காலை மூன்றாம் பாடவேளை ( Period ) வகுப்பறையில் நுழைந்தவுடன் பூஜா வயிற்றைப் பிடித்துக்கொண்டு அழுதாள். அக்‌ஷயா, வைஷாலி என்று தொடர்ந்து ‘ரெஸ்ட் ரூம் போயிட்டு வரேன் மிஸ்’ என்றார்கள்.

“இப்போது தானே இன்டர்வெல் விட்டாங்க, அதுக்குள்ளே போகணும்னு கேட்டால் எப்படிப் பாடம் நடத்துவது?”

ஒவ்வொருவரும் ஆசிரியரின் முகத்தைப் பரிதாபமாகப் பார்க்க, வகுப்புத் தலைவி, “மிஸ், டாய்லெட்ல தண்ணியே வரமாட்டேங்குது. கதவில் தாழ்ப்பாள் இல்லை, கூட்டமா வேற இருக்குது. பிரேக்ல அந்த டைம்க்குள்ள போய்ட்டு வர முடியல. அதான்…” என்றாள்.

உடற்கல்வி ஆசிரியரின் கவனத்திற்கு இந்தப் பிரச்னையை எடுத்துச் சென்று தற்காலிகத் தீர்வு மேற்கொள்ளப்பட்டது. ஆனால், நிரந்தத் தீர்வு அல்ல.

அடுத்த வகுப்பில் ஆசிரியர் நுழைய, அங்கேயும் இருவர் அவசரமாகக் கழிவறைக்குச் செல்ல அனுமதி கேட்டனர். விசாரித்தால், பெண் குழந்தைகளின் குரல்களில் அத்தனை வேதனை.

‘நான் இங்க ரெஸ்ட் ரூம் போகவே மாட்டேன் மிஸ்’ என்கின்றன பல குரல்கள். ‘எனக்கு பீரியட்ஸ் ஆனா ரொம்பக் கஷ்டமா இருக்குங்க மிஸ், தண்ணியே வரமாட்டேங்குது. அதான் லீவு போட்டுடறேன்’ என்றன சிலரது குரல்கள்.

இந்தக் குரல்கள் எங்கோ கிராமம் ஒன்றிலோ நகரத்தின் ஒரு பள்ளியிலோ மட்டும் ஒலிக்கும் குரல்கள் அல்ல. தமிழகத்தில் பெரும்பான்மையான பள்ளிகளில் ஒலிக்கும் குரல்கள் இவை. அதே போல இன்று நேற்று கேட்கும் குரல்களும் அல்ல. அரை நூற்றாண்டுக்கும் மேலாகத் தமிழகப் பள்ளிகளில், குறிப்பாக அரசுப் பள்ளியில் பயிலும் பெண் குழந்தைகளிடமிருந்து வரும் பரிதாபக் குரல்கள். இது ஓர் உளச் சிக்கலாகவே மாறியுள்ளது.

இந்தக் குழந்தைகளின் பிரச்னைகள் எப்போது தீர்க்கப்படும் என்று நாம் சமூகத்திடம் கேட்க வேண்டியுள்ளது. ஏற்கெனவே பாடச்சுமை, கல்வி கற்பதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் என மன அழுத்தங்களைப் பெற்றுள்ளனர் பெண் குழந்தைகள். இல்லை என்று யாராலும் மறுக்க முடியாது. அவர்களிடம் நேரடியாகப் பேசிப் பார்த்தால் உண்மை நிலையை அறிந்துகொள்ள இயலும் .

இந்நாட்களில் பெண் குழந்தைகள் கல்வி பயில வருவது எண்ணிக்கையில் கூடி இருக்கலாம். ஆனால், அவர்களுக்கான கற்றல் சூழலில் உடல் ஆரோக்கியமும் மன ஆரோக்கியமும் மிக முக்கியமான காரணிகள் என்பதை ஏன் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது அரசும் சமூகமும்?

குரலற்றவர்களின் குழந்தைகளுக்காகக் கல்வி தரப்படும் இடங்களாக அரசுப் பள்ளிகள் மட்டுமே இருக்கின்றன. ஆனால், இங்கு காலங்காலமாகத் தொடரும் கழிப்பறைப் பிரச்னைகளைத் தீர்க்கும் வழிமுறைகளை வெறும் அரசாங்க அதிகார ஆணைகளாக மட்டுமே பார்க்க இயலுகிறது. ‘அட்ஜட்ஸ்மென்ட்’ என்ற ஒற்றை வார்த்தையால் தான் மொத்தத் தமிழ்நாட்டுப் பள்ளிகளும் இயங்கி வருகின்றன.

பள்ளிகளின் கட்டமைப்பில் மிக முக்கியமானது கழிப்பறை – தண்ணீர் வசதி. எப்போது நம் குழந்தைகள் குறிப்பாகப் பெண் குழந்தைகள் நிம்மதிப் பெருமூச்சு விடப் போகிறார்கள்? பள்ளிக்கு மகிழ்ச்சியாக வரப்போகிறார்கள்?

இணையதளங்களிலும் ஊடகங்களிலும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை ஏன் அரசு பள்ளிகளில் சேர்ப்பதில்லை என்ற குரல்கள் வந்துகொண்டே இருக்கும். அதற்கு ஆசிரியர்களின் குரல்களில் இந்தக் கழிப்பறைப் பிரச்னை மிக முக்கியமான பதிலாக இருக்கிறது.

பெண்கல்வி குறித்து மிகவும் நேர்மறையாகத் தற்போது பேசப்படுகிறது. உயர்கல்வி சேரக்கூடிய பெண் குழந்தைகளுக்கு மாதம்தோறும் 1000 ரூபாய் வழங்கப்படும் திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்துப் பெண் குழந்தைகளும் உயர்கல்விக்குச் செல்லவேண்டும், இடைநிற்றல் இருக்கக் கூடாது என்ற அரசின் மேலான நோக்கத்தை நாம் பாராட்டாமல் இருக்க முடியாது.

தொடர்ந்து அரசு பள்ளி குழந்தைகளுக்கான பல்வேறு திட்டங்களை அரசு அறிவித்துக்கொண்டே உள்ளது. இவற்றை எல்லாம் பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அதே வேளையில் நாம் மேற்சொன்ன நிகழ்வுகளையும் தொடர்புபடுத்திப் பார்க்க வேண்டும். அரசு பள்ளிகள் இருபத்து ஒன்றாம் நூற்றாண்டின் தொழில்நுட்ப வளர்ச்சியால் ஸ்மார்ட் வகுப்பறைகளும் ஹை-டெக் ஆய்வகங்களும் ஆங்கிலம் பேசும் வழிமுறைகளும் நிறைந்த பள்ளிகளாக இருந்தால் போதுமா? அடிப்படை உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டாமா? 13 வயதிலேயே ‘எனக்கு யூரினரி இன்ஃபெக்ஷன் , டிரீட்மென்ட் எடுத்து வருகிறேன்’ எனக் கூறும் ஆயிரக்கணக்கான பள்ளிக் குழந்தைகளை அடையாளம் காட்ட முடியும்.

எந்த அரசு வந்தாலும் பள்ளிகள் கட்டமைப்பில் கழிப்பறை சிக்கல்கள் குறித்துச் சிறப்பான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதில்லை. பொத்தாம் பொதுவாக ஆணைகளை மட்டும் பிறப்பிக்கின்ற அரசும் கல்வித்துறையும் பெண் குழந்தைகளின் கல்வி மீதும் எதிர்கால வாழ்வு குறித்தும் நியாயமான அக்கறைகாட்ட மறுப்பது ஏன்? ஆசிரியர் சமூகமும் பெற்றோரும்கூட இதில் மிகத் தீவிரமாக மாற்றங்களுக்காக கரம் கோக்கவில்லை என்பதும் பதிவு செய்யப்பட வேண்டியதே.

கழிப்பறைகளைத் தூய்மை செய்யும் பணியாளர்களுக்கு ஊதியமும் முறையாக வழங்குவதில்லை, காரணம் வெளி மாநில ஒப்பந்ததாரர்களையே நம்பி இருக்கும் அரசு . அவர்கள் வழியாகவே பள்ளிகளுக்குத் தூய்மைப் பணியாளர்களை நியமித்து ஊதியம் வழங்கும் நடைமுறையை பல வருடங்களாகப் பின்பற்றுகிறது. இவையெல்லாம் கழிப்பறை நாற்றங்களில் மறைந்து கிடக்கும் பிரச்னைகள்.

14417 மற்றும் 1100 எண்கள் அவசர அழைப்புக்கு வந்தாலும் புகார்கள் செல்லுமா? அல்லது சென்றால் தான் தீர்க்கப்படுமா என்றே சிந்திக்கத் தோன்றுகிறது.

பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “அரசு பள்ளிகளை நவீனப்படுத்தவும் அவற்றின் தரத்தை உயர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அரசு பள்ளிகள் வறுமையின் அடையாளமல்ல, பெருமையின் அடையாளமாக மாற்றுவோம்” என்று கடந்த ஆண்டு நடந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் அறிவித்து இருந்தார்.

நவீனம் என்பது பள்ளிக் கட்டமைப்பு, கல்விக்கான திட்டங்கள் என்பதாகவே பொருள்கொள்ளப்படுகிறது. என்றுமே கழிப்பறைகளை நவீனப்படுத்தவோ நல்ல முறையில் பராமரிக்கவோ எந்த அரசும் சிந்திக்க மறுக்கிறதே ஏன்?

இந்த கழிப்பறைப் பிரச்னையும் பெண் கல்வியும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க முடியாதவையாகக் கோலோச்சுகின்றன. இந்த நிலை மாறுமா? பெண் குழந்தைகள் நூறு சதவீதம் மகிழ்ச்சியான கல்வியைப் பெறும் சூழ்நிலை உருவாகுமா? எனில் , அதுவரை அவர்களை மனத்தளவில் திடப்படுத்த வேண்டிய தேவை ஆசிரியர்களுக்குண்டு.

(தொடரும்)

படைப்பாளர்:

சு உமாமகேஸ்வரி

உமாமகேஸ்வரி , அரசுப் பள்ளியில் ஆசிரியர் , கல்வி முறை குறித்தும் வகுப்பறை செயல்பாடுகள் குறித்தும் தொடர்ந்து பேசியும் எழுதியும் வருபவர். பாடப்புத்தகம், பாடத்திட்டம் ஆகியவற்றைத் தாண்டி குழந்தைகளது மன உணர்வுகளையும் மகிழ்ச்சியையும் மதித்து, அதற்கு ஏற்புடைய சூழலை அமைத்துத் தர முயற்சி மேற்கொள்பவர்.