வாழ்க்கையில், நமக்கு எது வேண்டுமோ அது கிடைக்கும் என நம்புகிறோமா?

எது நடந்தால் நாம் மகிழ்ச்சியாக இருப்போமோ அதுவே நடக்கும் என நம்மால் எதிர்பார்க்க முடிகிறதா? எந்த அளவுக்கு நம்மை பாசிட்டிவாக வைத்திருக்க முடிகிறது?

என் பக்கத்து வீட்டில் குடியிருந்த, தேவிகா ஆன்ட்டிக்கு ஒரே மகன். அந்த மகன் ஒரு பெண்ணைக் காதலித்துவந்தார். தேவிகா ஆன்ட்டி அடிக்கடி வருத்தப்படுவார்.

“இன்னும் ரெண்டு மூணு வருசத்துல, அவன் அந்தப் பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு என்னய தனியா விடப்போறான்” என்று.

“உங்கள் மகன் திருமணம் செய்துகொள்ள இன்னும் எத்தனை வருடங்கள் இருக்கிறன?”       

“இரண்டு அல்லது மூன்று வருடம்.”

“இரண்டு வருடம் கழித்து என்ன நடக்கும் என உங்களுக்கு எப்படித் தெரியும்?”

“இல்லை ஒரு யூகம்தான்.”

“சரி, அந்த யூகம், ஏன் எல்லோரும் ஒரே வீட்டில் சந்தோஷமாக இருப்போம் என்று இருக்கக் கூடாது?”

……….

“இதுவும் சாத்தியம்தானே? மூன்று வருடங்கள் கழித்து, தனியாகப் போனால் சிந்திக்கலாம். இப்போது இருந்தே அதை யோசித்து வருத்தப்படுத்திக்கொள்ளத் தேவை இல்லைதானே?”

“ஆமாம்ல” என யோசிக்கத் தொடங்கினார்.

உறவுகளில் நுழைவதற்கு முன்பும் சரி, ஏதோ ஒன்றைப் புதிதாக ஆரம்பிப்பதற்கு முன்பும் சரி, நம்மில் பெரும்பாலானோர்,எதிர்மறையாகவே சிந்தித்து, அது தருகின்ற அனுபவத்தையே தவறவிடுகிறோம். எது  நடந்தால் நாம் மகிழ்சியாக இருப்போமோ, அதற்கு மாறாக நினைத்துக்கொள்வதுதான் நம்மில் பல பேருடைய வழக்கமாகவே இருக்கிறது. எதிர்காலம் என்பது பலசாத்தியங்களை உள்ளடக்கியதுதான். இதில் ஏன் கெட்ட சாத்தியத்தை நினைத்து முன்கூட்டியே வருத்தப்படுவானேன்? நல்ல சாத்தியத்தை நினைத்து மகிழ்ச்சியாக இருக்கலாம்தானே?

பக்கத்து வீட்டில் நட்பாக இருக்கலாம். உற்ற நண்பர்கள் கிடைக்கலாம். ஒரு வேளை நினைத்தபடி இல்லை என்றால், பின் விலகலாம். ஆனால், பக்கத்து வீடு என்றாலே சண்டை வரும் என்று , துவக்கதில் இருந்தே விலகி இருக்க வேண்டாமே?

முடிவில் ஒருவேளை தவறாக முடிந்துவிட்டால், அந்த மகிழ்ச்சியான காலத்தை அனுபவமாக எடுத்துக்கொள்ளவேண்டியதுதான். தவறாக முடிந்ததை ஏற்றுக்கொள்ளுமளவுக்கு மனதைப் பக்குவபடுத்திக்கொள்ள வேண்டியதுதான். முதலில் இருந்தே எதிர்மறையாகச் சிந்திக்க அவசியமில்லையே?

மருத்துவத்துறையில் பிளாஸிபோஎஃபெக்ட் (Placebo effect) எனச் சொல்வார்கள். நோயாளி ஒருவர், மருத்துவரிடம் தன்னுடைய நோய்க்காக மருந்து வாங்கச் செல்கிறார். அவர் மருத்துவரின் மீதும், மருத்துவத்தின் மீதும் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறார். டாக்டர் வெறும் விட்டமின் மாத்திரைகளைத்தான் தருகிறார், ஆனாலும் நோய்குணமாகிவிடுகிறது. இதுவே பிளாஸிபோ எஃபெக்ட்.

நாமும் பார்த்திருக்கலாம். கைராசியான டாக்டர் அல்லது நமது குடும்ப டாக்டர் என்று சொல்லிக்கொண்டு, ஒரே டாக்டரையே நம்பி இருப்போம். அவர் மருந்து கொடுத்தால்தான் நோய் சரியாகும். அதுதான்பிளாஸிபோஎஃபெக்ட். இதற்கு மாறான ஒன்றுதான் நோஸிபோஎஃபெக்ட்(Nocebo effect). நோயாளி ஒருவர் குணமடைவேன் என்ற நம்பிக்கையோ அல்லது மருத்துவரின் மீதான நம்பிக்கையோ இல்லாமல் ஒரு மருத்துவரிடம் செல்கிறார். மருத்துவர் நோய்க்குரிய சரியான மருந்தையே கொடுக்கிறார். ஆனாலும் நோய் குணமடைவதில்லை. இதுதான்நோஸிபோஎஃபெக்ட்.

மேற் கூறிய இரண்டிலுமிருந்து, நாம் அறிந்துகொள்ள வேண்டியது, நம்முடைய எண்ணங்கள் மிகவும் வலிமை படைத்தன என்பதைத்தான். நாமும் பாஸிட்டிவாக இருந்தால், நமக்கும் நல்லதே நடக்கும். மேலும், எண்ணங்களை பாசிட்டிவாக வைத்திருக்கும்போது நல்ல ஹார்மோன்கள் சுரந்து, நம் உடல் ஆரோக்கியமாகவும் உற்சாகமாகவும்இருக்கும்.

இப்போது உங்கள் மனத்தில் கேள்வி எழலாம். என்னதான் இருந்தாலும் ரியாலிட்டி என்று ஒன்று இருக்கிறதுதானே? எப்போதும் எப்படி பாசிட்டிவாக இருக்க முடியும்?

அந்தச் சிறுவனுக்கு அப்போது ஏழுவயது. வருத்தமாக, தொங்கிய முகத்துடன் பள்ளியிலிருந்து வீட்டுக்கு வருகிறான். கையில் ஒரு கடிதம். கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தது, ’உங்கள் பையன் படிப்பில் மிகவும் மந்தமாக இருக்கிறார். அவருக்கு எங்கள் பள்ளியில் கற்றுக்கொடுக்க முடியாது. நாளையிலிருந்து அவனை எங்கள்பள்ளிக்கு அனுப்பாதீர்கள்.’

அதை வாங்கிய அந்தக் குழந்தையின் அம்மாவுக்குமே அதிர்ச்சியாகத்தான் இருந்தது. ஆனால், அந்தக் கடிதத்தை, தன்னுடைய மகனுக்கு இவ்வாறு வாசித்துக் காட்டினார்.

“உங்கள் மகன் மிகவும் புத்திசாலியாகவும், அறிவுத்திறனுடனும் இருப்பதால், அவனுக்குப் பயிற்றுவிக்கும் அளவுக்கு எங்கள் பள்ளியில் ஆசிரியர்கள் இல்லை. எனவே, எங்கள் பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்.”  அவருடைய அன்னையின் வார்த்தைகள்தாம், தாமஸ் எடிசனை விஞ்ஞானியாக, புகழ்பெற்ற தொழிலதிபராக உலகிற்குக் காட்டியது. அந்த பாஸிட்டிவ் வார்த்தைகள்தாம் எடிசனின் ரியாலிட்டியாக மாறியது.

அவ்வளவு ஏன்? என்னுடைய நட்புவட்டாரத்தில் இருக்கும் இரண்டு ஆளுமைகளைப் பார்த்து அடிக்கடி வியப்பதுண்டு. 45  வயதிற்குப் பிறகும் தன்னை இளமையாகவும் உற்சாகத்துடனும் ஆரோக்கியத்துடனும் வைத்துக்கொள்ள முடியும், தனக்குப் பிடித்ததைச் செய்துகொண்டே, பிறபெண்களுக்கும் வழிகாட்ட முடியும் என்று கருதிவரும் கீதாஇளங்கோவனுக்கு, அதுவேதான் ரியாலிட்டி.

பாசிட்டிவ் மனிதர்கள் கீதாவும் கமலியும்

15  வயதிலே திருமணம் நடந்து, 19 வயதிற்குள் இரண்டுகுழந்தைகளுக்குத் தாயாகி, கல்லூரியில் கால்பதிக்க முடியாமல் போனதற்காக எல்லாம் வருத்தப்படாமல்,ஆண்கள் நாட்டின் கண்கள் எனச் சொல்லி, சிரிக்க வைத்தே சிந்திக்கவும் வைக்க முடியும், தன்னை நிலைநிறுத்த முடியும் என நினைக்கும் கமலி பன்னீர்செல்வத்திற்கு அதுவேதான் ரியாலிட்டி.

ஆதலால் எப்போதும் பாசிட்டிவாக இருங்கள். எந்த விஷயத்தையும் பாசிட்டிவாக அணுகுங்கள். அதுவே உங்கள் ரியாலிட்டியாக மாறும்.

அன்றாட வாழ்க்கையில், நம் மனதை எப்படி பாசிட்டிவாக வைத்திருக்கிறோம் என்று கேட்டுப் பாருங்கள்.

நம்மில் எத்தனை பேருக்குக் காலையில் எழும்போது, ‘ஆஹா! எவ்வளவு அழகான காலை இது! இந்த நாளுக்கும், இந்தப் பொழுதுக்கும் நன்றி. இன்று எல்லாம் நல்லபடியாகவே நடக்கும்’ என்று சொன்னபடி, பாசிட்டிவாக எழுந்திருக்க முடிகிறது?

ஆமாம், இப்படிச் சொன்னால் என்ன ஆகும்? எல்லாம் மாறிவிடுமா?

சரி, தினமும் டென்சனோடு எழுந்து, அதோடு நாளை துவக்கியதால் என்ன பலன் கிடைத்தது? எனவே இதைச் சில நாட்களுக்கு முயற்சி செய்து பார்க்கலாமே?

நெருங்கிய தோழி ஒருவருக்கு கேன்சர். உடலும் மனமும் சோர்வுற்ற அவருடன் பேசிக்கொண்டிருந்தபோது, ‘ட்ரீட்மென்ட் முடிய இன்னும் எட்டு மாதங்கள் ஆகும். யோசிக்கவே பயமாக இருக்கிறது. எப்படிச் சமாளிக்கபோகிறேன் எனத் தெரியவில்லை’ என்றார்.

‘ஆக, எப்படியும் எட்டுமாதங்கள் EMI கட்டவேண்டும் என்றாகிவிட்டது. இன்னும் எட்டே மாதங்களில் சரியாகிவிடுவேன், லோன் முடிந்துவிடும் என்றபடியே ட்ரீட்மென்ட் எடுக்கலாமே’ என்றேன்.

சிரித்துவிட்டார். அவருக்கு இப்போது ட்ரீட்மென்ட் நல்ல முறையில் சென்றுகொண்டிருக்கிறது.

நமக்கும்கூட அதேதான். எப்படியும்  வாழ்க்கை தருகின்ற, சவால்களைச் சந்தித்தாக வேண்டும், அதாவது பிரச்சினைகள் தீரும் வரை, அவற்றைக் கையாண்டுதான் ஆக வேண்டும். EMI கட்ட வேண்டும் என்றாகிவிட்டது. அதை பாசிட்டிவான எண்ணங்களோடு செய்யலாமே? ஏனென்றால் சவால்கள் தற்காலிகமானவைதான்.

ஆனால்,  ஏன் பாசிட்டிவாக இருக்க வேண்டும்?

நல்ல பண்படுத்தப்பட்ட நிலத்தில், செடிகள் செழிப்பாக வளரும் அவ்வளவே. எனவே மனதை எப்போதும் பாசிட்டிவாக வைத்துக்கொண்டு, வாழ்வை வளமாக்குவோம். எப்போதும்  எல்லா நேரத்திலும்  வாழ்வை உற்சாகமாகக் கொண்டாடலாம்.

இந்த வாழ்க்கைக் கொண்டாடவே!

(நிறைந்தது)

படைப்பாளர்:

ஜான்சி ஷஹி

மனநல ஆலோசகர். மன நலத்திற்கான தெரப்பிகளையும் ஆற்றுப்படுத்துதலையும் வழங்கி வருகிறார். வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழவும், பிடித்த எதிர்காலத்தை அமைத்துக்கொள்ளவும், பொது மக்களுக்கு பயிற்சிப் பட்டறைகளை நடத்திவருகிறார். இவர் பெங்களூர் கிரைஸ்ட் பல்கலைக்கழகத்தில் மாணவர் மன நல ஆலோசகராக (student counsellor) பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.