“ம்க்கும்… ம்க்கும்…”

அத்தையின் செருமல் வாசலில் கேட்ட மறுகணமே ஓடினான் சிபி.

“வாங்கத்தை! எப்படி இருக்கீங்க?” என்று அவர் கையிலிருந்த பையை வாங்கி வைத்தான்.

சிபி அணிந்திருந்த ஸ்லீவ்லெஸ் பனியனையும் ஷார்ட்ஸையும் அதிருப்தியுடன் பார்த்தவாறே அவன் கொடுத்த தண்ணீர் டம்ளரை மறுபேச்சின்றி வாங்கினார் அத்தை.

“ஆதி டென்னிஸ் விளையாடப் போயிருக்கா அத்தை. லஞ்சுக்கு வந்துடுவா!”

“ம்க்கும்… ம்க்கும்…”

அத்தையின் கண்கள் போன போக்கை வைத்துத் தன் தவறை உணர்ந்த சிபி சட்டென்று காலர் வைத்த டி ஷர்ட், கணுக்கால் வரை மூடிய லுங்கிக்கு மாறினான்.

சமையலறையிலிருந்து இறாலும் நண்டும் மணத்துக்கொண்டிருந்தது. அத்தை மரக்கறி உணவுதான் சாப்பிடுவார்.

என்ன சைவ சமையல் செய்யலாம் என்று அவசர அவசரமாக மண்டையைக் குடைந்தான் சிபி.

வீட்டைச் சுற்றி நோட்டம்விட்ட அத்தை, “ஒரு தலகாணி கொண்டாப்பா” என்றார்.

“ஏன் அத்தை, உள்ளே உங்க ரூம்ல ரெஸ்ட் எடுங்க.”

“இல்ல, எனக்கு இங்கேதான் வசதி” என்றபடி நடுக்கூடத்தில் தனது துப்பட்டாவை விரித்து, கால் மேல் கால் போட்டபடி மல்லாக்கப் படுத்தார். டிவியின் ரிமோட்டை எடுத்து ஒவ்வொரு சானலாகத் தாவினார்.

அத்தை வரும் முன் தனக்குப் பிடித்த நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டிருந்தான் சிபி. அமைதியாகக் கீரையையும் போனையும் தூக்கிக்கொண்டு அடுக்களைக்குள் சென்றான்.

“ஹ்ம்! இந்தக் காலத்துப் பசங்களுக்கு மாமியார் மேல மரியாதையும் கிடையாது, அக்கறை அன்பும் கிடையாது. எப்பப் பாரு போன். ஏதோ என் பொண்ணு மாதிரி நல்லவ கிடைச்சா அப்டியே அமுக்கிப்புடறது” என்று முணுமுணுத்தார் அத்தை.

வாசலில் உறுமலுடன் பைக் வந்துநின்றது.

“சிபிக் குட்டி, உனக்கு என்ன வாங்கிட்டு வந்திருக்கேன் பாரு” என்று ஆரவாரமாகக் கத்திக்கொண்டே வந்த ஆதி, அம்மாவைப் பார்த்து அமைதியானாள்.

“எப்பம்மா வந்தீங்க?”

“ம்கும்…” செருமினார் அத்தை.

அம்மாவுக்கும் மகளுக்கும் இடையே வார்த்தைகளே அதிகம் தேவைப்படாது.

கிச்சனுக்குள் சென்று சிபியிடம் கேட்டாள், “அம்மா எப்ப வந்தாங்க, என்ன சாப்பிட்டாங்க…?”

“ஹப்பாடி ஆதி, சீக்கிரம் வந்துட்டியா? ப்ளீஸ் இந்தக் காய் எல்லாம் வெட்டிக் குடுக்குறியா? அத்தை திடீர்னு வந்துட்டாங்க. நமக்காக ஏற்கெனவே சமைச்சுட்டேன்… இப்போ…”

ஆதிக்குச் சுர்ரென்று கோபம் மூண்டது. “ஆரம்பிச்சிட்டியா? அதான் ஒண்ணா இருக்க முடியலன்னு என்னைப் பிரிச்சிக் கூட்டி வந்துட்டே. எங்கம்மா எப்பவோ வராங்க என்னைப் பார்க்க. அவங்களுக்காகச் சமைக்க நீ கஷ்டப்பட வேண்டாம். நான் ஆர்டர் பண்ணிக்கிறேன்.”

சிபிக்கும் கோபம் வந்தது. “இப்போ என்ன சொல்லிட்டேன்னு ஓவரா கத்தறே? கொஞ்சம் ஹெல்ப் பண்ணுன்னு தானேடி கேட்குறேன்?”

“அறிவிருக்காடா உனக்கு? வீட்ல ஒரு வேலை செய்யவிட மாட்டாங்க என்னை. அப்பாவும் அண்ணனும்தான் எல்லாம் பார்த்துப்பாங்க. இங்கே உனக்கு நான் சேவகம் செய்றதைப் பார்த்தா அவ்ளோதான்! அதுவும் அம்மா போய் அப்பா கிட்ட சொல்லிட்டா என்னாகும் யோசிச்சிப் பாரு. எல்லாம் உன் நல்லதுக்குத்தான் சொல்றேன்” என்றாள் ஆதி.

சிபிக்குப் புரிந்தது. வியர்வையைத் துடைத்தபடி கடிகாரத்தில் ஒரு கண் வைத்தபடி வேலையில் பரபரப்பானான்.

(ஆண்கள் நலம் தொடரும்)

படைப்பாளர்

ஜெ.தீபலட்சுமி

பெண்ணிய செயற்பாட்டாளரும் எழுத்தாளருமான ஜெ.தீபலட்சுமி தொடர்ச்சியாக பெண்ணுரிமைக் குரலை எழுப்பி வருபவர். ‘இப்போதும் வசந்தி பேக்கரியில் பெண்கள் காணப்படுவதில்லை’ என்ற நூலை எழுதி இருக்கிறார். ஊடகங்களில் பெண்ணியக் கட்டுரைகள் எழுதிவருகிறார். ஆங்கிலம், தமிழ் என இரு மொழிகளிலும் சரளமாக எழுதியும், பேசியும் வருகிறார். எழுத்தாளர் ஜெயகாந்தனின் சிறுகதைகள் சிலவற்றைத் தொகுத்து ‘The Heroine and other stories’ என்ற நூலாக மொழிபெயர்த்திருக்கிறார்.