சென்ற வாரம் எந்தவித எதிர்பார்ப்புமேயில்லாமல் உறவென்பது சாத்தியமில்லை என்றெழுதிய வரிகள் பல ‘உண்மை’ காதல் நெஞ்சங்களைப் புண்படுத்தியிருக்கும்போல் தெரிகிறது. அது பற்றிய குறுஞ்செய்திகளாகவே வந்துகொண்டிருக்கின்றன.

“வேறெதுவும் தேவையில்லை, நீ மட்டும் போதும்” என்பது மிக அழகான நெகிழ்ச்சியான உணர்வு. இதன் அழகை ரசிக்க முடியும். ஆனாலும் அன்றாட வாழ்வின் நெடிய பொழுதுகள் வெறுமனே ரொமான்ஸினால் மட்டுமே நிரம்பியிருக்கப் போவதில்லை. விரும்பினாலும் ஏற்றாலும் மறுத்தாலும் வாழ்தலுக்குண்டான சவால்களை முகங்கொடுப்பதே எதார்த்த வாழ்வு. ஒருவர் எவ்வளவு அன்புக்குரியவராக இருந்தாலும் எவ்வளவு நல்ல குணம் கொண்டவராக இருந்தாலும் பக்கத்திலேயே மிஞ்சி மிஞ்சிப்போனால் எவ்வளவு நேரம் இருக்கலாம்? வாழ்க்கை முழுக்க நீ மட்டும் போதும் என்பது ஆணுக்கோ பெண்ணுக்கோ பால் புதுமையினருக்கோ அந்த நேரத்து உணர்வெழுச்சியைக் காட்டும் ஒரு படிமம். அதோடு நிற்கவில்லை, இந்த ஒரு வரி எவ்வளவோ எதிர்பார்ப்புகளைச் சுமந்திருக்கிறது.

நம் அனைவருக்குமே எதிர்பார்ப்புகள் உள்ளன. சூரியன் உதிக்கும், பருவங்கள் மாறும் என்று இயற்கையின் சூழற்சியில் நமக்குள்ள அதே எதிர்பார்ப்புகளைப் போலவே, அழுக்கு ஆடைகளை அவள் துவைத்துப்போட வேண்டும், இன்றிரவுணவை அவனே சமைத்துவிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்பவை எல்லாமே எதிர்பார்ப்புகள்தாம். ஊழல் இல்லாத அரசாங்கத்தை எதிர்பார்க்கிறோம். ஏன், அந்த அரசாங்கத்தைத் தெரிவு செய்கின்றவர்கள் மக்கள். அப்படி எதிர்பார்ப்பதற்கான, எதிர்பார்க்கின்றபடியே ஓர் அரசாங்கம் செயல்பட வேண்டும் என்று எதிர்பார்க்கின்ற எல்லா உரிமையும் நமக்குள்ளதாலேயே அப்படி எதிர்பார்க்கிறோம்.

எதிர்பார்ப்புகள் பெரும்பாலும் குழந்தைப் பருவத்தில் தொடங்கி, உலகம் எவ்வாறு இயங்குகிறது என நம்புகிறோம் என்பது வரையில் அன்றாட வாழ்வில் சூழலிடமும் சுற்றியிருக்கும் மனிதர்களிடமும் அமைப்புகளிடமும் எதிர்பார்த்துக்கொண்டேதான் வாழ்கிறோம். எதிர்பார்ப்புகளில் பகுத்தறிவான, பகுத்தறிவற்ற, யதார்த்தமான அல்லது யதார்த்தமில்லாத இப்படிப் பல வகை இருக்கலாம். உண்மையை அல்லது கற்பனையை அடிப்படையாகக் கொண்டதாகவும் இருக்கலாம். கருத்துகளின் அடிப்படையிலும், அனுபவங்களின் அடிப்படையிலும் இருக்கலாம். உண்மையில் இந்த எதிர்பார்ப்புகளின் அடிப்படையில்தான் நம் பல முடிவுகள் உருவாகின்றன.

மனிதருக்கு இருக்கக்கூடிய எதிர்பார்ப்புகளைக் குற்றம் என்பதற்கில்லை. ஓர் உறவில் எதிர்பார்ப்பு இருப்பதாகக் காண்பித்துக்கொண்டால், அந்த உறவின் நோக்கமே தவறாகிவிடும் என்கின்ற புரிதலில், ‘எனக்கு உன்னிடம் எந்த எதிர்பார்ப்புமில்லை’ என்று போலியான ஒரு வாக்குகுறுதியைத் தந்துவிடும் இணையர்கள் அறிவித்துக்கொண்டபடி இருந்துகொள்ள முடியாமல் சிதறியோடிவிடுகிறார்கள்.

திருமணமோ இணைந்து வாழுதலோ அது கூட்டு உடன்பாடு. இந்த உடன்பாட்டில் ஒருவருக்கு இன்னொருவர் எதிர்பார்ப்பு இல்லாமல் இருப்பது சாத்தியமாகாது. ஆரோக்கியமான இணையர்கள் ஒருவருக்கு இன்னொருவர் சிறந்ததையே விரும்புவார்கள். ஒவ்வொரு நபருக்கும் என்ன தேவை என்பதை அறிய, எதிர்பார்ப்புகளைப் பற்றி அடிக்கடி பேச வேண்டியதிருக்கும். ஆமாம், அடிக்கடி. காலமும் அனுபவங்களும் மாறும்போது எதிர்பார்ப்புகளும் மாறும் என்பதால் இது ஒரு முறை உரையாடி அறிந்துகொள்ளக்கூடியதாக இராது.

இன்னும் சொன்னால் உறவில் அழகானதே, ஒவ்வொருவரினதும் எதிர்பார்ப்புகள் என்ன என்பதை அடையாளம் காண்பதுதான். யதார்த்தமான ஆரோக்கிய உறவின் முதல் படியே இங்கிருந்துதான் தொடங்குகிறது. அடுத்த கட்டம் எது யதார்த்தமானது, எது இல்லை என்பதை அடையாளம் காண்பது.

யதார்த்தமான எதிர்பார்ப்புகள் பெரும்பாலும் பூர்த்தி செய்யக்கூடியவை. இந்த வகை எதிர்பார்ப்புகள் பேசிக் கலந்துரையாடி ஒப்புக்கொள்ளத்தக்கதாக இருக்கும். சில யதார்த்தமான எதிர்பார்ப்புகளுக்குச் சமரசம் தேவைப்படலாம். வீட்டு வேலைகள், செக்ஸ், நிதி சார்ந்த எதிர்ப்பார்ப்புகள் இதனுள் அடங்கும்.

வீட்டுப் பொறுப்புகள் அனைத்தையும் பகிர்ந்துகொள்வது உறவில் மிக முக்கியமான இடத்தைப் பிடிக்கின்றது. ஏனெனில் முன்பே குறிப்பிட்டதுபோல போல உறவென்பது கூட்டு உடன்பாடு. இங்கே யாரும் யாருக்கும் வேலையாள் இல்லை.

ஒருவரை இன்னொருவர் மதிப்பது, நல்ல முறையில் மனம்விட்டு உரையாடுவது, ஒருவரை இன்னொருவர் நம்புவது, ஒருவரின் கனவுகளுக்கு இன்னொருவர் மதிப்பளிப்பது போன்ற பல விடயங்கள் உறவில் பொதுவாகக் கட்டாயம் இருக்க வேண்டிய எதிர்பார்ப்புகள். இருவருக்கும் ஒரே கனவுகள் இருக்குமா, என்ன? கனவுகள் வேறுபட்டதாகவே இருந்தாலும்கூட ஒருவருக்கு இன்னொருவர் மதிப்பளித்து, கனவுகளைத் துரத்திப் பிடிக்க ஒருவரை இன்னொருவர் ஊக்கப்படுத்துவதே உறவில் யதார்த்தமாக எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆனால், திருமணங்களில் அல்லது இணைந்த வாழ்க்கையில் இருக்கும் பெரும்பாலான எதிர்பார்ப்புகள் யதார்த்த உலகிற்கு வெளியில் உள்ளன. ‘எனக்கு உன்னில் எந்த எதிர்பார்ப்பும் இல்லை’, ‘நீ என்னோடு இருந்தாலே போதும்’ போன்ற வார்த்தைகளை மட்டும் உதித்துவிட்டு மெய்யான எதிர்பார்ப்புகளை வெளியே சொல்லாமல் இருப்பது. நமக்கு என்ன வேண்டும், என்ன விரும்புகிறோம் என்பதைச் சொல்லாமலேயே விரும்புவதுபோலவே எல்லாம் நடந்துவிடவேண்டும் என்று குருட்டுத்தனமாகக் காத்துக் கொண்டிருப்பது. மனதில் உள்ளதை அவன் / அவள் எப்படியாவது தெரிந்துகொண்டு செய்துவிடுவான்/ள் என்று நம்பிக்கொண்டிருந்து, ஆசைக் குமிழிகள் வெடித்துச் சிதறும்போது பொங்கிப் புலம்பும் வகை இணையர்களுக்கு அறுபது நாளில் ஆசையும் முப்பது நாளில் மோகமும் தீர்ந்துவிடும். அவனோ/ளோ மனதைப் படித்தால் நன்றாகத்தான் இருக்கும். என்ன செய்ய, எல்லா அவள்/ன்களுக்கும் மனதைப் படிக்கும் மாயம் தெரிந்திருப்பதில்லை. போலிப் புடலங்காய் சோற்றுக்கு கறியாக வராதில்லையா, எனவே எதிர்பார்ப்புகளை மனந்திறந்து பேசித்தான் ஆகவேண்டும்.

இணையர்கள் மனந்திறந்து உரையாடுவதன் வழிதான் யதார்த்தமற்ற சில எதிர்பார்ப்புகளைத் தீர்த்துக்கொள்ளவும் முடியும். ஒரு குறிப்பிட்ட எதிர்பார்ப்பு நம் வருமானத்திற்கு அல்லது வாழ்க்கை முறைக்கு அல்லது தற்போதைய சவாலான சூழ்நிலைக்குப் பொருந்தாமல் இருக்கும் எனில் அதைப் பற்றிப் பேசி, அதிலுள்ள சிக்கல்களைத் தீர்த்து, ஒன்றாக இணைந்து அதனை அடையக்கூடிய ஒரு திட்டத்தை ஏற்படுத்தமுடியும். இணையர்கள் எப்போதும் மறக்கவே கூடாத ஒன்று, தாம் ஒரே அணியைச் சேர்ந்தவர்கள் என்பது. வெவ்வேறு அணியினர் போல் செயற்பட்டால் போட்டியுணர்வு, பொறாமைக் குணம், எதிர்க்கும் தன்மை, குரோதம் என்று என்னென்னவோ உறவுக்குள் நுழைந்து ஆடத் தொடங்கிவிடும். ஒரே அணியைச் சேர்ந்தவர்கள் எத்தகைய சவாலான சூழலிலும் தமது அணியின் வெற்றியை உறுதி செய்வதற்காக இணைந்து உழைப்பார்கள். அதற்காகப் போராடுவார்கள். யார் என்ன செய்தால் அணிக்கு வெற்றி சாத்தியமோ அதனைச் செயல்படுத்துவதில் குறியாக இருப்பார்கள். தோல்விகூட அணிக்குரியதாக இருக்கும். அதிலிருந்து கற்றுக்கொண்டு அடுத்த முறை வெற்றி பெறும் நம்பிக்கையோடு மீண்டும் இயங்குவார்கள்.

சில எதிர்பார்ப்புகள் யதார்த்தமற்றவை அல்லது ஆரோக்கியமானதில்லை என்பதை நம்புவதில் இணையர்கள் இருவருக்குமே நேர்மையிருக்கவேண்டும்.

இப்படி யதார்த்தமற்ற அல்லது ஆரோக்கியமற்ற எதிர்பார்ப்புகளின் வெளிப்படுத்தல்களுக்கு ஆயிரம் எடுத்துக்காட்டுகளைச் சொல்லமுடியும்.

குறிப்பாக, இப்போதெல்லாம் திருமண ஆண்டு விழாக்களின்போது இணையர்கள் ஒருவரை இன்னொருவர் வாழ்த்தும் நிலைத்தகவல்கள் முகநூல் சுவர்களில் வரும். நான் இன்று மகிழ்ச்சியாக இருப்பதற்கு மனைவி/கணவன்தான் பொறுப்பு என்று எழுதுவார்கள். அவர்கள் பதினைந்தோ இருபதோ ஆண்டுகள் இணைந்து வாழ்ந்த தம்பதிகளாகவும் இருப்பார்கள். அவர்களின் உறவு அல்லது ஒருவரில் இன்னொருக்கு இருக்கும் எதிர்பார்ப்பு எதார்த்தமானதில்லை அல்லது ஆரோக்கியமானதில்லை என்றோ நிரூபணம் செய்வது முடியாததுதான். ஆனால், ஒருவரின் மகிழ்ச்சிக்கு அவர் மட்டுமே பொறுப்பு. அந்தப் பொறுப்பை வேறொருவர் மீது சுமத்த முடியாது. அது அடையப்பட முடியாத மகிழ்ச்சி. இப்படிச் சொல்கின்ற நபர்கள் தங்களின் பல பொறுப்புகளைத் தன் இணையர் ஏற்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள், அதனாலேயே அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக நம்புகிறார்கள். அதேநேரம், இத்தகையவர்களைத் துக்கம், தோல்விகள் தாக்கும்போது அப்படியே இவையும் இணையரால்தான் என்று எளிதாகச் சொல்லிவிடுவார்கள்.

இன்னொரு வகையினர், இணையரைச் சரிபாதி என்கிறவர்கள். ஆண், பெண், பால்புதுமையினர் யாராயினும் ஒருவர் இன்னொருவருக்குத் துணையாக இருக்கலாமே தவிர, ஒருவரை இன்னொருவர் நிறைவு செய்ய முடியாது. இதுகூட அவ்வளவு எதிர்பார்ப்புகளைத் தாங்கிய வெளிப்பாடு. எந்தத் தூர நோக்குமில்லாமல், லட்சியம், கனவு, ஆசை, உழைக்கும் திறன் எதுவுமேயில்லாமல் இருந்த ஒருவரின் வாழ்வை எல்லாம் தந்து ஒருவர் மாற்றியிருந்தால், என்னை முழுமைப்படுத்தியவர் என்று சொல்வதில் தவறில்லாமல் இருக்கலாம்.

மந்த்ரா லைஃப் நிறுவனத்தில் உளவளப் பணியில் ஈடுபடுபட்டிருந்த காலத்தில் சந்திக்க நேர்ந்த பல இளம் தம்பதியர் முரண்பாட்டுக்குக் காரணமாக சொன்ன விடயங்களில் ஒன்று, ‘அவர்/ள் மாறிவிட்டாள்’ என்பதாக இருந்தது. இணையர் மாறவே மாட்டார் என நம்புவது உறவைச் சிக்கலாக்கும் எதிர்பார்ப்புகளில் ஒன்று. நாம் அனைவருமே மாறக்கூடியவர்கள். மாறுகிறோம். வளர்கிறோம். உறவில் ஒன்றாக இணைந்து ஆரோக்கியமான வழிகளில் வளரமுடியுமே தவிர, ஒருவர் மாறாமலே இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. மாற்றம் தவிர்க்க முடியாதது.

இன்னும் சிலரது உறவு சிதைவதற்கு அவன்/அவளின் வாழ்க்கை தன்னைச் சுற்றியே இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதாக இருக்கிறது. திருமணம், இணைந்து வாழ்தல் என்பதன் பொருள் ஒருவரை இன்னொருவர் நேசிப்பதும் கவனித்துக்கொள்வதும். அதற்காக நாளின் நேரம் அனைத்தையும் ஒன்றாகவே செலவிட வேண்டும் என்று அர்த்தமாகாது. அவன்/அவள் தனது இணையரை முற்றிலும் புறக்கணிக்கக் கூடாது. ஆனால், தனிப்பட்ட ஆர்வங்கள், பொழுதுபோக்குகளுக்குத் தனக்காக மட்டும் நேரத்தை வைத்திருப்பதில் தவறில்லை.

இப்படி முழுவதும் தன்னைத் தாரைவார்க்கும் உறவு முறைக் கலாசாரத்திலிருந்து கொண்டு, ‘எதிர்பார்ப்பற்ற உறவு’ என்ற பொருளறியாத புலம்பல்களுடன் வாழ்கின்றவர்களுக்குச் சில விடயங்கள் வினோதமாக இருக்கலாம். இந்த ‘நேர்பட பேசு’ தொடர்கூடச் சிலருக்கு வினோதமாக இருக்கலாம். உறவைத் தொடங்குவதில் இருக்கும் கவனம் அந்த உறவைக் காப்பாற்றிக் கொள்வதில் இருப்பதில்லை. உறவில் வெளிப்படையான உரையாடல், எதிர்பார்ப்புகளைப் பற்றிய உரையாடல், பணத்தைக் கையாள்வதைப் பற்றிய உரையாடல் எவ்வளவு அவசியம் என்பதும் அதனால் உண்டாகும் புரிதலும் இணக்கமும்தான் உறவை வளப்படுத்தவும் பலப்படுத்தவுமான உரம் என்பதும் பலருக்குப் புரிவதில்லை. ஒவ்வோர் அடியையும் புரிதலோடும் இணக்கத்தோடும் எடுத்துவைக்கும் உறவில் வன்முறைகளுக்கு இடமிருக்காது. நம் வழக்கமான குடும்ப அமைப்பானது ஒருவரை இன்னொருவர் சுரண்டி வாழ்வதற்கே சொல்லித் தருகிறது. நம் குடும்ப அமைப்புகளில் தனிமனித கௌரவங்களுக்கு மதிப்பில்லை. ஆண்கள் மட்டுமே மதிப்புக்குரியவர்கள். என்னதான் நம் சமூகம் கல்வியில் முன்னேறி, காதல் திருமணங்கள் செய்துகொண்டு வாழ்கின்றளவு முன்னேற்றம் கண்டிருந்தாலும் வழக்கமான குடும்ப அமைப்புகளின் தன்மைகளிலிருந்து அவை பெருமளவில் விடுபடவில்லை. இன்றைய தலைமுறை குடும்ப அமைப்பை விமர்சிக்கத் தொடங்கியிருக்கிறது. உறவுகளில் நம்பிக்கையோடிருக்கிறது. இந்த நம்பிக்கைதான் உலகின் வெளிச்சம்.

எனது இரண்டாவது திருமணத்திற்கும் முன்னைய விவாகரத்திற்கும் இடையே பதினான்கு ஆண்டுகால இடைவெளி. இந்த இடைவெளியில் தங்கைகள், குடும்பப் பெண்கள், ஆண்கள், நண்பர்கள் பலரின் திருமணங்களை, உறவுகளைப் பார்த்திருக்கிறேன். அவர்கள் இணைந்தது, பிரிந்தது பலவற்றுக்குச் சாட்சியாக இருந்திருக்கிறேன். வழக்கமான குடும்ப அமைப்புகளில் எனக்கு எந்த நம்பிக்கையுமில்லை. முக்கியமாக ஆண் பற்றிய எந்தப் பிரக்ஞையுமில்லை. பதினான்கு ஆண்டுகள் ஆண் துணையில்லாமலேயே சிறப்பாகத்தான் வாழ்ந்துகொண்டிருந்தேன். இவற்றையெல்லாம் தாண்டி கனிந்த மனதுடன் இன்னோர்

உறவுக்கு என்னை ஒப்புக்கொடுப்பதற்குத் தூண்டுதலாக இருந்தது என் கௌரவங்களை மதிக்கும், நான் நானாகவே வாழ அனுமதிக்கும் உறவு முறை சாத்தியம் என்கின்ற நம்பிக்கையினாலேயே. போலிமைகளால் நிரப்பப்படாத இந்த நம்பிக்கை/எதிர்பார்ப்பு எனது ‘மனுஷி’ உணர்வை மேலும் கொண்டாட்டமாக்கித் தந்திருக்கிறது.

இன்னும் பேசுவோம்…

படைப்பாளர்:

ஸர்மிளா ஸெய்யித்

விதிவிலக்கான துணிச்சலான சமூக செயற்பாட்டாளர். சமூக அநீதிகள் குறித்து அச்சமற்று விமர்சிக்கக்கூடியவர், எழுத்தாளர், கவிஞர். தற்சமயம், அமெரிக்கப் பல்கலைக்கழகம் University of Nebraska Omaha வில் மனித உரிமைகளுக்கான ஆராய்ச்சி அறிஞராகப் பணிபுரிகிறார்.