அவளின் மனத்தின் மெல்லிய மகிழ்ச்சிக்குக் காரணம் அன்று வந்த செய்தியா அல்லது சற்றுத் தொலைவில் தன் தாயின் முந்தியைப் பிடித்துக்கொண்டு குதித்துக் குதித்துச் செல்லும் மூன்று வயதுக் குழந்தையின் ஆசை முகமா என்று அஃதர் சிந்தித்துக்கொண்டிருக்கையில், அவளோ அவன் இருப்பைச் சற்றுமறியாது அன்று காலை வந்த செய்தியை மீண்டும் மீண்டும் அசைபோட்டுப் புன்னகைத்துக் கொண்டிருந்தாள்.

அஃதர் அவளருகில் சென்று சில வார்த்தைகள் பேசிடத் தவித்தான். அவளின் மகிழ்ந்த முகம் அவனை ஆர்ப்பரிக்கச் செய்தது. ஆயினும் தன்னைக் கண்டதும் அவள் மகிழ்ச்சி தடம் தெரியாமல் போய்விடுமோ என்ற பயம் கவ்வவே சில மணித்துளிகள் அவளின் அன்பு முகத்தைப் படம்பிடித்துவிட்டு, காரை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டான். அவன் இதயம் முழுதும் கனமாக, ஏக்கமாக, இன்று சற்று மகிழ்ச்சியாக மதி மட்டுமே நிறைந்திருந்தாள்.

அஃதர் சென்னை செல்லும் வழியெங்கும் மதியின் நினைவால் வாடினான். அவனுக்கு இது பழக்கமாகிவிட்டபோதிலும் வழக்கமான ஒன்றுதான் என்றிருந்தபோதிலும் இது எப்பொழுதுமே கடப்பதற்கு எளிதான ஒன்றாக இல்லை. எப்பொழுதும் போலவே இப்பொழுதும் இல்லை.

சில வருடங்களுக்கு முன்னாள் விரிந்த கண்களுடன் தன் அறைக்குள் வந்த எழுவரில் ஒருத்தியான மதியிடம் கண்டதும் தன் நெஞ்சத்தை அவன் பறிகொடுத்துவிடவில்லைதான். சொல்லப் போனால் அவள் பெயர் அவன் நினைவில் பதியவே கிட்டத்தட்ட ஒரு வாரம் ஆனது. ஆனால், இன்று அப்படி இல்லையே. உயிரில் உயிராகிவிட்டாளே!

என்றுமில்லாமல் இன்று மதியின் நெஞ்சம் பலவாறு சிந்தித்தது. அதில் அன்புடன் அவள் அன்னை வந்தாள்; தமக்கை வந்தாள்; தோளில் கை  போட்டு மித்ரா வந்தாள்; புன்னைகையுடன் ஃபாத்திமாவும் குதித்தபடி ஷனாவும் வந்தனர்; அவர்களுடன் ஆசையாக அஃதரும் உடன் வந்தான்.

(நாமும் உடன் பயணிப்போம்)

படைப்பாளர்:

மோகனப் பிரியா கெளரி

நான் மோகனப் பிரியா கௌரி (மோகனப் பிரியா G). பிறப்பிடம் கோவை. வசிப்பிடம் சென்னை – வேலைநிமித்தம்.  சிறுவயது முதலே அம்மா, மாமா என நாவல் படிக்கும் குடும்பம் சூழவே கதைகள் மீது ஆர்வம் அதிகம். மகிழ்ச்சியோ கவலையோ கோபமோ காதலோ எழுத்தும் மொழியும் இதயத்தின் வடிகால்கள் என்ற ஆழ்ந்த பிடிப்பு. அவ்வப்போது கவிதைகளும் எழுதும் என் முதல் தொடர்கதை ’அவள் அவன் அவர்கள்.’