முன்கதைச் சுருக்கம்:

செல்லப் பிள்ளையான குட்டிக்கு அவள் அப்பா, ஒரு திருப்தியான வரனைப் பார்த்திருந்தார். குடும்பமே மகிழ்ச்சியில் இருந்தது. மாப்பிள்ளை பார்த்த விஷயத்தை அத்தை, குட்டியிடம் சொன்னார். குட்டி தன் அம்மாவிடம் இதைப் பற்றி விசாரிக்க, அவர் அதைப் பற்றி எதுவும் பகிர்ந்து கொள்ளவில்லை.

இனி…

ரமேஷ் திடீரென்று குட்டியின் கல்யாண சேதியைப் போட்டு உடைத்தவுடன் ரதிக்குப் பகீரென்று இருந்தது.

‘இனி மறைக்க முடியாது. சொல்லித் தான் ஆக வேண்டும். ஊருக்கே தெரிந்த பின் இவளிடம் மறைத்து என்ன ஆகப்போகிறது? யாராவது ஒருவர் சொல்லத் தான் போகிறார்கள். பகையை மறைக்கலாம். புகையை மறைக்க முடியுமா? புகை போல பரவிவிட்டது சேதி.’ இவையெல்லாம் நொடி நேரத்தில் யோசித்து முடித்திருந்தாள் ரதி.

“ஆமா ரமேசு.”

இப்போது குட்டிக்குப் பகீரென்றது.

“என்னது கல்யாணமா? இத தானே முன்னலருந்து கேக்க முயற்சி பண்ணிட்டு இருந்தேன். ஏன் யாருமே சொல்லல எனக்கு?”

எல்லோர் மீதும் கோபம் வந்தது குட்டிக்கு.

“கல்யாணமெல்லாம் இன்னும் முடிவாகலடா. அதனால தான் யார்கிட்டையும் சொல்லல. ஒரு நல்ல பையன் பாத்திருக்கோம். ஆனா, அது சரி வருமா இல்லையா? எல்லாம் தோதுபடுமானு நிறைய விஷயம் இருக்கு. இப்பவே தெரிஞ்சு என்ன ஆகப்போகுது?” மென்மையாகச் சொல்லி முடித்தார் ரதி.

“என்கிட்ட சொல்லிருக்கலாம் இல்லமா? என்கிட்ட மறைச்சுட்டல்ல?” சொல்லும்போதே குரல் தழுதழுத்த குட்டியை பார்க்கவே பாவமாக இருந்தது.

ரதிக்கு குட்டியை அணைத்துக்கொள்ள வேண்டும் போல் இருந்தது. கொஞ்ச தூரம் அமைதியாக நடந்துவந்தனர். ரதி மனதில் என்னென்னவோ ஓடியது. சந்தோஷமாக ஆரம்பித்த விஷயம். அப்படி இப்படியென ஒரு மாதிரி மன வருத்தமாக இருக்கிறது. எல்லாம் சரியாகிவிடும். மிகவும் நேர்த்தியான விஷயம் என்று உலகில் ஒன்று உண்டா?

அம்மா அப்படிச் சொன்ன பிறகு குட்டிக்கும் எதுவும் பேசத் தோன்றவில்லை.

‘பாவம் அம்மா. நம்ம நல்லதுக்கு தான் எதுனாலும் பண்ணுவாங்க. நான் வருத்தப்படக்கூடாதுனு தான் சொல்லாம இருந்திருக்கும்.’ இப்போது குட்டிக்கு அம்மாவை அணைத்துக்கொள்ள வேண்டும் போல் இருந்தது.

அம்மாவும் மகளும் மனதிற்குள்ளேயே சமாதானம் ஆகிக்கொண்டனர். இனி வெளிப்படையாகவே பேசிக்கொள்ளலாம். குட்டிக்கு குஷியாக இருந்தது. ரதிக்கும் பாரம் இறங்கியதைப் போல இருந்தது.

“யாரும்மா அது? இப்பவாவது சொல்லும்மா.”

“சந்திராக்கா ஊர்ல மளிகைக் கடை வச்சிருக்கிறவர்.”

“அக்கா ஊருக்குப் போகும்போது நான் அந்தக் கடைக்குப் போயிருக்கனேம்மா. அங்க ஒரு தாத்தா தானே இருப்பாங்க?”

“எல்லாம் சரியா வந்தா யாருனு நாங்களே சொல்லப்போறோம். நிச்சயமாகாத விஷயத்த கனவு வரைக்கும் கொண்டு போகக்கூடாது குட்டி. அது நம்ம மனச நாமளே சுத்தியல் போட்டு உடைக்கத் தயாராகற மாதிரி.”

“போம்மா. எப்பப் பாரு இப்படி ஏதாச்சு சொல்ற.”

“உனக்காகத் தான் குட்டி எல்லாமே சொல்றேன்.”

மூவரும் வீடு வந்துசேர்ந்தனர். குட்டிக்கு எதுவும் பேசத் தோன்றவில்லை. மாட்டுக் கொட்டாய்க்குப் பக்கத்தில் பாயைப் போட்டு உட்கார்ந்துகொண்டாள். கன்னுக்குட்டி விளையாடுவதைப் பார்க்க நன்றாக இருந்தது. ரமேஷ் அவன் வீட்டுக்குப் போய் ட்டான். ரதியாளும் வீட்டு வேலைகளைப் பார்க்க ஆரம்பித்துவிட்டாள்.

வாசலில் மலையப்பனின் சிரிப்புச் சத்தம் கேட்டது. வேகமாக எழுந்து ஓடினாள் குட்டி. அம்மாவிடம் தான் அப்பா சிரித்துப் பேசிக்கொண்டிருந்தார். குட்டி வந்தபோது இருவரும் அவளைப் பார்த்து புன்னகை செய்தனர்.

“என்னப்பா சிரிக்கிறீங்க?”

“சொல்றேன் என் கன்னுக்குட்டி. உனக்குப் புது ட்ரஸ் வாங்கப் போலாம் வா.”

“என்னப்பா என்னய பொண்ணு பாக்க வரப்போறாங்களா?”

“யாரு, அம்மா சொன்னாளா?”

“எல்லாருக்குமே தெரிஞ்சிருக்குப்பா”

“அது சரி.”

“ம்ம்ம்.”

“கிளம்பலாமா? அம்மாட்ட சொல்லிட்டு வா.”

குட்டி சமையலறைக்குள் ஓடினாள்.

“நீ கடையில பாத்தியே ஒரு தாத்தா, அவங்க பையன் தான். இனி அவரு தாத்தா இல்ல மாமா.” சொல்லிவிட்டுக் கலகலவென சிரித்தார் ரதியாள்.

குட்டிக்கும் சிரிப்பு வந்தது. கொஞ்சம் வெட்கமும் சேர்ந்து வந்தது.

“அப்பாகூடக் கடைக்குப் போய்ட்டு வரேன்ம்மா.”

“சரிடா. உனக்குப் பிடிச்ச மாதிரி எடுத்துக்கோ. ஆனா, புடவை தான்.”

“ம்ம்.”

“சும்மா பொண்ணு பாக்க தான் வராங்க. அதனால நீங்க போய் எடுத்துட்டு வாங்க. எல்லாம் சம்மதமா போச்சுன்னா, நாம, அத்தை, மாமா, பெரியம்மானு எல்லாரையும் கூட்டிட்டுக் கடைக்குப் போவோம்.”

“ம்ம்…”

“இனி அடிக்கடி வெளியவிட மாட்டாங்க. அப்பாகூட இப்படி உனக்குப் பிடிச்ச மாதிரி தனியா சுத்த முடியாது. அதனால இப்பவே உனக்குப் பிடிச்ச எடத்துக்கு போய்ச் சுத்திட்டு வந்துடு.”

“சரிம்மா.”

சொம்பில் மிச்சமிருந்த தண்ணீரை மடக் மடக்கென்று சத்தம் வரக் குடித்துவிட்டு ஓடினாள்.

“போலாம்ப்பா.”

இருவரும் வண்டியில் ஏறி பைபாஸ் வழியாக டவுனில் இருந்த கடைக்கு போய்க்கொண்டிருந்தனர்.

இதையெல்லாம் வேடிக்கை பார்த்து எத்தனை நாளாயிற்று! காற்று தன் மேல் படுவது, விதவிதமான மரங்கள், பூக்கள் வாசனை, புதிதாக உருவாகியிருந்த கடைகள் என்று எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டு சந்தோஷமாக அப்பாவைப் பிடித்தபடி வண்டியில் அமர்ந்திருந்தாள். டவுனிலேயே பெரிய கடைக்கு அப்பா கூட்டிப்போனார்.

“நல்ல பட்டுப்புடவைகளா எடுத்துப் போடுங்க.”

“உட்காருங்க சார். என்ன விலையில வேணும்?”

“ஒரு ஐயாயிர ரூவாய்க்குக் காட்டுங்க.”

“இதுல எது பிடிச்சிருக்குனு பாரும்மா.”

ஒவ்வொன்றாகப் பார்த்தபடியே உட்கார்ந்திருந்தாள். எதைத் தேர்வு செய்வதென்றே குழப்பமாக இருந்தது குட்டிக்கு.

(தொடரும்)

படைப்பாளர்

சௌம்யா

எம்.பி.ஏ. பட்டதாரி மற்றும் தொழில்முனைவோரான இவர், சேலத்தில் பிறந்து சென்னையில் வசித்து வருகிறார். சிறுவர் இலக்கிய உலகத்தில் கதை சொல்லியாகவும், பத்திரிகை எழுத்தாளராகவும் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறார்.