அச்சமும் உண்டு!

படைப்பாளர்

ரமா கவிதா

தீவிர வாசிப்பாளர். கவிதைகள், கட்டுரைகள், கதைகள் எழுதிவருகிறார். ஓவியத்திலும் நாட்டம் உண்டு. எதையும் ஆழ்ந்து சிந்திக்கக் கூடியவர்.