ஒவ்வொரு பெண்ணின் மாதவிடாய் சுற்றும் வெவ்வேறானது. பொதுவாக இருபத்தியொரு நாளில் இருந்து முப்பது நாள்கள் வரை இந்தச் சுற்று வேறுபடும். மாதவிடாய் காலம்கூட இரண்டு நாளில் இருந்து ஏழு நாள்கள் வரை பெண்ணுக்குப் பெண் மாறுபடும். மாதவிடாய்க்குச் சில நாள்கள் முன்பாகவே தலைவலி ஆரம்பமாகிவிடும். ஒரு சிலருக்குச் சாதாரண மாதாந்திர நிகழ்வாக இருக்கும். சிலருக்கோ வயிற்று வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு அல்லது மலச்சிக்கல், மன அழுத்தம், எரிச்சல், கவலை என உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் அதிக பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. மாதவிடாய் முன் அறிகுறிகள் (PMS – premenstrual syndrome) எனப்படும் இத்தகைய பாதிப்புகளை நான்கில் மூன்று பெண்கள் சந்திப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

உடல் ரீதியான பாதிப்பையாவது சுலபமாக உணர முடியும். மனம் சார்ந்த பாதிப்புகளைப் பெரும்பாலான பெண்கள் மாதவிடாயுடன் தொடர்புபடுத்தி புரிந்துகொள்வதில்லை. எப்போதும் இருக்கும் அதே பிரச்னைகள் இருந்தாலும் மாதாவிடாய் காலத்திற்குச் சில நாள்கள் முன்பு அதே பழைய பிரச்னைகளை நினைத்து அதிக கவலை அடைவதையும் கோவப்படுவதையும் அழுவதையும் PMS என்று பல பெண்கள் உணர்வதில்லை. பத்து சதவீத பெண்கள் செத்தே தொலையலாம் என அதீதமாக எண்ணும்படி இருக்கிறது இந்த மன அழுத்த அறிகுறிகள்.

விட்டமின் மாத்திரைகள், ஓய்வு, உடற்பயிற்சி, வலிநிவாரணிகள் போன்றவை சற்றே நிவாரணம் கொடுத்தாலும் நிரந்தரத் தீர்வு என்பது கிடையாது. சில குடும்பங்கள் தற்காலிக நிவாரணம் தரும் மாத்திரைகளையும் தங்கள் வீட்டுப் பெண்களுக்கு அனுமதிப்பதில்லை. ஆனால் கோயில், குடும்பவிழா போன்ற காரணங்களுக்காக மாதவிடாயைத் தள்ளிப்பாேட மாத்திரைகள் போடச் சொல்வார்கள், இந்த செலக்ட்டிவ் மரபுக்காவலர்கள். சடங்குகளை மறந்துவிட்டதாகக் குற்றம் சாட்டப்படும் படித்த பெண்கள் இருக்கும் நகரத்து வீடுகளில்கூட, மாதவிடாய் காலத்தில் பெண்கள் தனியாகத் தரையில் வீட்டு மூலையில் படுக்கிறார்கள். காலையில் எழுந்ததும் இரவு அவர்கள் உபயோகித்த படுக்கை விரிப்புகளை உடல் உபாதைகளுடன் துவைத்து வைக்கும் அவலம் இன்னும் இருக்கிறது. கிராமப்புறங்களில் சுகாதாரம், ஊட்டச்சத்துக் குறைபாடு போன்ற மேலதிக சங்கடங்கள் உள்ளன.

இந்நிலையில்தான் மாதவிடாய் செயலிகள் நம் உடல்நிலையையும் மனநிலையையும் நாம் புரிந்துகொள்ளும் முயற்சியில் உதவுகின்றன. எப்போது என்ன நடக்கும் என்பதன் பேட்டர்னைப் புரிந்துகொள்வதன் மூலம் ஓரளவிற்கு மாதவிடாய் கால சிரமங்களை எளிதாக்கலாம்.

ஈவ் செயலியில் மாதவிடாய் இருக்கும் நாட்கள் மட்டுமல்லாது மாதவிடாய் இல்லாத நேரத்திலும் உடல் மற்றும் மன நிலை மாற்றம் குறித்த தரவுகளை பதிவுசெய்துகொள்ள முடியும். இந்தத் தினசரி தகவல்கள் மூலம் கிடைக்கும் தரவுகளைக் கொண்டு உடல் மற்றும் மனநிலை குறித்த பேட்டர்னை அறியலாம், பெண்கள் தன்னுடலைப் புரிந்துகொள்ள இது உதவியாக இருக்கும்

ஃப்ளோ செயலி அதிக அளவிலான மாதவிடாய் அறிகுறிகளைப் பதிவுசெய்யவும் தரவுகளைச் சரிபார்க்கவும் உதவுகிறது. ஒரு நபரின் மாதவிடாய் கால தரவுகளை வைத்து அவரது மாதவிடாய் பேட்டர்னை கணிக்க உதவுகிறது. இதன் மூலம் எப்போது கருமுட்டை வெளியேறும், உடலுறவுக்குத் தகுந்த காலம் எது என்பன போன்ற தகவல்களை அறியலாம்.

க்ளோ செயலியைப் பொருத்தமட்டில் நாற்பதுக்கும் அதிகமான வெவ்வேறு அறிகுறிகளைப் பதிவுசெய்ய முடியும். உடல்ரீதியான அறிகுறிகள் மட்டுமின்றி மனரீதியான அறிகுறிகளையும் உடலுறவு குறித்த தகவல்களையும் பதிவுசெய்யும் வாய்ப்பை உள்ளடக்கியுள்ளது இந்தச் செயலி. குறிப்பாகக் குழந்தை பெற்றுக்கொள்வது தொடர்பான யோசனையில் இருப்பவர்களுக்கு இந்த இரு செயலிகளும் மிக உபயோகமானது.

விளையாட்டு வீராங்கனைகள் அல்லது உடலளவில் ஆக்டிவாக இருக்கும் பெண்களுக்கு ஏற்ற செயலி ஃபிட்ர் வுமன் (fitrwoman app). உடல் உழைப்பு அதிகம் தேவைப்படும் பணியில் உள்ள பெண்கள் தங்கள் செயல்பாடுகளை இந்தச் செயலியில் பதிவுசெய்துகொள்ள முடியும். உடல் செயல்பாடுகளுக்குத் தகுந்தவாறு ஊட்டச்சத்துள்ள உணவு பரிந்துரைகளையும் கொடுக்கும் இந்தச் செயலி.

மேஜிக் கேர்ள் என்ற செயலி பதின்ம வயதுப் பெண்களுக்கானது. மாதவிடாய் தகவல்களைப் பதிவுசெய்ய உதவுவது மட்டுமல்லாமல், பாலியல் கல்வி குறித்த செய்திகளையும் வழங்குகிறது இச்செயலி. சில செயலிகள் தங்கள் இணையர்களும் குறிப்பிட்ட தகவல்களைப் பார்க்கும் வகையில் வடிவமைக்கபட்டுள்ளன. இத்தகைய செயலிகளைப் பயன்படுத்தும் முன் ஏற்கெனவே உங்கள் வட்டத்தில் இதைப் பயன்படுத்தும் உறவினர்களிடமும் நண்பர்களிடமும் கருத்துகளைப் பெற்றுக்கொள்வதும் நல்லது.

துல்லியமாக இல்லாவிட்டாலும் ஓரளவிற்கு எப்போது மாதவிடாய் வரும், எந்த நாளில் மன அழுத்தம், வயிறு வலி உள்ளிட்ட உபாதைகள் அதிகம் என்பது போன்ற தகவல் நம் கையில் இருப்பது நாம் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட உதவும். இத்தகைய நாள்களில் அதிக வேலைப்பளுவைத் தவிர்க்கலாம். எளிய ஆரோக்கிய உணவுகளை மட்டும் சாப்பிடலாம். தியானம், மகிழ்ச்சியான சினிமா, பிடித்த புத்தகம், பாடல்கள் என மனதின் சமநிலையை உறுதிசெய்ய முயலலாம்.

குழந்தை பெற்றுக்கொள்ளும் எண்ணம் இருந்தாலோ அல்லது பெற்றுக்கொள்ள வேண்டாம் என நினைத்தாலோ இந்தச் செயலிகள் மூலம் கருமுட்டையின் நிலையை அறிந்து அதற்கேற்ப செயல்படலாம்.

ஒன்றுமில்லாத விஷயத்துக்குத் தேவைக்கதிமாகக் கோபப்படுவதோ அழுவதோ PMS இன் முக்கியமான பிரச்னையில் ஒன்று. மூட் ஸ்விங்ஸ் எனப்படும் கணிக்க முடியாதபடி அடிக்கடி நிகழும் அதீத மனமாற்றம் இது. PMS காலத்தில் இருக்கிறோம் என்று புரிந்தால் விவாதங்களைத் தள்ளிவைத்து, நட்பையும் குடும்ப உறவுகளையும் தேவையின்றி பகைத்துக்கொள்வதைச் சற்றே தவிர்க்க முடியும்.

இதெல்லாம் மாதவிடாய் செயலிகளைப் பயன்படுத்துவதில் உள்ள சாதகங்கள். பாதகம் என்று பார்த்தால் பதியப்படும் தகவல்கள் பாதுகாப்பாக இல்லை என்பதுதான். மருத்துவத் துறை சார்ந்த நிறுவனங்கள் முதல் நாக்கின் நிறுவனங்கள் வரை மூன்றாம் தரப்பிற்கு இத்தரவுகள் பகிரப்படுகின்றன. அமெரிக்காவில் கருக்கலைப்புக்கு எதிரான தீர்ப்பு வந்தபோது பெண்கள் அதிக அளவில் இச்செயலிகளைத் தங்கள் திறன்பேசியிலிருந்து அழித்தார்கள். காலதாமதமாக வரும் மாதவிடாயைக்கூடச் செயலியின் தரவுகளைக்கொண்டு கருக்கலைப்பு என நிரூபிக்க முடிந்தால் சிறைத்தண்டனை கிடைக்கும் என்ற அச்ச உணர்வே காரணம்.

இதற்குப் பின்னரே செயலி நிறுவனங்கள் அடையாளமற்ற வகையில் தகவல்களைப் பதிவுசெய்துகொள்ளும் வாய்ப்புகளைத் தங்கள் செயலிகளில் உருவாக்கினர். ஃபேஸ்புக்கிலோ வலைத்தளங்களிலோ உலாவும்போது கருத்தடை சாதனங்கள், சானிடரி பேட்கள் விளம்பரங்கள் வரக்கூடும். அதைத் தாண்டி இந்தத் தரவுகளை வைத்து என்ன செய்துவிடப் போகிறார்கள் என நினைப்போரும் உண்டு. தாெழில்நுட்பத்தையும் செயலிகளையும் பயன்படுத்துவது அவரவர் புரிதல் மற்றும் மனநிலையைச் சார்ந்தது. ஆனால், செயலிகள் வேண்டாம் என்றாலும்கூட நோட்டுப்புத்தகத்திலாவது இத்தகவல்களை மாதம்தோறும் குறித்து வைப்பது அவசியம். தாெழில்நுட்ப உதவி அவசியமா என்பதில் மாற்றுக்கருத்து இருக்கலாம். பெண் தன்னுடலைப் புரிந்துகொள்வது தன்னம்பிக்கையை அதிகரிக்கும் என்பது முற்றிலும் உண்மை.

(தொடரும்)

படைப்பாளர்:

இரா. கோகிலா. இளநிலை கணிப்பொறி அறிவியல் படித்தவர். சிறுவயதில் இருந்தே வாசிப்பில் ஆர்வம் உண்டு. புனைவுகளில் ஆரம்பித்த ஆர்வம் தற்போது பெரும்பாலும் பெண்ணியம், சமூகம், வரலாறு சார்ந்த அபுனைவு வகை புத்தகங்களின் பக்கம் திரும்பியிருக்கிறது. பயணம் செய்வது பிடிக்கும்.  கல்விசார்ந்த அரசுசாரா இயக்கங்களில் தன்னார்வலராகச் செயல்படுகிறார்.