பல்வேறு தடைகளைக் கடந்து பொன்னியின் செல்வரான அருள்மொழிவர்மனை வந்தியத்தேவன் சந்திக்கும் இடம்தான் தம்புளா. அங்குள்ள வனப்பகுதியில் யானைப்பாகன் வடிவில் அருள்மொழிவர்மன் இருந்தபோதுதான், அவரைக் கண்டு குந்தவை கொடுத்தனுப்பிய ஓலையை வந்தியத்தேவன் வழங்குவார். 2000 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையை ஆண்ட வலஹம்பாஹூ என்ற மன்னன், தமிழர் படை இலங்கைக்குப் படையெடுத்துச் சென்றபோது தலைநகரிலிருந்து தப்பி இந்தத் தம்புளா குகைகளில் தஞ்சம் அடைய, அங்கிருந்த புத்தபிக்கு இவருக்குப் பாதுகாப்பு அளித்து காப்பாற்றியிருக்கிறார். பின்னர் மீண்டும் அனுராதாபுரத்தைக் கைப்பற்றிய மன்னன் முன்பு தனக்கு அடைக்கலம் அளித்து உயிரைக் காப்பாற்றிய புத்த பிக்குவிற்கு நன்றி செலுத்தும் விதமாக, தம்புளா குகையில் புத்தருக்குக் கோயில் எடுத்ததாகப் பொன்னியின் செல்வனில் கல்கி குறிப்பிடுகிறார். இதையேதான் வரலாற்று நூல்களும் சொல்கின்றன. இந்த வரலாறு நடைபெற்ற காலத்தில் தம்புளா பகுதி சோழர்களின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், தம்புளாவில் நடைபெற்ற புத்த வழிபாடுகளுக்கும் திருவிழாக்களுக்கும் எந்த இடையூறும் வராமல் அருள்மொழிவர்மன் பார்த்துக்கொண்டதை உயரிய குணமாக வர்ணிக்கிறார் கல்கி.

2012 ஜனவரி 8 – வாழ்வில் திகிலை ஏற்படுத்திய, உயிர்பயத்தை நேருக்கு நேர் சந்தித்த நாள். ஜனவரி 4, 5, 6 தேதிகளில் சார்க் நாடுகள் அளவிலான ஒரு திட்டமிடல் பணிமனைப் பயிற்சி இலங்கையின் நிகம்புவில். எனது முதல் இலங்கைப் பயணம் என்பதால் மிக சந்தோஷமாகச் சென்றிருந்தேன். பயிற்சி முடிந்து சக தோழிகள் அவரவர் நாடு நோக்கிச் சென்றுவிட, எனக்கு மட்டும் மறுநாள் விமானம். அதனால், தனியொருத்தியாகச் சுற்றிப்பார்க்கக் கிளம்பிவிட்டேன். யுத்தம் முடிந்து 2 ஆண்டுகள் கழிந்திருந்த போதிலும் ஓர் இறுக்கமான சூழல் நாடெங்கும் நிலவிக்கொண்டிருந்த நேரம் அது. தம்புளா பார்க்கச் செல்லலாம் என முடிவானதும், ஒரு சிங்கள சகோதரன் ஓட்டுநராக வர, பயணத்தை துவக்கிவிட்டேன். நான் தங்கியிருந்த நிகம்புவிலிருந்து தம்புளா செல்லும் வழியெங்கும் ராணுவ முகாம்களும் சோதனைச் சாவடிகளும் தொடர்ந்து எதிர்ப்பட்டு, பயமுறுத்தின. பயணம் நீண்டு கொண்டே ஊரைவிட்டு விலகி, விவசாய நிலங்களைக் கடந்து, காட்டுப் பகுதிகளின் ஊடாக வெகுதொலைவில் செல்லச்செல்ல மனதில் கலக்கமும் திரும்பி வந்துவிடுவேனா என்ற அச்சமுமாக இருந்தது. “பயணம் வேண்டாம், திரும்பிச் சென்றுவிடலாம்” என நான் மீண்டும் மீண்டும் கெஞ்சுவதை அவன் கேட்கிறானில்லை. “இல்ல மேடம், அது ரொம்ப நல்லா இருக்கும்” என்பதை உடைந்த தமிழில் கூறிக்கொண்டே வேகத்தை அதிகரிக்க பயத்தில் வேர்க்கத் தொடங்கியிருந்தது. பல கட்ட ராணுவச் சோதனைகளைக் கடக்கும்போதெல்லாம் நெஞ்சை அடைத்து குரல் கம்மியது. எனது அடையாள அட்டைகளைச் சோதித்த ஒவ்வொரு ராணுவ வீரரின் முகத்திலும் என்மீதான சந்தேகம் அப்பட்டமாகத் தெரிந்ததை உணரமுடிந்தது. அதுவரை பத்திரிகைகளில் படித்திருந்த இலங்கை ராணுவ நடவடிக்கைகள் குறித்த எதிர்மறைச் செய்திகள் அத்தனையும் ஒட்டு மொத்தமாய் நினைவுக்கு வந்து தொலைத்தது. அந்தக் கலக்கமான மணித்துளிகளை… அவை ஏற்படுத்திய உணர்வுகளை அப்படியே இங்கு வடித்துவிட முடியாததாக இருக்கிறது. ஆனால், அத்தனையும் கடந்து உலகின் மிகவும் புகழ்பெற்ற அந்தக் குகை வளாகத்திற்குள் நுழையும்போது அதுவரை இருந்த உயிர்பயம் குறைந்து மனதில் ஓர் அமைதி பரவுவதை உணரமுடிந்தது.

கொழும்பில் இருந்து 148 கிலோ மீட்டர் தொலைவில் மாத்தளை மாவட்டத்தில் இருக்கிறது தம்புளா. 160 மீட்டர் உயரமுள்ள சிறு சிறு குன்றுகள் பரவலாகக் காணப்படுகிறன். அந்தக் குன்றுகளின் மீது தொடர்ச்சியான 5 குகைகள் கொண்ட ஒரு தொகுதியாக இருக்கிறது அந்தக் குடைவரைக் கோயில். உலகின் பெருமதிப்பை அக்குகைகள் பெற்றுள்ளதற்கு, அங்கு பெருந்தொகையாகக் காணப்படும் சிற்பங்களும் ஓவியங்களுமே காரணமாக இருக்க முடியும். இவ்விடம் முன்பு ஜம்புகோள என அழைக்கப்பட்டதாக மகாவம்சம் கூறுகிறது. அந்த ஜம்புகோள பட்டினத்தில்தான் சங்கமித்திரை மகாபோதிமரக் கன்றுடன் (வெள்ளரசு) இறங்கியதாகச் சொல்லப்படுகிறது. நிஸ்ஸங்க மல்லன் காலத்தில் சுவர்ணகிரிக் குகைகள் (தங்க மலைக் குகைகள்) எனவும் அழைக்கப்பட்டிருக்கிறது. தேவராஜக் குகை, மகாராஜ குகை, மஹ அலுத் விகாரை, பச்சிம விகாரை, இரண்டாவது புது விகாரை என்பனவாக இருக்கிறது ஐந்து குகைத் தொகுதிகளின் பெயர்களும். தம்புள்ளா பொற்கோயில் என இப்போது அழைக்கப்படும் அந்த வெளிப்பகுதி 2100 சதுரமீட்டர் அளவிற்கு விரிந்துள்ளது. இலங்கையிலுள்ள குகைக் கோயில்களுள் இதுவே மிகப்பெரியது. 10 ஆம், 11 ஆம் நூற்றாண்டுகளில் இப்பகுதி சோழர்களின் ஆதிக்கத்தின் கீழ் இருந்திருக்கிறது. ஓவியங்களும், சிலைகளுமாகக் கண்ணையும் மனதையும் கவர்கின்றன. புத்தரின் வாழ்க்கை வரலாற்று நிகழ்வுகள் அத்தனையும் அழகு ஓவியங்களாக நம் கண் முன்னே விரிகின்றன. புத்தர் தொடர்பான ஓவியங்களைத் தவிர்த்துப் பார்த்தால், விஜயனின் வருகை, மஹிந்தர் வருகை, ஸ்ரீ மகா போதியை நடுதல் போன்ற ஓவியங்கள் மிகச் சிறப்பாக இருக்கின்றன. புத்த பெருமானின் பல்வேறு நிலைகளைக் காட்டும் 153 புத்தர் சிலைகள் உள்ளதாகக் கூறினார் அங்கிருந்த புத்தபிக்கு ஒருவர். இலங்கை மன்னர்களின் 3 சிலைகளும் உள்ளன. அத்தோடு விஷ்ணுவிற்கும் விநாயகருக்கும்கூட சிலைகள் உள்ளன. கி.மு. 7 முதல் 3ஆம் நூற்றாண்டு வரை இப்பகுதிகளில் குடியிருப்புகள் இருந்திருக்கலாம் எனவும், ஓவியங்களும் சிலைகளும் 1ஆம் நூற்றாண்டில் வரையப்பட்டிருக்கலாம் எனவும் யூகிக்கப்படுகிறது. கி.பி. 12ஆம் நூற்றாண்டில் நிஸங்கமல்ல மன்னனால் இந்த இடம் புதுப்பிக்கப்பட்டு, 5 குகைகளும் இவரது காலப்பகுதியிலேயே உருவாக்கப்பட்டுள்ளது. 1991இல் உலக பாரம்பரிய தொல்லியல் சின்னமாக இந்தக் குகை கோயிலை யுனெஸ்கோ அங்கீகரித்துள்ளது.

கி.மு. 3ஆம் நூற்றாண்டிற்குரிய பிராஹ்மி எழுத்துகள் கொண்ட கல்வெட்டுகள் இங்கு நீண்ட காலமாக வாழ்ந்த மனிதர்களின் சான்றாக எஞ்சியுள்ளன. 2001ஆம் ஆண்டில் 100 அடி உயரமான தங்கமுலாம் பூசப்பட்ட புத்தரின் சிலை வைக்கப்பட்டு, சுற்றுலாப் பயணிகளை ஈர்த்துக்கொண்டிருக்கிறது. கட்டாயம் பார்த்தே ஆக வேண்டும் என நாம் நினைக்கும் பட்டியலில் சேர்க்கும் அளவிற்கான அற்புதமான இடம்தான் இது.

(தொடரும்)

படைப்பாளர்:

ரமாதேவி ரத்தினசாமி

எழுத்தாளர், அரசுப்பள்ளி ஆசிரியர். பணிக்கென பல விருதுகள் வென்றவர். இவர் எழுதி வெளிவந்துள்ள ‘கனவுகள் மெய்ப்படட்டும்’ கட்டுரைத் தொகுப்பு பரவலாக கவனம் பெற்றுள்ளது. 2014, 2015ம் ஆண்டுகளில் ஐ நா சபையில் ஆசிரியர் பேச்சாளராகக் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார். அடுப்பங்கரை டூ ஐநா தொடரில் அவரது ஐ நா அனுபவங்களை நகைச்சுவையுடன் விவரித்திருக்கிறார். இந்தத் தொடர் ஹெர் ஸ்டோரீஸ் வெளியீடாகப் புத்தகமாக வெளிவந்து பாராட்டுகளைப் பெற்று வருகிறது. இலங்கை இவருக்கு இதில் இரண்டாவது தொடர்.