’ஏன் இறந்த பறவைகளைக் கவனிக்க வேண்டும்?’ என்ற கேள்வியுடன் புறப்பட்டு, இன்று பறவை ஆராய்ச்சியாளராக உருவாகியிருக்கிறார் கிருபா நந்தினி. பொள்ளாச்சியில் உள்ள காளியப்பகவுண்டன்புதூர் இவர் சொந்த ஊர். அப்பா தேங்காய் வியாபாரம் செய்கிறார். அம்மா தோட்ட வேலைகளுக்குச் செல்கிறார். மிக எளிய குடும்பம்.

சித்தப்பாவின் தாய்த்தமிழ் பள்ளியில் படித்தார். அறிவியல் ஆசிரியர் வேல்விழி ஞானம் பாடம் எடுக்கும் முறையால் ஈர்க்கப்பட்டார். நல்லமுத்து கவுண்டர் மகாலிங்கம் கல்லூரியில் இளங்கலை விலங்கியலில் பட்டப்படிப்பை முடித்தார்.

“நமக்கு முன் ஒருவர் எழுதியதையும், கண்டுபிடித்ததையும்தானே நாம் இன்றைக்குப் பயன்படுத்தி வருகிறோம். அதே போல் நாமும் சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று சிறு வயதிலிருந்தே சித்தப்பா காசு. நாகராசன் சொல்லியே என்னை வளர்த்தார். அதன் விளைவு, இளங்கலை படிக்கும் போதே, பாடங்களைத் தாண்டி வேறு கல்லூரிகளில் நடைபெறும் கருத்தரங்கு, விவாதம், பட்டிமன்றம் போன்ற நிகழ்வுகளில் கலந்துகொண்டேன். தேசிய மாணவர் படையிலும் இணைந்து பல கல்லூரிகளுக்குச் சென்றேன். குவாலியரில் உள்ள womens training acadamy மூலம் கிடைத்த பயிற்சி எனக்குத் துணிச்சலையும் தன்னம்பிக்கையையும் தந்தது. மனமும் உடலும் வலிமை பெற்றேன்” என்கிறார் கிருபா நந்தினி.

முதுகலை விலங்கியலை கோவை அரசுக் கல்லூரியிலும், ’இறந்த பறவைகளின் காரணி அறிதல்’ என்ற தலைப்பில் எம்.பில் படிப்பை பாரதியார் பல்கலைக்கழகத்திலும் முடித்தார்.

பின்னர் சலீம் அலி பறவைகள் மற்றும் இயற்கை வரலாறு மையத்தில் ஆராய்ச்சியாளர்கள் தேர்வுக்கான விளம்பரத்தைப் பார்த்ததும், அங்கு சென்று பறவைகளுடன் பணியாற்ற வேண்டும் என்ற ஆசை வந்தது. பணியில் சேர்ந்தார். இறந்த பறவைகளின் காரணங்களைக் கண்டறிதலில் 2020ஆம் ஆண்டு முனைவர் பட்டத்தையும் பெற்றார் கிருபா நந்தினி.

’சுற்றுச்சூழல் கூறுகளில் குறிப்பாகப் பறவைகளின் மேற்பார்வை மற்றும் கண்காணிப்பிற்கான தேசிய மையம் அமைத்தல்’ என்ற திட்டத்தை மத்திய சுற்றுச்சூழல், காடுகள் மற்றும் கால நிலை மாற்றம் துறையின் நிதியுதவியுடன் 2017 டிசம்பர் முதல் 2021 மார்ச் வரை செயல்பட்டது. இதில் கிருபா நந்தினி ஓர் இளம் ஆராய்ச்சியாளராகப் பணியாற்றினார். பறவைகள் இறப்பு பற்றி செய்தித் தாள்களைப் படித்தோ, வனத்துறை மற்றும் இயற்கை ஆர்வலர்களின் தகவல்கள் மூலமாகவோ தெரிந்துகொண்டு, அந்த இடத்திற்கு விரைந்து சென்று பறவைகள் இறப்பிற்கான காரணங்களை மக்களிடம் கேட்டுத் தெரிந்துகொண்டார். அதன் பின் இறந்த பறவைகளை வனத்துறை மற்றும் கால்நடை மருத்துவரின் உதவியுடன் உடல் கூறு ஆய்வு மேற்கொண்டு, பின், தேவைப்படும் உடல் உறுப்புகளை ஆய்வகத்திற்கு அனுப்பி, வேதியியல் ஆய்வாளர்கள், இறந்த பறவைகளில் உள்ள பூச்சிக்கொல்லி அல்லது உலோகங்கள் போன்ற வேதிப்பொருட்களின் அளவைக் கண்டறிந்து, எதனால் இறப்பு ஏற்பட்டது என்று ஆய்வறிக்கை சமர்ப்பிப்பதே கிருபா நந்தினியின் வேலை.

கொத்துக்கொத்தாகச் சாகும் பறவைகளின் இறப்புக்கான காரணங்களைக் கண்டறிய தமிழ்நாட்டின் ஒரு சில பகுதிகள், கர்நாடகா, குஜராத், ராஜஸ்தான், ஆந்திரா, ஒடிசா ஆகிய மாநிலங்களுக்கும் பயணித்துள்ளார் கிருபா நந்தினி. ஆய்வுக்கான பயணத்தில் அதிகாரிகளைச் சந்தித்தல், களப்பணி அனுபவம் போன்றவை பலவிதமான கேள்விகளை எழுப்பியது. இதனால் அவர் விடைகளைத் தேடி ஓடினார். இறந்த பறவைகளின் வாழ்விடச் சிக்கல்களை விசாரிக்கும் பொழுது, மனிதர்களின் வாழ்க்கை முறையும் சிக்கல்களையும் சேர்த்தே பதிவுசெய்ய வேண்டும். பறவைகளின் இறப்பு என்பது மனிதர்களையும் பல்லுயுரினச்சூழலையும் எவ்வாறு பாதிக்கிறது என்பதையும் உணர முடிகிறது.

பெரும்பாலும் வனத்துறை பற்றிய படிப்பிலும் ஆய்விலும் பெண்களின் பங்கேற்பு மிகவும் குறைவானது. முனைவர் பட்ட ஆய்வைச் சொந்த நலன் சார்ந்து செய்பவர்களே அதிகம். ஆனால், கிருபா நந்தினி சமூகம் சார்ந்து சிந்தித்ததன் விளைவாக முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டிருக்கிறார்.

இந்தியாவில் பெண் பறவையியலாளர்கள் மிகவும் குறைவு. சாதி, பாலின வேறுபாடுகள், வெளி மாநிலங்களில் பயணம், உணவு, தங்குமிடம், கழிவறை என பல்வேறு பிரச்னைகளை எதிர்கொண்டு, இன்று ஒரு பறவையியலாளராக வலம் வருகிறார் கிருபா நந்தினி.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மத்திய அரசின் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை ஆண்டுதோறும் நடத்திக்கொண்டிருக்கிறது. இதில் 10-17 வயதுள்ள மாணவர்கள் ஆய்வு செய்வார்கள். அந்த ஆய்வுகளை மதிப்பீடு செய்வதற்காக 2017ஆம் ஆண்டு கிருபா நந்தினி வந்தார். அன்று முதல் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தில் மிகுந்த ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறார். தற்போது தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கோவை மாவட்ட துணைச் செயலாளராகத் திறம்படச் செயல்பட்டு வருகிறார்.

பூஞ்சோலை மற்றும் யாழிசைக் கல்வி சமூக அறக்கட்டளையில் ஆலோசனைக் குழுவில் இருகிறார். இதனால், கிராமங்களில் உள்ள ஏழை மாணவர்களுக்கான சிக்கல்களைப் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள முடிகிறது. இயற்கை அறிவியலை மாணவர்கள் உணர்ந்துகொள்ளும் விதத்தில் தொடர்ச்சியாகப் பேசியும் எழுதியும் வருகிறார் கிருபா நந்தினி.

“நான் இன்னும் பயணிக்க வேண்டிய தூரமும், தாண்ட வேண்டிய தடைகளும் நிறையவே இருக்கின்றன. அதற்கு என்னை எப்போதும் தயார்படுத்திக்கொண்டு, புதிய அனுபவங்களை உற்சாகத்துடன் எதிர்நோக்கியபடியே தொடர்ந்து பயணித்துக்கொண்டே இருக்கிறேன்” என்கிறார் கிருபா நந்தினி.

2014 ஆம் ஆண்டு மேட்டுப்பாளையம் காட்டுயிர் முகமது அலி அமைப்பு ஏற்பாடு செய்த டாப்ஸ்லிப் மலையேற்றத்தின் போது கிருபா நந்தினியைச் சந்தித்தேன். காட்டுக்குள் ஆங்காங்கே தென்படும் விலங்குகளைத் தொந்தரவு செய்யாமல் கண்டுகளித்தோம். லேசான மழையில் உரையாடல்களுடன் கூடிய பயணம் இனிமையாக இருந்தது.

ஒரு பெண் ஆய்வு செய்து முனைவர் பட்டம் வாங்குவதே சவால்தான். அதிலும் காட்டில், மலைப் பகுதியில், கிராமத்தில், கடற்கரை ஓரங்களில் பறவைகளைப் பற்றி ஆய்வு செய்வதும் அங்குள்ள சூழல்களைச் சமாளிப்பதும் சவாலான பணிதான். இறந்த பறவைகளின் காரணம் தேடிச் செல்வது மிகவும் சவாலான பணி.

உபகரணங்களை கற்றுக்கொள்வதில்கூடப் பாரபட்சத்தை எதிர்கொண்டார் கிருபா நந்தினி. ’நீ பெண்தானே, இவற்றைக் கற்றுக்கொண்டு என்ன செய்யப் போகிறாய்? எதற்கு இத்தனை ஆய்வகச் செயல்முறைகளைக் கற்றுக்கொள்ள நினைக்கிறாய்?’ என்று கேட்டவர்கள் ஏராளம். அவர்களுக்கு எல்லாம் தன்னுடைய செயல்கள் மூலம் பதில்களைச் சொல்லிக்கொண்டிருக்கிறார் இந்த இளம் பறவையியலாளர் கிருபா நந்தினி.

படைப்பாளர்:

மோகனா சோமசுந்தரம்

ஓய்வுபெற்ற பேராசிரியர். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் முன்னாள் தலைவர். 35 ஆண்டுகளாக அறிவியலை மக்களிடம் பரப்பி வருகிறார். துப்புரவுத் தொழிலாளர்களுக்காகப் போராடி வருகிறார். ‘மோகனா – ஓர் இரும்புப் பெண்மணி’ என்ற இவரின் சுயசரிதை சமீபத்தில் வெளிவந்து, வரவேற்பைப் பெற்றுள்ளது. அறிவியல் நூல்கள், கட்டுரைகள் எழுதியிருக்கிறார்.