பசும்புல் தரைகள்… ஆங்காங்கே மயில்கள்… அந்தப் பரந்த நிலப்பரப்பெங்கும் புதிதாக வெளிவந்த காளான்களாகச் சிறுசிறு கட்டிடங்களின் அடித்தளங்கள். 50, 60 கட்டுமானங்கள் இருக்கலாம். சில பெரிய கட்டுமானங்களும்கூட தெரிந்தன. இளந்தேரிகள் புத்தனின் கால்களில் தாமரை மலர் தூவி, பாளியில் மந்திரம் கூறி சூழ்நிலையை ரம்யமாக்கிக்கொண்டிருக்கின்றனர். அனுராதபுரத்திலுள்ள தொலுவில் அமைந்துள்ள ‘ஜேதவான விகாரை’ என்றழைக்கப்படும் உலகின் மிகப்பெரிய செங்கல் நினைவுச் சின்னங்கள் அவை.

அனுராதபுரம் இலங்கையின் வட மத்திய மாகாணத்தில் அமைந்துள்ளது. கி.மு. 4ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 11ஆம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை பண்டைய இலங்கையின் தலைநகரமாகப் பெயரும் புகழும் பெற்று விளங்கியது. மகாவம்சத்தின்படி இந்தியாவிலிருந்து துரத்திவிடப்பட்ட விஜயன் 700 நண்பர்களுடன் இலங்கை வந்தபோது, அவனுடன் வந்த அனுராத என்பவனால் தோற்றுவிக்கப்பட்ட குடியேற்றம் என்கின்றன சிங்கள நூல்கள். அந்த அனுராத கிராமம்தான் பண்டுகாபயன் அரசனால் அனுராதபுரமாக மாறி, இலங்கையின் முதல் தலைநகரம் என்ற அந்தஸ்தைப் பெற்றது. இந்தியாவில் வீழ்த்தப்பட்ட பௌத்தம் இங்கு தழைத்தோங்கியது. 10ஆம் நூற்றாண்டில், தொடர்ச்சியாக வந்த தென்னிந்திய அரசர்களின் படையெடுப்புகளால் தலைநகரை மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு, பொலன்னலறுவைக்கு மாற்றப்படும் வரை கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டின் தலைநகராக இருந்திருக்கிறது. அதன்பின் நகரம் அனைவராலும் கைவிடப்பட்டது. கைவிடப்பட்ட நகரத்தை காடுகள் கைப்பற்றிக்கொண்டன. 19ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களின் முயற்சியால், மீண்டும் வெளியுலகு பார்த்த பின்னர் பௌத்த புனித யாத்திரை மையமாக மாறியது. 1870களில் நகரம் மறுமலர்ச்சி அடையத் தொடங்கியது. 1982 முதல் யுனெஸ்கோ அனுராதபுரத்தை புனிதநகரம் என்ற பெயரில் உலகப் பாரம்பரியத் தளமாக அங்கீகரித்துள்ளது.

அனுராதபுரம் என்பதே வரலாறுகள் நிறைந்த புராதன நகரம்தான். இந்நகரில் ஒவ்வோர் இடமும் ஒவ்வொரு பொருளும் பௌத்தர்களின் மத கலாச்சாரங்களைப் பிரதிபலித்து நிற்பதனால், புராதான மரபுரிமைச் சின்னங்களின் இடிபாடுகளால் நிரம்பிக்கிடப்பதனால், இது பௌத்தர்களின் இதயமாகவும் புனித நகரமாகவும் கருதப்படுகிறது. முன்பொரு காலத்தில் விகாரைத் தோட்டமாக இருந்திருக்க வேண்டும் என்கின்றனர் வரலாற்றாளர்கள். மலையெனக் குவிந்து கிடக்கும் வரலாற்றின் சாட்சியங்களை நாங்கள் நினைத்துச் சென்றதுபோல, ஒரு நாளில் பார்த்து முடித்துவிட முடியாது என்று புரிந்துகொண்டோம். அருகிலிருந்த அந்த முதிர்ந்த தேரியிடம், அந்தப் பெரிய வளாகத்திற்குள் முக்கியமாகப் பார்க்க வேண்டிய இடங்களைக் கேட்கிறோம். புன்னகையுடனான அவரின் பதில் மலைக்க வைக்கிறது. பழங்கால கல் பாலம், ஜெதவனாராம பட வீடு, பழங்கால மருத்துவமனை – மிஹிந்தலை, திஸ்ஸ வெவ நீர்த்தேக்கம், எத் பொக்குனா யானை குளம், இசுருமுனியா விஹாராயா, சசெருவ புத்தர் சிலை, வெசகிரிய புத்த வன மடாலயம், களுதிய போகுனா – கறுப்பு நீர் குளம் – மிஹிந்தலை, அபயகிரி ஸ்தூபம், சமாதி புத்தர்சிலை, துபாராமய தகோபா, ருவன்வெளிசாய ஸ்தூபம், ஜெதவனராமாய, ஜெய ஸ்ரீ மகாபோதி மரம், சண்டகட பஹானா நிலாக்கல், லங்காராம ஸ்தூபம், ஹத்திகுச்சி கோவில், குஜ்ஜா திச தாகோபா, குட்டம் போகுனா – இரட்டைக் குளம், பண்டைய அனுராதபுரத்தின் நட்சத்திர வாசல் என நீண்டுகொண்டே போகிறது அந்தப் பண்டைய அனுராதபுரத்தின் அதிசயங்கள்.

கேட்கும்போதே மனம் பொன்னியின் செல்வனுக்குத் தாவியது. வந்தியத்தேவன் நினைவிலாடினான். அனுராதபுரத்திற்குள் அருள்மொழிவர்மனும் ஆழ்வார்க்கடியானும் தானுமாக நுழையும்போது, இப்படித்தானே அதிசயித்துப் போனான் வந்தியத்தேவன்! இலங்கைத்தீவின் தொன்மை மிக்க அத்தலைநகரத்தைச் சற்று தூரத்திலிருந்து பார்த்தபோதே வந்தியத்தேவன் அதிசயக் கடலில் மூழ்கிப் பேசும் சக்தியை இழந்தான். அவனுடைய கற்பனைகளையெல்லாம் அந்த மாநகரம் விஞ்சியதாயிருந்தது. “அம்மம்மா! இதன் மதில்சுவர்தான் எத்தனை பெரியது? எப்படி இருபுறமும் நீண்டு கொண்டே செல்கிறது? எந்த இடத்தில் அச்சுவர் வளைந்து திரும்புகிறது என்று தெரிந்துகொள்ளவும் முடியவில்லையே? மதில் சுவருக்கு உள்ளே எத்தனை எத்தனை கோபுரங்களும் ஸ்தூபிகளும் மண்டபச் சிகரங்களும் தலைதூக்கிக் கம்பீரமாக நிற்கின்றன! இவ்வளவும் ஒரே நகரத்துக்குள்ளே, ஒரே மதில் சுவருக்குள்ளே அடங்கியிருக்க முடியுமா? காஞ்சி, பழையாறை, தஞ்சை முதலிய நகரங்களெல்லாம் இந்த மாநகரத்தின் முன்னே எம்மாத்திரம்?” – அந்த வளாகத்தைப் பார்த்து, வியந்து, வந்தியத்தேவன் போலவே நானும் இப்போது பேசும் சக்தியை இழந்திருந்தேன்.


அனுராதபுரம் வீதிகளில் செல்லும்போது, மாட மாளிகைகளும் விஹாரங்களும் இடிந்து கிடப்பதை வந்தியத்தேவன் காண்பான். இடிந்து போன கட்டிடங்கள் புதுப்பிக்கப்பட்டிருப்பதையும் பார்ப்பான். அப்படித்தான், இடிபாடுகளாகவும் திருத்தம் செய்யப்பட்டதாகவும் இப்போதும் கலந்து காணப்படுகிறது அந்த வளாகம். புத்தர் சிலைகள், சிலாரூபம் இருக்கும் உயர்ந்த மாடங்கள், கல்வெட்டுகள், நீர் தடாகங்கள், சிதைவுற்ற கட்டிடங்கள், தூண்கள், 25 குழிகள் கொண்ட கல்பாத்திரம் என காலம் மறைத்து வைத்த அதிசயங்கள், அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரமாய் தங்களை வெளிப்படுத்தியிருக்கின்றன. பல்லாங்குழி போன்ற அந்த கல்பாத்திரம் கண்ணைக் கவர்ந்தது. இதுபோன்ற கல்பாத்திரங்களில் மங்கலப் பொருள்கள் வைத்து மூடி, அதன் மீது சிலையைப் பிரதிஷ்டை செய்வது பௌத்த வழக்கமாம். இங்கு கண்டெடுக்கப்பட்ட ஐந்தரை அடி உயர புத்தர் சிலைதான் அனுராதபுரத்தில் கிடைத்தவற்றிலேயே அழகானதென்று சொல்கிறார்கள். மூல விக்கிரகத்தின் அடியிலிருந்து எடுக்கப்பட்ட வெண்கலச்சிலையொன்று கொழும்பு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளதாம். ஒவ்வோர் இடிபாட்டு கட்டுமானத்திற்கும் பல பல கதைகள் சொல்கிறார்கள். குஜ்ஜ திஸ்ஸ என்ற தூபி பற்றிக் கூறும்போது, பொ.மு.119-109 காலத்தில் சத்தாதிஸ்ஸன் என்ற மன்னன் ஆட்சிக்காலத்தில், குஜ்ஜ திஸ்ஸன் என்ற சக்திவாய்ந்த தேரோ ஆகாய மார்க்கமாக இங்கே வந்திறங்கினார் என்ற கதையும், புத்தர் தன் இலங்கை வருகையின் போது இந்த இடத்தில் தன் பாதம் பதித்தார் என்ற கதையும் சொல்லப்பட்டாலும், இரண்டும் தவிர்த்த மற்றொரு கதை ஆர்வமூட்டுகிறது. துட்டகாமினியோடு போரிட்டு மாண்ட தமிழ் மன்னன் எல்லாளனுக்காக துட்டகாமினி கட்டிய ஸ்தூபியாகவும் யூகிக்கப்படுகிறது. இதற்கு மாற்றுக் கருத்தும் உண்டென்றாலும் தன்னால் கொல்லப்பட்ட மன்னனுக்காக ஸ்தூபி எழுப்பிய மன்னனும் இங்கு இருந்திருக்கிறான் என்பதே அக்கால மனிதர்களின் மாண்பை பறைசாற்றுகிறது. இது போன்று, ஒவ்வொரு கட்டுமானத்திற்கும் ஒரு கதை வாய் வழியாகவோ அறிஞர்களின் தர்க்கரீதியாகவோ பரவி வந்திருக்கிறது.

அந்த இடிபாடுகளுக்குள்ளே சில மண்டபங்களை என் கண்கள் தேடின. இதுவாக இருக்குமோ… இல்லையில்லை அதுவாக இருக்குமோ… சிதைந்து கிடந்த தூண்களைத் தடவிப் பார்க்கிறேன், அரைகுறையாக நிற்கும் கட்டுமானங்களைக் கண்களால் துலாவுகிறேன். அருகிலிருந்த தோழி எதைத் தேடுகிறாய் எனக் கேட்டார். ஒன்றுமில்லை என்பதாகப் புன்னகைத்து மௌனமாக நகர்ந்தேன். கல்கியின் வரிகள் மனதிற்குள் வரிவரியாக விரிகிறது. பொன்னியின் செல்வன் நாவலில், புத்த பிக்குகள் அருள்மொழிவர்மனை நிலவொளியில் சுரங்கப்பாதை வழியாக வளைந்து வளைந்து செல்லும் குறுகலான பாதையில் அழைத்துச் செல்கிறார்கள். உடன் வந்தியத்தேவனும் ஆழ்வார்க்கடியானும் இணையாக ஒடுகிறார்கள். இனி கல்கியின் வரிகளில், ‘பிக்ஷூ கையில் பிடித்துவந்த தீபத்தில் மங்கலாகத் தெரிகிறது பளிங்குக் கல்லினால் ஆன தூண்கள். நாற்புறமும் புத்தர் சிலைகள் தரிசனம் தந்தன. நிற்கும் புத்தர்கள், படுத்திருக்கும் புத்தர்கள், போத நிலையில் அமர்ந்திருக்கும் புத்தர்கள், ஆசிர்வதிக்கும் புத்தர்கள், பிரார்த்தனை செய்யும் புத்தர்கள் இப்படிப் பல புத்தர் சிலைகள். மீண்டும் குறுகிய பாதை. இன்னொரு மண்டபம், இதன் தூண்கள் தாமிரத் தகடுகளால் ஆனவை. மேற்கூரையிலும் செப்புத் தகடுகள். அவற்றில் பலவகை சித்திர வேலைப்பாடுகள். நாலாபுறமும் விதவிதமான புத்தர் சிலைகள். இம்மாதிரியே மஞ்சள் நிற மரத்தூண்களை உடைய மண்டபம், யானைத் தந்தங்களால் இழைத்த தூண்களைக் கொண்ட மண்டபம். கடைசியாகக் கருங்கல் மண்டபம். புத்த பிக்ஷூக்கள் கூடியிருக்கிறார்கள். மத்தியில் மகாதேரோ. எதிரே நவரத்தின கசிதமான தங்கச் சிங்காதனம்.’ இப்படி அழகான வர்ணனைகளுடன் செல்லும் கதையில், அந்தக் கல் மண்டபத்தில்தான் அந்த அற்புதம் நடக்கும். இலங்கை சிங்காதனத்தில் அமர அருள்மொழிவர்மனுக்கு மகாதேரா கோரிக்கை விடுத்ததும், அதனை அருள்மொழிவர்மன் மறுத்ததுமான வரலாற்று நிகழ்வுகள் கல்கியின் எழுத்துகளில் உயிர்பெற்றிருக்கும். அந்த மண்டபங்களையும் தூண்களையும்தாம் என் கண்களும் மனமும் இத்தனை நேரமாக அந்த இடிபாடுகளுக்கிடையில் தேடிக்கொண்டிருந்தன.

அடுத்ததாக மகாபோதி இருக்கும் வளாகத்திற்குள் நுழைந்தோம். அப்படி ஓர் ஆழ்ந்த அமைதி நிலவியது. அடர்ந்த கிளை பரப்பி, பரந்து விரிந்திருக்கிறது அந்த விருட்சம். பொ.மு.250இல் புத்தரின் கொள்கைகளைப் பரப்பும் உன்னதப் பணிக்காக அசோகரின் மகன் மகா தேரா மஹிந்தன் இலங்கை வருகிறான். அவனது வழிகாட்டலில்தான் பௌத்தம் தழுவுகிறான் தேவனாம்ப்ய திஸ்ஸன் (தேவ நம்பிய தீசன்) என்ற மன்னன். அடுத்து அசோகர் மகள் சங்கமித்திரை போதி மரக்கிளையோடும் சகல பரிவாரங்களோடும் மரத்துக்கு நீர் ஊற்றும் நீர் மகளிர் உள்பட இந்தியாவிலிருந்து இலங்கைக்குள் நுழைந்தாள். அன்று அவள் நட்டு வைத்த போதிமரக்கன்று இன்றும் பெருவிருட்சமாக உயிர்ப்புடன் பரவிக்கிடக்கிறது. புத்த கயாவின் போதி மரத்துக்குத் தீமை நேர்ந்த போதெல்லாம், இங்கிருந்துதான் கிளை கொண்டு செல்லப்பட்டது என்கிறார்கள். பொ.மு.249இல் நடப்பட்ட கன்று தொடர்ந்து அரசாலும் மக்களாலும் பாதுகாக்கப்பட்டு வரும் அதிசயத்தைக் கண்டு ரசித்தோம். பழமை மாறா சடங்குகள் அனுதினமும் கடைப்பிடிக்கப்படுகிறது. அந்தப் பெருமரத்தின் முன்னே பெருந்திரள் கூட்டம்தான், ஆனால் இரைச்சல் இல்லை, தள்ளுமுள்ளு இல்லை, மரத்தடி நிழலில் அமர்ந்து அமைதியாகத் தமக்குள் புத்தரைத் தேடிக்கொண்டிருக்கின்றனர் ஒவ்வொருவரும். பீகாரின் புத்தகயாவுக்குள் நுழையும்போதெல்லாம் நான் அனுபவித்து மகிழும் அதே அமைதி இப்போதும் மனதினுள் பரவுவதை உணர்ந்தேன்.

அங்குள்ள பௌத்த விகாரைகள், புனித வெள்ளரசு மரம், புராதனக் கட்டிடங்களைக் கொண்டு, சிங்கள இனத்தவர்கள் தங்கள் வரலாற்று நகரமாகவும் தங்களுக்கு மட்டுமே உரித்தான பௌத்த புண்ணிய பூமியாகவும் சொந்தம் கொண்டாடிவரும் நிலையில் அனுராதபுரம் தமிழர்களின் வரலாற்றுத் தாயகம் என்றும் சிங்களப்பொய்கள் கட்டுடைக்கப்பட வேண்டும் என்றும் குரல்கள் எழுந்த வண்ணமுள்ளன.

“அனுராதபுரத்தின் வரலாறு பௌத்த மதத்தின் இலங்கை வருகையுடன்தான் தொடர்புபடுத்தப்படுகிறது. ஆனால், அதற்கும் முன்னதாகப் பல அரசர்கள் அந்த நகரத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்திருக்கின்றனர். அவர்கள் யாரும் பௌத்தர்கள் இல்லை. மலையையும் கல்லையும் (சிவலிங்கம்) காட்டு மரங்களையும் வழிபட்டவர்கள்தாம். மகிந்த தேரரின் வருகைக்குப் பின்னரே தேவ நம்பிய தீசன் பௌத்த மதத்தைத் தழுவியதாகவும் மகாபோதி விகாரையும் மகா சங்கமும் அமைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இலங்கை வரலாற்றின் முக்கியத் திருப்பம் இது என்பதில் சந்தேகமில்லை. அதுவரை சைவ கடவுளின் சொத்தாக இருந்த அரசும் இறைமையும் மகா சங்கத்தின் ஆன்மிகச் சொத்தாக மாற்றம் பெறுகிறது. யாழ்ப்பாண ராச்சிய ஆய்வுடன் திருப்திகொள்ளாமல், அனுராதபுரத்தில் இருந்தும் தமிழர்களின் வரலாற்றாகத் தேட முயற்சிக்க வேண்டும். ஏனெனில் அங்கு மதங்களுக்கு இடையில்தான் சண்டை நடந்திருக்கிறது, இனங்களுக்கிடையில் அல்ல, அங்கு வாழ்ந்த மக்கள் தமிழர்கள்தாம். அவர்கள் பேசிய மொழி தமிழ்தான், பௌத்தர்கள் என்பதனால் மட்டும் அவர்கள் சிங்களவர்கள் ஆகி விடமாட்டார்கள். இது பற்றிய நீண்ட விரிவான ஆய்வுகள் செய்யப்பட வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயம்” என்கிறார் வரலாற்று ஆர்வலர் சிவா சின்னப்பொடி தனது கட்டுரையில்.

(தொடரும்)

படைப்பாளர்:

ரமாதேவி ரத்தினசாமி

எழுத்தாளர், அரசுப்பள்ளி ஆசிரியர். பணிக்கென பல விருதுகள் வென்றவர். இவர் எழுதி வெளிவந்துள்ள ‘கனவுகள் மெய்ப்படட்டும்’ கட்டுரைத் தொகுப்பு பரவலாக கவனம் பெற்றுள்ளது. 2014, 2015ம் ஆண்டுகளில் ஐ நா சபையில் ஆசிரியர் பேச்சாளராகக் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார். அடுப்பங்கரை டூ ஐநா தொடரில் அவரது ஐ நா அனுபவங்களை நகைச்சுவையுடன் விவரித்திருக்கிறார். இந்தத் தொடர் ஹெர் ஸ்டோரீஸ் வெளியீடாகப் புத்தகமாக வெளிவந்து பாராட்டுகளைப் பெற்று வருகிறது. இலங்கை இவருக்கு இதில் இரண்டாவது தொடர்.