“உனக்கென்ன இரண்டும் ஆம்பள பிள்ளைங்க” என்று
தெரிந்தவர்கள் சொல்லும்போது என்னுடைய மனதிற்குள் ஒரு சலனம் வந்து போகும்.
ஆண் குழந்தைகளை வளர்க்கிறது சுலபம் என்றும், பெண் குழந்தைகளை வளர்க்கிறதைவிடப் படிக்க வைத்து, அதுகூட இரண்டாம் பட்சம்தான், நகை சேர்த்து அவர்களுக்குத் திருமணம் செய்வது கொஞ்சம் கடினமானதாகவும் சிக்கலானதாகவும் இந்தச் சமூகத்தால் பார்க்கப்படுகிறது.
அதனால்தான் என்னவோ, “உனக்கென்ன ஆம்பள பிள்ளைங்க” என்ற வார்த்தை சமூகத்தால் பெருமையாகப் பேசப்படுகிறது.
இனிவரும் காலங்களில் என்று கூறுவதைவிட சம காலத்திலேயே ஆண், பெண் என்ற வேறுபாடு இல்லை. எந்தக் குழந்தைகளாக இருந்தாலும், ஏன் பெண் குழந்தைகளை வளர்ப்பதைவிட ஆண் குழந்தைகளை வளர்ப்பதில் கூடுதல் கவனம் தேவை என்பது என் கருத்து.
ஆண்பிள்ளைகள் மூலமாக எந்தப் பெண் குழந்தைகளுக்கும் தவறு நேரக் கூடாது என்பதிலேயே கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. ஆண், பெண் புரிதலை குழந்தைகளிடம் எப்படி எடுத்துக் கூறமுடியும் என்ற குழப்பமும் கூடவே.
பெற்றோர் நினைப்பது, “இப்பவே இதைத் தெரிஞ்சு என்ன பண்ணப் போறாங்க” என்ற பேச்சு சற்று விவாதத்திற்குரியது.
குழந்தைகளிடம் இந்தப் புரிதலை எப்படி ஏற்படுத்த முடியும் என்ற கேள்வி எழுகிறது.
குழந்தைகள் பெரியவர்களைவிட எளிதில் புரிந்துகொள்ளும் திறனுடையவர்கள். நாம் அவர்களைக் கூப்பிட்டு உட்காரவைத்து, “ஆண் என்றால் அப்படி, பெண் என்றால் இப்படி என்று நினைக்கக் கூடாது. இருவரும் சமம்” என்று சொன்னால் எந்தக் குழந்தையும் அதைக் கேட்காது. அந்த அளவிற்குப் பேசுவதற்கும் கேட்பதற்கும் பொறுமையும் கிடையாது என்பதே நிதர்சனம்.
குழந்தைகளுக்கு அவர்களுக்குப் புரியும் மொழியில் (வழியில்) கூறினால் அவை எளிதாகப் பதியும். நீங்கள் அன்றாட வாழ்க்கையில் இருந்து குழந்தைகளுக்கு அந்தப் புரிதலை ஏற்படுத்த முயற்சி செய்ய வேண்டும்.
நான் எப்படி என்னுடைய குழந்தைகளுக்கு இந்தப் புரிதலை ஏற்படுத்துவேன் என்றால், மதி, செழியன் இருவருக்கும் தொடர்களைப் பார்ப்பதில் விருப்பம். அது புரியுதோ இல்லையோ பார்ப்பது வழக்கம்.
அனைத்து தொடர்களிலும் “ஒரு பெண் இரவு நேரத்தில் தனியாக பேருந்து நிலையத்தில் பேருந்துக்காகக் காத்துக்கொண்டிருப்பார். கூடவே மழையும் பெய்துகொண்டிருக்கும்”.
அந்த நேரத்தில் மூன்று ரவுடிகள் அவளிடம் தவறாக நடப்பதற்கு முயற்சி செய்வார்கள். அவளும் அவர்களுடன் முடிந்த அளவிற்கு சண்டை போடுகிறாள்.
செழியன் இப்படிப் பண்ணலாமா, இது சரியா என்று கேட்டேன்.
“அம்மா, இது தப்பு. இப்படிப் பண்ணக் கூடாது.”
“நீ அந்த இடத்துல இருந்தா என்ன பண்ணிருப்ப?”
“நான் அந்த ரவுடிகளை அடிச்சுப் போட்டுட்டு, அந்தப் பொண்ண காப்பாத்தி வீட்டுக்குக் கூட்டிட்டு வந்துருவேன்” என்றான் செழியன்.
எனக்கு சிரிப்பு வந்தது. “செழியன், நம்ம வீட்டுக்குக் கூட்டிட்டு வரக் கூடாது. அவங்க விட்டுல போயி விட்ரணும். தம்பி, எப்போதுமே ஆண்கள் பெண்களுக்குப் பாதுகாப்பாக இருக்கணுமே தவிர, பெண்களிடம் தவறாக நடக்க முயற்சிக்கக் கூடாது” என்றேன்.
அடுத்தது பொதுவாக ஆண்களிடம், “பெண்களையும் ஒரு சக மனுசியா பாருங்க. எங்களுக்கும் உணர்ச்சிகள் உண்டு” என்று சமகாலத்தில் கிட்டத்தட்ட அனைத்து பெண்களாலும் சொல்லப்படுகிறது.
சிலர் இந்தப் புரிதலை உணர முயற்சிக்கிறார்கள். சிலர் சட்டை செய்வதே இல்லை. இதற்கான தீர்வு வளரும் குழந்தைகளிடம் இந்தப் புரிதலை ஏற்படுத்துவதுதான்.
ஆண் குழந்தையோ பெண் குழந்தையோ இவர்கள் மூலமாக அப்பாக்களுக்கும் புரிதலை ஏற்படுத்த முடியும்.
ஆண் குழந்தைகளாக இருந்தால் அவரவர்களின் வேலையை அவரவர்களே செய்ய வைப்பதே சிறந்தது.
நீ சாப்பிட்ட தட்டை நீதான் எடுத்து வைக்க வேண்டும். நீயும் பாத்திரம் கழுவலாம், நீயும் வீடு சுத்தம் செய்யலாம் கூறலாம். இதைச் சிறுவயதில் இருந்தே பழக்கப்படுத்தலாம்.
அம்மா, தங்கை மட்டும்தான் வேலை செய்ய வேண்டும், நீங்கள் எந்த வேலையும் பண்ணக் கூடாது என்று சொல்கின்ற அம்மாக்களும் தங்கைகைளும் மாறினால் மட்டுமே வீட்டிலிருந்து மாற்றம் சமூகத்திற்கு வரத் தொடங்கும்.
பெண் குழந்தைகளாக இருந்தால் அவர்கள் மூலம் அப்பாக்களுக்குப் புரிய வைப்பது எளிது. பெண்களே எல்லா வேலைகளும் பார்க்க வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை, சட்டமும் இல்லை.
அம்மாக்களின் வலியையும் வேதனையும் பெண் குழந்தைகள் மூலமாகவே அப்பாக்களுக்குப் புரிய வைக்க முடியும்.
நான் என் குழந்தைகளிடம் நீங்கள் இரண்டு பேரும் இன்னும் கொஞ்சம் பெரிய பிள்ளைகள் ஆன பிறகு, நீங்கள்தான் தோசை சுட வேண்டும், பாத்திரம் கழுவ வேண்டும் என்று அடிக்கடி கூறுவதுண்டு.
பெண் குழந்தைகள் என்று சொன்னாலே ஞாபகம் வருவது நகை. நகைதான் மதிப்பு, கெளரவம் என்று ஒரு போதும் பெண் குழந்தைகளிடம் சொல்லி வளர்க்காதீர்கள்!
(தொடர்ந்து பேசுவோம்)
படைப்பாளர்:
திருமலைச் செல்வி. தென்காசி மாவட்டம் கீழக்கலங்கல் என் கிராமம். பொறியியல் பட்டதாரி. எழுத்துகள் மீது என்றும் தீராத தாகம் உண்டு. அனைத்தையும் மாற்றும் வல்லமை எழுத்துகளுக்கு உண்டு என்று நம்புகிறேன்.