நம் வாழ்க்கையின் குறிக்கோள் என்ன என்ற கேள்விக்கு பலரும் பல பதில்கள் சொல்லக்கூடும். நான் இந்த வாழ்வை புரிந்து கொண்ட அளவில் அந்தந்த நேரத்து மகிழ்ச்சி என்பதே இவ்வாழ்வின் குறிக்கோளாக இருக்க இயலும். நம் பிள்ளைகளை மகிழ்ச்சியை நோக்கி வளர நாம் கற்றுக்கொடுக்கிறோமா? திருமணம்தான் பிரதானம் என்றும் பிள்ளைகளை திருமண பந்தத்தில் இணைப்பதொன்றே வாழ்வின் குறிக்கோளென்றும் நம்மில் எத்தனை பேர் நினைத்துக் கொண்டிருக்கிறோம்?

திருமணம் என்பது நம் வாழ்வின் முக்கியமான ஒரு அங்கம் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் திருமணம் மட்டுமே நம் வாழ்க்கையல்ல அல்லது திருமணம் செய்து கொள்வதற்காக மட்டுமே நாம் பிறக்கவுமில்லை. அதிலும் குறிப்பாக பெண்கள் திருமணம் செய்து பிள்ளை பெற்றுக் கொள்வதற்காகவே பிறந்தவர்கள் அல்ல என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, உத்தரப் பிரதேச மாநில முன்னாள் முதல்வர் மாயாவதி, முன்னாள் பிரதமர் வாஜ்பாய்  என்று திருமணமாகாத அரசியல் தலைவர்கள் குறித்த நீண்ட பட்டியலை நம்மால் தர இயலும். சாதனைகளை திருமணம் என்ற அமைப்பு சில இடங்களில் ஊக்குவிக்கவும் செய்கிறது. சில சாதனைகளுக்கு திருமண அமைப்பே பாதகமாகவும் இருக்கிறது. பூஜை போட்டு கடா வெட்டுவதற்காகவே வளர்க்கப்படும் ஆடு கோழிகளைப் போல திருமணத்திற்காகவே பிள்ளைகளை, குறிப்பாக பெண் பிள்ளைகளை வளர்க்காமல் இருந்தால் போதுமானது. அவரவர் தனிமனித விருப்பப்படி சரியான வயதை எட்டியவுடன் பகுத்தறிவுடன் சிந்தித்து நல்வாழ்வை அமைத்துக் கொள்ளட்டும். பெற்றோராக அவர்களுக்குத் துணை செய்வோம்.

“எம்பொண்ண நல்லவன் ஒருத்தன் கிட்ட புடிச்சுக் கொடுத்துட்டா போதும். நான் கண்ணை மூடி விடுவேன்” போன்ற வசனங்களை திரைப்படங்களில் மட்டுமல்ல நிஜ வாழ்விலும் நாம் பார்க்க நேரிடுகிறது. பெற்றோர்களுக்கு இருக்கும் ஒரு பாதுகாப்பற்ற உணர்வு அது. நம் பெண்ணை ஒரு சரியான மாப்பிள்ளைக்கு கட்டிக் கொடுத்து விட்டால் இனி எதற்கும் கவலை கொள்ள வேண்டாம் என்கிற எண்ணம் அது. அதில் தவறில்லைதான் என்றாலும் சுயமாக வாழ, சுயமாக திருமண பந்தத்தில் ஈடுபட, அதில் ஏதேனும் பிரச்சினைகள் வரும்போது அதை எதிர்கொள்ள நாம் நம் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கிறோமோ?  நமக்கு அங்ஙனம் பிரச்சினைகள் வரும்போது நாம் சரியான தீர்வை எடுக்கிறோமா?

பிள்ளைகளுக்கு அதிலும் பெண் பிள்ளைகளுக்குப் பொருளாதாரச் சுதந்திரம் என்பது அத்தியாவசியமான தேவை. அதற்கு அவர்களை நாம் தகுதி பெறச் செய்ய வேண்டும். பொருளாதாரச் சுதந்திரம் பெற்று தன் சொந்த காலில் நிற்கும் ஒரு பெண்ணால், தன் திருமண பந்தம் எவ்வளவு மோசமாக அமைந்தாலும் பெரும்பாலும் அதை சரி செய்து கொள்ள இயலும் அல்லது விலகி வாழ இயலும்.

அதற்கான மன தைரியம் அவளிடத்தே இருக்கும். ஆக முதலில் பொருளாதாரச் சுதந்திரத்தை நாம் நம் பிள்ளைகளுக்கு வழங்க வேண்டும். அதற்கு அடிப்படை கல்வி. வெறும் ஏட்டுக் கல்வியுடன் இல்லாமல் அனுபவக் கல்வியை, வாழ்க்கைக் கல்வியை பயணங்கள் செய்தும் பலதரப்பட்ட மனிதர்களை சந்தித்தும் அவர்கள் பெற வேண்டும். அக்கல்வி தரும் நிதானமும் மன உறுதியும் அவர்களை தன்னம்பிக்கையை நோக்கி நகர்த்தும்.

திருமணம் என்பது பண்டமாற்று முறையல்ல. வரதட்சணை, சீதனம் என்ற எந்த பெயரிலும் பணமோ பொருளோ நகையோ வழங்காமல் அல்லது கேட்காமல், இருவர் இணைந்து வாழும் ஒரு நல்ல ஒப்பந்தமாக திருமணங்கள் முற்றிலுமாக மாற வேண்டும். திருமணமாகாத முப்பது வயதை தாண்டிய ஆணையோ பெண்ணையோ பார்த்தவுடன் தவறாமல் “ஏன் திருமணம் செஞ்சுக்கல? இந்தப் பரிகாரம் செய்யுங்க”, போன்ற அபத்தமான கேள்விகளை இனியாவது நாம் தவிர்க்கலாம்.

இந்த நுகர்வு கலாச்சாரத்தில் பெண்களை ஒப்பனையிட்ட பொம்மைகளாக வைத்திருப்பதில் பெருநிறுவனங்கள் மிகுந்த முனைப்பாக இருக்கின்றன. அத்தனை அத்தனை அலங்காரப்பொருட்கள் நம்மைச் சுற்றிலும் நம்மை வா வாவென்று அழைக்கின்றன. முகப்பூச்சிலிருந்து ஆரம்பித்து பல தரப்பட்ட தயாரிப்புகளும் எல்லா விலைகளிலும் கிடைக்கின்றன. அலங்காரத்திற்குள்ளாகவே நம்மை அமிழ்த்து வைப்பது பெருநிறுவனங்களின் திட்டமாக இருக்கலாம். ஆனால் நாம் வெறும் அலங்காரத்தோடு நின்றுவிடலாகாது.

‘பெண்கள் வெறும் அலங்காரத்தோடு திருப்தி அடைவதால், விடுதலை வேட்கை பிறப்பது அரிது’ என்னும் பெரியாரின் கூற்றை இவ்விடத்தில் நினைவு கூற வேண்டும்.

கிராமப்புறங்களில் சின்னச் சின்ன பெட்டிக்கடைகளில் தவறாமல் கோக்கும், பெப்சியும் இதர குளிர்பானங்களும் தொங்கிக் கொண்டிருக்கின்றன. கிராமத்து மண்வாசனைக்கே உரிய கமர்கட்டும் குச்சி மிட்டாயும் எள்ளுருண்டையும் பர்ஃப்பியும் அங்கு காணக் கிடைப்பதில்லை. அதைப்போல எல்லா சிறிய மற்றும் பெரிய கடைகளிலும் பெண்களுக்கான அழகு சாதனப் பொருட்கள் கிடைக்கின்றன. மாறாக பெண்களுக்கான ஊட்டச்சத்துப் பொருட்கள் எதுவும் பிரத்தியேகமாக கிடைப்பதில்லை. தேசிய குடும்ப நல ஆணையத்தின் 2019 – 2020 சர்வேயின்படி, இந்தியாவில் கிட்டத்தட்ட பதினான்கு மாநிலங்களில் ஐம்பது சதவிகிதம் பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த குறைபாட்டை நீக்குவதற்கு நாம் கூட்டாக என்ன பங்களிப்பை செய்திருக்கிறோம்? உடல் ஆரோக்கியத்தோடு இருப்பது தான் அழகு என்று நம் பிள்ளைகளுக்கு நாம் சொல்லி வளர்க்கிறோமா?

பெண்களை குழந்தை பெற்றுக்கொள்ளும் எந்திரமாக பார்க்கும் நிலையிலிருந்து நாம் மாறுதல் அவசியமாகும். இளவயதிலிருந்தே புகுந்த வீட்டில் எப்படி நடந்து கொள்ள வேண்டும், கணவனிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தொடர்ந்து பெண்களுக்குச் சொல்லிக் கொடுக்கப்படுகிறது. ஆண் பிள்ளைகளுக்கு தோழிகளிடம் காதலியிடம் மனைவியிடம் என்று எந்த பெண்ணிடமும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற ரீதியில் பல வீடுகளில் ஏன் சொல்லிக் கொடுக்கப்படுவதில்லை? ஆண் பிள்ளை தவறிழைத்தால் ஆண் பிள்ளைதானே ஆற்றிலும் கால் வைக்கலாம் சேற்றிலும் கால் வைக்கலாம் என்று கூறும் பழமைவாதிகள் பெண் தவறிழைத்தால் மட்டும் குடும்ப மானமே போய்விட்டது என்று கூப்பாடு போடுகின்றனர்.

திருமணம் என்ற பந்தத்தில் ஆணும் பெண்ணும் தோழமைகளாக இருக்க வேண்டும். ஒத்துவராத பந்தத்திலிருந்து விடுதலை பெறக் கூடிய சுதந்திரம் எல்லா பெண்களுக்கும் வேண்டும். குழந்தை பெற்றுக் கொள்வது குறித்தும் எப்போது பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது குறித்தும் பெண்கள்தான் முடிவு செய்ய வேண்டும். திருமணம் செய்து கொள்ளலாமா வேண்டாமா, எந்த வயதில் யாருடன் திருமணம் நடக்க வேண்டும் என்பதை முழுமையாக பெண்களே முடிவு செய்ய வேண்டும்.

முதிர்கன்னி, விதவை, தாசி, வேசி, மலடி போன்ற வார்த்தைகளை நம் தமிழ் மொழியிலிருந்தே, நம் சொல் வழக்கிலிருந்தே முற்றிலுமாக நீக்க வேண்டும். நடிகர் நடிகைகள் அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பொதுத் தளத்தில் இயங்குபவர்களுடைய வாழ்வை அவர்கள் வாழ்வில் நடக்கும் சொந்தப் பிரச்சனைகளை குறித்து புறம் பேசும் உரிமை பொதுமக்களுக்கு கிடையாது என்பதை உணரவேண்டும். பெண்களுக்கான பாதுகாப்பு சட்டங்கள் குறித்த விழிப்புணர்வு பட்டி தொட்டியெங்கும் பரவலாக்கப்பட வேண்டும்.

நம் திரையுலகில் இன்னும் நிறைய பெண் இயக்குநர்கள் வேண்டும். பெண்களின் மனமறிந்த பெண்களின் உள்ளுணர்வு புரிந்த பெண் கலைஞர்களும் எழுத்தாளர்களும் நிறைய கலை படைப்புகளை உருவாக்க வேண்டும். சமுகத்தின் நல்லதோர் மாற்றத்திற்கு இவை வழிவகுக்கும்.

சாலைகளில் உள்ள தேநீர்க் கடைகளில் கிராமப்புறங்களில் ஆண்களைப் போல பெண்களும் சகஜமாக அமர்ந்து தேநீர் அருந்தி அரசியல் பேசும் காலம் வரப் போவது எந்நாளோ? படித்த பெண்களும் கூட தொலைக்காட்சி சீரியல்களில் மூழ்கி கிடப்பது மிகுந்த வேதனையளிக்கிறது. வெப்சீரிஸ்களும் திரைப்படங்களும் கை பேசியும் நம் நேரத்தை நமக்கே தெரியாமல் களவாடிக் கொண்டிருக்கிறது. நம் விடுதலையை சமத்துவத்தை நோக்கி நகர வேண்டிய நாம் ஏதோ ஒரு சீரியலில் சிக்குண்டு கிடப்பது வேதனையல்லவா?

இந்த உலகத்தை உய்விக்க வந்த பெண் சமூகத்தை ஏதோ பாவ யோனியில் இருந்து வந்ததாகத்தானே கூறுகிறது இந்துமதம்? அதே பாவ யோனியிலிருந்து தானே ஆண்களும் வர இயலும்? அதற்கெல்லாம் வேறு பல கதைகள் வைத்திருக்கிறது நம் மதம். பாவ புண்ணியங்களுக்கு அப்பாற்பட்டு பகுத்தறிவுடைய மனிதர்களாக திருமணம் என்னும் சுமையை அவளாக விரும்பினால் சுமக்கட்டும். கட்டாயப்படுத்தி அவளை அக்கூட்டுக்குள் தள்ள வேண்டாம் என்றுரைப்பதே இக்கட்டுரையின் நோக்கம்.

பால்ய விவாகம் வேண்டாம் என்றபோதும், தேவதாசி முறையில் பொட்டுக்கட்டும் பழக்கம் வேண்டாம் என்ற போதும் அதை ஆதரித்த பல தலைவர்கள் நம் நாட்டில் இருந்திருக்கிறார்கள். மதன் மோகன் மாளவியா பொட்டுக்கட்டும் பழக்கத்தை ஆதரித்தவர். எல்லோருக்கும் கல்வி தர வேண்டும் என்ற கருத்தை தவறு என்று கூறி மூர்க்கமாக எதிர்த்தவர் பாலகங்காதர திலகர். ‘சாதி மற்றும் சாதிக்கு மட்டுமே சக்தி உண்டு’ என்ற தலைப்பில் அவர் எழுதிய தலையங்கம் 1891 இல் வெளியிடப்பட்டது. பிராமணர்களுக்கு மட்டுமே கல்வி என்று சூளுரைத்த அவர் பெண் கல்வியையும் பலமாக எதிர்த்தவர். இப்படிப்பட்ட எத்தனையோ தலைவர்களின் மோசமான எதிர்ப்புகளையெல்லாம் தாண்டி இன்று பெண்களால் பல சாதனைகளையும் செய்ய முடிந்திருக்கிறது.

அதுபோலத்தான் திருமணம் என்பதிலும் தேவையான பல்வேறு மாற்றங்களை நாம் கொண்டுவருவதும் அவசியமான ஒன்றாகும். சுயமரியாதை திருமணச் சட்டம் பெரியாரின் துணை கொண்டு அறிஞர் அண்ணாவால் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட போதும் பலருக்கு  அதில் உடன்பாடு இல்லைதான். ஆனால் காலம் சுயமரியாதை திருமணங்களுக்கான எவ்வளவு பெரிய வரவேற்பை நல்கியிருக்கிறது… சுயமரியாதை திருமணம் என்கிற வார்த்தையே எவ்வளவு கண்ணியம் நிறைந்த வார்த்தையாக இருக்கிறது. சுயமரியாதையுடன் பெண்கள் வாழ்வதற்கான அச்சாணியாக திருமணம் என்ற அமைப்பு முறை மாற வேண்டும். திருமண வாழ்க்கைக்கான நிர்பந்தங்களிலிருந்து அடக்கு முறைகளிலிருந்து அக நெருக்கடிகளிலிருந்து பெண்கள் மீளவேண்டும். திருமணம் என்பது சடங்கு சம்பிரதாயங்களால் மட்டுமே ஆனதாக அல்லாமல் இருமனங்களின் தோழமையாக நேசமாக சாத்தியப்பட வேண்டும்.

தொடர்ந்து விவாதிப்போம்.

கதைப்போமா ?

படைப்பு:

ஹேமலதா

சென்னையில் பிறந்தவர்; தற்போது கொச்சியில் வசித்துவருகிறார். கார்ப்பரேட் செக்ரட்டரிஷிப் பட்டதாரியானவர், யோகக் கலையில் எம்.ஃபில் பட்டம் பெற்றுள்ளார். சில நிறுவனங்களிலும், பள்ளிகளில் யோக ஆசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார். ‘முழுவல்’ என்ற கவிதை நூல் வெளியிட்டிருக்கிறார். பெண்ணியம் தொடர்பான நிகழ்வுகளில் தொடர்ந்து பங்கெடுத்துக் கொண்டிருக்கிறார்.