குட்டி – 4

முன்கதைச் சுருக்கம்: 

செல்லப் பிள்ளையான குட்டிக்கு அவளது அப்பா, ஒரு திருப்தியான வரனைப் பார்த்திருந்தார். குடும்பமே மகிழ்ச்சியில் இருந்தது. அவளுக்கு மாப்பிள்ளை பார்த்த விஷயத்தை அத்தை குட்டியிடம் சொன்னாள்.

இனி…

ரமேஷை வீட்டுக்குப் போகச் சொல்லிவிட்டு, இவள் வேகமாக வீட்டை நோக்கி ஓடினாள். போய்ப் பார்த்தால் கதவு தாழிட்டிருந்தது. 

‘என்னதிது? ஒரு வேளை என்கிட்ட சொல்லாமலே எல்லாரும் மாப்பிள்ளை வீட்டுக்குப் போய்ட்டாங்களா?’
யோசித்துக்கொண்டே பொடக்காலி பக்கமாக ஓடினாள். அங்கு யாரும் இல்லை. 
‘சரி, மாட்டுக் கொட்டாயி பக்கமா போய்ப் பாப்போம்.’
அப்படியே வீட்டின் ஓரமாக நடந்து வந்து மாட்டுக் கொட்டகைக்கு வந்தாள். அங்கு தான் அவள் அம்மா, மாட்டுக்கு புண்ணாக்கு கலந்து கொண்டிருந்தாள். கொட்டகை அருகில் ஒரு கோணப்புளியங்காய் மரம் இருந்தது. அதன் அடியில் உள்ள கல்லின் மேல் போய் அமர்ந்தாள். மூச்சு இரைந்தது.

“எங்கிருந்துடி இப்படி ஓடி வர்ற? மெதுவா வர பழக்கமே உனக்கு இல்லையா?”
“அது இருக்கட்டும்மா. நான் வேற ஒண்ணு கேக்கணும்.”
“என்னடி?”

அதற்குள் கவனம் சிதற, நான்கு கோணப்புளியங்காயைப் பறிக்கலாமென்று  கொண்டியை எடுத்தாள். அம்மா கேட்டது காதில் ஏறவில்லை. 
ஒரு கையில் கொண்டியை பிடித்துக்கொண்டு நிலத்தில் அழுத்தி பிடித்துக்கொண்டாள். அருகில் இருந்த இன்னும் உயரமான கல்லின் மீது ஏறி நின்று கொண்டு, மரத்தை கண்களாலேயே ஒரு அலசு அலசிப் பார்த்தாள். இருந்த இடத்தில் இருந்தே பறிக்கும்படியான காய்கள் கண்ணில் பட்டன.
பச்சை நிறத்திலிருந்து மெல்ல மெல்ல ரோஸ் நிறத்துக்கு மாறிக் கொண்டிருந்த ருசியான காய்கள். பார்க்கும்போதே அவளுக்கு எச்சில் ஊறியது.  

wiki

கொஞ்சமாக எக்கி மேலே இருந்த காய்களை கொண்டியை வைத்து மெல்ல இழுத்தாள். சடசடவென கொஞ்சம் இலைகளோடு சேர்ந்து அவள் குறி வைத்த காய்கள் எல்லாம் ஒவ்வொன்றாகக் கீழே விழுந்தன. சிரித்துக்கொண்டே வேகமாக பொறுக்கி எடுத்துக் கொண்டாள். கைகளில் எடுத்து மண்ணைத் தட்டிவிட்டு வந்து மீண்டும் அந்த கல்லின் மீது அமர்ந்து கொண்டாள். 
அம்மா எதையும் கண்டு கொள்ளாமல் மாட்டுக்கு வேலை செய்து கொண்டிருந்தாள். அது சரி, குட்டி இப்படிச் செய்வது முதல் முறையா என்ன?  எப்போதும் அவளுக்கு விளையாட்டு தான்.

‘இந்த விளையாட்டுப் புள்ளைய என்னனு கல்யாணம் கட்டி குடுக்கறது?’ அம்மா யோசனையில் ஆழ்ந்தபடியே வேலைகளைச் செய்து கொண்டிருந்தாள்.

குட்டி ருசியான காயை முதலில் எடுத்து, அம்மாவை பார்த்தபடியே சாப்பிடத் தொடங்கியிருந்தாள். அவள் கேட்க வந்த விஷயத்தையே மறந்திருந்தாள். அட, மறக்கக்கூடிய விஷயமா அது! ஆனாலும் கொஞ்ச நேரம் மறந்துவிட்டாள்தான்.

இரண்டு காய்கள் வயிற்றுக்குள் போன பிறகுதான் திரும்பவும் விஷயம் நினைவுக்கு வந்தது. 
“அம்மாஆஆஆஆஆ…”

“என்னடி?”, அம்மா மென்மையான அழுத்தத்துடன் கேட்டாள். 
“ஏன்மா என்கிட்ட எதுவும் சொல்லல?”
அம்மாவிடம் எந்த அதிர்வும் இல்லை. அதே முகபாவம். அசராமல் வேலைகளைத் தொடர்ந்தபடியே பதில் சொன்னாள்.
“என்னத்த சொல்லல?”

குட்டிக்கு சட்டென்று ஒரு குழப்பம் வந்தது. ‘என்ன… அம்மா எந்த ரியாக்‌ஷனும் கொடுக்க மாட்டேங்குறாங்க? ஒரு வேளை அத்தை விளையாட்டுக்கு சொன்னுச்சோ? சே… இத நம்பி செலந்தி ரத்தத்த பாக்காம வேற வந்துட்டோமே…’ சிந்தனையில் அவளுக்கு சில நிமிடங்கள் போயின.

“அம்மா…..”
“என்னடி வேணும்?”
“என்கிட்ட ஏதாவது சொல்லாம இருக்கீங்களாம்மா?”
“என்ன சொல்லணும்? என்ன வேணும்? ஏன் இப்படி பேசிட்டு இருக்க?”
அம்மா கேள்விகளாக அடுக்கினாள். மாப்பிள்ளை பார்த்திருக்கிறீர்களா என்று கேட்க அவளுக்கும் கூச்சமாக இருந்தது. 

‘இத வேற எப்படிக் கேக்கறது? பேசாம அத்தை கிட்ட போயி இது உண்மையா பொய்யானு திரும்ப கேட்டுட்டு வந்துருவமா?’

“அம்மா… “
“குடிசைக்குள்ள காபித்தண்ணி போட்டு வச்சிருக்கேன். போய்க் குடிடீ.”
“சரிம்மா. எனக்கு தேன் முட்டாயி வேணும்.”
“அப்பாவ வாங்கிட்டு வர சொல்லலாம். மொதல்ல காப்பிய குடி”

குழப்பமாகவே எழுந்து சென்றாள். குடிசைக்குள் ஒரு அடுப்பு, பாத்திரம் கழுவும் இடம், படுத்துக் கொள்ள ஒரு கயிற்றுக்கட்டில் இருக்கும். அந்த இடத்தில் முன்னர் அவள் தாத்தாவும் ஆயாவும் இருந்தனர். அவர்களுக்குப் பிறகு அந்த இடத்தை யாரும் மாற்றவில்லை. அப்படியே விட்டுவிட்டனர். 
காப்பியை சூடு பண்ணிக் குடித்துவிட்டு, அப்படியே கயிற்றுக்கட்டிலில் படுத்துக்கொண்டாள். போன முறை விட்டுச்சென்ற நாவல் ஒன்று கிடந்தது. மெல்ல புரட்டியபடியே யோசனையில் இருந்தவளுக்கு தூக்கம் கண்ணை கட்டியதால், அப்படியே தூங்கி விட்டாள்.

கொட்டாயில் மாடுகளுக்கான வேலையைச் செய்துவிட்டு, மரத்தின் கீழே இருந்த இலைதழைகளை எல்லாம் அவளது அம்மா கூட்டிப் பெருக்கினாள்.
‘யார் சொல்லியிருப்பார்கள்? அந்தளவிற்கு ஊரில் இருப்பவர்களிடம் சொல்லவில்லையே. சரி நம்ம சொந்தபந்தத்து ஆளுங்க யாராவது தான் சொல்லியிருப்பாங்க’, நினைத்துக் கொண்டாள்.

Photo by Deepak kumar on Unsplash

கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து, மாடுகளுக்கு ஊற்ற ஆரம்பித்தாள்.
‘சின்னப் பிள்ளைகிட்ட அதுக்குள்ளயுமா சொல்லுவாங்க? ஆசய வளத்துகிட்டு இல்லாம போச்சுன்னா அதுக்கு மனசு என்ன பாடுபடும். சும்மா இருக்க மாட்டாங்க. என்னமோ… இவளுகளுக்கு சொன்னா மட்டும் புரியப்போகுதா?’
இதைப் பற்றி யோசிக்கவே அவளது அம்மாவுக்கு அயற்சியாக இருந்தது. 
‘எல்லாம் சரியா அமைஞ்சாதான் குட்டிகிட்ட இதப் பத்திச் சொல்லணும்’,
வேலைகளை முடித்து, புடவையை உதறிக் கட்டிக்கொண்டு, அம்மாவும் குடிசைக்குள் வந்தாள்.

குட்டி தூங்குவதை பார்க்க பார்க்க அவளை கைக்குழந்தையாய் பார்த்தது நினைவுக்கு வந்தது. பெருமூச்சு விட்டபடியே தரையில் பாயை விரித்து, குட்டிக்கு அருகில் அவளைப் பார்த்தபடியே படுத்தாள் அம்மா.

தொடரும்…

கதையின் முந்தைய அத்தியாயம்:

படைப்பு

சௌம்யா

எம்.பி.ஏ. பட்டதாரி மற்றும் தொழில்முனைவோரான இவர், சேலத்தில் பிறந்து சென்னையில் வசித்து வருகிறார். சிறுவர் இலக்கிய உலகத்தில் கதை சொல்லியாகவும், பத்திரிகை எழுத்தாளராகவும் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறார்.