கல்லூரி சேர்ந்த பொழுதில் இயல்பான வாழ்க்கை. முதல் வருடம் மித்ரா, நித்யா, தினேஷ் என்று கொண்டாட்டமாகக் கழிந்தது. இரண்டாம் வருடத்தின் நாட்கள் பெரும்பாலும் இப்படித்தான் கழிந்தன.

“அம்மா, ஏன் இன்னிக்கு எலுமிச்சை சாதம் செஞ்சீங்க?”

“மாதவி கேட்டான்னு செஞ்சேன் மதி, ஒருநாள்தானே சாப்பிடு.”

“எப்பப் பாரு அவளுக்குப் பிடிச்சதே செய்ங்க.”

“ஏன் அவளே இன்னும் ரெண்டு மாசம்தான் இருப்பா. அதுக்கப்பறம் நீதானே… உனக்குப் பார்த்துப் பார்த்துச் செய்றேன்.”

இப்படி அம்மா சொன்னவுடன் கோவம் வருமா என்ன? அழுகைதான் வந்தது. ஓடிச்சென்று அக்காவைப் பின்பக்கமாக அணைத்தபடி அழுதேன். மாது, மாது என்னை மறந்துட மாட்டியே என்று.

“ஐயோ, மாட்டேன் மாட்டேன். மூனு வேளையும் போன் பண்றேன். அம்மாட்ட தினமும் எலுமிச்சை சாதமே உனக்குக் கட்டித் தரச் சொல்றேன். சரியா? தயவுசெஞ்சு என்னைக் கிளம்ப விடுடி, நேரமாச்சு. வேலைய விட்டுட்டுப் போறேன்னு நான் நேரத்துக்கு வர்றதில்லைன்னு எல்லாரும் பேசுவாங்க” என்றாள் மாது. இதற்கு மேல் என் அழுகையைக் கேட்கவா வேண்டும்?

“மதி அழாதேடா, கிளம்பு. நான் அக்காவை ஸ்கூலில் விட்டுட்டு வந்து உன்ன அழைச்சிட்டுப் போறேன்” என்றபடி அப்பா உள்ளே வந்து சமாதானம் செய்த பின்புதான் சரியானேன்.

அக்காவின் திருமண விஷயத்தில் அக்கா சென்று விடுவாள் என்பதைக் காட்டிலும் வேறு பல விஷயங்கள் என் மனத்தை வதைத்தன.

வீட்டில் அப்பா அருணகிரி நில அளவைப் பிரிவில் அரசாங்க ஊழியர். அம்மா நிர்மலா இல்லத்தரசி. அப்பாவின் வருமானம் இல்லை என்ற குறை தெரியாது எங்களை வளர்க்கப் போதுமானதாக இருந்தது. கிம்பளம் வாங்கும் பழக்கம் இல்லை என்பதாலேயே அப்பாவின் உடன் பணிபுரிவோர்போல் இங்கு செல்வம் கரைபுரண்டோடவில்லை. ஆனால், அன்பும் கல்வியும் வேண்டுமளவு கிடைத்தது.

அக்கா தனியார் பள்ளியில் கணித ஆசிரியை. பணிக்குச் சேர்ந்து ஒரு வருடத்தில் திருமணம் பேசியாயிற்று. மாப்பிளை கதிருக்குப் பெரிய நிறுவனத்தில் வேலை. அக்காவிற்கு போட்டோ பார்த்ததும் மிகவும் பிடித்துவிட்டது. பெண் பார்க்கும் படலம் விமரிசையாக நடந்தது. ஆனால், எனக்கு ஏனோ மாப்பிள்ளையின் அக்காவைப் பார்த்ததும் சற்றும் பிடிக்கவில்லை. பெண் பார்க்கும் படலத்திற்கே இத்தனை நகைகள் தேவையா என்ன? அவள் ஒப்பனைகள் எதையோ சொல்லாமல் சொல்லியது.

ஆனால், மாமா நேரில் பார்ப்பதற்கு மிகவும் இணக்கமாகவே இருந்தார். மாதுவும் அவரும் கண்ணால் பேசியதை நானும் ஒன்றுமறியாதவள் போலவே பார்த்துக்கொண்டிருந்தேன்.

கதிரின் தாய் கமலம், கண்ஜாடையில் மகளிடம் பேசினார். பின் பெண் மிகவும் பிடித்திருக்கிறது. அடுத்த மாதம் முதல் முகூர்த்தத்தில் நிச்சயதார்த்தமும் மூன்று மாதம் கழித்து திருமணமும் செய்வதாக சபையில் அறிவித்தார்கள். மற்ற விஷயங்களைத் தரகரிடம் சொல்லி அனுப்புவதாகக் கூறிச் சென்றனர். இந்த மற்ற விஷயங்கள் என்னை மிகவும் உறுத்தின.

அன்று இரவு என்பாடு திண்டாட்டம்தான். “அவர் நல்லா இருக்கார் இல்ல? எவ்வளவு அமைதியா, நிதானமா பேசினார்? அவரிடம் பேச வேண்டும் போல் இருக்குடி, அவரும் அப்படி நினைப்பாரா? என்னை ஆச்சரியப்படுத்த பள்ளிக்கு வருவாரா? அவர் பிறந்தநாள் எங்க நிச்சயதார்த்தத்துக்கு இரண்டு நாள் கழிச்சு வருது. என்ன பரிசு கொடுக்கட்டும் ?” இன்னும் இன்னும் இன்னும்… பேசிப் பேசியே என் தூக்கம் கலைத்தாள் மாது. “அடியே நாளைக்கு செமினார் இருக்கு. தூங்கவிடுடி” என்று மன்றாடித் தூங்கினேன் அன்று.

ஆனால், வாழ்வில் ஒரு புது சொந்தம் இத்தனை ஈர்ப்பினை எப்படி ஒரு மணி நேரத்தில் தோற்றுவித்தது? எவ்வளவு யோசித்தும் புலப்படவே இல்லை எனக்கு அன்று.

அடுத்த நாள் காலை முதல் வீடு, வீடாகவே இல்லை.

கல்யாண மண்டபம் போலத்தான் தோன்றியது. அக்கம்பக்கம், சொந்தபந்தம், சமயங்களில் நானும் அழ என எந்நேரம் பார்த்தாலும் ஒரே கூச்சல்!

“என்னடி மதி, அக்காவிற்குத்தானே மாப்பிள்ளை பார்த்தார்கள்? நீ என்னவோ உனக்குப் பாத்தாற்போல் சதா சர்வகாலமும் கனவில் சஞ்சரிக்கிறே?” என்று மித்ரா என்னைச் சீண்டினாள்.

“இல்லடி, மாப்பிளையோட சொந்தக்காரன் ஒருத்தன் வந்திருந்தான், அவன் உனக்குப் பொருத்தமாயிருப்பான். அதான், உங்களுக்கு எப்படிக் கல்யாணம் செய்யலாம்னு யோசிச்சிட்டிருக்கேன்” என்று பதிலுக்கு நானும் சீண்டினேன்.

என்னைப் பிறகு பார்த்துக்கொள்கிறேன் என்றவள் விஷயத்திற்கு வா, என்ன ஆனது என்று மித்ரா வினவினாள்.

“தெரியல மித்து, வீட்டில் ஏதோ ஒன்னு நடக்குது, என்னன்னு புரியல. அப்பா எந்நேரமும் வீட்டிலேயே இருக்கிறதில்லை” என்றேன்.

“கல்யாண வேலைனா சும்மா இல்ல, நீ முதலில் பரீட்சையில் கவனம் செலுத்து. மத்ததெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம்” என்றவள் எனது கவனத்தைத் திருப்பினாள். இப்படியே ஒருமாதம் உருண்டோடியது.

அன்று மாலை வீட்டிற்குச் செல்லும்போது அப்பாவும் அம்மாவும் கலங்கிப்போயிருந்ததாகத் தோன்றியது.

அவர்கள் கலக்கத்திற்குக் காரணம் என்னவாக இருக்கும்? மதியே சொல்வாள், அதுவரை காத்திருப்போம்!

படைப்பாளர்:

மோகனப் பிரியா கெளரி

நான் மோகனப் பிரியா கௌரி (மோகனப் பிரியா G). பிறப்பிடம் கோவை. வசிப்பிடம் சென்னை – வேலைநிமித்தம்.  சிறுவயது முதலே அம்மா, மாமா என நாவல் படிக்கும் குடும்பம் சூழவே கதைகள் மீது ஆர்வம் அதிகம். மகிழ்ச்சியோ கவலையோ கோபமோ காதலோ எழுத்தும் மொழியும் இதயத்தின் வடிகால்கள் என்ற ஆழ்ந்த பிடிப்பு. அவ்வப்போது கவிதைகளும் எழுதும் என் முதல் தொடர்கதை ’அவள் அவன் அவர்கள்.’