மயிலா ஆட்டுக்குட்டியுடன் தன் வீட்டிலிருந்து தொலைவில் உள்ள ஒத்த பாறையின் மீதேறி தன் வீடு, பள்ளிக்கூடம், ஊர், கோயிலென ஒவ்வொன்றாகப் பார்க்கும்போது ஏற்படும் ஆனந்தத்திற்கு அளவேது? அந்தப் பாறை ஊரில் உயரமான இடம் ஆதலால் அங்கிருந்து ஊரின் பகுதிகளைக் காணலாம். மயிலாவிற்கு மிகவும் பிடித்த இடம். அடிக்கடி அங்கு ஆட்டுக்குட்டி சின்னுவுடன் வந்து விளையாடிவிட்டுச் செல்வாள்.

அன்றொரு நாள் ஒத்தப் பாறைக்கு தன் ஆட்டுக்குட்டியுடன் கிளம்பினாள். நினைக்கும் அத்தனை விஷயங்கள், ஆசைகள் எல்லாவற்றையும் ஆட்டுக்குட்டி சின்னுவிடம் சொன்னால்தான் மனநிம்மதியே மயிலாலுக்கு. அன்றும் தோழி பருவமெய்தியதால் வீட்டில் தனியாக உட்கார வைத்து, ரொம்ப நாளாகப் பள்ளிக்கு வராமல் இப்போதான் தீட்டு கழிச்சி வீட்டுக்கு அழைத்துக்கொண்டுவிட்டதால், பள்ளிக்குச் சில நாள்கள் கழித்து வந்தாள் எனத் தன் தோழி குறித்துச் சொல்லிக்கொண்டே வந்தாள். சின்னுவும் அதற்குப் பதிலுரைப்பதாக மே மே எனக் கத்திக் கொண்டேது.

“உனக்கென்ன நீ ஜாலியா இருப்ப, வயசுக்கு வர்றது, ஒக்கார வைக்கறது, தீட்டு கழிக்கிறது இதெல்லாம் உங்களுக்கு இல்லை பாரு. எங்க மனுச ஆளுங்கதான் இப்படிப் புனிதம், தீட்டுன்னு ஒரு பக்கம் எங்களைப் பாடா படுத்தறாங்க. நான் எப்போ வயசுக்கு வரப்போறனோ எனக்குப் பக்குன்னு இருக்கு. வந்தா ஒக்கார வைக்கிறேன் பங்ஷன் பண்றேன், சீர்வரிசை வாங்கணும்ன்னு ஒரே களேபரம் பண்ணிடுவாங்க. அது மட்டுமில்லாம…” என நிறுத்தியதும் சின்னு மே எனக் கத்துவதை நிறுத்தி அடுத்து என்னாச்சோ என்பதுபோலப் பார்த்தது.

“அதுக்கப்பறம் போடறக் கட்டுப்பாட்டை நினைச்சா கெதக்குன்னு இருக்கு. வயசுக்கு வந்த தோழிகளெல்லாம் வீட்ல போடறக் கட்டுப்பாடுகளைக் கதை கதையாச் சொல்றாங்க. எங்க வீட்ல என்னென்ன சட்டம் போடுவாங்களோ! இப்பவே லைட்டா முன்னோட்டமா சொல்லிக்கிட்டுதான் இருக்காங்க. நானும் கேட்காம சுத்திக்கிட்டு இருக்கேன்.”

ஓடிக்கொண்டிருந்த சின்னு கவலையாக நின்று மயிலாவின் முகத்தைக் கவனித்தது.

“அதான் அப்பவே சொன்னனே எங்க மனுசங்கள்லதான் இப்படின்னு… அப்படி என்ன கட்டுப்பாடுன்னு பார்க்கறியா? இந்த மாதிரி வீட்டைவிட்டு ஒத்தப் பாறைக்கெல்லாம் வர முடியாது. அங்க போகக் கூடாது, இங்க நிற்கக் கூடாது, உட்காரக் கூடாது, வீட்லயே இருக்கணும்ன்னு நிறைய கட்டுப்பாடுகள் இருக்கும். அதுக்கப்புறம் நம் இஷ்டமெல்லாம் ஒன்னுமில்ல எல்லாம் ஊட்ல, பக்கத்துல சொல்றபடிதான் கேட்கணும். பொண்ணுன்னா இப்படி அப்படி இருக்கணும்ன்னு ஆளாளுக்கு லெக்சர் எடுப்பாங்க. எங்கக்காவுக்கு எவ்ளோ பேர் எடுக்கறதப் பார்த்திருக்கேன். ”

துள்ளிக்கொண்டிருந்த சின்னுவுக்கு இப்போ சற்று துள்ளல் குறைவாகவே இருந்தது.

“எல்லாத்தையும் சமாளிப்போம் விடு. நாம் சமாளிக்காம யார் சமாளிக்கறது” எனத் தனக்குத்தானே சமாதானம் சொல்லிக்கொண்டாள் மயிலா. ஒற்றைப் பாறையின் மீதேறி ஊரைப் பார்த்துவிட்டு, பனம்பழத்தைச் சுவைத்தபடியே சிறிது நேரம் விளையாடிவிட்டு, மரங்களிடமெல்லாம் பேசிவிட்டு, வீடுவந்து சேர்ந்தார்கள் மயிலாவும் சின்னுவும்.

வழக்கம்போல பள்ளி நாள் அன்று நண்பர்களுடனான கேலி, கிண்டல், படிப்பு, வாசிப்பு எனப் போச்சு மாலை நேரம் வாழ்க்கைத் திறன் வகுப்பும் வந்து சேர்ந்திருந்தது அன்றைய நாளில்.

கீதா டீச்சர், “இன்னைக்கி ஒரு முக்கியமான விஷயம் பேசப் போறோம். பெண் குழந்தைங்க மட்டும் வகுப்பில் இருங்க. ஆண் குழந்தைங்க நூலகம் சென்று வாசிக்கலாம்.”

“உங்களுக்குப் பருவமெய்தினதும் உடலில் மாற்றம் ஏற்படுது? அதை எப்படி நீ எதிர்கொண்டிங்க?”

“ ஒன்னும் புரியல மிஸ். கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க.”

“அதாவது கொஞ்சம் பெருசானவுடன் மார்பகம் வளர்றது, வயசுக்கு வந்தவங்களுக்கு மாதவிடாயின்போது ரத்தப்போக்குன்னு உடல்ல மாற்றம் வருதுல்ல அதை எப்படி உணர்ந்தீங்கன்னு கேட்கறேன்.”

“மிஸ் நான் பாட்டுக்கு ஜாலியா ஊரைச் சுத்திக்கிட்டு இருந்தேன். வயசுக்கு வந்ததும் அவ்ளோதான் என் வாழ்க்கையே தலைகீழா மாறிப்போச்சு. அதிலும் வீட்ல இருந்தாகூட துப்பட்டா போடணும்ன்னு ஒரே டார்ச்சர். எங்க வீட்ல ஒன்னும் சொல்லலன்னாக்கூடப் பக்கத்து வீட்டு அக்கா வந்து திட்டிட்டு போறாங்க.” இது ரோஜா

“எங்க வீட்ல வெளில போகும்போதுதான் துப்பட்டா போடணும். வீட்ல அவ்வளவா கண்டுக்கறதில்ல.” இது பல்லவி

“துப்பட்டா போடணும், வேலை செய்யும்போது அதை வேற ஒருபக்கம் இழுத்துக்கிட்டு கடுப்பா இருக்கும். குனிஞ்சா முன்பக்கம் ட்ரஸைப் பிடிச்சுக்கணும்ன்னு எங்கம்மா சொல்லிக்கிட்டே இருப்பாங்க. நல்ல வேளை நம்ம ஸ்கூல்ல சுடிதார், கோர்ட் போடறோம் வசதியாயிருக்கு மிஸ். விளையாடும்போதும் ஏதாவது வேலை செய்யும்போதும்” எனக் கீர்த்தனா சொன்னாள்.

“மார்பகம் வளருது, அதை மறைக்கத் துப்பட்டா போடச் சொல்றாங்க. மார்பகம் வளர்வதை உங்க மனசு எப்படிப் பார்க்குது. அது எதுக்குன்னு யோசிக்கிறிங்க.”

“ஏண்டா வளருது அதனாலதான் துப்பட்டா போடுன்னு சொல்றாங்கன்னு தோணும். அது வளராம இருந்துடக்கூடாதா, நாம குழந்தையாகவே இருந்திடக் கூடதா எனத் தோணும் மிஸ்.”

“நம் உடல் மீது இந்தச் சமூகம் இப்படி வெறுப்பை ஏற்படுத்துவது கேட்கவே வருத்தமா இருக்குது. மார்பகம் கொழுப்பலான திசுக்களைக் கொண்ட ஓர் உறுப்பு. எலும்புகள் ஏதுமில்லாம தசைகளால் ஆனதால சதையா தொங்குது. இயற்கை தன் சந்ததிக்குப் பாலூட்டப் படைத்திருக்கு. அதை நாம் தெரிஞ்சிக்கணும். இயற்கையின் படைப்பில் ஒவ்வொன்னுக்கும் பணி இருக்கும், அது போலத்தான் மார்பகத்திற்கும். “

“இப்போதான் மிஸ் அதெல்லாம் தெரிஞ்சுக்கறோம். சின்னதா இருந்தா சின்னதா இருக்குன்னு சொல்றாங்க. பெருசா இருந்தாலும் இவ்ளோ பெருசான்னு கிண்டல் பண்றாங்க. எனக்கெல்லாம் பெருசா ஆயிடக் கூடாது நார்மல் சைஸ்ல இருக்கணும்ன்னு சாமியை வேண்டிக்குவேன் மிஸ்.”

“நீ சொல்றது கரெக்ட் மாலா. நம் உடல்வாகு மரபியல்படி நம்ம பாட்டி, அம்மாவுக்கு எப்படி இருக்கோ அப்படித்தான் நமக்கும் இருக்கும். அதுக்கெல்லாம் கவலைப்படக் கூடாது. இது நம் உடல், இயற்கை படைத்திருக்கு. சிறப்பா வைச்சுக்கணும்ன்னு நெனக்கணும். ஒருபோதும் நம் உடலை நாம் வெறுக்காம லவ் பண்ணணும்.”

“எங்க எங்களை விரும்பவிடறாங்க மிஸ். நான் இன்னும் வயசுக்கே வர்ல. ஆனா, எனக்கே சீக்கிரம் வந்திடக் கூடாதுன்னு சாமியை வேண்டிக்கிட்டு இருக்கேன். எங்களுக்கு இருக்கற கட்டுப்பாடுகள் ஆண்களுக்கு இல்லை. அவங்க எப்பவும் போல ஊரச் சுத்தலாம். ஏன் அவங்க வயசுக்கு வந்தான்னா என்னன்னே தெரியாது. ஏன் மிஸ் எங்களுக்கு இவ்ளோ கட்டுப்பாடுகள்? அதுவே பெரிய டார்ச்சரா இருக்கு.” மயிலா ஆதங்கப்பட்டாள்.

“பருவமடைஞ்சதும் ஆண், பெண் இருவருக்கும் உடலில் மாற்றங்கள் ஏற்படுது. அதை நம் கல்விலயும் பெருசா சொல்லித்தரதில்ல. என்ன நம் உடலில் நடக்குதுன்னு தெளிவா அவர்களுக்குப் புரிய வைத்து, அதை அவங்க எதிர்கொள்ள நம்பிக்கையை அளிக்கணும். மாறாக நம் சமூகம் அறிவியலுக்கு ஒவ்வாதவற்றைப் புனிதம், தீட்டுன்னு ஒரு பக்கம் நம் உடல் மேல திணிக்குது. ஆண்களுக்கும் ஒரு பக்கம் ஏதேதோ கற்பிதங்கள் சொல்லப்படுது.”

“ஆண்களையும் இயல்பா இருக்கவிடறதில்லையா? கொடுமைங்க மிஸ். இப்படி நம் உடலை வெறுக்கறதால என்ன ஆகும்ன்னு தெரியல. ஆனா, வேறென்னத்த பண்றதுன்னு எங்களுக்குத் தெரியல மிஸ்.”

“உடலை வெறுக்கறதால நம் உடலைப் பராமரிக்கறது குறையும். சரியா உணவு, தண்ணீரை எடுத்துக்கறதில்ல. அதானால உடல் பலவீனம் ஆயிடும். இன்னொரு பக்கம் நம்மை அப்படிச் சொல்லிட்டாங்க, இப்படிச் சொல்லிட்டாங்கன்னு மனவருத்தம் ஏற்பட்டு மன அழுத்தமும் ஏற்பட வாய்ப்பிருக்கு. இப்படித்தான் அக்கம்பக்கம் பேசுவாங்க. நாம் நம் உடல் மீது அன்பு செலுத்தத் தொடங்கணும். நல்லா உடல் ஃபிட்னஸோட பராமரிக்கணும்.”

“மிஸ் நம்மைப் பத்திச் சொல்றதைக் காதுல வாங்காம நம் உடலை லவ் பண்ணணும்னு சொல்றீங்க. இது எங்களுக்குப் புதுசா இருக்கு மிஸ்.”

“உடல்மீது பல விஷயங்கள் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அவை இயற்கையானது அல்ல செயற்கையானது. இதெல்லாம் தப்புன்னு இப்பவே ஒரு நிமிசம் மாத்திட முடியாது. தொடர்ந்து வாய்ப்பு இருக்கற எடத்துல, நபர்கிட்ட உரையாடலாம். நமக்கு முன் சென்ற பெண் எழுத்துகளை நாம் வாசிக்கும்போது நமக்கு அவங்க கடந்து வந்தபாதை, நாம் செல்ல வேண்டிய பாதை புலப்படும். நம் உடலோட ஆரோக்கியத்தை நல்லா பார்த்துக்குவோம். நம் உடலை விரும்புவோம்!”

“கட்டாயம் வாசிக்கத் தொடங்கறோம் மிஸ்” என ஒருமித்த குரலில் சொல்ல, கீதா ஆசிரியர் குழந்தைகள் மனம் திறந்ததையும் அவர்கள் மனதைப் பயின்றதையும் எண்ணி, அவரின் மனம் ஆனந்தக் கூத்தாடியது.


(தொடரும்)

படைப்பாளர்:

சாந்த சீலா

சாந்த சீலா கடந்த 17 ஆண்டுகளாக ஆசிரியராகப் பணிபுரிகிறார். கும்முடிப்பூண்டியை அடுத்த பூவலை கிராமத்தின் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர். பேருந்து வசதி கூட சரியாக இல்லாத இந்த ஊரிலேயே தங்கி, பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு கல்வியறிவு தருகிறார். இவரால் இந்தப் பள்ளியில் இடைநிற்றல் குறைந்திருக்கிறது. பள்ளி மேலாண்மைக் குழுவின் ஆசிரிய உறுப்பினராகவும் இருக்கிறார். கல்வியின் நோக்கமான படைப்பாற்றல் வெளிப்பட குழந்தை மையக் கல்வி அமைய வேண்டும் என்றும் விளிம்புநிலை குழந்தைகளும் மையநீரோட்டத்தில் இணைய வேண்டும் செயல்படும் அரசு பள்ளி ஆசிரியர். குழந்தைகளைக் கொண்டாடுவோம் கல்வி இயக்கம், குழந்தைநேயப் பள்ளிகள் கூட்டமைப்பு போன்ற அமைப்புகளில் செயலாற்றிக் கொண்டுவருகிறார்.