மனிதர்களாகிய நாம் அனைவரும் எப்போதும் வித்தியாசத்தை  விரும்புவோம். அதை வித்தியாசமாக செயலாக்கவும் முயற்சிப்போம். உதாரணமாக வித்தியாசமான கதை கொண்ட திரைப்படத்தைக் காண்பது, சுற்றுலா செல்வது,  என பல வித மாற்றத்தை வரவேற்றுக்கொன்டுதான் இருப்போம், இருக்கின்றோம்.

அனைத்திலும் வித்தியாசம் எதிர்பாக்கிற நாம், ஏன் இயற்கையின் படைப்பில் இருக்கும்  பாலின வித்தியாசத்தை  ஏற்றுக்கொள்ள நேரம் எடுத்துக்கொண்டோம்? வாங்க பார்க்கலாம்!

எவ்வாறு பாலினம் முன்னிறுத்தப்படுகிறது?

பெரும்பாலும் குழந்தைகள் பெயரிடப் படுவதற்கு முன்பு, அவர்களின் வெளிப்புற பிறப்புறுப்பு தோற்றத்தின் அடிப்படையில்தான் அவர்களுக்கு பாலினம் ஒதுக்கப்படுகிறது. பொதுவாக பைனரி பாணியில் தான் இது வடிவமைக்கப்படும், அதைத்தான் நாம் ஆண் மற்றும் பெண் என்று கூறுகிறோம்.

ஆனால், இயற்கையின் அற்புதமான படைப்பில் மற்றொன்று  இருக்கிறது, அதற்கு அறிவியல் சார்ந்த மக்களும் , மருத்துவர்களும் Inter Sex ( ஒரு நபரின்  பிறப்புறுப்பு பிறக்கும் பொழுதே வித்தியாசப்படுவது)என்று அடையாளப்படுத்துவார்கள்.

ஒரு சில மக்களுக்கு பிறப்பிலே அடையாளம் காணலாம், மற்றவர்களுக்கு குறிப்பிட்ட வயதை அடைந்தபின் அவர்களுடைய உணர்வில் மற்றும் பாவனையில் மாற்றத்தை உணர்வார்கள் என்பது மருத்துவர்களின் கருத்தாகும். அதற்கேற்றாற்போல் தங்களுடைய பாலினத்தை மாற்றிக் கொண்டு நங்கையாகவும் நம்பியாகவும், உமையொருபாகன் போல் காட்சி அளிக்கிறார்கள்.

திருநங்கை – பிறப்பில் ஆண், ஆனால் பெண்ணாக தன்னை மாற்றி அடையாளப்படுத்திக் கொள்பவர்கள்

திருநம்பி – பிறப்பில் பெண், ஆனால் ஆணாக தன்னை மாற்றி அடையாளப்படுத்திக் கொள்பவர்கள்.

அவர்களின் விருப்பத்தின் பேரில் நடக்கும் மாற்றமா இது என்று பார்த்தால் கண்டிப்பாக  இல்லைங்க! நாம் அனைவரும் நாகரீகமான சூழலில் இருந்தாலும், மாற்றுப் பாலினத்தவர் பற்றிய புரிதலும், பார்க்கும் கண்ணோட்டமும் தவறாக இருக்கிறது.மேலும், அவர்களுக்கு ‘மன வளர்ச்சிக் குறைபாடு, வேண்டுமென்றே பாலின இச்சைக்காக செய்கிறார்கள்’ என்று பலர் கூறி நாம் கேள்விப்பட்டிருப்போம். 

இயற்கையின் அற்புதமான படைப்பில் மற்றொன்று  இருக்கிறது, அதற்கு அறிவியல் சார்ந்த மக்களும் , மருத்துவர்களும் Inter Sex ( ஒரு நபரின்  பிறப்புறுப்பு பிறக்கும் பொழுதே வித்தியாசப்படுவது)என்று அடையாளப்படுத்துவார்கள்.

உண்மையில் அவர்களுக்கு நிகழும் மாற்றம்

மனது சம்பந்தப்பட்டதா அல்லது உடலில் நடக்கும் மாறுதலா?

உலக சுகாதார அமைப்பு(WHO) கூறுகையில், பாலின இணக்கமின்மை ஒரு மனநலக் கோளாறு அல்ல என்றும், ஆறு ஆண்டுகளுக்கு முன்னர், பாலின அடையாளக் கோளாறுகளை பொது டிஸ்போரியா (General Dysphoria )என்று மாற்றி அமைத்ததாகவும் கூறுகிறார்கள்.மேலும் அவர்கள் தங்களுடைய ஆடை, ஒப்பனை, சிகை அலங்காரங்கள், அவர்களுடைய பாவனைகள், மற்றவர்களுடன் உரையாடும் பொழுது மற்றும்  பழக்கவழக்கங்கள் மூலம் பாலினத்தை வெளிப்படுத்துகிறார்கள்.

உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்பதால் சற்று அறிவியலைப் பற்றி சிந்திப்போம்.

அறிவியல் என்ன சொல்கிறது?

பிறக்கும்போது பாலினத்தில் எவ்வித மாற்றமும் நிகழாமல், காலப்போக்கில் உடல்கூறியலின் மாற்றத்தை உணர்ந்து அவர்களை மாற்றிக் கொள்கிற கட்டாயத்துக்கு உள்ளாகிறார்கள்.

கருவிலிரு ந்தே பெரிதும் பாதிப்பு ஏற்படுகிறது. தாயின் கருப்பையில் Hormone களின் வளர்ச்சி குறைபாடு மிகப்பெரிய காரணியாக அமைகிறது. இந்த நிகழ்வு இரண்டு காரணங்களை கொண்டிருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். கருவுற்றிருக்கும் தாய்க்கு போதுமான ஈஸ்ட்ரோஜன் இல்லை, அல்லது போதுமான ஈஸ்ட்ரோஜன் இருந்தும், கருவின் மோசமான உணரும் திறன் இல்லாமல் இருப்பது. உதாரணமாக, தொலைநிலை அழைப்புகளைக் கட்டுப்படுத்தும் செல்போன் டவர் (Mobile Tower) போல நினைத்துக் கொள்ளுங்கள். டவரில் போதுமான சமிக்ஞை(Signal) இல்லை என்றால், பெரும் தொலைபேசியால் செய்தியை செயலாக்க முடியாமல் போகலாம். 

மாற்று பாலினத்தவரின் பின்னணியில் இருக்கும் அறிவியலை மறந்து, அவர்களை வசைப்பாடிக் கொண்டிருக்கிறோம்.குறிப்பிடத்தக்க மன உளைச்சல் அல்லது இயலாமையை ஏற்படுத்தினால் மட்டுமே ஒரு உளவியல் நிலை மனநலக் கோளாறாகக் கருதப்படுகிறது. பல திருநங்கைகள் தங்கள் பாலினத்தை துன்பகரமானதாகவோ அல்லது முடக்குவதாகவோ நினைக்கவில்லை; மாறாக சமுதாயத்திற்குள் ஏற்றுக்கொள்ள முடியாதது, பாகுபாடு காண்பது, நேரடி அல்லது மறைமுக அனுபவங்கள், மற்றும் தாக்குதல் உள்ளிட்ட பல காரணங்கள் அவர்களின் துன்பத்திற்கு இது வழிவகுக்கும். இந்த அனுபவங்கள் பல திருநங்கைகளை கவலை, மனச்சோர்வு அல்லது அதன் தொடர்புடைய கோளாறுகளால் பாதிக்கப்படுகிறார்கள்.மேலும் மனச்சோர்வு, போதைப் பொருள் துஷ்பிரயோகம் மற்றும் தற்கொலை முயற்சிகளை கையாளுகின்றனர்.

என்ன மாதிரியான தீர்வுகள்?

இந்த நபர்களுக்கு எற்ற மாதிரியான ஆலோசனை, ஹார்மோன் சிகிச்சை, மருத்துவ நடைமுறைகள் மற்றும் அவர்களின் பாலின அடையாளத்தை சுதந்திரமாக வெளிப்படுத்தவும், பாகுபாட்டைக் குறைக்கவும் தேவையான சமூக ஆதரவு கொடுத்து அவர்களை வழிநடத்த வேண்டும். 

குறிப்பாக டிரான்ஸ் மாணவர்கள் மிகவும் பாதிக்கப்படக்கூடிய ஐக்கிய நாடுகளில், எழுபத்தைந்து சதவிகித திருநங்கைகள் பள்ளியில் பாதுகாப்பற்றதாக உணர்கிறார்கள், கணிசமாக குறைந்த ஜி.பி.ஏ.க்களைக்(GPA Percentage) கொண்டுள்ளனர், பாதுகாப்பு காரணங்களால் பள்ளியைத் தவிர்ப்பதற்கான வாய்ப்புகள் அங்கே அதிகம். அவர்களின் கல்வியைத் தொடர திட்டமிடுவதற்கான வாய்ப்புகளும் குறைவு.

உயர்ந்த,வளர்ந்த நாடுகளிலும் மூன்றாம் பாலின மக்கள் அதிகமாக வாழ்கிறார்கள். உலகில் திருநங்கை, திருநம்பி வெவ்வேறு பெயர்களுடன் இருக்கிறார்கள்.

Kathoey என்று தாய்லாந்திலும், Waria வாக இந்தோனேசியாவில்,Muxe ஏன்று மெக்ஸிகோவிலும்,பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தானில் Hijra வாகவும் வாழ்கிறார்கள்.

அதிக எண்ணிக்கையிலான பாலியல் மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நாடுகள் தாய்லாந்து மற்றும் ஈரான்.

யுனைடெட் ஸ்டேட்ஸ் மற்றும் பிரேசில் ஆகியவை உலகில் அதிக மாற்றுப்பாலின மக்களைக் கொண்டுள்ளன, அதைத் தொடர்ந்து பிலிப்பைன்ஸ் மற்றும் தாய்லாந்து ஆகியவை உள்ளன. ரியோ டி ஜெனிரோ மற்றும் சான் பிரான்சிஸ்கோ நகரங்களில் உலகில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு அதிகமான மற்றுப்பாலின மக்களை நீங்கள் காணலாம்.

நேர்மறையான அணுகுமுறை

எல்லோரும் வித்தியாசமாக இருக்கிறார்கள், எல்லோரும் தனித்துவமானவர்கள், எல்லோரும் தங்கள் சொந்த வழியில் போராடுகிறார்கள். வேறு எதுவாக இருந்தாலும், ஒரு நபர் வித்தியாசமாகப் பார்த்தால் அல்லது பேசினால், எப்போதும் கனிவாக இருப்பது முக்கியம். எப்போதும் கனிவாக இருங்கள். 

படைப்பு:

பிரியா ஜே

2007ம் ஆண்டு கணினிப் பொறியியல் முடித்தவர். ஐடி துறையில் ட்ரெய்னர் மற்றும் டெவலப்பர் பொறுப்பில் பணியாற்றியுள்ளார். 2012ம் ஆண்டு மணம் புரிந்தவர், குழந்தை வளர்ப்புக்காக 8 ஆண்டுகள் பணியிலிருந்து விலகியிருந்துள்ளார். லைஃப் கோச்சிங் மற்றும் கவுன்சலிங் டிப்ளமோ முடித்து வீட்டிலிருந்தே கவுன்சலிங் செய்கிறார்.