காலச்சுவடு ஜனவரி இதழில் தெல்ஃபின் மினூயின் தலைமறைவு நூலகம் என்ற நூலின் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதியை வாசித்த பின்னும், தெல்ஃபின் மினூய் பற்றி இணையத்தில் தேடிய பின்பும் நூலை உடனே வாசிக்க வேண்டும் என்ற ஆர்வம் தொற்றிக்கொண்டது. தெல்ஃபின் பிரெஞ்சு பத்திரிகையாளர். ஈரானியப் பகுதியைப் பற்றித் தொடர்ச்சியாக எழுதிவருகிறார். பிரெஞ்சில் மிக உயரிய விருதான ஆல்பிரட் – லண்டர்ஸ் பெற்றவர். இஸ்தான்புலில் வசித்துவருகிறார். போர் இலக்கியங்கள் பற்றி நிறைய வாசித்து இருப்போம். போரின் துயரத்தை, தனது நாட்டு படையின் பெருமையை, பிரிவினையின் துயரத்தைக் கூறுவதாக இருக்கும். ஆனால், இந்தப் புத்தகம் சிரியாவின் தலைமறைவு நூலகத்தை ஆரம்பித்து அதனைப் பாதுகாக்க எடுத்த முயற்சிகள், அரசு எதிர்ப் புரட்சியாளர்களுக்கு நூலகம் எவ்வாறு கிரியா ஊக்கியாக நிகழ்ந்தது, யுத்த நேரத்தில் புத்தகம் செய்த மாயாஜாலம், அரசுக்குத் தலைமறைவு நூலகம் எவ்வளவு இடையூறாக மாறியது, யுத்த நேரத்தில் மனோதிடத்துடன் வாழ புத்தகத்தின் பங்கு, அந்த நேரப் புத்தக வாசிப்பு என்ன செய்யும் என்பதனை மிக அழகாக, தெளிவாக உணர்த்துக்கூடியதுதான் சிரியாவின் தலைமறைவு நூலகம்.தெல்ஃபின் வார்த்தைகளில் கூறுவதானால் யுத்தக் கொடுமையில் மனிதர்கள் தங்களை ஆசுவாசப்படுத்திக்கொள்ள இப்படியான நூலகத்தை அமைத்தது என்பது வாசிப்பின் வழியே அனைத்து தூயரங்களையும் கடக்க முடியும் என்பதே. இது அவ்வளவு எளிதா என்ன? அதனை வெளிஉலகிற்கு கொண்டுவரவே எழுதினோன்; அது எனது கடமையும்கூட என்கிறார் தெல்ஃபின்.

அதற்கு முன் சிரியாவின் வரலாற்றை அறிந்து வாசித்தால் புத்தகத்தின் அரசியலை நுட்பமாக உணரமுடியும். அரபு உலகில் அஸ்-லாம் என அறியப்படும் சிரியா மேற்கு ஆசியாவில் அமைந்த குடியரசு நாடு. சிரியா விடுதலைக்கு முன்பு உதுமானிய சாம்ராஜ்யத்திலும், பின்பு பிரான்ஸ்க்குக் கீழும் கொண்டுவரப்பட்டது. 1946 இல் மக்கள் தீர்ப்பு வாக்கெடுப்பினை அடுத்து சிரியா ஓர் அரபுக் குடியரசாக மாற்றப்பட்டது. 1970 வரை இரண்டு ஆட்சிக் கவிழ்ப்பு மாற்றமும், அல் – அஸாத் (1970 – 2000) மறையும் வரை ஓர் ஆட்சி நடைபெற்றது. அதன் பின்பும் அவர் மகன் பஸர் – அல்- அஸாத் அதிபராகத் தேர்வு செய்யப்பட்டார். நீண்ட குடும்ப ஆட்சியின் விளைவாக மக்களுக்கு ஏற்பட்ட இன்னல்கள், அரபு வசந்தத்தையொட்டி ஐனநாயக சக்திகளுக்கு எழுச்சி, ஆட்சி மீதான எதிர்ப்புக்குழு, ஆட்சிக்கு எதிரான ராணுவம், ராணுவத்திலிருந்து பிரிந்த எதிர்ப்புக் குழுவுக்கு இடையே ஏற்பட்ட கலவரமாக ஆரம்பித்த பிறகு ஜியா- சன்னி பிரிவுக்கு இடையே உள்நாட்டுப் போராக வெடித்து, 2011 ஆம் ஆண்டு ஆரம்பித்த சிரியா யுத்தம் 2016 ஆண்டில் தீவிரம் அடைந்தது.
இனி புத்தக ஆசிரியர் தெல்ஃபின்க்கும், தராயாவின் மையப்பகுதியில் இயங்கும் ரகசிய நூலகத்தின் இயக்குநர் அபு எல்- எஸ்க்கும், அவர் நண்பர் அஹ்மத் இருவரையும் ஸ்கைப், வாட்சப், மின்னஞ்சல் வழியே நடைபெற்ற உரையாடல்தாம் இந்தப் புத்தகம். சிரியாவின் மனிதம் என்ற தலைப்பில் நிறையப் படங்களை இணையத்தில் பார்த்தார். அதன் பின் அவருக்கு இருப்புக்கொள்ளவில்லை. யுத்த கொடூரத்திற்கு நடுவே இளைஞர்கள் புத்தகத்தைச் சேகரிக்கும் காட்சி அதிலிருந்து தெல்ஃபின்னால் உடனே விடுபட முடியவில்லை. ஆயிரமாயிரம் நூல்கள் வழியே காகித சரணாலயத்தை ஏற்படுத்தினர். இதனை ஸ்கைப் வழியே பார்த்த பின்னர் தெல்ஃபின் முடிவு செய்கிறார். தராயா நூலகத்தைப் பற்றி எழுத வேண்டும் என்றும், நேரிடையாகச் செய்ய முடியாததால் எழுதுவதைத் தவிர வேறு வழியில்லை. இணையவழி தொடர்பு என்பது யுத்த நேரத்தில் அவ்வளவு எளிதா என்ன? ஒவ்வொரு முறை தொடர்புகொள்ளும் போதும் ஏற்படும் உரையாடல் நம்மை நிலைகுலையச் செய்கிறது. தொடர் பட்டினியைப் போக்க விதவிதமான உணவுகளைப் பற்றிப் பேசி கழிப்பது. யுத்த வன்புணர்ச்சியால் கருக்கலைப்பு மாத்திரை இல்லாமல் படும் அவஸ்தை, பள்ளிகள் மீதும் விழும் குண்டால் குழந்தைகள் கதறி அழும் காட்சி அவ்வளவு எளிதில் கடக்க முடியாது.


தாராய் நூலகத்திற்கு வருவோம், அஹமத் நண்பர்கள் புத்தகங்களை மீட்கப் போகலாம் என்று கூறியது முதலில் அபத்தமாகப் பட்டது. மனித உயிர்களை மீட்க முடியாத சூழலில் புத்தகங்களை மீட்டு? அப்படித்தான் தட்டுத்தடுமாறி ஒரு வீட்டிற்குள் நுழைந்து கீழே கிடந்த புத்தகத்தைக் கையில் எடுத்தனர், சில சொற்களை வாசித்தனர். உடலில் அப்படியான நடுக்கம். தனது நாட்டு ஆவணத்தை மீட்ட உணர்வுதான். யுத்தம் முடிந்த பின்பு ஒவ்வொருவரும் அவரவருக்குச் சொந்தமானதை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். அவர்களின் சமூகப் பொறுப்பு நம்மை வியப்படையச் செய்கிறது. யுத்தம்தான் நூலகம் அமைக்கும் சூழலை உருவாக்கியது. எங்கள் நோக்கம் அழிப்பதன்று, படைப்பது. புரட்சிக்கு முன் சிரியா மக்களிடம் பொய்களை அரசு பரப்பிவந்தது. நூலகம் ஆரம்பித்த பின்னர் ரகசியமாக நூலகத்தில் நிறைய உரையாடல்கள் நடைபெற்றன. அரசின் பொய்களுக்குப் பதில் கூற முடிந்தது. புத்தகங்களால் உடல் காயத்தைக் குணபடுத்த முடியாது. ஆனால், மனங்காயங்களைக் குணப்படுத்த முடியும். வாசிப்பு அம்மக்களுக்கு அபாரமான சுகத்தை அள்ளிக் கொடுத்தது.

தெல்ஃபின் மினூயி

நூலகத்தின் இயக்குநர் அபு- எல்-எஸ் மக்களின் ஆர்வத்தை வெளிப்படுத்தினார். புத்தகத்தைத் தேடித் தேடி அலைந்தனர். வாய்மொழியாக ஒருவன் வாசிப்பான். ஒருவரைப் பார்த்து மற்றவர் வாசிக்கும் பழக்கம் ஏற்பட்டது. அந்த ஆர்வம் போருக்கெல்லாம் கட்டுப்படாது. அவர்கள் இப்படிதான் ஆல்கெமிஸ்ட் நாவலை வாசித்தனர். குட்டி இளவரசனையும் வாசித்து உரையாடினர். இப்படியாக உலக இலக்கியங்கள் வாசிக்கப்பட்டது. யுத்தத்தினால் பல நூல் நிலையங்கள் அழிக்கப்பட்டன. யாழ் நூலகம், பாக்தாத் நூலகம் அழிக்கப்பட்ட போது டைகிரிஸ் நதியின் நிறம் மாறியது என்றால், கற்பனை செய்துகொள்ளுங்கள். ஈராக் யுத்தத்தின் போது பாஸ்ரா நூலகர் அலியாவின் வாரிசாகத் தான் அஹமத், அபு எல்-எஸ் எனது பார்வைக்குப் படுகின்றனர். தராயா நகரத்தின் மீது அரசுக்கு அப்படி என்ன கோபம்? காரணம் மற்ற ஊர் போல அது இல்லாதது தான். சிந்திக்கக்கூடிய மனிதன் ஆபத்தானவன் என்பதனை, தராயா மக்கள் வழியே அரசு அறிந்துகொண்டது. அதனால்தான் பதுங்குக் குழிக்குள்ளிலிருந்து ஒரு புத்தகக் கோட்டை முளைத்தது.

முதல் உலகப்போரில் ராணுவ வீரர்கள் எப்படிப் பதுங்கு குழியில் இருந்து வாசித்தனர் என்பதை அஹ்மத் தெல்ஃபியிடம் கூறுவது அத்தனை உணர்ச்சிப்பூர்வமானது. கேப்டன்களாகப் பணிபுரியும் தங்கள் கணவருக்கு மனைவிகள் எவ்வாறு புத்தகத்தை அனுப்பினர் என்பதும், அதனைப் பதுங்குக்குழியில் இருந்து வாசித்த முறையும், பிரபலமான ஃபிராங்களின் சொசைட்டி 350 நூலகங்களைப் பாசறையில் தொடங்கியது யுத்தமுனையில் வீரர்கள் மனப்பிறழ்ச்சி அடையாமல் காத்தது என்றால் மிகையல்ல. அந்த வாசிப்புதான் தப்பியதற்கும் நிலை தடுமாறாதிருக்கவும் உயிர் வாழ்வதற்கும் தேவையாயிருந்தது.

யுத்தத்தைத் தடுக்க ஐக்கிய நாடுகள் சபையின் தோல்வியை, செஞ்சிலுவைச் சங்கத்தினைக் கட்டுபாட்டின் பெயரில் அனுமதித்தது உலகப் பிரதிநிதிகளைப் பார்க்க அனுமதிக்காமல் செயல்பட்ட விதம் இன்றைய நமது காஷ்மீரை நினைவுபடுத்துகிறது. இறுதியாக அஹமத், அபு, நூலகம், மக்கள் என்ன ஆனார்கள் என்பர்தை வாசகர்கள் வாசித்து உணர வேண்டியது. நூலில் வருகிற ஸெய்னா-ஹீஸ்லாம் காதல் கதை வாசிப்பின் மகத்துவத்திற்கு சாட்சி. தெல்ஃபின்க்கும் அவர் குழந்தைக்கும் இடையில் நடக்கும் உரையாடல் அவ்வளவு கவித்துவமானது. கற்பதனால் ஏற்படும் வரம்பு மீறலைத்தான் இந்தப் புத்தகம் பேசுகிறது. யுத்த களத்தில் புத்தகம் வழிநடத்தியது என்றால் நமது அன்றாட வாழ்வில் புத்தக வாசிப்பு நம்மை என்னவெல்லாம் செய்யும்? அதுவே வாழ்க்கைமுறையாகட்டும்

https://youtube.com/shorts/DFx0ejr0Qd8?feature=share

படைப்பாளர்:

ஜெ. பாலசரவணன்

ஆசிரியரான பாலசரவணன், புத்தக விரும்பியும்கூட. சேலம் ‘பாலம் தி புக் மீட்’ வாரந்திர வாசகர் வட்டத்தை தோழர் சகசுடன் இணைந்து நடத்திவருகிறார்.