சுகாதாரம் தொடர்பாக மக்கள் நலவாழ்வு இயக்கக் (People’s Health Movement) கூட்டத்திற்குச் சென்றபோது முதல் முறை கெளசல்யாவைச் சந்தித்தேன். அப்போது இவர் எச்ஐவி பாஸிட்டிவ் பெண்கள் தொடர்பாகத் தீவிரமாகப் பேசினார். வியந்து போனேன். அதன் பின்னர்தான் அவர், பாஸிட்டிவ் நெட்வொர்க்கின் அகில இந்தியத் தலைவர் என்று தெரிந்தது.

1974ஆம் வருடம் நாமக்கல்லுக்கு அருகில் உள்ள போடிநாயக்கன்பட்டியில் பிறந்தவர் கௌசல்யா. பன்னிரண்டாம் வகுப்பு வரை நாமக்கல் அரசுப் பள்ளியில் படித்தார். இரண்டு வயதிலேயே அம்மாவை இழந்துவிட்டார். கௌசல்யா பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவுடன் அத்தை மகனுக்கு, அவர் அம்மா சொன்னபடி திருமணம் செய்து வைத்துவிட்டார்கள்.

கௌசல்யாவுக்குத் திருமணம் முடிந்த 20 நாட்களில் காய்ச்சல் வந்துவிட்டது. மருத்துவரிடம் போனதும், பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவைக் கண்ட மருத்துவர், கெளசல்யாவின் கணவரை அழைத்து வரச் சொன்னார். அவருக்கும் பரிசோதனை செய்து பார்த்ததில், இருவருக்கும் எச்ஐவி இருப்பது தெரியவந்தது. கௌசல்யாவின் கணவருக்குத் திருமணத்திற்கு முன்பே எச்ஐவி இருந்திருக்கிறது. அதனை மறைத்து அவருக்குத் திருமணம் முடித்துவிட்டார்கள்.

கெளசல்யா

கௌசல்யா திருமணத்துக்கு முன்பு மாமா வீட்டில்தான் இருந்தார். கௌசல்யாவின் தந்தை வேறு மணம் முடித்துவிட்டதால் அவரும் அவர் அக்காவும் மாமா வீட்டில் இருக்க வேண்டிய சூழல்.

திருமணத்துக்குப் பிறகு கணவர் வீட்டுக்கு வந்துவிட்டார் கெளசல்யா. மருத்துவப் பரிசோதனை முடிவை யாரும் கண்டுகொள்ளவில்லை. தான் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்த கெளசல்யா, நியாயம் கேட்டார். அவர்கள் கெளசல்யாவின் கணவருக்கு வேறு திருமணம் செய்யப் போவதாக மிரட்டினர். கோபத்தில் வீட்டைவிட்டு வெளியேறி, மாமா வீட்டுக்கு வந்துவிட்டார் கெளசல்யா.

சிறிது நாட்களிலேயே கெளசல்யாவின் கணவர் இறந்துவிட்டார். அந்த விஷயத்தைக்கூட கணவர் வீட்டார் கெளசல்யாவுக்குச் சொல்லவில்லை. அவர்களைப் பொருத்தவரை மகன் அற்ப ஆயுளில் சென்றாலும் திருமணம் என்ற ஒன்றை நடத்தி வைத்துவிட்ட திருப்தி. கெளசல்யாவின் எதிர்காலம் குறித்து எந்தவித அக்கறையும் இல்லை.

எச்ஐவியை அறிவித்த முதல் பெண்

கௌசல்யா விரக்தியுடன் இருந்தார். 1995இல் தனக்கு எச்ஐவி இருக்கிறது என்ற உண்மையைத் துணிச்சலுடன் அறிவித்தார் கெளசல்யா. இந்தியாவிலேயே எச்ஐவி இருக்கிறது என்று தைரியமாக அறிவித்த முதல் பெண் கௌசல்யா தான் என்ற செய்தி அனைத்து ஊடகங்களிலும் வெளிவந்தது. பேட்டி எடுத்தார்கள். சில தன்னார்வ நிறுவனங்களும் அவரை நாடி வந்தன.

“நான் யாரிடமும் வாய் திறக்கவில்லை. போட்டோவும் கொடுக்கவில்லை. அப்போது எச்ஐவி பாஸிட்டிவ் என்பது குறித்து மக்களுக்கு அவ்வளவு விழிப்புணர்வு கிடையாது” என்கிறார் கெளசல்யா.

சித்த மருத்துவம், ஹோமியோபதி, கைவைத்தியம் என்று ஏராளமான மருந்துகளைச் சாப்பிட்டார். கௌசல்யாவின் நோய் அதிகரித்தது.

1995 டிசம்பரில் எச்ஐவி பாஸிட்டிவ் தொடர்பாக ஒரு நிகழ்ச்சி நடப்பது கௌசல்யாவுக்குத் தெரியவந்தது. அதில் கலந்துகொண்டார். கவுன்சிலிங் கிடைத்தது. அவரும் எச்ஐவி பெண்களுக்கு கவுன்சிலிங் கொடுத்தார். இது உலக எய்ட்ஸ் தினத்தன்று நடந்தது.

1996இல் எச்ஐவிக்கான Peer educator வேலை கிடைத்தது. எச்ஐவி பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினார்.

1997இல் மாமாவின் குடும்பம் சென்னைக்குக் குடிபெயர்ந்தது. சென்னையில் கெளசல்யாவுக்கு வேலை இல்லை. வருமானத்துக்காக மட்டுமில்லாமல், மக்களிடம் பழகும் வாய்ப்புக்காகவும் அவருக்கு ஒரு வேலை தேவையாக இருந்தது. நண்பர் மூலம் எச்ஐவி பாசிட்டிவ் மனிதர்கள் ஒன்றுகூடினார்கள். RP and Indian Network of people living with HIV என்ற அமைப்பு உருவானது. செயல்பட ஆரம்பித்தார்கள். 1998இல் Positive Women Network உதயமானது.

வேற்று மாநில மக்களுடன் பேசும்போது மொழிப் பிரச்னை வந்தது. நண்பர் மூலம் இந்தி, ஆங்கிலம் கற்றுக்கொண்டார் கெளசல்யா. ஒவ்வொரு நாளும் பிரச்னைகள். ஆனாலும் வேலையை ரொம்பவும் நேசித்ததால் மகிழ்ச்சியுடன் செய்தார்.

எச்ஐவி பாஸிட்டிவ் மாநாடு 1997இல் ஸ்விட்சர்லாந்தில் உள்ள ஜெனிவாவில் நடந்தது. அந்த மாநாட்டில் கௌசல்யா எழுதிய 18 விஷயங்கள் எச்ஐவி பெண்களின் பிரச்னைகளாகப் பேசப்பட்டன.

“எங்களுக்கு எச்ஐவி இருந்ததே தவிர, அதனைக் கையாளத் தெரியவில்லை. எச்ஐவி பாஸிட்டிவ் பெண்கள் இணைந்து ஒரு அமைப்பை நிறுவினோம். அதுதான் HIV positive women network. தனியாகச் சென்றால்தான் விரட்டுவார்கள், குழுவாகச் சென்றால் பிரச்னை இருக்காது என்று தெரிந்துகொண்டோம். குழுவாக இருந்தால் சாதிக்கவும் முடியும் என்றும் அறிந்துகொண்டோம். குமுதம், ஆனந்தவிகடன் பத்திரிகைகளில் பேட்டி வந்தது.

பூந்தமல்லி அருகே ஒரு எச்ஐவி பெண்ணை உடன் இருந்தவர்களே அடித்துக் கொன்றதாகத் தகவல் கிடைத்தது. நான் பயந்துவிட்டேன். பேட்டி கொடுப்பதை நிறுத்திவிட்டேன். நான் குடியிருந்த வீட்டின் உரிமையாளர் எனக்கு எச்ஐவி இருப்பதை அறிந்துகொண்டார். ஆனால், அவர் வீட்டைக் காலி செய்யச் சொல்லவில்லை. இப்படிப்பட்ட மனிதர்களும் இருக்கிறார்கள் என்பது நம்பிக்கையளிக்கும் விஷயமாக இருந்தது” என்கிறார் கெளசல்யா.

1998 இல் 16 பெண்கள் தென்னிந்தியாவின் Positive Women Network அமைப்பை ஆரம்பித்தனர். இவர்களுக்கு என்று ஓர் அலுவலகம்கூட இல்லை.

அப்போது எச்ஐவி பாஸிட்டிவ் மருந்தே கிடையாது. அரசு மருத்துவமனைகள் தாம் சிகிச்சை தரவேண்டும். மருந்து இல்லாததால் அந்தக் காலகட்டத்தில் நிறையப் பேர் இறந்துவிட்டார்கள். 1999இல் சிகிச்சையளிக்க ஆரம்பித்தது அரசு.

International Treatment Movement for HIV people மாநாட்டுக்குச் சென்றார் கௌசல்யா. திடீரென்று இவர் உடல்நிலை மோசமானது. மஞ்சள் காமாலை, காசநோய் இருப்பது தெரிந்தது. பணம் இல்லை. இவர் இறந்துவிடுவார் என்றே எல்லோரும் எண்ணினார்கள். அரசு மருத்துவமனையில் மருந்து இல்லை. மாமா வீட்டில் இருந்துதான் பணம் கொடுத்தார்கள். இந்தக் காலகட்டத்தில் பாஸிட்டிவ் பெண்கள் அமைப்பு மிகவும் உதவியது.

ART ( Anti Retro-viral Therapy) என்ற மருந்தைச் சாப்பிட்டார். காசநோய்க்கும் மருந்து சாப்பிட்டார். அரசு மருத்துவமனையில் உதவி கிடைக்கவில்லை. டிசம்பரில் சிகிச்சை முடிந்து மலேசியாவில் ஒரு மாநாட்டிற்குச் சென்றார் கௌசல்யா.

சுனிதி சாலமன் மூலம் சில உதவிகள் கிடைத்தன. அரசாங்கத்துடன் போராடி, குறைந்த விலையில் மருந்துகளை வழங்குவதற்கு ஏற்பாடு செய்தார். 2003இல் பார்சிலோனாவில் உலக அளவில் எச்ஐவி பாஸிட்டிவ் பெண்களுக்காக ஒரு மாநாடு நடந்தது. அதில் எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவசமாக மருந்துகளை அரசாங்கம் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள். இன்றும் போராட்டம் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

“எச்ஐவி தவிர வேறு எந்தப் பாதிப்புக்கும் அமைப்பு கிடையாது. எங்களுக்கு வருமானமும் கிடையாது. அரசாங்கம் வாழ்வாதாரத்துக்கு உதவணும். மருந்துகளை இலவசமா தரணும், அரசாங்கத்துக்கே புரிதல் இல்லையென்றால் சாமானியர்களிடம் எப்படிப் புரிதல் உண்டாகும்?” என்கிறார் கெளசல்யா.

படைப்பாளர்:

மோகனா சோமசுந்தரம்

ஓய்வுபெற்ற பேராசிரியர். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் முன்னாள் தலைவர். 35 ஆண்டுகளாக அறிவியலை மக்களிடம் பரப்பி வருகிறார். துப்புரவுத் தொழிலாளர்களுக்காகப் போராடி வருகிறார். ‘மோகனா – ஓர் இரும்புப் பெண்மணி’ என்ற இவரின் சுயசரிதை சமீபத்தில் வெளிவந்து, வரவேற்பைப் பெற்றுள்ளது. அறிவியல் நூல்கள், கட்டுரைகள் எழுதியிருக்கிறார்.